Published:Updated:

அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!

அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!

பிரீமியம் ஸ்டோரி
அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!
அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!
##~##
நீ
ர் நிறைந்து காட்சியளிக்கும் பெரிய ஏரி; அதன் நடுவே கட்டப்பட்டுள்ள அற்புதமான ஆலயம். இதனை ஏரிக்கோயில் என்றும் அழைக்கின்றனர். இந்த ஏரியின் நடுவே உள்ள சிறிய பாலத்தின் வழியே சென்றால், ஆலயத்தையும் அங்கே குடி கொண்டிருக்கும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியையும் கண்ணாரத் தரிசிக்கலாம்.

வடகேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது அனந்தபுரா கிராமம். காசர்கோட்டில் இருந்து கும்பளா வழியே சுமார் 17 கி.மீ. தொலைவில் உள்ளது அனந்தபுரா கிராமமும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி திருக்கோயிலும். திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமிக்கு, இந்த அனந்தபுரா கிராமத்தில் குடியிருக்கும் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமிதான் மூலவர் என்பார்கள்.

ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அழகிய ஆலயம் இது. தென்னந்தோப்பும் சின்னச் சின்னப் பாறைகளுமாகச் சுற்றியிருக்கிற பகுதியின் நடுநாயகமாகத் திகழ்கிறது இந்தக் கோயில்.  

அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!

சுற்றுச் சுவரைக் கடந்து உள்ளே நுழைந்ததும் பலிபீடம்; அதைக் கடந்ததும் கீழே இறங்குவதற்கு வசதியாகப் படிக்கட்டுகள். அடுத்து, பாற்கடலின் நடுவே பள்ளிகொண்ட பெருமாள்போல பரந்த ஏரிக்கு நடுவே மூலவர், ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி! ஐந்து தலை நாகத்தின்மீது வீற்றிருக்க, அவரின் இருபுறத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீஆஞ்சநேயர், கருட பகவான் ஆகியோர் காட்சி தரும் அழகே அழகு!

ஸ்ரீமகா கணபதி, ஸ்ரீமகிஷாசுரமர்த்தனி, ஸ்ரீவன சாஸ்தா, ஸ்ரீரக்ஷேஸ்வரி, ஸ்ரீகோபாலகிருஷ்ணன் ஆகியோரின் மூர்த்தங்களையும் இங்கு தரிசிக்கலாம். மேலும், இங்கே ஸ்ரீக்ஷேத்திர பாலன், ராவணன், தூமவதி ஆகியோரின் சிலைகளும் உள்ளன. ஆலயத்தின் சுவரில் திருமாலின் தசாவதாரக் காட்சிகளை அழகுற விளக்கியுள்ளனர்.

இங்கு ஸ்ரீசரஸ்வதி பூஜை, மாதாந்திர கார்த்திகை பூஜை, முதலைக்கு நைவேத்தியம், சர்வ சேவை, அன்னதானம் போன்றவை அனுதினமும் நடைபெறுகின்றன. கோயிலின் ஸ்தல புராணத்தைத் தெரிவிக்கிற செப்பேடுகள், துளு மொழியில் எழுதப்பட்ட கல்வெட்டு கள் ஆகியவை இங்கே காணக்கிடைக் கின்றன. மேலும், மொகரேரு என்பவர் ஆலயத்துக்கு இடத்தைத் தானமாக அளித்த தகவலையும் அறியமுடிகிறது.

அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!

அழகிய ஏரி; அதன் நடுவில் கேரள பாணியில் அமைந்துள்ள, மரத்தால் செய்யப்பட்ட சிறியதொரு பாலம். ஆகவே, பக்திக்கும் வழிபாட்டுக்கும் மட்டுமின்றி சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது இந்தப் பகுதி! ஏரியில் முதலையும் உள்ளது. தினமும் பகவானுக்குப் படைக்கப்படும் நைவேத்தியத்தை, காலை 8 மணி மற்றும் மதியம் 11.45 மணிக்கு முதலைக்குப் போடுகின்றனர். அந்த நேரத்தில் முதலையும் உணவுக்காகக் காத்திருப்பதுதான் சுவாரஸ்யம் என்கின்றனர் பக்தர்கள். இன்னொரு சிறப்பு... ஏரியில் ஏராளமான மீன்கள் இருந்தாலும், அவற்றை ஒன்றுமே செய்யாதாம் இந்த முதலை!  

கேரள மாநிலத்தின் அபூர்வமான இந்தக் கோயிலைத் தரிசிக்க, தினமும் ஏராளமான பக்தர்கள் திரண்டு வருகின்றனர், ஆலயத்துக்கு!

அனந்தபுரா ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியைக் கண்ணாரத் தரிசியுங்கள்; உங்கள் கவலைகள் யாவும் பறந்தோடுவதை அனுபவப்பூர்வமாக உணர்வீர்கள்!

படங்கள்: கே.கார்த்திகேயன்

விசேஜமான விக்கிரகம்!

'

அருள் பொழியும் அனந்தபுரா நாயகன்!

'கோயிலின் உள்ளே நுழைந்ததும், வலது பக்கத்தில் ஏரியின் மூலையில் குகை தெரிகிறது அல்லவா... இங்குதான், இந்தக் கோயிலை அமைத்த ஸ்ரீபில்வ மங்கள சுவாமி வசித்து வந்தாராம்'' என்கிறார், கோயில் செயற்குழுவின் முன்னாள் செயலாளர் கருணாகரன்.  

''அவருடன் பூஜைகள் செய்வதற்காகச் சிறுவன் ஒருவனும் இருந்தான். ஒருமுறை, ஏதோ கவனக் குறைவாக இருந்தான் என்பதற்காக அந்தச் சிறுவனை சுவாமிகள் திட்டிவிட... அவன் கோபித்துக்கொண்டு, குகைக்குள் புகுந்து மறைந்து விட்டானாம். அவனைத் தேடிச் சென்றார் சுவாமிகள். அப்படியே சுமார் 5 கி.மீ.

தொலைவு சென்றவர், இறுதியில் கடற் கரையை அடைந்தார். அங்கே, பயங்கரச் சீற்றத்துடன் காட்சியளித்த கடலில் கிடைத்த மூர்த்தம்தான் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியின் திருவிக்கிரகம்! பிறகுதான், தன்னுடன் சேவையாற்றிய சிறுவன், சாட்சாத் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமியே என்பதை அறிந்து சிலிர்த்தாராம் சுவாமிகள்!'' என்றார் கருணாகரன்.

''மூலவரின் விக்கிரகத் திருமேனி, 64 விதமான மருந்துக் கலவையால் உருவாக்கப்பட்டது. மூலிகைகளால் ஆன வண்ணப் பூச்சுதான் 64-வது கலவை. இந்த விக்கிரகத்தை, 'கடு சர்க்கர யோகம்’ என்று மலையாளத்தில் சொல்வார்கள். ரொம்ப விசேஷம் இந்த விக்கிரகத் திருமேனி'' எனச் சொல்லிச் சிலிர்க்கிறார் கருணாகரன்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு