Published:Updated:

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி

ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி
ஸ்ரீரமண மகரிஷி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ன்னை அறிந்த ஞானியர்கள், எல்லோருக்கும் பொதுவானவர்கள். பிடித்தவரோடு மட்டுமே பேசுவது, பணக் காரர்களோடு மட்டுமே உறவாடுவது என்பது அவர்களிடம் இல்லை. எந்த  பிரிவினையுமின்றி, எல்லோரிடமும் அவர்கள் ஒரே விதமான பிரியத்தை உடையவர்கள்.

விருபாக்ஷி குகையிலிருந்து மேலே உள்ள மாமரத்து குகைப் பக்கம் போய் விறகு பொறுக்கி வரும் பெண்கள்,  கீழே இறங்கும்போது, விறகுச் சுமையை கீழே போட்டுவிட்டு, பகவானைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிடுவார்கள்; விழுந்து வணங்குவார்கள். முட்கள் கிழித்து, வெயிலால் கறுத்துத் தடித்த மேனியில் வலியும் அரிப்பும் இருக்கும். பகவான் ஸ்ரீரமண மகரிஷியைப் பார்த்து, 'சுவாமி! முதுகுல கொஞ்சம் தண்ணி ஊத்துங்க சாமி’ என்று சொல்வார்கள். பின்பு, தாகம் தீர தண்ணீர் அருந்திவிட்டு, அங்கே சற்று நேரம் உட்கார்ந்து இளைப்பாறிவிட்டுப் போவார்கள்.

ஸ்ரீரமண மகரிஷி

அன்பர் கொண்டு வந்த தானியங்களை ஒரு பானையில் போட்டு, மோர் விட்டுக் கரைத்துக் கஞ்சியாக்கி, அதை அந்தப் பெண்களுக்குக் குவளை குவளையாக பகவான் கொடுப்பார். அமுதம், அமுதம் என்று அந்தப் பசி வேளைக்கு அவர்கள் அதை உண்டுவிட்டு, விடை பெற்றுப் போவார்கள்.

மழையானது வஞ்சனையின்றி எப்படி எல்லா இடத்திலும் பாய்கிறதோ, அதே போல பெரியவர்களது கருணை இன்னார், இனியார் என்று பார்க்காது; உயர்வு, தாழ்வு பார்க்காது; காசு, பண வித்தியா சங்கள் பார்க்காது; சகலரிடமும் ஒரே விதமாகப் பொழியும்.

உயர்ந்த தத்துவம் பேசுவதும், பாமரர்களுக்கு ஓடி ஓடி உதவுவதும், ஒரே விதமாகவே ஞானியர்களிடம் நடைபெறும். பகவான் ஸ்ரீரமண மகரிஷியிடம் அவ்விதமே அமைந்து இருந்தது. பகவானின் சித்தப்பா நெல்லையப்பர், பகவான் விருபாக்ஷி குகையிலிருக்கும்போது, வந்து ஒருமுறை தரிசித்துவிட்டுப் போனார். பகவான் அவரிடம் ஒன்றும் பேசவில்லை. அவரும் ஒரு நாள் தங்கிவிட்டு, ஊருக்குக் கிளம்பிப் போனார். விருபாக்ஷி குகைக்கு அடிக்கடி வரும் ஓர் இளைஞன், தட்சிணாமூர்த்தி ஸ்லோகத்தைத் தனக்கு விளக்கிச் சொல்லுமாறு, பகவானிடம் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். வழக்கமாக பகவான் விருபாக்ஷி குகையின் வாசலைப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருப்பார். ஆனால், அன்று அந்த இளைஞனை எதிரே உட்கார வைத்து, தான் வாசலுக்கு முதுகு காட்டியபடி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, நெல்லையப்பர் மீண்டும் ஒருமுறை பகவானை தரிசிக்க வந்தார்.

ஒன்றுமே பேசாமல் இருக்கும் தன் அண்ணன் மகன், அன்று ஏதோ ஒரு வேதாந்தப் பொருளை விளக்கமாகச் சொல்வதைப் பார்த்து, அவர் பகவானுக்குப் பின்னால் நின்று, அதைச் செவிமடுத்தார். பகவான் ஸ்ரீரமண மகரிஷிக்கு நெல்லையப்பர் வந்தது தெரியவில்லை. அவர் வரும்போது, நான்காவது ஸ்லோகத்தை பகவான் விளக்கிக்கொண்டிருந்தார். தனது அண்ணன் மகன் வேங்கடராமனின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்டுக் கொண்டிருந்த நெல்லையப்பர், இந்த விளக்கத்தைக் கேட்டதும், பகவான் சிறந்த ஒரு தத்துவச் சுடராக ஜொலிப்பதைப் புரிந்து கொண்டார்.

