மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்தம்... சிவம்... சாகசம்! - 28

சித்தம் அறிவோம்...இந்திரா சௌந்தர்ராஜன்

சித்தம்... சிவம்... சாகசம்! - 28
##~##

செங்கலும் கருங்கலும் சிவந்த சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன் என்கிறீர்
உம்பதம் நினைந்துநீர் உம்மைநீர் அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல்பாடல் ஆகுமே!

- சிவவாக்கியர்

''ஒரு கடமை உனக்கு இருக்கிறது' என்று, செருப்பு தைக்கும் கடமையைச் செய்கின்ற அந்த யோகி, சிவவாக்கியரை நோக்கிச் சொன்னபோது, அவரால் அதைச் சட்டென்று ஏற்க முடியவில்லை.

மனத்தின் உணர்வுகளை அப்படியே எதிரொலிப்பதுதானே முகம்? யோகிக்கு அது புரியாமலா போகும்?

''என்னப்பா யோசிக்கிறாய்?'' என்றார்.

''எனக்கு, ஊருக்குச் சொல்லும் கடமை என ஒன்றிருப்பதாகச் சொன்னீர்கள், அல்லவா..?''

''அந்தக் கடமை உனக்கு மட்டுமல்ல; ஆறறிவு பெற்ற மனத்தை உடைய மாந்தர்கள் அவ்வளவு பேருக்குமே உள்ளது! என்னையே எடுத்துக்கொள்... 'கங்கா, என்னை ஏற்றுக் கொள்!’ என்று நான் கங்கை ஆற்றில் இறங்கினால், அவள் என்னை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவாளா? பிய்ந்துபோன செருப்புகளைத் தைத்துக்கொண்டு எதற்காக இங்கே உட்கார்ந்திருக்கிறேன்?''

''இதை நானும்கூட எனக்குள்ளே கேட்டுக்கொண்டேன்!''

''இப்படி நான் இங்கே இருந்திருக்காவிட்டால், நீ என்னைச் சந்தித்திருக்க முடியுமா? உன்னைத்தான் நான் அறிந்துகொண்டிருப்பேனா?''

''உண்மைதான்! தனக்கென வாழ்வது சுயநலமானது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இந்தச் சமூகம் எனக்குக் கோபத்தையும் சிரிப்பையுமே தருகிறது. ஆளுக்கொரு விதமாகச் சிந்திக்கிறார்கள். தான் சிந்திப்பதே சரி என்றும் எண்ணுகிறார்கள்!''

சித்தம்... சிவம்... சாகசம்! - 28

''அதுதானப்பா கருத்துச் சுதந்திரம்! மனமும் வானமும் பல வகைகளில் ஒன்று. வானம் என்ற ஒன்று உண்மையில் எதுவும் இல்லாதது. பூமியும் பிற கோள்களும் இருக்கப்போய்த்தான், இடைவெளி தெரிந்து, அதை வானம் என்கிறோம். அதில் இந்த பூமி மற்றும் பிற கோள்களின் சுழற்சியாலும், ஒளி- ஒலியாலும் இலங்குவதாய் உள்ளதே ஆகாயம்! இவை எல்லாம் இல்லாது போனால், ஆகாயமும் இல்லாது போகும். மனமும் இவற்றால் பாதிக்கப்பட்டுத் தன்னை பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்புகளே நீ அவர்களிடம் காணும் சிந்தனைகள்...''

''எனில், உலகத்தவர் யாவரும் ஒரே கருத்தோடு இருக்கமுடியாது என்று கூற வருகிறீர்களா?''

''ஒன்றுதானப்பா பலவாக இருக்கிறது. அந்த பலதுதானப்பா பக்குவம் பெறும்போது ஒன்றாகிப் போகிறது..!''

''குழப்புகிறீர்களே?''

''தெளிவதற்காகக் குழம்புவதில் பிழையில்லை!''

''இந்தச் சமூகத்தைத் திருத்தமுடியாது, அது தேவையுமற்றது என்பதே எனது தெளிவு! ஒருவன் தன்னைத் திருத்திக்கொண்டாலே போதும்; ஒவ்வொருவரும் திருந்தத் திருந்த, மொத்தமும் தானாகத் திருந்திவிடும் என்கிறது என் மனம்.''

''உன் தொடக்கமே தவறாக உள்ளதே!''

''எப்படி?''

''திருத்துவது என்னும் உன் கருத்தே தவறானது. அப்படிக் கூறும்போதே, நீ திருந்தி பிழைகளே இல்லாமல் வாழ்பவன் என்று ஓர் அர்த்தம் வருகிறதே! அது உண்மையா?''

''நானறிய என்னிடம் ஒரு பிழையும் இல்லை, சுவாமி!''

''என்றால், அறியாப் பிழைகள் இருக்கக்கூடும் அல்லவா?''

''அதில் எனக்கு மாற்றுக் கருத்தே இல்லை.''

''நல்லது. அறியாப் பிழைகள் என்னிடமும் உள்ளன. பிழைகள் துளியுமின்றி ஒருவர் இருத்தல் அரிதினும் அரிது! இருந்த இடத்தை விட்டு அகலாமல் காற்றை மட்டும் உட்கொண்டு தவம் புரியும் துறவிகூட, அப்படிக் காற்றை உட்கொள்ளும்போது, கண்களுக்குப் புலனாகாத நுண்ணுயிர்கள் சிலவற்றை உட்கொள்ளும் நிலைப்பாடு உள்ளது. அதன் காரணமாக அவரும் அறியாப் பிழையாளர் ஆகிறார்.''

சித்தம்... சிவம்... சாகசம்! - 28

''இதன் மூலம் தாங்கள் எதை வலியுறுத்த விரும்புகிறீர்கள்?''

''எந்த ஒரு விஷயத்துக்கும், அதை விளங்கிக் கொள்ள இரண்டு பக்கங்கள் இருந்தாக வேண்டும். விளங்கிக்கொண்ட பின்னர், அது விளங்கிக்கொண்டவருக்குள் ஒன்றாகிவிடும். இதற்குச் சான்றாக உள்ளவையே இரவு- பகல், இன்பம்- துன்பம், இனிப்பு- கசப்பு, மேல்-

கீழ், பெரிது- சிறிது போன்றவை. இந்த இரட்டைத்தன்மை இல்லா விடில், ஒன்றின் மதிப்பை உணரவோ, அளவிடவோ முடியாது. உனது குழப்பத்துக்குக் காரணமும் இந்த இரட்டைத்தன்மையை நீ காண்பது தான். உனக்கு எதிரான தளத்தில் இந்தச் சமூகம் இருப்பதாக நீ கருதுகிறாய். உன் அமைப்பு ஒரு தளம் என்றால், உனக்கு எதிரான அமைப்பு இன்னொரு தளம். இது இயற்கையானது. காலம் காலமாக இப்படித்தானப்பா இருந்து வருகிறது. இனியும் இப்படியே இருக்கும். இடையில் வந்தவன் நீ... நான்... நாம்..!

''இப்படி நீ... நான்... நாம் வரவும் சரியான காரணம் உண்டு. காரணம் இல்லாமல் ஒன்றை, இந்த உலகில் ஒரு தூசு தும்பிடம்கூட நீ காண முடியாது. ஒரு தூசானது குப்பையிலிருந்து உருவாகி இருக்கும். குப்பையோ தனக்கான தேவையும் பயன்பாடும் முடிந்த நிலையில் அப்படி ஆகியிருக்கும். முன்னதாக அது பயன்நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கும்.

''இதோ, இந்தக் கிழிந்த செருப்பையே எடுத்துக் கொள்; இது எருமைத் தோலால் ஆனது. எருமை இறக்கப்போய், இது உரிக்கப்பட்டுச் செருப்பானது. எருமை அதற்கு முன் வேறோர் எருமையின் சுரோணிதத்தில் இருந்தது. அந்தச் சுரோணிதம் கொண்ட எருமை, இன்னோர் எருமையின் சுரோணிதத்தில் இருந்தது. இப்படிப் பின்தொடர்ந்து போனால் போய்க்கொண்டே இருக்கலாம். இதிலிருந்தே, காரணம் இல்லாமல் காரியம் இல்லை எனும் அழியாக் கருத்து தோன்றியது. இந்தக் கருத்தின் வழியாக இனி இந்தச் சமூகத்தைப் பார். அப்போதுதான் ஒன்றின் இரு நிலைகளைச் சமமாகப் பார்த்தது போலாகும். சமமாகப் பார்த்தாலே சரியான செயல்பாட்டைச் செய்ய இயலும். பார்வையே சமமாக இல்லாதபோது, உன் செயலில் அது எப்படி வரமுடியும்?''

