Published:Updated:

ஓணத்தில் தரிசிக்க வேண்டிய தமிழ்நாட்டு திருத்தலங்கள்!

 ஓணத்தில் தரிசிக்க வேண்டிய  தமிழ்நாட்டு திருத்தலங்கள்!
ஓணத்தில் தரிசிக்க வேண்டிய தமிழ்நாட்டு திருத்தலங்கள்!

திருமால் வாமன அவதாரம் எடுத்து மகாபலியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டு, பின்பு விண்ணுக்கும் மண்ணுக்கும் உயர்ந்த திரிவிக்கிரமனாக அவதாரம் செய்த கோலத்தை 108 திவ்விய தேசங்களில் மூன்றே இடங்களில் மட்டும் தரிசிக்கலாம்.
முதலாவது நடுநாட்டுத் திருப்பதியான திருக்கோவிலூர். இங்கு திருவடியை உயரே தூக்கி நின்ற கோலத்தில் உள்ளார். இரண்டா வது- தொண்டை நாட்டுத் திருப்பதியான காஞ்சியிலுள்ள திருஊரகம் எனப்படும் உலகளந்த பெருமாள் ஆலயம் ஆகும். மூன்றாவது சோழ நாட்டுத் திருப்பதியான சீர்காழி காழிச்சீராம விண்ணகரம். இங்கு பெருமாள் தாடளன், திருவிக்கிரமன் என்ற நாமம் கொண்டுள்ளார். நாம் ஒவ்வொன்றாகத் தரிசிப்போமா?

1. திருக்கோவிலூர்

விழுப்புரத்தில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்கோவிலூர். தென்பெண்ணை ஆற்றுப்பாலம் கடந்ததுமே கோயில் கோபுரத்தைத் தரிசிக்க முடியும். இந்த திரிவிக்ரமன் கோயிலுக்கு, மொத்தம் 7 கோபுரங்கள்.

பெரிய கோபுரத்தின் அருகில் அனுமன் சந்நிதி (பெருமா ளைச் சேவித்தபடி காட்சி தருகிறார்), கோபுர நுழைவு வாயிலில் முனியப்பன், கோயிலின் எதிரில் கருட ஸ்தம்பத்தின் உச்சியில் கருடாழ்வார் ஆகியோரைத் தரிசிக்கலாம். கோயிலின் இடப் பக்கத்திலேயே ஸ்ரீஎம்பெருமானார் ஜீயர் மடம் உள்ளது. கோயிலை. இந்த ஜீயர் பரம்பரையினர் சிறந்த முறையில் நிர்வகித்து வருகிறார்கள். கோயிலுக்குள் நுழைந்தால், நமக்கு வலப்புறம் வேணுகோபாலன் சந்நிதி. ஆதியில் க்ஷேத்திராதிபதி இவர்தான் என்கின்றனர். சாளக்கிராம திருமேனியராய் பாமா- ருக்மிணியுடன் அருளும் இந்த கோபாலனை, ரோகிணியில் வழிபடுவது சிறப்பு.

இவரைப்போலவே இங்கு அருள்பாலிக்கும் விஷ்ணு துர்கையை தரிசனமும் விசேஷமானது. இங்குள்ள க்ஷேத்திராதிபதி கண்ணனின் சிறப்பறிந்து, விந்திய மலையிலிருந்து இங்கு வந்து, அவனுக்கு ரட்சகியாகத் திகழ்கிறாளாம் இந்த நாயகி! செவ் வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில், இந்த தேவிக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள், பக்தர்கள். இவளைத் தரிசிக்க, நமது விருப்பங்கள் நிறைவேறும்.

மூலவரான திரிவிக்கிரமனின் சந்நிதியில், மகர விமானத்தின் கீழ், இடக்காலை தரையில் ஊன்றி, வலது திருக்காலை உயரத் தூக்கி, அற்புதமாகக் காட்சி தருகிறார். வழக்கத்துக்கு மாறாக வலக் கரத்தில் சங்கும் இடக்கரத்தில் சக்கரமுமாகத் திகழ்கிறார் ஸ்வாமி! இது

ஞானம் அருளும் திருக் கோலமாம்!

தூக்கிய திருவடியை பிரம்மன் ஆராதிக்க, இடது திருவடியில் அருகில் திருமகள், மகாபலி, அவருடைய மகன் நமச்சு மகாராஜா, சுக்ராச்சார்யர், மிருகண்டு முனிவர் - மித்ரவதி, கருடன் ஆகியோ ரும் உள்ளனர். தாரு (மரம்) திருமேனியராகத் திக ழும் ஸ்வாமிக்கு ஆயனார், இடைகழி ஆயன் எனும் சிறப்புப் பெயர் களும் உண்டு.

