Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ந்த ஒரு சாயி குடும்பமும், சாயியிடம் சரணாகதி அடைந்து, அவனருளாலே அவன் தாள் வணங்கி நின்று, எல்லாம் சாயியாய் வாழ்வதற்கு, அவர்களது வாழ்வில் சாயி நிகழ்த்திய ஏதோ ஓர் அற்புதமே காரணம்! அது, அவர்களுக்குள் நல்லதொரு மனமாற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

டாக்டர் நரசிம்மனின் குடும்பத்தில் நிகழ்ந்த மனமாற்றமும் அர்ப்பண உணர்வும் அப்படிப்பட்டதுதான்.

டாக்டர் நரசிம்மனுக்குச் சர்க்கரை வியாதி. வலதுகால் புண்ணாகிப் புரையோடி, மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வீட்டில், அவர் காலைச் சுத்தம் செய்து மருந்து பூசுவதற்காக, புண்ணான காலின் மேலிருந்து துணியை எடுக்கும் போது, வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப நேரத்துக்கு மூக்கை மூடிக்கொள்ள வேண்டும்; முகத்தைத் திருப்பிக்கொள்ள வேண்டும். அப்படியரு துர்நாற்றம் வீசும். 'வேறு வழியில்லை; அறுவை சிகிச்சை செய்து, அந்தக் காலை எடுத்துவிட வேண்டும்’ என்றார்கள் டாக்டர்கள். ஆபரேஷனுக்கு நாளும் குறித்துவிட்டார்கள். குடும்பமே வேதனையில் மூழ்கியது. மனைவி கெஜலட்சுமி, இரண்டு பெண்கள், இரண்டு பிள்ளைகள் நிறைந்த அந்தக் குடும்பம் துன்பத்தில் தத்தளித்தது. நரசிம்மனுக்கு சத்ய சாயிபாபாவின் மீது நம்பிக்கை உண்டு. அது மனதளவிலான வழிபாடு; வீட்டாருக்குத் தெரியாது.

இரண்டாவது பெண் கமலா, பள்ளிக்கூடத்திற்குப் போய்க்கொண்டிருந் தவள், 'எங்க அப்பாவுக்கு ஆபரேஷன், எங்க அப்பாவுக்கு ஆபரேஷன்...’ என்று சொல்லி அழுதபடியே நடந்து போய்க்கொண்டிருந்தாள். யாராவது இந்தத் துக்கத்திலிருந்து மீட்கமாட்டார்களா என்று அந்தப் பிஞ்சு மனம் ஏங்கிக் குமுறியது. கண்ணீர் வழிய நடந்து கொண்டிருந்த சிறுமி கமலாவின் முன், பெரியவர் ஒருவர் வந்தார். சிறுமியைப் பரிவுடன் பார்த்து, ஒரு படத்தையும் விபூதிப் பாக்கெட்டையும் தந்து, 'இந்த சுவாமி படத்தை உங்கப்பா தலைமாட்டுல வை. இந்த விபூதியை உங்கப்பா நெத்தியில பூசி, கொஞ்சம் வாயில போடு. உங்கப்பா குணமாயிடுவார்’ என்று சொல்லி, சிறுமியின் முதுகில் தட்டிக் கொடுத்துவிட்டு, வேகமாகச் சென்றுவிட்டார். சிறுமியின் மனதில் வலுவான நம்பிக்கை ஏற்பட்டது. அது சத்ய சாயிபாபா அபய ஹஸ்தம் காட்டிக்கொண்டிருந்த ஒரு சிறு அட்டைப்படம். கையில் விபூதி. வந்தது யார், என்ன என்பது பற்றியெல்லாம் யோசனையில்லை. இவர் சொன்னபடி செய்தால், அப்பா குணமாகி விடுவார் என்ற நம்பிக்கை மட்டும் அழுத்தமாகப் பதிந்தது.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

வீட்டில் இதை யாருக்கும் சொல்லவில்லை. ஆபரேஷன் நடக்க இருந்த நாளன்று, அப்பாவுடன் மற்றவர்கள் முன்பே போய்விட்டனர். இவள் பின்னால் ஓடினாள். இவள் போவதற்குள் அப்பாவை ஆபரேஷன் தியேட்ட ருக்கு அழைத்துப் போய்விட்டார்கள். அவ்வளவுதான்... 'அப்பாகிட்டே கூட்டிட்டுப் போங்க’ என்று ஒரே அழுகை; அழுதபடியே ஆஸ்பத்திரி வராந்தாவில் உருண்டாள் கமலா. டாக்டர்கள் திகைத்தனர். 'டாக்டரின் மகள்தானே... ஆபரேஷன் தொடங்குவதற்கு முன் சட்டென்று பார்த்துவிட்டு வந்துவிடட்டுமே’ என்று அவளை உள்ளே அனுமதித்தனர். ஓடி வந்தவள் அப்பாவின் தலைமாட்டில், சத்ய சாயிபாபாவின் படத்தை வைத்துவிட்டு, விபூதியை நெற்றியில் இட்டு, கொஞ்சம் வாயிலும் போட்டு, 'அப்பா! உங்களுக்குக் குணமாயிடும்’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்துவிட்டாள். ஆபரேஷன் செய்வதாக இருந்த டாக்டர், சிறிது நேரத்துக்குப் பிறகு வெளியே வந்தார். குடும்பத்தினரைப் பார்த்து, 'ஆபரேஷன் நாளைக்கு’ என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். ஏதோ ஒரு குழப்பம் தெரிந்தது அவர் முகத்தில்; யாருக்கும் ஒன்றும் புரியவில்லை.