ஆதிசங்கரரின் தட்சிணாமூர்த்தி ஸ்தோத்தி ரத்துக்கு, பகவான் ஸ்ரீரமண மகரிஷி அளித்த விளக்கம் அற்புதமானது. தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்துக்கு முன்னுரை போன்ற அவதாரிகையை அவர் எழுதியிருக்கிறார்.

##~##
'உலக சிருஷ்டிகர்த்தரான பிரம்மதேவரின் மானசீக புத்திரர்களான சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமாரர் எனும் நால்வரும், சகசிஷ்யாதி காரியங்களுக்காக தாம் பிறப்பிக்கப்பட்டமையைப் பிதாவால் கேட்டு, அதில் விரக்தியுற்றவராய், உபசாந்தியை நாடி, அதனைத் தெளிவிப்பாரைத் தேடி வர... அதிதீத பக்குவர்களின் பொருட்டு, பரம காருணிகளான சாட்சாத் பரமேஸ்வரன், ஆலின் கீழ் தட்சிணாமூர்த்தமாக, மௌனமாய், தன்னிலையிற் சின்முத்திரையோடு இருக்கக் கண்டதும், காந்தம் கண்ட இரும்புபோல் கவரப்பட்டவர்களாய், அவர் அருகில் உண்மை நிலையில் அமர்ந்தனர்.

இந்த மௌனமாம் தன்னிலை உண்மையை உணரும் சக்தியில்லா உத்தம அதிகாரிகட்குத் தடை யாய்க் காணப்படும் உலகமாய் காண்பானாய், காட்டும் ஒளியாய், விரித்தொடுங்கும் சக்தி தன்னை யன்றி, இன்மையின் எல்லாம் தன்மயம் என்னும் தர்ம தத்துவத்தைத் தொகுத்து, இந்த ஸ்தோத்திரத்தால், ஆச்சரிய சங்கரர் அறிவிக்கலாயினர்!’ - இது பகவான் ரமணருடைய முன்னுரை.

இது என்ன சொல்கிறது? பிரம்மதேவரின் மானசீக புத்திரர்களான சனகர், சனந்தனர், சனத்சுஜாதர், சனத்குமார் நால்வரும், தாங்கள் இந்த உலகில் படைக்கப்பட்டது உலகாயத காரியங்களுக்காகத்தான் என்று தங்கள் தந்தை சொல்ல, அதில் நம்பிக்கையில்லாமல், விரக்தியுற்று, உண்மை என்ன என்று தேடி, மனம் சாந்தி அடைவதற்காக, யார் நமக்குத் சொல்லித் தருவார்கள் என்ற எண்ணத்தோடு அலைந்துகொண்டிருந்தபோது, சாட்சாத் பரமேஸ்வரனே, தன்னைத் தேடி வருகின்ற இந்தத் தீவிரமான மனிதர் களின் பொருட்டு, ஆலமரத்தின் கீழ், சின்முத்திரையோடு அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்ததும், காந்தம் கண்ட இரும்பு போல, அவருக்கு அருகே போய், அவரையே பார்த்தபடி, அந்த நால்வரும் அமர்ந்தார்கள்.

தட்சிணாமூர்த்தியின் மௌனம் அவர்களைத் தாக்கி, அவர்களுக்குள்ளும் புகுந்து, அவர்களையும் மௌனமாக இருக்க வைத்தது. எது உலகம்? யார் பார்ப்பது? பார்ப்பதற்கு உண்டான சக்தி எங்கிருந்து வந்தது? இது எல்லாம் தன்மயம் என்னும் தத்துவம். தன்னுடைய ஆன்மப் பேரொளியே உலகமாக, மற்ற எல்லா விஷயங்களுமாக, பார்ப்பவனாக, பார்ப்பதற்குண்டான சக்தியாக இருக்கிறது என்பதைச் சொல்லாமல் சொல்லி உணர்த்தினார்.

நெல்லையப்பர் வந்தபோது, பகவான் சொன்ன நாலாவது பாடல் என்ன? 'எவனது உண்மைப் பிரகாசமே, பொய்யாய் தோன்றும் புலன்களில் விளங்குகிறதோ, எவன் தன்னை அடுத்தவர்களைத் தத்துவமசி என்னும் வேத வாக்கால் நேராக அறிவிக்கின்றானோ, எவனைப் பிரத்யட்சமாகக் கண்டால், இந்தச் சம்சார சாகரத்தில் படுவதில்லையோ, தவத்தினரை அடையும் அந்தக் குரு தட்சிணாமூர்த்திக்கு நமஸ்காரம்.’ இது பகவானின் மொழி பெயர்ப்பு.

என்ன சொல்கிறார் இங்கே? தன் மனதிலே இருக்கின்ற உண்மை பிரகாசம், அவனைச் சுற்றியுள்ள புலன்களில்கூட வந்து விழும். அந்த இடம், அவனைச் சுற்றியுள்ள மனிதர்கள், அவனைச் சுற்றியுள்ள பொருள் கள் எல்லாமுமே அந்த உண்மைப் பிரகாசத்தால் மேலும் சிறப்புற்று விளங்கும். விருபாக்ஷி குகையில் அமர்ந்தாலும் சரி, வேறு ஒரு இடத்தில் இருந்தாலும் சரி, அந்த இடத்தினால் மகிமை இல்லை; உண்மைப் பிரகாசமாக ஒருவர் உட்கார்ந்திருக்கிறாரே, அவரால் தான் அந்த இடம் மகிமை பெறுகிறது. சத்தியமானவர் குகையில் அமர்ந்திருப்பதால், குகைக்கு சிறப்பு இருக்கிறது.

இதுவரை எந்தவித உபதேசங்களும் இல்லாமல், எடுத்த எடுப்பிலேயே, 'தத்துவமசி, நீ அதுவாக ஆனாய்’ என்ற அற்புதமான ரகசியத்தை எவர் சொல்லித் தருகிறாரோ, எவரைக் கண்ணால் கண்ட பிறகு, இந்தச் சம்சார பந்தத்தில் மனம் படிவதில்லையோ, பார்த்த மாத்திரத்திலேயே உள்ளுக்குள் மனம் இளகி, கண்ணீர் பெருக்கி, யார் இந்த தெய்வ சொரூபம், எங்கிருந்து வந்தது, இதற்கு இப்படி இருக்கிறதே, நான் இப்படி இருக்கிறேனே என்று நிலை கண்டு வருந்தி இரங்கி, அந்தத் தெய்வச் சாந்நித்தியத்தில் மனம் ஒடுங்கி நிற்கும்படியாக எவர் செய்கிறாரோ, அந்தக் குருவுக்கு என் நமஸ்காரம்.’ இந்த விளக்கம்தான் அங்கு நடந்தது.

ஸ்ரீரமண மகரிஷி

உடனே, தன் அண்ணன் மகன் என்கிற எண்ணம் அகன்று, இங்கே மிகப்பெரிய தத்துவ சொரூபம் அமர்ந்திருக்கிறது என்று பார்த்த மாத்திரத்திலேயே நெல்லையப்பருக்குப் புரிந்து விட்டது. இங்கு நீண்ட உபதேசங்கள் எதுவும் நடைபெறுவது இல்லை. கேள்வி கேட்டு, பதில் சொல்லி... என்பதெல்லாம் வருவதில்லை. இங்கு தவம் செய்தவர், இம்மாதிரியான சத்திய சொரூபத்தைக் கண்டால், மனம் ஒடுங்கி நிற்கிறார். அத்தகைய வலிமை அந்த சத்திய சொரூபத்துக்கு இருக்கிறது. ரமண மகரிஷி சத்திய சொரூபம்.

'தேகம், பிராணன், இந்திரியங்கள், புத்தி இவை ஒடுங்கிய சூன்யம்... இவற்றையே தானாக, பெண்டுகள், குழந்தைகள், கிழவர்கள் போல உணரும் மூடவாதிகளின் பெரும் மயக்கத்தைப் போக்கும், மயக்கமில்லாத ஞானகுருவான அந்தத் தட்சிணாமூர்த்திக்கு நமஸ்காரம்.

நான், நீ, பெண்டுகள், ஆண்கள், மூடர், குருடர், அவர், இவர் என்று பல்வேறு விஷயங்களாக, பல்வேறு பொருள்களாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஆனால், எல்லாம் என்ன?

தேகம், பிராணன், இந்திரியம், புத்தி இவையெல்லாம் ஒடுங்குகின்ற பெருவழி என்பது புரிந்துவிட்டால், இந்த அத்தனைப் பொருள்களிலும் இவைதான் இருக்கின்றன என்பது தெரிந்துவிட்டால், பிரிவினை வருமா? இதை உணர்த்துகின்ற குருவுக்கு, தட்சிணாமூர்த்திக்கு என் நமஸ்காரம்.’

தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரத்துக்கு விளக்கம் எழுதியது போல, ஸ்ரீகுரு ஸ்துதி என்பதற்கும் பகவான் ஸ்ரீரமண மகரிஷி மிக அழகாக விளக்கம் எழுதியிருக்கிறார்.

ஆதிசங்கரர் பரத கண்டம் முழுவதும் பயணம் தொடங்கிய போது, வடதேசத்தில் மாயிமதி நகரத்தில் வசிக்கும் கர்ம காண்டத்தில் தேர்ச்சி பெற்றவரான மண்டல பண்டிதரை வாதத்தில் ஜெயித்தார். அப்போது அவருடைய மனைவி, ''என்னையும் வாதத்தில் ஜெயித்தாலன்றி இந்த வெற்றி முழுமை பெறாது'' என்றாள். சரஸ்வதி ரூபமாக உள்ள அந்த பெண்மணியுடன் வாதம் செய்ய... காமசாஸ்திரம் தெரியும் என்று சொன்னால், சத்குருவினுடைய சந்நியாசம் பொய் என்று ஆகும். காம சாஸ்திரம் தெரியாது என்று சொன்னால், அதைத் தெரிந்த அந்தப் பெண்மணி வெற்றி பெற்றவள் ஆவாள். எனவே, 'இதைத் தெரிந்துகொண்டு வந்து பேசுகிறேன்’ என்று ஒரு மாதம் அவகாசம் கேட்டு, மலைக் குகையில் தன்னுடைய உடம்பை வைத்து, உடம்பிலிருந்து வெளிப்பட்டு, உடம்புக்குச் சீடர் காவல் இருக்க, இறந்துபோன ஓர் அரசனுடைய உடம்புக்குள் புகுந்து, அந்த உடம்பின் மூலம், அவருடைய மனைவிகளுடன் கலந்து, காம சாஸ்திரத்தைத் தெளிவுபடுத் திக் கொண்டார். சொன்ன காலத்துக்குத் தாமதமானதால், சீடர்கள் பாடகர்கள் போல அரண்மனைக்குச் சென்று, ஸ்ரீசங்கரராய் இருக்கின்ற அந்த அரசன் முன்பு பாடத் துவங்கியதே குருஸ்துதி.

பகவான் மொழிபெயர்த்த குரு ஸ்துதியின் முதல் பாடல்... இதுவல்ல, இதுவல்ல என்று கூறும் உபநிஷத்தின் வழியில், ஸ்தூல ரூபங்களையும், சூக்ஷ்ம ரூபங்களையும் விளக்கி, பிறகு எதுவுமே தள்ளுவதற்கு இல்லாத சொரூபத்தைத் தனது சுயம் சொரூபமாக எவர் கொள்வாரோ, சொல்லுக்கு அடங்காத பெருமையுடைய ஞானிகள், எதை தங்களது இதயத்தில் இருத்துவார்களோ, ஆதியாபியாகிய அந்தச் சச்சிதானந்த பரவஸ்துவாகிய பிரம்மம் நீதான் அன்றோ என்று கூறுகின்றனர்.

'இதுவா கடவுள்? இல்லை; விக்கிரகமா கடவுள்? இல்லை; ஆசார அனுஷ்டானங் களா கடவுள்? இல்லை; கோயில்களா கடவுள்? இல்லை;  சின்னமா கடவுள்? இல்லை; கட்டடமா கடவுள்? இல்லை...’ இப்படி ஒவ்வொன்றாக விலக்கி, எதை விலக்க முடியவில்லையோ... 'அடடா, இதுதான்!’ என்று எந்த இடத்துக்குப் போய் நிற்கிறாரோ... ஞானியர்கள் எல்லாம் விளக்கமுடியாத அந்த வஸ்துவை எப்படி நெஞ்சில் இருத்துவார்களோ, அதுவே கடவுள். அறிவாகிய, உடம்பின் உள்ளுக்குள்ளே பிரகாசிக்கின்ற பிரம்மம் நீதான் என்று குருவைக் கொண்டாடுகிறார்கள்.

'குரு என்பவர் எதை விளக்க முடியாதோ, எது தன்னுள் மிகப் பிரகாசமாய் பொருந்தியிருக்கிறதோ, அதை உணர்ந்தவர்’ என்று இந்தப் பாடல் சொல்கிறது.

முதலும், பிறகு கடைசிப் பாடலு மாக எட்டு பாடல்கள் கொண்ட இந்த குரு ஸ்துதி விளக்கத்தை பகவான் எழுதி வைத்தார்.

- தரிசிப்போம்...