வையம் தகளியா...’ எனத் துவங்கி, நூறு பாசுரங்கள் பொய்கையாழ்வாரும்; ‘அன்பே தகளியா...’ என்று ஆரம்பித்து, நூறு பாசுரங்களால் பூதத்தாழ்வாரும் மொழி விளக்கேற்றிட, பெரு மாளையும் தாயாரையும் தான் கண்ட காட்சியை ‘திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்...’ எனத் துவங்கி (100 பாசுரங்கள்) பாடிப் பரவினார் பேயாழ்வார். ஆவணி ஓணத்தன்று இந்தப் பெருமாளைத் தரிசித்து, இந்தப் பாசுரங்களைப் பாடி, வேண்டும் வரங்களை வேண்டியபடி பெற்று மகிழலாம்.

2. காஞ்சி திருவூரகம்

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகிலேயே, வாமன புஷ்கரணியுடன் அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். இந்தக் கோயிலுக்கு தனி விசேஷம் உண்டு. திருஊரகம், திருநீரகம், திருக்காரகம், திருக்கார் வானம்... என 4 திவ்விய தேசங்கள் இந்த ஒரு கோயிலுக்குள்ளேயே உள்ளன.

கோயிலின் 2-வது பிராகாரத்தில், வடக்கில், ஜகதீச்வர விமானத் தின் கீழ் அருள்கிறார் (திருநீரகம்) ஜகதீச பெருமாள். சங்கு- சக்ரதாரியாய் ஸ்ரீநிலமங்கை வல்லி தாயாருடன் அருளும் இந்தப் பெருமாள், அக்ரூரருக்குக் காட்சி தந்தவராம்.
இதே பிராகாரத்தில்- தெற்கில், பத்மாமணி நாச்சியாருடன் சந்நிதி கொண்டிருக்கிறார் (திருக்காரகம்) கருணாகரப் பெருமாள். இவர்,  கார்ஹ மகரிஷிக்கு அருளியவராம். பிராகார வலத்தின்போதே, பார்வதிதேவிக்குக் காட்சி தந்த திருக்கார் வானம் கள்வர் பெருமாளையும் கமலவல்லித் தாயாரையும் தரிசிக்கலாம்.

இவர்களை முறைப்படி வழிபட்டு, உலகளந்தானைத் தரிசிக்கலாம். கருவறையில் ஸாரகர விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தினராய் (சுமார் 35 அடி உயரம்; 24 அடி அகலம்), இடக் காலை விண்ணோக்கி உயரத் தூக்கி, வலக்காலால் மகாபலியின் தலையை அழுத்திய நிலையில் சேவை சாதிக் கிறார் உலகளந்த பெருமாள்! இவருக்கு, வருடத்துக்கு ஒருமுறை சாம்பிராணி தைலக் காப்பு நடத்துகின்றனர். அன்று இங்கு வந்து வழிபடுவது சிறப்பு. திருவோணம் பண்டிகை, திரு அவதார உற்ஸவமாகக் கொண்டாடப்படுகிறது.

3. சீர்காழி - காழிச்சீராம விண்ணகரம்

சிதம்பரம் - மயிலாடுதுறை பாதையில் அமைந்துள்ளது இந்தத் திவ்யதேசம். நம் எல்லோருக்கும் நன்கு அறிமுகமான இதன் மற்றொரு பெயர், சீர்காழி!

திருப்பெயரில் மட்டுமா... இந்த ஊரின் மூர்த்தி, தலம், தீர்த்தம், திருக்கதை என்று ஒவ்வொன்றுமே கம்பீரமானவைதான். அதிலும் குறிப்பாக, ரோமச முனிவருக்கு வரம் தந்து, நான்முகனின் கர்வத்தை பங்கம் செய்து, பரம்பொருள் திருவிளையாடிய அற்புத மான திருத்தலம் இது.