##~##
மறுநாள், வெளியே குடும்பத்தினர் காத்திருக்க, டாக்டர் ஆபரேஷன் செய்வதற் காக, சக உதவியாளர்களுடன் ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைந்தவர், 'ஓ’வென்று கத்தியேவிட்டார். ஆபரேஷன் செய்து நீக்கப் படுவதாக இருந்த கால், நன்றாக, ஆரோக்கியமான, பழைய காலாக மாறியிருந்தது! அதிர்ச்சியில் அவர்கள் ஆடிப்போனார்கள். இந்த விசித்திரத்தை, அற்புதத்தைப் பார்த்து மருத்துவமனையே வியந்தது. குடும்பத்தினருக்கு ஒரே குதூகலம்! முதல் நாள் 'அனஸ்தீஷியா’ கொடுத்து நீண்ட நேரமாகியும் 'பேஷன்ட்’ மயக்கத்துக்குப் போகாமல், 'சாயிராம்... சாயிராம்’ என்று முனகிக்கொண்டே இருந்திருக்கிறார். அதனால்தான் டாக்டர், ஆபரேஷனை அடுத்த நாளைக்குத் தள்ளிப்போட்டிருந்தார். அதற்குள், பாபா அற்புதத்தை நிகழ்த்திவிட்டார்.

அந்த டாக்டர் குடும்பம் சாயி வட்டத்துக்குள் முழுமையாக வந்து, சாயிக்கு தங்கள் வாழ்வை அர்ப்பணம் செய்து கொள்ள இந்தச் சம்பவமே காரணம்! அவர்களது வாழ்வுக்குப் பாதுகாவலராகவும், வளர்ச்சி களுக்கெல்லாம் பாதை போடுபவராகவும், கேட்டதைக் கொடுக்கும் கற்பக விருட்சமாகவும் பாபா இருந்தார்; இருக்கிறார்.

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சில வருடங்களுக்குப் பிறகு, டாக்டர் நரசிம்மன், சுவாமியின் நினைவிலேயே வாழ்ந்து மறைந்த பின்பு, சுவாமிக்கு அந்தக் குடும்பத்தின் மீதான பொறுப்பும் கருணையும் இன்னும் கூடுதலானது.

அன்று மதியச் சாப்பாட்டுக்கு, திருமணமான மகனின் மனைவி வழி உறவினர்கள், சம்பந்தி வீட்டுக்காரர்கள் 25 பேருக்கு மேல் சாப்பிட வருகிறார்கள் என்று, காலையில் செய்தி சொன்னான் மகன். நரசிம்மனின் மனைவி கெஜலட்சுமிக்குத் திகைப்பாயிருந்தது. பெண்கள் வேலைக்குப் போய்விட்டார்கள்; மளிகைச் சாமான்கள் சுத்தமாக இல்லை; இனிமேல்தான் வாங்கவேண்டும்; கடைக்குப் போய் வர ஆளில்லை. 'சாயிராம்... இதென்ன சோதனை! திடுதிப்பென்று வருகிறார்களே... அரிசி, பருப்பு முதற் கொண்டு மளிகைச்சாமான் எதுவும் இல்லை. எப்படிச் சமைப்பது சுவாமி? வருகிறவர்களை எப்படி உபசரிப்பது?’ என்று கெஜலட்சுமி ஓயாமல் புலம்பிக் கொண்டிருந்தாள்.

அப்போது, ஸ்டோர் ரூமில் 'சரசர’வென்று சத்தம் கேட்டது. அந்த அம்மாள் ஓடிப் போய்ப் பார்த்தார். ஸ்டோர் ரூம் சுவரிலிருந்து அரிசி, பருப்பு, தானியங்கள் என விருந்துக்குத் தேவையான மளிகைச் சாமான்கள் அத்தனையும் கொட்டிக் கொண்டிருந்தன.

'சாயிராம்... சாயிராம்’ என்று அதையெல்லாம் அள்ளி அள்ளிப் பாத்திரத்தில் போட்டுக் கொண்டார் கெஜலட்சுமி. 'சுவாமி... இது சாயி பிரசாதம்! வருகிறவர்கள் உன் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். ஆனால், அவர்களுக்கு சாயி பிரசாதத்தைக் கொடுக்கிறாய். அவர்களுக்கு நல்ல கொடுப்பினைதான்!’ என்று சத்தமாகச் சொல்லியபடியே விருந்துச் சாப்பாட்டை அமர்க்களமாகச் செய்து, வந்தவர்களுக்குப் பரிமாறினாள். இவர் குடும்பத்தில் சாயி புரிந்துவரும் அதிசயங்களைக் கேட்டால்... திணறித் திகைத்துப் போகிறது மனம்!

