நவராத்திரியில் அம்பாளை வழிபடவேண்டும். அம்பாளை வழிபட்டால் என்ன கிடைக்கும்?
அவளே சரணம் என்று நம்பிக்கையோடு வழிபட்டால், அம்பிகையாகவே மாறிவிடும் தன்மையும் கிடைக்குமாம். இதையே அபிராமிப்பட்டரும் ‘தெய்வ வடிவம் தரும்’ என்று பாடுகிறார்.
ஓர் உதாரணக் கதை ஒன்று!
பக்தன் ஒருவன், அம்பிகையின் திருமுன்னர் சென்றான். அவளைப் பார்த்த பரவசத்தில் அவனுக்கு வாய் குழறியது. ‘அம்மா, நான் உன் அடிமை’ என்று கூற நினைத்தான். அதற்காக அவளை அழைத்தான். ஆனால், வாய் குழறலிலும், தடுமாற்றத்திலும், எங்கே நிறுத்த வேண்டுமோ அங்கே நிறுத்தாமல், தட்டித் தட்டிப் பேசிவிட்டான். விளைவு? அவன் குழறிக் குழறிப் பேசியதை, அம்பாள் வேறுவிதமாகக் காதில் வாங்கிக்கொண்டாள்.
‘பவானி, த்வம் தாசே மயீ’ - இது அவன் சொல்ல நினைத்தது; இதன் பொருள்... ‘பவானியே, நான் உனது அடிமை’ என்பது. பதற்றத்தில், அவன் சொன்னது... ‘பவானித்வம் தாசே மயீ’ - அதாவது, பவானி என்று விளித்து நிறுத்தி, அடுத்துத் தொடராமல், அவசரத்தில் பவானித்வம் என்று சேர்த்துவிட்டான்.
பவானி என்பது அம்பாளின் திருநாமம்; பவானித்வம் என்பது அவளாக இருக்கும் தன்மை; அதாவது, அம்பிகையாகவே மாறிவிடும் தன்மை. பக்தன் பதற்றத்தில் சொன்ன சொல், பவானித்வம். அது, அவள் காதில் விழுந்தது. என்ன ஏது என்று யோசிக்கவில்லை. ‘ஓஹோ, அம்பிகையாக இருக்கும் தன்மையைக் கேட்கிறான் போலும்’ என்று உடனடியாக அந்தத் தன்மையை அவனுக்குக் கொடுத்துவிட்டாளாம்! இதனை ஆதிசங்கரர் பாடுகிறார். ஆகவே, நாமும் நவராத்திரியில் அம்பிகையை வழிபட்டு வரம் பெறுவோம்.
அவளை வழிபடுவதற்கு உகந்தவாறு ஒவ்வொருநாளும் அவளின் மகிமைகள் குறித்த புராணத் தகவல்களை அறிவதும் அவசியம். அவ்வகையில் இன்று சிவனார் ஆடிய ஒன்பது தாண்டவங்களையும், அவற்றில் இருந்து தோன்றிய நவதுர்கைகள் குறித்தும் அறிவோம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகை தாண்டவம் ஆடினாராம் சிவபெருமான். இந்த தாண்டவங்களில் இருந்து நவதுர்கைகள் தோன்றியதாக ஞான நூல்கள் விவரிக்கின்றன.
ஆனந்த தாண்டவம்: வலக் காலை ஊன்றி, இடக் காலைத் தூக்கி சிவனார் ஆடிய ரிஷிமண்டல கோலத்தில் தோன்றியவள் ஸ்ரீசைலபுத்ரி.
ஸந்தியா தாண்டவம்: பகலும் இரவும் சந்திக்கும் வேளையில்... இடக் கால் விரலால் சிவனார் இடும் கோலம் ஸப்த ஒலிக்கோலம். இதிலிருந்து தோன்றியவள் கூஷ்மாண்டா.
திரிபுர தாண்டவம்: ஈசனின் இடக் கால் பெருவிரலால் வரையப்பட்டது, அஷ்டவகைக் கோலம். இதில் தோன்றியவள் பிரம்மசாரிணி.
ஊர்த்துவ தாண்டவம்: திருவாலங்காடு தலத்தில் தன்னுடன் ஆடிய காளியை தோற்கடிக்க சிவனார் ஆடிய தாண்டவம். ஒரு காலை தரையில் ஊன்றி, மறு காலை தோளுக்கு இணையாக உயர்த்தி சிவனார் ஆடிய இந்த பிரணவக் கோலத்தில் இருந்து தோன்றியவள் சந்த்ரகாந்தாதேவி.
புஜங்க தாண்டவம்: பாற்கடலின் ஆலகால விஷத்தை சிவனார் அருந்த, அவரின் கழுத்தைப் பிடித்து, விஷம் உள்ளே இறங்காமல் தடுத்தாள் பார்வதி. இதனால் ஈசனுக்கு நீலகண்டன் என்றும் பெயர் உண்டு. அப்போது ஏற்பட்ட புஜங்க தாண்டவத்தில் தோன்றியவள் ஸ்கந்தமாதா.
முனி தாண்டவம்: பதஞ்சலி மிருதங்கம் வாசிக்க, சிவனார் ஆடிய ஆட்டம். அப்போது நெற்றிக் கண்ணில் தோன்றியவள் காத்யாயினி.
பூத தாண்டவம்: கஜாசுரனைக் கொன்று யானைத் தோல் போர்த்தி ஆடிய ஆட்டம். இந்தக் கோலத்தில் தோன்றியவள் காலராத்திரி.
சுத்த தாண்டவம்: தண்டகாரண்ய முனிவர்களின் அல்லல்கள் நீங்க, அசுரர்களை அழித்து ஆடிய ஆட்டம். இதில் தோன்றியவள் மகாகௌரி.
சிருங்கார தாண்டவம்: நவ ரசங்களையும் வெளிப்படுத்தும் சிவ நடனம்; இந்த நவரசக் கோலத்தில் தோன்றியவள் சித்திராத்திரி.
- ஜெயலெட்சுமி கோபாலன்