''சுவாமி! உண்மையில் தாங்கள் யார்? நான் ஒன்றென்றும், என்றும் உண்டென்றும் நம்பும் அந்தச் சிவபெருமானே நீங்கள்தானோ? என் அகக் கண்களைத் திறந்துவிடப் பேசும் உங்கள் பேச்சு, எனக்குள் ஒரு தெளிவை உருவாக்கிவிட்டது. அதே நேரம், என்னுள் இன்னமும் பல கேள்விகள் விடைக்காகத் துடித்தபடியேதான் இருக்கின்றன..!''

''கேளப்பா... தெரிந்தால் பதில் கூறுவேன்.''

''பிழையேயின்றி இந்தப் பூமியில் ஒரு துறவியால்கூட இருக்கமுடியாது என்றால், எப்படித்தான் கடைத்தேறுவது?''

''தவிர்க்க இயலாத பிழைகளை அந்தப் பரமன் தன் கருணையால் மன்னித்து ஏற்றுக் கொண்டு விடுவானப்பா! அவன் கருணைக்கும் துளி இடம் வேண்டுமல்லவா?''

''புரிந்துகொண்டேன் சுவாமி! ஒன்றே இரண்டாக இருக்கிறது; அப்போதுதான் புரிந்து கொள்ளுதல் எளிது என்றீர்கள். எனில் நன்மை- தீமை எனும் இரண்டும் சமம் போலக் கருதவேண்டியுள்ளதே! ஒரு நன்மை எப்படி ஒரு தீமைக்குச் சமமாகும்?''

''தீமை இருந்து, அதைத் தடுக்கப் போய் அல்லது மாற்றப் போயல்லவா நன்மை வந்தது? குப்பையே விழ வாய்ப்பில்லாத இடத்தைச் சுத்தமான இடம் என்று எப்படிக் கூற முடியும்?''

''புரிகிறது! ஒன்று இரண்டாகவே இருக்கும். அதைச் சமமாக நமக்குள் கருதினாலே, அதை முழுமையாக விளங்கிக் கொள்ள முடியும். விளங்கிக்கொண்டால்தான் வினையாற்ற முடியும். வினையாற்றுதலே கடமை. அதைச் செய்யவே பிறப்பு. விளைவைப் பற்றிய கவலை யின்றி, கடமையைச் செய்துகொண்டே போக வேண்டும். கடப்பாட்டுக்கு உரிய பலன் தானாகவே தோன்றும். முனைந்து தோற்றுவிக்கத் தேவையே இல்லை என்கிறீர்கள்!''

''ஆம்... அப்படிக் கடமையாற்றிடும்போது ஏச்சும் பேச்சும் தோன்றும். சமமாக பாவிக்கும் மனப்பாங்கு வந்துவிட்டதால் ஏச்சு வருத்தம் தராது; வாழ்த்தும் மயக்கம் தராது!''

சித்தம்... சிவம்... சாகசம்! - 28

''நல்லது... நானும் இனி சமூகத்தை விட்டு ஒதுங்கி இருக்காமல், என் கடமையைச் செய்வேன். நான் எதை உண்மை என்று உணர்ந் தேனோ, அதைப் பிறருக்கும் உணர்த்துவேன்.''

''அப்படியே செய்! இதுதான் ஞானிகளின் செயல். நீ உணர்ந்து உரைப்பதைச் சிலர் மறுக்கக்கூடும். அவர்கள் உணர்ந்ததைத்தான் நீயும் மறுக்கிறாய். இடது என்று ஒன்றிருந்தால், வலதென்று ஒன்று இருந்தே தீரும். இடமும் வலமுமான வினைப்பாடென்னும் துடுப்பு அசைந்தால்தான், வாழ்க்கைப் படகு தேங்கி நிற்காமல் வாழ்வெனும் நதியைக் கடக்கும்.

