Published:Updated:

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

ஆலயம் தேடுவோம்!

Published:Updated:
ஆலயம் தேடுவோம்!
ஆலயம் தேடுவோம்!
##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ணவன் மனைவிக்குள் சண்டையும் சமாதானமும் நடப்பது சகஜம்தானே! விளையாட்டாகச் செய்கிற காரியமே சில தருணங்களில் பெரும் சண்டையாகிப் போகும். பிறகு, விளையாட்டு வினையாகிவிட்டதே என்று வருந்துவார்கள்; மன்னிப்புக் கேட்பார்கள்; மன்னிப்பார்கள்!  

இப்படித்தான்... சிவனாரும் பார்வதியும், திருக்கயிலாயத்தில் மிகச் சந்தோஷமாக இருந்தனர். உள்ளுக்குள் தனது திருவிளையாடலை நிகழ்த்தத் திட்டமிட்டார், சிவனார். அது தெரியாமல், கணவருடன் விளையாடினாள் பார்வதிதேவி. அவளுக்கு எதிரே இருந்த சிவனார், சட்டென்று மறைந்து, ஒரு வில்வமாக அங்கே உருமாறி இருந்தார். அந்த வில்வம்தான் ஈசன் எனக் கண்டறிந்தாள் தேவி. உடனே, அடுத்ததொரு பொருளாக சிவனார் மாற... பார்வதிதேவியும் அவரைக் கண்டுபிடிக்க, விளையாட்டு சுவாரஸ்யமாகப் போய்க்கொண்டிருந்தது.

ஆலயம் தேடுவோம்!

இப்படி விளையாடியபடி, அவர்கள் பூலோகத்துக்கே வந்துவிட்டனர். அங்கும் தனது உரு வத்தை மறைத்து, காணாமல் போனார் ஈசன். உடனே தேவி சிரித்தபடி, இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் தேடினாள். அந்த ஆறாக மாறியிருப்பாரோ, அதில் தவழும் மீனாக உருவெடுத்திருப்பாரோ, அல்லது அங்கே பூத்திருக்கும் தாமரையாக மலர்ந்திருப்பாரோ எனத் தேடினாள். ஆற்றங்கரையில் இருந்த ஒவ்வொரு பூச்செடியிலும் உள்ள மலர்களையும் உற்றுப் பார்த்தாள்; மரங்களையும் கூர்ந்து கவனித்தாள். மலையைக் கவனித்தாள்; குகைக்குள் சென்று பார்த்தாள்; காடுகளில் நோட்டமிட்டாள். கண்ணில் பட்ட பொருள் களில் எல்லாமே சிவத்தைத் தேடினாள் தேவி. ம்ஹூம்.. அவளால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

'என்ன இது... விளையாட்டுக்கும் ஓர் அளவு உண்டு; எல்லை உண்டு. இப்படியா தவிக்கவிடுவது?’ என முணுமுணுத்தவள், பொசுக்கென்று அழுதேவிட்டாள். அவளுக்கு ஆத்திரமும் கோபமுமாக வந்தது; அழுகையும் வேதனையும் அதிகரித்தது.  

அந்த வனத்தின் வேறொரு இடத்தில், சாந்தமே உருவான பசு ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. புற்களை மேய்வதுபோல், நாலாதிசையையும் பார்த்துக்கொண்டு இருந்தது அது. பசுவுக்கு வாசனை அதிகம்; அதனில் இருந்து வரும் பால் வாசனையுடன் சாணம், கோமியம் போன்ற வாசனைகளும் கலந்து, மேனி முழுவதும் இருக்க... 'பார்வதியாவது, ருத்ர வாசனையை அறிந்து கண்டுபிடிப்பதாவது..!’ என அந்தப் பசு நினைத்துக்கொண்டது. அந்தப் பசுவின் அருகில் வந்தாள் பார்வதிதேவி. அதன் கொம்பைச் செல்லமாகத் தடவிக் கொடுத்தாள். 'என் சிவனைப் பார்த்தாயா?’ என்று அதனிடம் கேட்டாள். 'பாவம், நீதான் வாயில்லா ஜீவனாயிற்றே! கணவரைக் காணாத துக்கத்தில், உன்னிடம் கேட்கிறேன், பார்’ என்று அதன் கன்னங்களை, முதுகை வருடிக் கொடுத்தவள், அங்கிருந்து நகர்ந்தாள்; நாலாப்புறமும் தேடினாள்.

அந்தப் பசு, புல்வெளியில் இருந்து நகர்ந்து வயல்வெளிக்குள் இறங்கியது; நெடுநெடுவென வளர்ந்து காற்றில் ஆடிய நெல்மணிகளை மேய்ந்தது. அது, அந்தணர்களுக்குச் சொந்தமான நிலம். 'என்ன இது’ எனப் பதறியவர்கள், ஓடி வந்து, அந்தப் பசுவைப் பிடித்துத் தரதரவென இழுத்துக்கொண்டு போய், ஊரின் மத்தியில் நிறுத்தினர். 'இந்த மாடு எவருடையது?’ எனக் குரல் எழுப்பினர். அங்கிருந்த வேளாளர்களும் யாதவர்களும் 'எங்களுடையது இல்லை’ எனப் பதற்றத்துடன் தெரிவித்தனர்.