- அற்புதங்கள் தொடரும்

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ங்கள் ஊரில் நடைபெற்ற சாயிபாபா பற்றிய புகைப்படக் கண்காட்சிக்கு விருப்பமே இல்லாமல்தான் சென்றேன். மேடையில், ஒரு நாற்காலியில் வைக்கப்பட்டிருந்த பாபாவின் திருவுருவப் படத்தின் அருகில் சென்று, 'அரசு வேலை என்பது என் நெடு நாள் கனவு. அதை நிறைவேற்றித் தருவீர்களா?’ என மானசீகமாக வேண்டிக்கொண்டேன் மறுநாளே, தேர்வுக்கான கடிதம் வந்ததும், அரசு வேலையில் அடியேன் சேர்ந்ததும் பாபாவின் கருணையே!

பிறகு, வேறு ஊருக்கு மாற்றலாகி, குடும்பத்துடன் அங்கிருந்தபோது, என் மனைவி கருவுற்றாள். ஏற்கெனவே முதல் குழந்தையை இழந்து, அடுத்த குழந்தை கருவுற்றிருந்த தருணம் அது. அப்போது, எங்கள் தெருவில் சாயி பஜன் நடக்க, அங்கு சென் றோம். பிறகு, மெள்ள மெள்ள சாயி பக்தர்களாகவே மாறிப்போனோம். கார்த்திகை மாதம் திங்கட் கிழமையன்று சாயி பகவான் பிறந்தது போலவே, எங்களுக்கும் கார்த்திகை- திங்கட்கிழமையில் மகன் பிறந்தான். இதுவும் அவர் தந்த வரம்தான்!

'என் சங்கல்பமின்றி என்னைத் தரிசிக்க முடியாது’ என்பார் சத்ய சாயிபாபா. அதேபோல், பலமுறை முயன்றும் சுவாமியைத் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை, எங்களுக்கு! ஒரு தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், கொடைக்கானலில் சுவாமியின் தரிசனம் கிடைத்தது. நெஞ்சமெல்லாம் குளிர்ந்து, நிறைந்துவிட்டது, எங்களுக்கு!

என் தாயாரின் நீண்ட நாள் கோரிக்கை, 'என்னைப் புட்டபர்த்திக்குக் கூட்டிட்டுப் போயேன்!’ என்பதுதான். ஒருநாள்... என் கனவில் பாபா தோன்றி, 'அடுத்த மாதம் 18, 19 தேதிகளில் உன் அம்மாவை புட்டபர்த்திக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். எனக்கோ குழப்பம். இது பாபாவின் கட்டளையா... அல்லது வெறும் பிரமையா?! தெரியவில்லை. அதேநேரம், எங்கள் ஊரில் இருந்த சாயி சமிதி அமைப்பினர், பக்தர்களை புட்டபர்த்திக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்திருப்பதாகச் சொன்னார்கள். அவர்கள் புட்ட பர்த்திக்குச் செல்லும் தேதியைக் கேட்டதும் அதிர்ந்தே விட்டேன்! பாபா சொன்ன, அதே 18 மற்றும் 19 தேதிகளில் செல்வதாகச் சொன்னார்கள். அவர்களோடு நானும் அம்மாவும் புட்டபர்த்திக்குச் சென்றதும், அங்கே பகவானின் யானை என்னை ஆசீர்வதித்ததும்

சிலிர்ப்பான அனுபவம்! இன்னொரு சம்பவம்...

10 நாட்கள் புட்டபர்த்தியில் இருந்தபடியே பாபாவுக்கு சேவை செய்யும் பாக்கியம் கிடைத்தது எனக்கு. அப்போது, பகவானின் பிறந்த நாளையட்டி, கிராம மக்களுக்கு உணவு வழங்குவார்கள். இதனை 'நாராயண சேவா’ என்பார்கள். அந்த உணவை எங்களைப் போன்ற சேவாதளத் தொண்டர்களுக்கும் வழங்குவர். எங்கள் கூட்டத்தில், பக்தர் ஒருவர் கடும் விரதத்தில் இருந்தார். அவருக்கும் உணவுப் பொட்டலம் வழங்கப்பட்டது. 'பிரசாதமாகக் கிடைத்ததை ஏற்காமல் இருக்கமுடியாது. ஆனால், விரதம் தடைப்படுமே..!’ என திகைத்தவர், கண்ணை மூடி பகவானைப் பிரார்த்தித்தபடி பொட்டலத்தைப்பிரித்தார். கண்களைத் திறந்ததும் அழுதேவிட்டார் அவர். பொட்டலத்தில் சாதத்துக்குப் பதிலாக, பழங்கள் மட்டுமே இருந்தன. இதுதான் ஸ்ரீசாயியின் லீலை!

- க.கணேசன், கள்ளக்குறிச்சி

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!