சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
ருள்மாரிப் பொழியும் ஸ்ரீநரசிம்மர், தம் அடியவர் இம்மையில் சிறக்க, வரம்வாரி வழங்குவதிலும் நிகரற்றவர். வேதத்தில் ஒரு ஸ்தோத்திரம் உண்டு. ஸ்ரீமந்த்ர ராஜபத ஸ்தோத்திரம் என்று பெயர். ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றி, ஈஸ்வரனே துதித்து வழிபட்ட பெருமைக்குரியது. இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி, ஸ்ரீலட்சுமி நரசிம்மரை மெய்யுருக வழிபட, சகல செல்வங்களும் ஸித்திக்கும்; பில்லி- சூனியம் முதலான தீவினைகள் அகன்று வாழ்வு சிறக்கும் என்பது ஆன்றோர் அறிவுரை.

இந்த ஸ்தோத்திரத்தில் ஒரு ஸ்லோகம்...

'ஜ்யோதீம் ஷ்யர்கேந்து நக்ஷத்ர ஜ்வலநாதீன் யநுக்ரமாத்
ஜ்வலந்தி தேஜஸாயஸ்ய தம் ஜ்வலந்தம் நமாம்யஹம்’

- எனப் போற்றுகிறது. அதாவது, 'சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அக்னி ஆகியவற்றை எந்தப் பேரொளி விளங்கவைக்கிறதோ, அதை

தசாவதாரம் திருத்தலங்கள்!

நான் வணங்குகிறேன்’ என்று பொருள். ஸ்ரீநரசிம்மரை பேரொளி மிக்கவராகச் சிறப்பிக்கிறது இந்த ஸ்தோத்திரம். இதை, மெய்ப் பிப்பது போல் அஹோபிலத்தில் நிகழ்ந்தது அந்த அற்புதம்!

வானில் கார்மேகங்கள் இன்னும் கலைந்தபாடில்லை. குளிர் காற்று முகம் தழுவ, மூலிகை வாசம் சுவாசம் நிறைக்க... விட்டு விட்டுப் பெய்த தூறலும் தூரத்தில் ஒலித்த இடியோசையும், மீண்டும் எப்போது வேண்டுமானாலும் பெருமழை பிடிக்கலாம் என்பதை அந்த அன்பர்களுக்கு  உணர்த்தின. செங்குத்தான மலைப்பாதையில் தங்கள் நடையை துரிதப்படுத்தினார்கள் அவர்கள்.

பொதுவாக, இதுபோன்று நள்ளிரவில், வழிகாட்டிகள் உட்பட எவரும் ஜ்வாலாநரசிம்மர் சந்நிதிக்குச் செல்லவோ, அங்கே தங்கவோ மாட்டார்கள். ஆனால், தமிழகத்தில் இருந்து சென்றிருந்த அன்பர்கள், ஓரிரவுப் பொழுதை ஜ்வாலா நரசிம்மர் சந்நிதியில் கழிப்பதை, ஒரு நேர்த்திக் கடனாகவே கடைப்பிடித்தவர்கள். இந்த முறை, கடும்புயல் வேறு! எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்காமல், ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு, வழிகாட்டியையும் அழைத்துக்கொண்டு மலையேறத் துவங்கிவிட்டார்கள்.

நல்லவேளையாக, அவ்வப்போது வானில் மின்னிய மின்னல் கீற்றுகள் ஒளியிறைத்து பாதை காட்ட, ஒருவழியாக ஜ்வாலா நரசிம்மர் சந்நிதிக்கு வந்துசேர்ந்தார்கள். புயலுக்குப் பிறகான நிசப்தத்தை கலைத்தபடி, பேரிரைச்சலுடன், நீர் கொட்டியது பவநாசினி அருவியில். உடம்பைத் துளைக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல் அருவியில் நீராடி முடித்து, சந்நிதியை அடைந்தார்கள். அங்கே, மெல்லிய தீபவொளியில் ஸ்ரீஜ்வால நரசிம்மரின் திருமுக தரிசனத் தைக் கண்டு சிலிர்த்துப்போனார்கள். நிலம் தோய விழுந்து வணங்கி எழுந்தார்கள். சிலர், பகவானைச் சேவித்தபடி அப்படியே தியானத்தில் ஆழ்ந்துபோக, ஓரிருவர், ஸ்ரீநரசிம்ம ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்ய ஆரம்பித்தனர். ரம்மியமாக நகர்ந்தது பொழுது!

திடீரென, 'டம... டம...’வென காதைப் பிளக்கும் பெரும் சத்தம்! பிரளயம் வந்தது போல் அதிர்ந்தது அந்த மலைப்பகுதி. குலைநடுங்கச் செய்யும் அந்த சத்தத்தைத் தொடர்ந்து, கருடாத்ரியின் உச்சியில் சூரியன் உதித்தது போல் பெருவெளிச்சம்; நள்ளிரவை நண்பகலாக்கியது. வழிகாட்டியும் அன்பர் களும் ஒருகணம் அதிர்ந்துதான் போனார்கள். 'நரசிம்மா காப்பாற்று!’ அவர்களையும் அறியாமல் வாய் முணுமுணுக்க, சத்தம் வந்த திசை நோக்கி திரும்பியது அவர்களது பார்வை!

அங்கே... மிகப்பெரிய பாறையன்று நழுவி, இவர்கள் நடந்து வந்தபாதையைக் கடந்து, மலைச் சரிவில் விழுந்து கொண்டிருந் தது. மலைச் சரிவில் அந்தப் பாறையின் மோதல் களால் ஏற்பட்ட விளைவே, பெரும் சத்தமும், பேரொளியும்! அந்தப் பாறை இவர்கள் வரும்போது விழுந்திருந்தால்...?! கற்பனையும் செய்யமுடியவில்லை; பரம்பொருளின் கருணை எல்லையற்றது!

அன்பர்களில் ஒருவர் இந்த அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, ''இயற்கையான நிகழ்வோ... இறையின் அருளாடலோ... என்னைப் பொறுத்தவரை, ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் தன்னுடைய பெயருக் கேற்ப பேரொளியாய்- ஒலியாய்... தனது சாந்நித்தியத்தை, அஹோபிலத்தில் தனது இருப்பை எங்களுக்கு உணர்த்தினார் என்றே சொல்வேன். கிருதயுகத்தில், தூணைப்பிளந்து, சூரியகோடி பிரகாசத்துடன் தோன்றினார் என்பார்களே... அப்படியரு பிரகாசத்தை அஹோபிலத்தில் அன்று கண்டோம்'' என்கிறார் திகைப்பு மாறாமல். ஸ்ரீநரசிம்மரை நேரில் தரிசித்த பரவசம் அவர் முகத்தில்.

நமக்குள்ளும் அதே உணர்வு! அஹோபிலத் தின் மலைகள் அந்த இறைவனின் பிரமாண் டத்தை உணர்த்த... புல், பூண்டு, மரம், செடி- கொடிகள் யாவும்... எங்கும் வியாபித்திருக்கும் அவனது சாந்நித்தியத்தை உணர்த்த... இனம் புரியாத பேரானந்தத்துடன் தொடர்ந்தது நமது பயணம்!

தசாவதாரம் திருத்தலங்கள்!


ஸ்ரீயோகானந்த நரசிம்மர்

கீழ் அஹோபிலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், வேதாத்ரி மலைத்தொடரின் மேற்குப் பகுதியில் இருக்கும் இவரின் சந்நிதியை, ஆட்டோவில் பயணித்து, வெகு எளிதில் அடையலாம்.

''அசுர வதம் முடிந்ததும், பிரகலாதனுக்கு சில யோக முத்திரைகளை உபதேசித்தார் நரசிம்மர். அதன் ஒரு நிலையில், யோக கோலத்தில் காட்சியளிக்கிறார் இவர்'' என்கிறார்கள் பக்தர்கள். மேலிரு கரங்களில் சங்கு-சக்ரம் துலங்க, கீழிரு கரங்களால் யோக முத்திரை காட்டியருளும் இந்த நரசிம்மரைத் தரிசித்து வழிபட, புதன் கிரக தோஷங்கள் அகலும்; ஞானம் கைகூடும் என்கிறார்கள்.