'அந்த மாட்டைக் கட்டிப் போடுங்கள்; உரிமையாளர் வரட்டும்’ என்று சொல்லி, அந்த மாட்டைக் கட்டிப் போட்டனர். 'ஆ’ என்றால் பசு; 'தளைதல்’ என்றால் கட்டுதல் என்று அர்த்தம்.  மாட்டைக் கட்டிப் போட்ட தால் அந்த ஊருக்கு, ஆதளையூர் எனும் பெயர் அமைந்தது. பிறகு, அதுவே மருவி, ஆதலையூர் என்றானதாகச் சொல்வர்.

ஆலயம் தேடுவோம்!

சிவனாரைத் தேடி காடு- கரையெல்லாம் தேடிய தேவி, இறுதியாக ஊருக்குள் வந்தாள். கட்டிப் போடப்பட்டிருந்த பசுவைக் கண்டாள். 'அய்யோ பாவம்... இப்படிக் கட்டிப் போட்டிருக்கிறார்களே!’ என்று அதன் மீது இரக்கப்பட்டு, கயிற்றை அவிழ்த்து, மாட்டை விடுவித்தாள். 'என்ன... இப்ப சந்தோஷம்தானே உனக்கு?’ என்று கேட்டபடி, மாட்டைத் தடவிக் கொடுத்தாள். அவ்வளவுதான்... சட்டென்று மறைந்தது மாடு!

பசுவாக வந்தது தன் கணவரே என்பது புரிய, 'என் சிவமே...’ என்று கண்களில் நீர் பொங்க... மாட்டைக் கட்டிப் போட்டிருந்த இடத்தில் விழுந்து நமஸ்கரித்து, எழுந்தாள். அங்கே... அவளுக்கு எதிரே சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளினார் சிவபெருமான் என்கிறது, ஆதலையூர் கோயிலின் ஸ்தல புராணம்.

வனவாசத்தின்போது, பஞ்சபாண்ட வர்கள் தனித்தனியாகவும், ஒன்றாகச் சேர்ந்தும் பல தலங்களில் வழிபட்டனர்;  திருவாரூர் மாவட்டத்தில், நன்னிலம் தாலுகாவில், அச்சுதமங்கலம் எனும் ஊரில், தருமர் வழிபட்டுப் பலன் பெற்ற ஸ்ரீதர்மேஸ்வரர் ஆலயம் குறித்து, கடந்த 17.5.11 இதழில், 'ஆலயம் தேடுவோம்’ பகுதியில் எழுதியிருந்தோம். தருமர் வழிபட்டதால் ஸ்வாமிக்கு ஸ்ரீதர்மேஸ்வரர் என்றும் அர்ஜுனன் அங்கே திருக்குளம் அமைத்ததால் ஊருக்கு அர்ஜுனமங்கலம் எனப் பெயர் அமைந்ததாகவும் அதில் குறிப்பிட்டிருந்தோம்.

அதேபோல்,  பீமன், ஆதலையூர் தலத்துக்கு வந்து, அருகில் உள்ள தாமரைக் குளத்தில் நீராடி, பல காலம் தங்கியிருந்து தவம் செய்தான். 'இழந்த பதவியையும் தேசத்தை யும் பெற வேண்டும்; யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கான வலிமையைத் தாருங்கள் ஸ்வாமி’ எனப் பிரார்த்தித்தான். தினமும் தாமரை மலர்களாலும் வில்வத்தாலும் அர்ச்சித்து வழிபட் டான். அவனுக்குத் திருக்காட்சி தந்து, 'இழந்த பதவியைப் பெறுவாய்; அதற் கான வலிமையை அருள்கிறேன்’ எனச் சொல்லி ஆசீர்வ தித்தார்!

ஆக, பார்வதிதேவி யால் பூமிக்கு வந்து பசுவாக உருவெடுத்து அந்தப் பகுதி மக்களுக்கு அருளிய சிவபெருமான் தோன்றிய தலம்; பாண்டவ சகோதரர்களில் பீமன் தவமிருந்து, பலம் பெற்றுப் பலன் அடைந்த தலம் எனப் பெருமைகள் பல கொண்டது, ஆதலையூர் பீமேஸ்வரர் ஆலயம்.

ஆலயம் தேடுவோம்!

அச்சுதமங்கலம் ஸ்ரீதர்மேஸ்வரர் கோயி லுக்கும், ஆதலையூர் ஸ்ரீபீமேஸ்வரர் ஆலயத்துக்கும் உள்ள ஒற்றுமை... பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட தலம் என்பது மட்டுமல்ல: இரண்டு திருத்தலங்களுமே சிதிலமுற்றுக் கிடக்கின்றன; வழிபாடு களின்றி பரிதாபமாகக் காட்சி தருகின்றன என்பதும்தான்!