''ஆனால், இடமோ வலமோ, எங்கே இருந்தாலும் அங்கே- அதிலே முழுமையாக இருத்தல் வேண்டும். இல்லையெனில், ஊனமாகிப் போவாய்; ஞானியாக மாட்டாய்! இவ்வளவுதானப்பா விஷயம்...''

- அவர் பேசி முடித்திட, சிவவாக்கியரும் ஒரு புத்தொளியோடு புறப்பட்டார்.

உபதேசம் என்பது உயரமான பீடத்தில், பட்டும் பீதாம்பரமும் தரித்த மடாதிபதியிடம் இருந்துதான் கிடைக்க வேண்டும் என்பதில்லை; இப்படித் தெருவோரத்துப் பாமரனிடமும் கிடைக்கும் என்பதே, இதன் மூலம் நாம் உணர வேண்டிய உண்மை.

சிவவாக்கியர் புடம்போட்ட தங்கமா கிப் புறப்பட்ட பின், அந்த மணலையும் பேய்ச் சுரைக்காயையும் சமைக்க முடிந்த பெண்ணையும் காலத்தால் கண்டறிந்தார். திருமணமுமாகியது. சிவவாக்கியருக்குள் மானுட வாழ்க்கை நெறிகளில் இடது சார்புத் தன்மையே அதிகம் இருந்தது. அவரது கோணம் அப்படி என்று கூறலாம். அவருக்குள் இறைவன் அவ்வாறு செயல்பட்டான் என்றும் எடுத்துக்கொள்ளலாம். உருவ வழிபாடு அவருக்கு ஏற்புடையதாக இல்லை. வேதங்களுக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை அவர் மறுத்தார். 'ஒரு புத்தகம் எப்படிக் கடவுளாக முடியும்? எனில், அது கையிலிருக்க ஒருவன் ஏன் கடவுள் தன்மை அடையாமல், அதன் அடிமை போலிருக்கிறான்?’ என்று கேட்டார்.

வேதங்கள்தான் சாதியை உருவாக்கின. சாதி மனிதன் பாவியாகிவிட்டான். ஒருவனைப் பாவியாக்கிய வேதம் எப்படிச் சுத்த சுயம்பிரகாச மான இறைவனை அடையாளம் காட்ட முடியும் என்றும் கேட்டார் சிவவாக்கியர். இந்தக் கோபமே ''பறைச்சியாவதேதடா, பனத்தியாவதேதடா, இறைச்சித் தோல் எலும் பினும் இலக்கம் இட்டிருக்குதோ?'' என்று பாடல் வழி கேள்வி கேட்கச் செய்தது.

இதனால் சிவவாக்கியருக்கு ஆதரவானவர்களைவிட எதிரானவர்களே அதிகம் உருவா யினர். கருத்தளவில் அவரோடு ஒன்ற முடிந்த வர்கள், அவர் சொல்வதை வழி மொழிந்தனர். குறிப்பாக இடதுசார்புச் சிந்தனையாளர்கள் சிவவாக்கியர் பாடல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.

சிவவாக்கியர் இப்படி, தான் உணர்ந்ததைச் சொல்ல வழிகாட்டியவராக கங்கைக் கரைச் செருப்பு தைப்பவரைச் சொல்லலாம். ஒன்றின் அழுக்கை நீக்க, அதை அடித்துத் துவைக்க வேண்டியுள்ளது. அப்போது, உடையின் அழுக்கு நீரிடம் சென்று சேர்கிறது. நீர் அழுக்கானால்தான் உடை சுத்தமாகும்!

நீராக இருந்து நம் அழுக்கை ஏற்று, தங்களை அழுக்காக்கிக்கொண்டு, பின்பு ஆறு போல ஓடி தங்கள் அழுக்கை உதிர்த்துவிட்டு மீண்டும் தெளிவாகின்றவர்களே யோகிகள்- குருநாதர்கள். இவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்!

இந்த வரிசையில், சிவவாக்கியர் போல் சில கருத்துக்கள் கொண்டிருந்து, பின்பு அதில் மாறுபாடு கொண்ட காகபுஜண்டரை அடுத்துச் சிந்திப்போம்.

- சிலிர்ப்போம்...