Published:Updated:

தீராத நோயும் தீரும்!

அன்னாபிஷேகம்! ஊத்துக்குளி - பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோயில்

தீராத நோயும் தீரும்!

அன்னாபிஷேகம்! ஊத்துக்குளி - பெரியபாளையம் ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோயில்

Published:Updated:
##~##

திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது பெரியபாளையம்.

இங்கே, அற்புதமாகக் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுக்ரீஸ்வரர். திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஆலயம், சுமார் ஆயிரம் வருடங்களைக் கடந்த பழைமை வாய்ந்தது. மத்திய அரசின் தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்தக் கோயிலில் ஏராளமான சிற்பங்களும் கல்வெட்டுகளும் அமைந்துள்ளன. தேவேந்திரனின் ஐராவதம் யானை வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. கோயிலில் உள்ள சிற்பங்களே இதற்குச் சாட்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த ஆலயத்தில் சிவனாரின் சந்நிதிக்கு எதிரில், இரண்டு நந்திகள் காட்சியளிக்கின்றன. கொங்கு நாட்டு சிவ ஸ்தலங்களில், அதிக சிற்பங்கள் உள்ள நான்காவது கோயில் என்கிற பெருமை இதற்கு உண்டு.  

தீராத நோயும் தீரும்!

ஸ்ரீசுக்ரீஸ்வரருக்கு, ஸ்ரீமிளகீஸ்வரர் எனும் திருநாமமும் உண்டு. அந்தக் காலத்தில், வியாபாரிகள் இந்தப் பகுதி வழியே தங்கம், வெள்ளி முதலான பொருட்களைக் கொண்டு செல்வார்கள். அப்படிச் செல்லும்போது, இந்தக் கோயில் வாசலில் சிறிது நேரம் இளைப்பாறிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

தீராத நோயும் தீரும்!

ஒருமுறை, தங்க மூட்டைகளுடன் கோயிலுக்கு வந்து இளைப்பாறிக்கொண்டு இருந்த ஒரு வியாபாரியிடம் முதியவர் ஒருவர், 'மூட்டையில் என்ன இருக்கு?’ என்று கேட்டாராம். அதற்கு அந்த வியாபாரி, 'இது மிளகு மூட்டை’ என்றாராம். விடிந்ததும், அந்த மூட்டையைப் பிரித்துப் பார்த்த வியாபாரி அதிர்ந்து போனார். காரணம், தங்கத்துக்குப் பதிலாக மூட்டையில் இருந்தவை மிளகுகள்தான். அன்றிலிருந்து ஸ்ரீசுக்ரீஸ்வரரை ஸ்ரீமிளகீஸ்வரர் என்றும் அழைக்கின்றனர் பக்தர்கள்.

உடலில் மரு போன்று ஏதேனும் வளர்ந்தி ருந்தால், இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீசுக்ரீஸ்வரருக்கு மிளகு செலுத்திப் பிரார்த்தனை செய்தால், விரைவில் மரு விழுந்து, தழும்பே இல்லாத நிலை ஏற்படும்; தீராத வியாதியும் தீர்ந்துவிடும் என்கின்றனர் பக்தர்கள். வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தங்கள் நோய் தீர, இங்கு வந்து வேண்டிச் செல்கின்றனர். ஸ்ரீசுக்ரீஸ்வரருக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுகின்றனர்.

கிராம தெய்வமான ஸ்ரீபத்ர காளியம்மனுக்கு இங்கே சந்நிதி அமைந்துள்ளது.  

இத்தனைப் பெருமைகள் கொண்ட ஆலயத்தில், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபிஷேக விழா விமரிசையாக நடைபெறும். விழா நடப்பதற்கு நான்கைந்து நாட்கள் இருக்கும்போதே, பக்தர்கள் அன்னாபிஷேகத்துக்குத் தங்களால் முடிந்த அரிசியை வழங்கி, வேண்டிக் கொள்கின்றனர். மதியம் 12 மணிக்குத் துவங்கும் இந்த அன்னாபிஷேக விழாவில், காய்கறிகளாலும் பழ வகைகளாலும் ஸ்வாமிக்குச் செய்யப்படும் விசேஷ அலங்காரம் காண்பதற்கு ரொம்பவே அழகு! 

கோயிலுக்கு எதிரில் உள்ள தெப்பக்குளத்தையே கங்கையாக பாவித்து, ஸ்வாமிக்கு அபிஷேகித்த சாதத்தைக் கரைக்கின்றனர். மீதம் உள்ள சாதத்தைக் கொண்டு, அன்னதானம் நடைபெறும். அதையடுத்து பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் முதலான குளிர்ச்சியான திரவங்களைக் கொண்டு, சிவனாருக்கு அபிஷேகம் நடைபெறும்.

ஐப்பசி அன்னாபிஷேக விழாவில் கலந்துகொண்டு தரிசித்தால், தீராத நோயும் தீரும்; சகல பாபங்களும் விலகும் என்பது ஐதீகம்!

- தி.ஜெயப்பிரகாஷ்

படங்கள்: மு.சரவணக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism