Published:Updated:

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா !

அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா !
அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா !

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வதாக திகழ்வது சுவாமிமலை. கும்பகோணம் - திருவையாறு பேருந்து தடத்தில் கும்பகோணத்துக்கு மேற்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் சுவாமிமலை அமைந்துள்ளது. கும்பகோணம்- தஞ்சாவூர் பேருந்து வழியில் திருவலஞ்சுழியில் இறங்கி, வடக்கே சுமார் 1 கி.மீ. தொலைவு பயணித்தால், சுவாமிமலையை அடையலாம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரயில் பாதையில் சுவாமிமலை ரயில் நிலையத்தில் இறங்கி, வடக்கே சுமார் 2 கி.மீ. தொலைவில் ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

சுவாமி மலையை புராணங்களும் இலக்கியங்களும் 'திருவேரகம்' என்று குறிப்பிடுகின்றன. 'ஏர்' என்றால் அழகு; 'அகம்' என்றால் வீடு என்பர். அழகு மிக்க படைவீடு என்பதால் இதற்கு திருவேரகம் (திரு+ ஏர் + அகம்) என்று பெயர் வந்ததாம். ஏர் தொழிலான விவசாயம் சிறக்கும் பகுதியில் உள்ள படைவீடு ஆதலால் திருவேரகம் ஆனது என்பாரும் உண்டு. அடியவர்களின் மனதை 'அருள்' எனும் ஏர் கொண்டு உழுது, 'அன்பு' எனும் பயிரை வளர்ப்பவர் முருகப் பெருமான். இவர் அருள்பாலிக்கும் தலம் ஆதலால் இந்தப் பெயர் வந்தது என்றும் கூறுவார்கள்.முருகப் பெருமான் இங்கு குரு அம்சமாக அருள் பாலிப்பதால் குருமலை, குரு கிரி, ஸ்வாமிநாத ஸ்வாமியின் கோயில் கட்டுமலை அமைப்புடன் அழகுற காட்சி தருவதால் சுந்தராசலம், நெல்லி (தாத்ரி) மரத்தைத் தல மரமாகப் பெற்றதால் தாத்ரிகிரி ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு வழங்கப்படுகின்றன.

முருகப் பெருமான், குரு அம்சமாகத் திகழும் இரண்டு தலங்களில் ஒன்று சுவாமிமலை. மற்றொன்று திருச்செந்தூர். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளும் ஆறு ஆதார மையங்களைக் குறிப்பன என்பர். அதாவது, திருப்பரங்குன்றம்- மூலாதாரம்; திருச்செந்தூர்- சுவாதிஷ்டானம், திருவாவினன்குடி (பழநி)- மணிபூரகம், திருத்தணி- விசுத்தி, பழமுதிர்ச்சோலை- ஆக்ஞை. இந்த வரிசையில் சுவாமிமலை- அனாகதம் என்பர்.சுவாமிமலைக்குத் தெற்கே காவிரியும், அதன் கிளை நதியான அரசலாறும் ஓடுகின்றன. மலைகளே இல்லாத தஞ்சை மாவட்டத்தில், சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமி கட்டு மலை (செயற்கையான குன்று) கோயிலைக் கொண்டிருப்பது, இந்தத் தலத்தின் தனிச் சிறப்பாகும்.

சோழ நாட்டை சிவாலயமாக பாவித்து, வழிபடும் ஒருமுறை உண்டு. அதில், திருவலஞ்சுழி மற்றும் சுவாமிமலை திருத்தலங்களை முறையே விநாயகர் மற்றும் முருகன் சந்நிதிகளாகக் கொள்வர். சிற்ப வல்லுநர்களை தன்னகத்தே கொண்ட தலம் என்பது சுவாமிமலையின் தனிச் சிறப்பு. இங்கு வடிக்கப்படும் இறை மூர்த்தங்கள் (பஞ்சலோகம்) உலகெங்கும் உள்ள ஆலயங்களை அடைகின்றன. செய்குன்று (செயற்கை மலை) ஆகிய சுவாமிமலையை கயிலைமலையின் 'கொடுமுடி' என்கிறார் அருணகிரிநாதர். இதை, 'கொடுமுடியாய் வளர்ந்து புயல் நிலையாய் உயர்ந்த திருமலை' என்ற அவரது பாடல் வரிகளால் அறியலாம்.

ஸ்வாமிநாத ஸ்வாமி திருக்கோயிலின் தல புராணம் பற்றி பார்ப்போம். 'படைப்புக்கு தானே காரணகர்த்தா!' என்ற கர்வத்துடன் திரிந்தார் பிரம்மன். ஒரு முறை அவர், திருக்கயிலைக்கு வந்தார். அங்கிருந்த முருகப் பெருமானை, ஆணவம் மிகுந்த பிரம்மன் கவனிக்காது சென்றார். உடனே பிரம்மனை அழைத்த முருகப் பெருமான், பிரணவத்தின் பொருளைக் கூறுமாறு பிரம்மனிடம் கேட்டார். பொருள் தெரியாத பிரம்மன் திகைக்க... அவருடைய தலையில் குட்டி சிறையில் அடைத்தார் முருகன். அத்துடன் படைப்புத் தொழிலையும் தானே ஏற்றார். இறுதியில் சிவபெருமான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரம்மனை விடுவித்ததுடன் தந்தைக்கும் பிரவணப் பொருளை உபதேசித்தார்.

முருகப் பெருமானின் உபதேசத்தைக் கேட்ட சிவனார், தம் உள்ளத்தில் உவகை பொங்கிட... தன் மகனை 'நீயே சுவாமி!' என்று கூறினாராம். அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா என்பதனால்தான் இந்தத் தலம் சுவாமிமலை எனும் பெயர் பெற்றது. முருகப் பெருமான் ஸ்வாமிநாத ஸ்வாமி மற்றும் தகப்பன் ஸ்வாமி ஆகிய திருநாமங்களுடன் இங்கு கோயில் கொண்டார். இந்தத் தலத்தின் தல விருட்சம் நெல்லி மரம். இதன் பின்னணியை சுவாரஸ்யமாக விளக்குகிறது தல புராணம். 'சிவபெருமானின் நெற்றிக் கண்களில் இருந்து தீப்பொறிகளாக அவதரித்த ஆறுமுகன் தன் மடியில் தவழாமல் பூமாதேவியின் மடியில் (சரவணக் காட்டில்) தவழ நேர்ந்ததே!' என்று கோபம் கொண்ட பார்வதிதேவி, பூமா தேவியைச் சபித்து விட்டாள். சாப விமோசனம் தேடி அலைந்த பூமாதேவி, இறுதியில் சுவாமிமலை தலத்தை அடைந்து, ஸ்வாமிநாத ஸ்வாமியை வழிபட்டு நலம் பெற்றாள். பிறகு, இங்கிருந்து பிரிய மனமின்றி நெல்லி (தாத்ரி) மரமாகி நின்று, இன்றும் தன் வழிபாட்டைத் தொடர்கிறாள் என்கிறது தல புராணம்.

தல விருட்சத்துக்கு மட்டுமின்றி இங்குள்ள தீர்த்தங்களுக்கும் தனித் தனி சிறப்புகள் உண்டு. வஜ்ர தீர்த்தம் கீழக் கோயிலான மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் கிணறாகக் காணப்படுகிறது இந்தத் தீர்த்தம். இதில் இருந்தே ஸ்வாமி அபிஷேகத்துக்கு நீர் எடுக்கிறார்கள். இதை சுவாமி கூபம், க்ஷத்திர கூபம் என்றும் அழைப்பர். இந்த நீரை தெளித்துக் கொண்டால் எல்லா வித நோய்களும், பிரம்மஹத்தி தோஷமும் அகலும். இங்கு பாயும் காவிரியின் கிளை நதியை குமாரதாரை என்பர். எல்லோரும் தன்னிடம் வந்து பாவத்தைக் கழுவிச் செல்ல... அந்தப் பாவங்களைத் தான் எங்கு போய்க் கழுவுவது என்று கலங்கிய கங்காதேவி, ஈசன் அறிவுரைப்படி இங்கு வந்து, காவிரியுடன் கலந்து, குமாரக் கடவுளை வழிபட்டுப் புனிதம் பெற்றாளாம். இப்படி கங்கை, தாரையாக (நீர்ப் பெருக்காக) வந்து காவிரியில் கலந்ததால், இங்குள்ள காவிரிக்கு குமாரதாரை என்று பெயர்.

