
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் உள்ளது எதிர்க்கோட்டை. இங்கு ஸ்ரீசத்ய பாமா- ஸ்ரீருக்மிணியுடன் கோயில் கொண்டிருக் கிறார் ஸ்ரீவேணுகோபாலன். ஸ்ரீவில்லிப்புத் தூருக்கு அருகில் அமைந்த, கண்ணனைப் போற்றி வழிபட்ட ஐந்து ஊர்களில் இதுவும் ஒன்று (மற்ற நான்கு... அம்மையார்பட்டி, அனுப்பங்குளம், விழுப்பனூர், நதிக்குடி).
சுமார் 300 வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியை ஆட்சி செய்த சிற்றரசர், கோவிந்தப்ப நாயக்கர். இவர், காஞ்சி மற்றும் திருவள்ளூர் திவ்விய தேசங்களில் வாழ்ந்த, வேதமும் பிரபந்தங்களும் கற்றுத் தேர்ந்த அந்தணர்களைக் குடியேற்றி, இந்த ஊரையும் கோயிலையும் கோட்டையையும் அமைத்தாராம். மண்டூக மகரிஷியால் தோற்று விக்கப்பட்ட- மீன்கள் நிறைந்த கயலாற்றின் (காயலாறு) கிழக்குக் கரையில் அழகுற அமைந்தன கோயிலும், ஊரும்!
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
##~## |
இந்த ஊர்மக்களுக்குத் தலைவராக இருந்த வீரராகவய்யங்கார் வேத- சாஸ்திரங்களில் விற்பன்னர். ஒருமுறை, எதிரிகள் படையெடுத்து வந்தபோது, சுதர்ஸன மகாமந்திரத்தை ஜபித்து, ஒரு நாணயத்தைச் சுண்டிவிட்டாராம் வீரராகவய்யங்கார். அது, ஊரைச் சுற்றிக் கோட்டை அமைத்ததாகவும், அதைத் தாண்டி எதிரிகளால் ஊருக்குள் வரமுடியவில்லை என்றும் பெரியோர்கள் கூறுகிறார்கள். இன்றும் கோயிலின் மகாமண்டபத்தில், கோவிந்தப்ப நாயக்கர் மற்றும் வீரராகவய்யங்காரின் சிலைகளைத் தரிசிக்கலாம்.
காலப்போக்கில், பஞ்சம் தலைதூக்க, விவசாயத் தையே நம்பியிருந்த அந்தணர்கள், வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வூர் பெரியவர்களும் தனவான் களும் கோயிலுக்குக் காணிக்கை அளித்த நிலங்களும் சொத்துகளும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக, ஒருகட்டத்தில் போதிய வருமானம் இன்றி நித்ய பூஜைகளும் தடைப்படும் நிலைமை.
ஆனால், பெருமாளின் திருவருளாலும், அன்பர்களது முயற்சியாலும் ஸ்ரீருக்மிணி ஸ்ரீசத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால சுவாமி பக்த சபை அமைக்கப் பட்டு, திருப்பணிகள் துவங்கின. இதோ... சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டு, மகாமண்டபம், ஆழ்வார்- ஆச்சார்யர்கள் எழுந்தருளும் மண்டபம், கருவறை ஆகியன புதுப் பொலிவு பெற்றுள்ளன. முறைப்படி யாகசாலை பூஜைகள் துவங்கி, ஜூன் மாதம் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சம்ரோக்ஷணமும் நடைபெற உள்ளது. பக்தர்கள் யாவரும் வந்திருந்து, ஸ்ரீவேணுகோபாலனை வேண்டி வரம்பெற்றுச் செல்லலாம்.
- டி.ஏ.சீனிவாசன்