Published:Updated:

காவடி பிரார்த்தனையில் கசிந்துருகும் தண்டாயுதபாணி! - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 2

காவடி பிரார்த்தனையில் கசிந்துருகும் தண்டாயுதபாணி! - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 2
காவடி பிரார்த்தனையில் கசிந்துருகும் தண்டாயுதபாணி! - கந்த சஷ்டி சிறப்பு பகிர்வு - 2

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் மூன்றாவது திருத்தலம் - ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான இதயத்தைக் குறிப்பது என்பர். 'குரா' மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 115 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பழநி. வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு.

கொடைக்கானல் மலைக்கும் மேற்கு தொடர்ச்சி மலையில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி.
பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார் - பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம்மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமிநாராயணர், சங்கிலிப் பரமேஸ்வரர், அகோபில வரதராஜப் பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன.

மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர் - ‘ஆவினன்குடி’ என்றும், மலை - பழநி மலை என்றும் அழைக்கப்பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே.
பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.

கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர - தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.


697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உள்ளன. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில்ப்பாதை மற்றும் ரோப் கார் பாதை. யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கிவிட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக பழநி கோயிலில்தான் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச்சரவையில் இருந்த பக்தவத்சலம். இரண்டாம் வழித்தடம் 1981 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.

முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.

பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப்பொய்கை. இதில் சரவணப்பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம்.

புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன் - பெருவுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு. மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர் - தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்கு கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் அருகே உள்ள மயில் மண்டபத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.

மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும். மலைக்கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.

பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப்பாதை வழியாக வருவோர், 2 - வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.

முதல் பிரகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன.

இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.


நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞான தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.

பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித்தம். திருவிழா காலங்களில் பக்தர்கள் - தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது. பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.

தமிழகத்தில் முதன்முதலாக பழநி தண்டாயுதபாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால்  தங்க ரதம் ஓடத் துவங்கியது. முடி காணிக்கை செலுத்த திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் இடம் பழநி என்கிறார்கள். கேரள பக்தர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் சோறூட்டு விழாவை இங்கு நிறைவேற்றுகின்றனர்.

கந்த சஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்குபுறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராக கோயிலுக்குத் திரும்புவார்.

அரோகரா சொல்லி ஆறுமுகனின் அருளைப் பெறுவோம்.

- எஸ்.கதிரேசன்