சுக்லபட்ச அஷ்டமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடிய நாளில் இதில் நீராடி, ஸ்வாமி நாதரை வழிபட்டால் பிரம்ம ஹத்தி பாபம் நீங்கும்.

சுக்லபட்ச அஷ்டமியும் பரணி நட்சத்திரமும் கூடிய நாளில் நீராடி சுவாமி தரிசனம் செய்பவர்களுக்கு கோ தோஷம் நீங்கும்.

ஆடி மாதம் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் நீராடி வழிபட்டால், பிறரது பொருளைக் கவர்ந்ததால் ஏற்படும் பாவங்கள் நீங்கும்.

ஆவணி மாதம் பூரட்டாதி, உத்திரட்டாதி கூடிய ஞாயிற்றுக் கிழமைகளில் நீராடி, வழிபடுபவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.

புரட்டாசி மாதம் அஷ்டமியில் நீராடி வழிபடுபவர்கள், அன்னத்தை வீண் செய்ததால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கப் பெறுவர்.

ஐப்பசி மாதம் கிருஷ்ண பட்சம் கூடிய ஞாயிற்றுக் கிழமை அன்று இதில் நீராடி, கோயிலை (கிரி) வலம் வந்து அன்னதானம் செய்தால், தீவினைகள் நீங்கப் பெறுவர்.

கார்த்திகை மாதம் நீராடி வழிபட்டால், ஏழு பிறவிகளில் செய்த பாவங்கள் அகலும்.

மார்கழி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரம் கூடிய நாளில் நீராடி வழிபட்டால் பெரிய பதவிகள் கிடைக்கும்.

தை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் நீராடி இறைவனை வழிபட்டால், யாகங்கள் செய்த பலன் கிடைக்கும்.

மாசி மாதம் மக நட்சத்திர நாளில் நீராடி இறைவனை வழிபடுவோருக்கு வீடுபேறு கிடைக்கும்.

பங்குனி மாதம் உத்திர நாளில் நீராடி வழிபடுபவர்களுக்கு எல்லா இன்பங்களும் கிடைக்கும்.

பிரம்ம தீர்த்தம் பிரணவப் பொருளை அறிய விரும்பிய பிரம்மன், முருக வழிபாட்டுக்காக ஏற்படுத்திய தீர்த்தம் இது. புராணங்களில் இந்தத் தீர்த்தம் பற்றிய தகவல்கள் உள்ளன. தற்காலத்தில் இது எங்குள்ளது என்பது தெரியவில்லை. சிலர், சுவாமிமலையின் ஈசான திக்கில் உள்ள பெரமட்டான் குளத்தை, 'பிரம்ம தீர்த்தம்' என்கிறார்கள். ஆனால், இதற்கு ஆதாரங்கள் இல்லை.

சுவாமிமலை ஸ்வாமிநாத ஸ்வாமியின் திருக்கோயில் நில மட்டத்தில் இருந்து, சுமார் 60 அடி உயரத்துடன் திகழும் கட்டுமலை (செயற்கைக் குன்று) மீது அமைந்துள்ளது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்த வரகுண பாண்டியனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், முதலாம் பராந்தகச் சோழன் காலத்தில் மேலும் விஸ்தாரமாக்கப்பட்டது என்கிறார்கள். கட்டுமலை மீது எழுந்தருளி உள்ள ஸ்வாமி நாத ஸ்வாமியின் கோயிலை மேலக் கோயில் என்றும், மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ஆலயத்தை கீழக் கோயில் என்றும் அழைப்பர். ஸ்வாமிநாத ஸ்வாமி குருவாக அமர்ந்து தந்தைக்கு உபதேசித்த தலம். ஆதலால் இங்கு, முருகப் பெருமான் கட்டுமலையின் மேலும், ஈசன் அடிவாரத்திலும் குடிகொண்டிருக்கிறார்கள் என்பது ஐதீகம். இந்தக் கோயிலுக்கு ஏழு கோபுரங்கள் இருந்ததாகச் சொல்கிறது தலபுராணம். யாத்ரீகர்கள் சுவாமி மலையை அடைந்ததும் கோபுர வாசல் நடுவில் இருக்கும் தெய்வப் பெண்கள் இருவரை வணங்கி வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.