ஸ்ரீசத்ரவட நரசிம்மர்

யோக நரசிம்மர் சந்நிதியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இவரது சந்நிதி. சத்ர என்றால் குடை; வடம்- ஆலம். குடைபோன்று நிழல் தரும் ஆலமரத்தின் கீழ் காட்சி தந்ததால், ஸ்ரீசத்ரவட நரசிம்மர் என்று திருநாமம். மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம். கீழ் இடது கரம் தொடையில் அழுந்தியிருக்க, வலக்கரத்தால் அபயம் காட்டுகிறார்.

இரண்யன் அழிந்ததும், ஆஹா, ஊஹூ எனும் கந்தர்வ இசைக் கலைஞர்கள் தங்களின் இசையால் ஸ்வாமியின் உக்கிரத்தைத் தணிக்க முயன்றார்களாம்; அவர்களின் இசையில் மகிழ்ந்த ஸ்வாமியும்,  தமது கையால் தொடையில் தட்டி தாளம் போட்டு ரசித்தாராம்; அந்தக் கோலத்தையே இங்கு தரிசிக்கிறோம். இவரை வழிபட, தலைமைப் பதவி, ஜாதகத்தில் சூரிய பலம் கிடைக்குமாம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!


ஸ்ரீபாவன நரசிம்மர்

கிருத யுகத்தில், 'செஞ்சு’ எனும் மலைவாழ் மக்களின் வசிப்பிடமாகத் திகழ்ந்தது இந்த மலைப்பகுதி.

இவர்களில் ஒரு குடும்பத்தில் பிறந்தவளே செஞ்சுலட்சுமி. வளர்ந்து பருவமெய்திய செஞ்சுலட்சுமி, ஸ்ரீநாராயணன் மேல் அளவற்ற பக்தி கொண்டிருந்தாளாம்.

ஸ்ரீநரசிம்ம அவதார காலத்தில், ஸ்வாமியின் கோர ரூபத்தைக் காணவே பலரும் அஞ்சி நடுங்கிய போது, செஞ்சுலட்சுமி மட்டும் பெருமானின் திருமுகம் கண்டு, நாணித் தலை குனிந்தாளாம். இந்த அவதாரத்தில் தனக்கேற்றவள் இவளே என முடிவு செய்த பரம்பொருள், அவளைத் தன் துணையாக்கி, அருள் செய்தாராம்.

செஞ்சுலட்சுமி குறித்த செவிவழிக் கதை களைப் பரவசத்துடன் பகிர்ந்துகொள்ளும் பக்தர்கள், 'பாவா என்றால் மாமா என்று அர்த்தம். ஆகவே, செஞ்சுலட்சுமியின் பிரியத் துக்குரிய இந்த சாமிக்கும் பாவன நரசிம்மர் என்ற பெயர் ரொம்பப் பொருத்தம்தான்'' என சிலாகிக்கிறார்கள். இன்றைக்கும் மலைவாழ்இன மக்கள், தங்கள் குடும்பத்தில் ஒருத்தியாகவே செஞ்சுலட்சுமியைப் போற்றுகின்றனர். சனிக்கிழமை தோறும் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து பலியிட்டு, அன்னையை வணங்கிச் செல்கிறார்கள். கோயிலுக்கு எதிரில் வெட்டவெளிப் பகுதியில் பலிபூஜைகள் நிகழ்கின்றன. கருவறையில், ஆதிசேஷன் படமெடுத்து குடை பிடிக்க, சங்கு- சக்கர தாரியாக சுகாசனத்தில் அருள்கிறார்  ஸ்ரீபாவன நரசிம்மர். நமது வேண்டுதலை ஸ்வாமியிடம் சொல்லி, அருள் பெற்றுத் தரும் வகையில், தனது மலர்விழிகளில் ஒன்றை நம்மிடமும், மற்றொன்றால் ஸ்வாமியை நோக்கியவாறும் ஸ்ரீசெஞ்சுலட்சுமி அருள்வது, விசேஷம். ஸ்ரீபாவன நரசிம்மரை வழிபட, கெட்ட எண்ணங்கள் தலைதூக்காது; மனதில் அமைதி குடிகொள்ளும்; ராகு கிரக தோஷங்கள் விலகும் என்கிறார்கள்.

நாளும் நலம் தரும் நவநரசிம்ம மூர்த்தியரை யும் தரிசித்தபின், கீழ் அஹோபிலத்தில் ஸ்ரீபிரகலாதவரதரின் தரிசனம்.

தசாவதாரம் திருத்தலங்கள்!


வரம் தரும் ஸ்ரீபிரகலாதவரதர்

ற்புதமாக அமைந்துள்ளது பிரகலாத வரதர் ஆலயம். அருகிலேயே திருக்குளம்.வாயிலுக்கு எதிரில் ஜய ஸ்தம்பம் - அன்றைய மன்னர்கள் அந்நியர்களை வெற்றி கொண்ட தற்குச் சாட்சியாய் நிற்கிறது.

ராஜகோபுரத்தை வணங்கி, நாம் ஆலயத்துக் குள் நுழைய முற்பட... 'வந்துவிட்டாயா... வா... பெரிய பெரிய பெருமாளின் தரிசனம் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே...’ என நம்மை எதிர்கொண்டு அழைப்பதுபோல், உற்ஸவ கோலத்தில் கோயிலின் வாசல் நோக்கி வரும் ஸ்ரீராமானுஜரின் தரிசனம். ஆமாம்...

தசாவதாரம் திருத்தலங்கள்!

அன்று, உடையவரின் அவதாரத்திருநாள்; கோயிலில் இருந்து புறப்பட்டு, மடத்துக்கும் இன்னும்பிற சந்நிதிகளுக்கும் எழுந்தருள்வாராம் ஸ்ரீராமானுஜர். ஆண்டவன் தரிசனத்துக்கு முன் ஆசார்யனின் தரிசனம்; நல்ல கொடுப்பினை!

பிரமாண்டமான மண்டபங்களும் அகன்ற பிராகாரமு மாகத் திகழும் ஸ்ரீபிரகலாதவரதர் ஆலயத்தில் தாயார், ஆண்டாள், ஆழ்வார்கள் ஆகியோருக்கான தனிச் சந்நிகளும் உண்டு. திருப்பதி வேங்கடாசலபதி தனது திருமணத்துக்குமுன், இங்கே வந்து ஆசிகள் பெற்றுச் சென்றதாக ஐதீகம். அதனால், அவருக்கும் தனிச்சந்நிதி உண்டு. அருகிலேயே கல்யாண மண்டபம். கருவறையில்... இடக் காலை மடக்கி வைத்து, வலக்காலைத் தொங்கவிட்டு, சுக ஆசனத்தில் வீற்றிருக்கிறார். ஸ்ரீலட்சுமிநரசிம்மர். மேற் கரங்களில் சங்கு-சக்கரம்; வலக் கரம் அபயம் அருள, இடக்கரம் தேவியைச் சுற்றி வளைத்திருக்கிறது. மூலவர் மட்டுமின்றி, உற்ஸவர் களான ஸ்ரீபிரகலாதவரதர், ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீஜ்வாலா நரசிம்மர் ஆகியோரையும் தரிசிக்கலாம்.

தீபாராதனை ஒளியில், பாதாதிகேசமாக ஸ்ரீநரசிம்ம ரைத் தரிசிக்க... அடடா... ஆயுள் முழுக்க அவர் சந்நிதியிலேயே இருந்துவிடலாமோ எனும் எண்ணம் எழுகிறது. கண்கள் பனிக்க, மனசு நிறைய அந்த மாலவனை- மாயவனை- அஹோபிலம் நாயகனை வணங்கி விடைபெற்றோம்; 'இறைவா மீண்டும் வருவேன் உன் சந்நிதானத்துக்கு’ எனும் சங்கல்பத்துடன்!

அஹோபில தரிசனம் இனிதே நிறைவுற்றது. அல்லகட்டா செல்லும் அந்தப் பேருந்து, தனது வேகத்தைஅதிகரிக்க, மெள்ள மெள்ள நம் கண்களில் இருந்து மறைந்த வேதாத்ரியும் கருடாத்ரியும் நம் மனத்தை முழுமையாக ஆக்ரமித்துக்கொண்டன!

