Published:Updated:

மண்மணக்கும் கிராம தெய்வங்கள்!

மண்மணக்கும் கிராம தெய்வங்கள்!
மண்மணக்கும் கிராம தெய்வங்கள்!

எம்.என்.சி கம்பெனியில் வேலை, லகரங்களில் சம்பளம், மாடர்ன் ஹைஃபை லைஃப் என்று இருக்கும் ஜென் Z இளைஞர்கள்கூட ஊர்க் கோயிலில் கொடைத்திருவிழா, வீட்டில் ஒரு விசேஷம் என்றால் மல்லுவேட்டி, வெள்ளை சட்டை சகிதமாய் கிளம்பிவிடுகிறார்கள். மறுபுறம், யுவதிகளோ பாவாடை, தாவணி எனப் பாரம்பரிய உடைகளில் பட்டாம்பூச்சியாய் வட்டமிடுவார்கள். இப்படித்தான் இருக்கிறார்கள் மாடர்ன் யூத்ஸ். தாங்கள் வளர்ந்த சூழலை விட்டுக்கொடுக்காத குணமும்; நம் பண்பாட்டின் மேல் உள்ள பற்றும் பாசமுமே இதற்குக் காரணம். அப்படிப்பட்ட இந்தப் பாசக்கார (!) இளம்தலைமுறைக்கு தமிழர் மரபைக் காக்கும் கிராம தெய்வங்களின் கட்டமைப்புகளைப் புரியவைப்பது நம் அனைவரின் கடமை...

மண்மணக்கும் கிராம தெய்வங்களை மூன்று வகையாகப் பிரிக்கின்றனர், நம் கிராமத்துப் பெரியவர்கள். அவை... குடும்ப தெய்வம், குலதெய்வம் , ஊர்த் தெய்வம்.

குலதெய்வம்:

சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர், மூதாதையரில் ஒருவர், தன் வழித்தோன்றல்கள் அழிந்துவிடக் கூடாது என்பதற்காக பலிகொடுக்கப்பட்டிருப்பார்; தன் உயிரை மாய்த்துக்கொண்டிருப்பார்; சண்டையிட்டு வீர மரணமடைந்திருப்பார்.

இவ்வாறு மரித்தவர்களை நினைவுகூர்வதற்காகவும், தங்களின் சந்ததியினரைக் காத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் உருவான தெய்வ வழிபாடுதான் `குலதெய்வ வழிபாட்டு முறை'. இதில், அந்த மூதாதையரைக் கடவுளாக எண்ணி வணங்கும் அவரின் நெருங்கிய உறவுகள், ரத்தக்கலப்பு உள்ளவர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் எனத் தலைமுறை தாண்டிய சொந்தங்கள் பல குடும்பங்களாகப் பல்கிப் பெருகியிருக்கும். இந்தக் குழுவில் இருப்பவர்களே, ஒரு வீட்டுப் பங்காளிகள் அல்லது பங்காளிகள் என அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள், தங்கள் சக பங்காளிகள் வீட்டில் பெண்ணெடுக்கவோ, பெண் கொடுக்கவோ மாட்டார்கள். ஆண்டுக்கு ஒருமுறை, மஹா சிவராத்திரியின்போது இவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, குலதெய்வத்துக்கு சிறப்பு வழிபாடு செய்யும் பழக்கம் தென்மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகிறது. உதாரணத்துக்கு, இதனை ஒரு பிரிவினர் 'மாசிப்பச்சை கும்பிடு' என்பர். இது தவிர மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, சித்திரை மாதங்களில் குலதெய்வக் கோயிலில் 'பெரியகும்பிடு விழா' நடத்தி, பங்காளிகளை சந்தித்து உறவாடி, குலதெய்வத்துக்கு விழா எடுப்பார்கள்.