இங்கே திருவருள் புரியும் தாயாரின் திருப்பெயர், அருள்மிகு லோகநாயகித் தாயார். இவள், தன் மார்பில் திரிவிக்கிரமரைத் தாங்கியபடி காட்சி தருகிறாளாம். ஒரு கால் ஊன்றி, மற்றொரு காலைத் தூக்கி நின்று கொண்டிருப்பதால் சுவாமியின் பாதம் வலிக்காமல் இருக்க, அவரை இந்தத் தலத்தில் மகா லட்சுமி தாங்குகிறாளாம். எனவே, அவள் தன் மார்பில் சுவாமி பதக்கத்தை அணிந்திருக்கிறாள். இந்த தரிசனம் விசேஷமானது. பெண்கள், கோயிலுக்கு வந்து லோக நாயகித் தாயாரை மனமுருகி வழிபட, கணவருடனான பிணக்குகள் தீரும்; பிரிந்த தம்பதியும் ஒன்றுசேர்வர் என்கிறார்கள். 9 வெள்ளிக்கிழமைகள் இங்கு வந்து தாயாரை வழிபட, ஆயுள் விருத்தியாகும்; திருமணத் தடை நீங்கும்; புத்திரபாக்கியம், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.

மூலக் கருவறையில், புஷ்கலாவர்த்த விமானத்தின் கீழ்... வலக்காலை தரையில் ஊன்றி, இடக் காலை தலைக்கு மேலே தூக்கியபடி திகழ்கிறார். அவரின் கீழ் வலக்கரம் தானம் பெற்ற அமைப்பில் திகழ, இடக்கரத்தால் ‘மீதி ஓர் அடி எங்கே?’ எனக் கேட்கும் பாவனையில் அருள்கோலம் காட்டுகிறார். சாளக்கிராம மாலை அணிந்தபடி இருக்கும் பெருமாளின் சங்கும், பிரயோகச் சக்கரமும் சாய்ந்தபடி இருப்பது விசேஷம்!

புதிதாக நிலம் வாங்குபவர்கள், அங்கிருந்து சிறிது மண்ணை முடிந்து எடுத்துவந்து இங்கே ஸ்வாமியின் திருப்பாதத்தில் ஒரு மண்டல காலம் பூஜையில் வைத்து, வழிபட்டு எடுத்துச் செல்கிறார்கள். இதனால் அந்த நிலத்தில் விவசாயமோ, அல்லது மனை எழுப்புவதோ, எதுவாயினும் சிறப்பாக நிறைவேறுமாம். நிலை மாலை வழிபாடும் இங்கே விசேஷம். ஆளுயர மாலை சார்த்தி பெருமாளை வழிபட்டு, அந்த மாலையைப் பிரசாத மாக வாங்கிச் சென்று வீட்டின் நிலைப்படியில் (வாசக் காலில்) கட்டித் தொங்கவிடுவார்கள். இதனால் அந்த வீட்டில் வாஸ்து தோஷங்கள் நீங்கும்; தீயசக்திகள், பிணிகள் எதுவும் அண்டாது என்பது நம்பிக்கை.

4. வாமன க்ஷேத்திரம்... நம்பி கோயில்!

திருநெல்வேலியிலிருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது திருக்குறுங்குடி. நெல்லை - நாகர்கோவில் பாதையில் உள்ளது வள்ளியூர். இங்கிருந்து திருக்குறுங்குடிக்கு நிறைய பேருந்துகள் செல்கின்றன. நெல்லையிலிருந்து (27 கி.மீ) நான்குநேரியை அடைந்து, அங்கிருந்தும் திருக்குறுங்குடிக்குச் செல்லலாம்.

அழகிய நம்பி அருள்பாலிக்கும் தலம் இது. தாயார்- குறுங்குடிவல்லி நாச்சியார். நம்பாடுவான் எனும் அடியவருக் காக கொடிமரத்தை நகரச் செய்து பெருமாள் அற்புதம் நிகழ்த்திய தலம் இது. சிவபெருமான் மற்றும் பைரவ மூர்த்திக்கும் இங்கு சந்நிதிகள் இருப்பது விசேஷம்.

திருமால், மிகப் பிரமாண்டமாக வராக அவதாரம் எடுத்து அசுர வதம் நிகழ்த்திய பிறகு, தன்னுடைய திருமேனியை குறுக்கிக் கொண்ட தலமாதலால் திருக்குறுங்குடி எனும் பெயர் பெற்றது என்கிறார்கள். அதேபோன்று... பகவான் திரிவிக்கிரமனாக விண்ணளந்து நின்றபோது, அவரின் திருப்பாதக் கமலத்தை, பிரம்மன் தன் கமண்டல நீரால் அபிஷேகித்தார்.  அந்த நீர், பகவானின் பாதச் சிலம்பில் பட்டு பூமியில் விழுந்து, இந்தத் தலத்தில் சிலம்பாறாக ஓடுகிறது என்கின்றன ஞானநூல்கள்!