- அவதாரம் தொடரும்...

அஹோபில பயணமும் தரிசனமும்

ஹோபிலம் செல்லும் பக்தர்கள் ஜனவரி-பிப்ரவரி-மார்ச் அல்லது ஜூன்-ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பயணம் மேற்கொள்ளலாம். இதனால், கோடை மற்றும் மழைக்கால சிரமங்களைத் தவிர்க்க முடியும்.

அஹோபில மடத்தில் முன்னரே தகவல் சொல்லிவிட்டுச் சென்றால்... உணவு, தங்கும் அறைகள், வழிகாட்டி உதவிகளை ஏற்பாடு செய்து தருகிறார்கள். அஹோபில மடத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள் உண்டு. சாதாரண அறைகளுக்கு கட்டணம்: ரூ.300. குளிர் சாதன வசதிகொண்ட அறைகளுக்கு ரூ.600.

தசாவதாரம் திருத்தலங்கள்!

அறைகளில் தங்கியிருக்கும் பக்தர்கள், வெளியே செல்லும் போது அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டுச் செல்வது அவசியம். ஏனெனில், இங்கே வானரங்களின் சேஷ்டைகள் அதிகம்!

நவநரசிம்மர்களையும் தரிசிக்கச் செல்லும்போது, மலைப் பாதையில் வழிதவறிவிடவும் வாய்ப்பு உண்டு. எனவே, வழிகாட்டிகளை அழைத்துச் செல்வது அவசியம்.  

மேல் அஹோபிலம் உக்கிர நரசிம்மர் சந்நிதிக்கு அருகே, வயதானவர்களுக்கு ஊன்றுகோல்கள் தருகிறார்கள். மேலும் குறிப்பிட்ட தூரத்துக்கு மேல் மலையேற முடியாத சூழலில் இவர்களுக்கு டோலி வசதிகளும் உண்டு. இதற்கு, ரூ.1800 வரை கட்டணம் வசூலிக்கிறார்கள்.

கீழ் அஹோபிலத்திலும், மேல் அஹோபிலம் ஸ்ரீஉக்ர நரசிம்மர் கோயிலுக்கு அருகிலும் உணவு விடுதிகள்- கடைகள் உண்டு. அதற்கும் மேல் மலையில் பயணிக்கும்போது தண்ணீர் பாட்டில்கள் எடுத்துச் செல்வது அவசியம்.

கீழ் அஹோபிலத்திலிருந்து, காலை சுமார் 6 மணிக்குப் புறப்படுவதுபோல் திட்டமிட்டுக்கொண்டால், தரிசனப் பயணம் எளிதாகும். அதேபோல், குறைந்தது இரண்டு நாட்களாவது அஹோபிலத்தில் தங்கி வழிபட்டு வருவது சிறப்பு!

சனிக்கிழமைகளில் பாவன நரசிம்மர் சந்நிதியில் விசேஷம் என்பதால், வெள்ளிக்கிழமை மாலையிலிருந்தே கூட்டம் வர ஆரம்பித்துவிடும். எனவே, வெள்ளிக்கிழமைகளில் இந்தச் சந்நிதிக்குச் செல்வோர், மாலை 4 மணிக்கு முன்னதாகவே அங்கு சென்று திரும்பிவிடவேண்டும். இதனால், கரடுமுரடான ஒற்றைவழிப் பாதையில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பிக்கலாம்.

அதேபோல், அஹோபிலம் செல்வோர் அவசியம் தரிசிக்க வேண்டியது - பிரகலாதமெட்டு குகைக் கோயில். ஸ்ரீமாலோல நரசிம்மர் சந்நிதியில் இருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ளது. பிரகலாதனின் குருகுலம் இங்குதான் அமைந்திருந்ததாம். இங்கே சிறு குகைக்குள் ஸ்ரீநரசிம்மரையும், பிரகலாதனின் விக்கிரகத்தையும் தரிசிக்கலாம்.