குடும்ப தெய்வம்:

பங்காளிகளாக இருந்து, ஒரே குலதெய்வத்தை வழிபடுபவராக இருந்தாலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு குடும்ப தெய்வமும், அந்தக் குடும்பத்துக்கு ஒரு பெயரும் இருக்கும். கிராமங்களில் இருக்கும் குடும்ப தெய்வங்கள் பெரும்பாலும், தன் சொந்த வீட்டுக்கு நற்பெயர் கிடைப்பதற்காக மரித்தபோன உறவுகளாகத்தான் இருப்பார்கள். ஒரு குடும்பத்தின் நற்பெயருக்காக மரித்துபோன, குடும்பத்தின் உறுப்பினரோ அல்லது திருமணம் ஆகாமல் மரித்துபோன கன்னியையோ தெய்வமாகப் பாவித்து வழிபடுவதும் உண்டு. இதன்படி, ஒவ்வொரு பொங்கலின்போதும், 'குடும்ப தெய்வத்துக்கு' படையல் இடுகின்றனர். மேலும், ஏதேனும் ஓர் இக்கட்டான சூழலில் தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு ,சீட்டில் பிரச்னைகளை எழுதி, 'குலுக்குச் சீட்டு' போட்டு எடுக்கும் முறையும் குடும்ப தெய்வ வழிபாட்டில் முக்கிய அங்கம் வகிக்கிறது. அதேபோல், ஒவ்வோர் ஊரிலும் குடும்ப தெய்வத்துக்குச் செய்யும் சடங்குகள், அக்குடும்பத்தின் தலைவர் முன்னிலையில் நடக்கும்.

ஊர்த் தெய்வம்:

ஊரில் பெரும்பான்மையான மக்களுக்குண்டான பொதுவான தெய்வமே ' ஊர்த் தெய்வம்' என்கின்றனர். பெரும்பாலும் ஊர்த் தெய்வங்கள் வடக்கு திசையினைப் பார்த்த உக்கிர தேவதைகளாகவோ அல்லது ஆயுதங்களுடனோ காணப்படுகின்றன.

ஊர்த் தெய்வங்கள் பெரும்பாலும், ஊரின் மையப்பகுதியில் அருள்பாலிக்கின்றன. அப்பகுதி, 'மந்தை' என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் முக்கியமான ஊர்க் கூட்டங்கள், திருவிழாவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஊர்த் தெய்வங்களுக்கு பெரும்பாலும் விவசாயம் முடிந்து, அறுவடை முடிந்த காலங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

இந்த ஊர்த் தெய்வங்களின் முக்கியமான பரிவார தெய்வங்களாக இருக்கும் தெய்வங்கள் ஊரின் எல்லைப்பகுதியில் நிலைநிறுத்தப்படுகின்றன. இவற்றுக்கு 'எல்லைத் தெய்வங்கள்' என்று பெயர். நம் ஆதித்தமிழர்களின் முக்கியத் தொழிலாக, வேட்டையாடுதல் இருந்திப்பதால், இத்தெய்வங்களுக்கு வேல், அரிவாள் எனும் கூர்தீட்டிய ஆயுதங்கள் கொண்டு சிலைகள் உருவாக்கப்படுகின்றன.

மேற்கூறிய மூன்று தெய்வங்களுக்குரிய பொதுவான இலக்கணங்களும், தமிழகத்தின் வெவ்வேறு கிராமங்களிலும் நிச்சயம் இருந்திருக்கும், இருக்கும். ஆனால், அத்தெய்வங்களுக்குரிய உண்மையான கதைகள் யாருக்கும் தெரியாமல் மறைந்து, ஒரு சம்பிரதாய வழிபாட்டுமுறையே தற்போது நிகழ்கிறது.

அவை களையப்படவேண்டும். மண்ணின் தெய்வங்கள் பற்றிய புரிதல் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டும். அதன் கதைகள் இனியாவது ஆவணப்படுத்தப் பட்டிருக்கவேண்டும். அப்படியிருந்தால், மட்டும்தான், தமிழகத்தின் நல்மரபுகளை கலாசார கூறுகளை வரும் தலைமுறைக்கு பரிசளிக்கமுடியும் என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில், மண்ணின் தெய்வங்கள் மட்டுமே...அடுத்தடுத்தவீட்டில் பக்கத்துவீட்டுக்காரர்களாக பேசாமல் இயங்குபவர்களைக்கூட, உறவு பெயர் சொல்லி இணைக்கும் பாலங்கள்.

- ம.மாரிமுத்து

படங்கள்: வீ.சக்திஅருணகிரி