கட்டுமலையில் ஸ்வாமிநாத ஸ்வாமியின் சந்நிதானத்தை அடைய 60 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். 60 அதிதேவதைகள் இந்தப் படிகளில் உறைவதாக திருக்குடந்தை புராணம் குறிப்பிடுகிறது. இந்தப் படிகள் ஒவ்வொன்றுக்கும் தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. தேங்காய் உடைத்து வழிபட்ட பிறகே, படியேற வேண்டும். இந்தக் கோயிலுக்கு மூன்று திருவாயில்கள் உண்டு. கிழக்கு மற்றும் மேற்கு வாயில்களில் மொட் டைக் கோபுரங்கள் அணி செய்கின்றன. பிரதான ராஜ கோபுரம் தெற்கு வாயிலில் அமைந்துள்ளது. 5 நிலைகளுடன் அழகிய சுதைச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகிறது இது. மூன்று பிராகாரங்களைக் கொண்டுள்ளது கோயில். கட்டுமலையின் அடிவாரத்தில் உள்ள 3-ஆம் பிராகாரத்தை வலம் வந்து 28 படிகள் ஏறிச் சென்றால் 2-ஆம் பிராகாரத்தை அடையலாம். அங்கிருந்து 32 படிகள் ஏறிச் சென்று கருவறையைச் சுற்றியுள்ள முதல் பிராகாரத்தை அடையலாம்.

தெற்குக் கோபுர வாயில் முகப்பு மண்டபத்தின் மேற்கே திருக்கோயில் அலுவலகம். கோபுர வாயிலில் நுழைந்தால் இடப் புறம் விசாலமான திருமண மண்டபம். இதன் மேற்புறம் திருக்கோயில் அலுவலகம் உள்ளது. திருமண மண்டபத்தைக் கடந்து சென்றால் பெரிய சுற்று மண்டபம். அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் சந்நிதி (கீழக் கோயில்) தனிக் கோயிலாக திகழ்கிறது. மதுரையை ஆட்சி செய்த வரகுண பாண்டியன், பிரம்மஹத்தி தோஷத்தால் அல்லலுற்றான். நிவர்த்தி வேண்டி அவன், திருவிடைமருதூருக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் தங்கி இளைப்பாறினான். தினமும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடாமல் உண்பதில்லை என்று விரதம் கடைப்பிடித்த வரகுண பாண்டியன், இங்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை ஸ்தாபித்து வழிபட்டானாம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரரை வலம் வரும்போது தட்சிணாமூர்த்தி, விநாயகர், சோமாஸ்கந்தர், வள்ளி- தெய்வானை சமேத சுப்ரமணியர், துர்கை, சண்டிகேஸ்வரர் மற்றும் நவகிரகங்களை தரிசிக்கலாம். மற்ற படைவீடுகளில் இல்லாத, சுவாமி மலையின் தனிச் சிறப்பம்சம்... இங்குள்ள பாகுலேய சுப்பிரமணியர் திருமேனி! மகா மண்டபத்தின் வடக்குச் சுவர் பக்கம் தெற்கு நோக்கிக் காட்சி தருகிறார் இவர். இரண்டு திருக்கரங்களை நீட்டியவாறும், மேலும் இரு கரங்களை மேல் நோக்கியும்... நடராஜப் பெருமானைப் போன்று காட்சி தரும் இவரை சபாபதி என்றும் அழைப்பர். தெய்வானை யுடன் திகழும் இவர், மார்கழி மாதம் திருவாதிரை உற்சவத்தின்போது மட்டுமே வீதியுலா வருகிறார். ஸ்வாமிநாத ஸ்வாமியை உன்னிப்பாகக் கவனித்தால், அவர் எழுந்தருளியுள்ள பீடம், சிவலிங்கத்தின் ஆவுடையாராகவும், ஸ்வாமிநாதர் லிங்கத்தின் பாணமாகவும் காட்சியளிப்பதைக் காணலாம். இது, 'ஈசனே முருகன்; முருகனே ஈசன்!' என்ற தத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது.

சுவாமிநாதனை வணங்கி சுபிட்சம் பெறுவோம்.

- எஸ்.கதிரேசன்.