'ஆதலையூர் தலத்தில் ஆறு கால பூஜைகளும் அமர்க்களம்’ என்றே சொல்வார்களாம், அந்தக் காலத்தில்! ஆனால் இன்றைக்கு, ஒரு கால பூஜைக்கே எவரேனும் கைங்கர்யம் செய்வார்களா என்று காத்துக் கிடக்கிறார் ஸ்ரீபீமேஸ்வரர். திருவாதிரையோ திருக்கார்த்திகையோ... எந்தப் பண்டிகை வந்தாலும், மடப்பள்ளியில் இருந்து எழுகிற நறுமணம், ஆதலையூரின் எல்லையைக் கடந்து ஒவ்வொருவரின் மூக்கையும் துளைக்குமாம்! இன்றைக்கு மடப்பள்ளியும் இல்லை; நைவேத்தியமும் கிடையாது!

''நல்ல நாள் பெரியநாள்னு வரும்போது, ஊர்க்காரங்களா சேர்ந்து, சின்னதா பூஜை செய்வோம். முன்னெல்லாம், உள்ளேயே நுழையமுடியாதபடிக்குப் புல்லும் பூண்டுமா முளைச்சுக் கிடந்துச்சு. அதையெல்லாம் வெட்டி அப்புறப்படுத்திட்டோம். திருப்பணியை ஆரம்பிச்சு, ஒரு கும்பாபிஷேகத்தைப் பண்ணிடணும். இதான், ஆதலையூர் மக்களோட ஆசையும் பிரார்த்தனையும்!'' எனத் தெரிவிக்கிறார் கமிட்டித் தலைவர் சீனிவாசன்.

''80, 90 வருஷங்களுக்கு முன்னே, விழாக்களும் கொண் டாட்டங்களும் அமர்க்களப்பட்ட ஆலயம் இதுன்னு சொல்றாங்க. அத்தனை அற்புதமான கோயிலை இப்படி அவல நிலையில் பார்க்கறதுக்கு மனசே வரலீங்க. எங்க ஊர்க் கோயில் பத்தி எழுதுங்க; புண்ணியமாகப் போகும்'' என்றார் கவிஞர் சூரியக்குமார். இந்த ஆலயம் குறித்த விவரங்களை அனுப்பி, ஆதலையூர் கோயிலின் அவலத்தை நமக்குச் சுட்டிக்காட்டிய வாசகர் இவர்தான்.

ஆலயம் தேடுவோம்!

பீமனுக்கு இழந்த பதவியையும் தேசத்தையும் தந்த கோயில், இழந்த தனது பொலிவையும் அழகையும் பெறுவது எப்போது? பீமனுக்கு அருளியவர், நாம் இழந்த வற்றையும் தந்தருள மாட்டாரா என்ன?! ஒரு தாமரை, ஒரு வில்வம், ஒரு வஸ்திரம், கொஞ்சம் சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ நைவேத்தியம்... என அங்கே சென்று வழிபட்டால், மனம் குளிர மாட்டாரா சிவனார்? இப்படி ஒருவர் இருவராக, இருவர் அறுவராக, அறுவர் ஆயிரமாக வளர்ந்து, ஆதலையூர் சிவனாரைத் தரிசிக்கச் செல்லும்போது, அந்த சாந்நித்தியமே தனக்கானதைக் கேட்டுப் பெற்றுக்கொள்ளும் என்பது உறுதி!

இங்கே, ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீவிநாயகர், நவக்கிரகங்கள், ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீதேவி பூதேவியருடன் ஸ்ரீபெருமாள் என அனைத்துத் தெய்வங்களும் காட்சி தருகின்றனர். ஆனால், ஒருவருக்கும் சந்நிதியும் இல்லை; விமானங் களும் இல்லை. ஆன்மிக அன்பர்கள் சிலரின் முயற்சியால் மெள்ள மெள்ளத் திருப்பணிகள் துவங்கியுள்ளன.  

அம்பாள் மட்டும் என்ன... எப்படியோ, இறுதியில் சிவனாரைக் கண்டுபிடித்த நிறைவிலும் நெகிழ்விலும் பூரித்து ஆனந்தமயமாகக் காட்சி தருகிறாள், இங்கே! இவளின் திருநாமம்- ஸ்ரீஆனந்தநாயகி. கருணையே உருவான நம் அன்னையாம் ஆனந்தநாயகிக்கும் நல்ல வஸ்திரமில்லை; ஆபரணம் எதுவும் கிடையாது; சின்னதாக மாலையும், எளிமையாக ஒரு புடவையும் சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள்; அதில் மனம் குளிர்ந்து, பெண்களை நிம்மதியாகவும் ஆனந்தமாகவும் வாழவைப்பாள், ஆனந்தநாயகி.

வலிமையை வரமாகத் தருவதற்கு ஸ்ரீபீமேஸ்வரரும், ஆனந்தத்தை அள்ளி வழங்க ஸ்ரீஆனந்தநாயகியும் தயாராகத்தான் இருக்கின்றனர். அவர்களைத் தரிசித்து, ஆலயத் திருப்பணிகளில் நம் பங்கையும் செலுத்த... நாமும் தயாராக இருக்கிறோம்தானே?!

  படங்கள்: ந.வசந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism