Published:Updated:

அள்ளிக்கொடுப்போம் ஸ்ரீஆத்மநாதருக்கு!

ஆலயம் தேடுவோம்தஞ்சை - ஆலம்பொழில் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயில் வி.ராம்ஜி

அள்ளிக்கொடுப்போம் ஸ்ரீஆத்மநாதருக்கு!

ஆலயம் தேடுவோம்தஞ்சை - ஆலம்பொழில் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயில் வி.ராம்ஜி

Published:Updated:
##~##

'அடடா... மனிதப் பிறப்பெடுத்தது, என் சிவனை தரிசிப்பதற்காகவே! என் பிறப்பின் நோக்கம் செவ்வனே நிறைவேறிக்கொண்டு இருக்கிறது. வடக்கிலோ, தெற்குக் கோடியிலோ பிறந்திருந்தால், இவ்வளவு சிவ ஸ்தலங்களைப் பார்த்திருப்போமா, இத்தனைக் கோயில்களுக்குச் சென்று, உள்ளம் உருகிப் பாடியிருப்போமா என்பது சந்தேகம்தான்.

தெற்குப் பகுதிக்கும் வடக்குப் பகுதிக்கும் நடுவே, காவிரி பாய்ந்தோடும் சோழவள நாட்டில் பிறந்தது என் பாக்கியம். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் உள்ள சிவாலயம், அதையடுத்துச் சற்றுத் தொலைவிலேயே இன்னொரு சிவாலயம் எனத் தெருவுக் குத் தெரு, ஊருக்கு ஊர் கோயில்கள் நிறைந்த இந்தச் சோழ தேசம் நிச்சயம் சொர்க்கபூமிதான்! அடடா...’ என்று மனத்துள் சிலாகித்துக்கொண்டே, திருச்சோற்றுத்துறை தலத்து நாயகனைப் பாடிவிட்டு, மெள்ள நடந்து வந்தார் சுந்தரர் பெருமான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'இன்னும் அரை நாள் பயணித்தால், ஆலம்பொழிலை அடைந்துவிடலாம். அங்கேதான் அடியேனுக்கென்று ஒரு மடம் கட்டிக் கொடுத்திருக்கிறார்கள், சிவனடியார்கள். நான் வந்து தங்கினால் என்னைச் சந்தித்து உரையாடவும், மற்ற நாட்களில் சிறுவர்களைக் கூட்டி வந்து, அவர்களுக்குச் சிவனாரின் பெருமை களைச் சொல்லவுமாக, அந்த மடம் பெரிதும் உபயோகமாக இருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டார் சுந்தரர்.

'ஆலம்பொழிலுக்கு வந்தால் உடனே கிளம்பிவிடாமல், ஒரு பத்துப் பதினைந்து நாட்களேனும் தங்கிச் செல்லவேண்டும் என்று கேட்கிறார்கள். 'சுந்தரரைப் பார்க்கவேண்டும் அவர் சிவனாரின் தோழனாமே..!’ என்று தங்கள் வீட்டுக் குழந்தைகள் வியந்து கேட்பதாகச் சொல்லி மகிழ்கிறார்கள்.

அள்ளிக்கொடுப்போம் ஸ்ரீஆத்மநாதருக்கு!

அவர்கள் விரும்பியபடியே, ஆலம்பொழிலில் சில நாள்கள் தங்கியாயிற்று! இங்கே இருந்தபடியே, அருகில் உள்ள கோயில்களுக்கும் ஒரு நடை சென்று பார்த்துவிட்டு வந்தாயிற்று. இன்னும் ஒருசில கோயில்களே உள்ளன. அவற்றையும் பார்த்துவிட்டு, இன்னும் நான்கைந்து நாளில் யாத்திரையைத் தொடர வேண்டியதுதான்!'' என்று எண்ணியவாறே மடத்துக்கு வந்தவர், கண்ணயர்ந்தார்.

அன்றிரவு... ஆழ்ந்து உறங்கிக்கொண்டிருந்த சுந்தரரின் கனவில் தோன்றினார் சிவனார். 'மழபாடிக்கு வர மறந்தீரே...’ என்று கேட்டார். திடுக்கிட்டு எழுந்தார் சுந்தரர். விடிந்தும் விடியாததுமாக, திருமழபாடி நோக்கி வேக வேகமாக நடை போட்டார். அங்கே சென்று, கோயிலுக்குள் நுழைந்து சந்நிதிக்கு எதிரே நின்று, சிவனாரைக் கண்ணாரத் தரிசித்தவர்... கண்களில் நீர்க்கசிய, உருகிப் பாடினார்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே

என்று பாடப் பாட... சிவம் குளிர்ந்து போயிற்று.

பிறகு, சுந்தரர் ஆலம்பொழிலுக்கு வந்ததும், ஊரே கூடி நின்று வியந்தது. 'சிவபெருமானே கனவில் வந்தாரா? என்னைப் பார்க்க வரலியேன்னு கேட்டாரா?’ என்று கேட்டுக் கேட்டு வியந்தது.

அந்த ஆலம்பொழில் கிராமம் திருஆலம் பொழில் என்று அழைக்கப்படுகிறது. அங்கே உள்ள கோயிலில் உறைந்திருக்கும் ஈசனின் பெயர்... ஸ்ரீஆத்மநாதர்.

உள்ளார்ந்து எவர் தன்னை நினைத்து வேண்டுகிறாரோ, அவருக்குச் செவிசாய்த்து, அருள்பாலிக்கும் ஒப்பற்ற இறைவன் இவர். இந்தத் தலத்தின் நாயகி, ஸ்ரீஞானாம்பிகை. இவளுக்கு அரளி சார்த்தி வேண்டிக்கொண்டால் போதும்... ஞானத்தையும் யோகத்தையும் தந்தருளக் கூடியவள் என்கின்றனர் பக்தர்கள்.

அள்ளிக்கொடுப்போம் ஸ்ரீஆத்மநாதருக்கு!

ஆனாலும் என்ன... சுந்தரர் வந்து தங்கிப் பதிகம் பாடிய ஒப்பற்ற இந்தத் திருத்தலத்தில், இன்றைக்கு ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஐந்து கால பூஜைகளும் குறைவின்றி நடந்த கோயில்தான் இது. பூஜைகளும் விழாக்களும் திருவீதியுலாக் களுமாக அமர்க்களப்பட்ட கோயில்தான்! அப்போதெல்லாம் ஐப்பசி அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெறுமாம். இப்போது ஒருகால பூஜையில் மட்டுமே ஸ்வாமிக்கு நைவேத்தியம் நடக்கிறது. முன்னெல்லாம் சித்திரை, பங்குனி, கார்த்திகை என்று பல நாட்கள் திருவீதியுலா நடக்கும். ஆனால், இப்போது வீதியுலா வருவதற்கு ஸ்வாமிக்கு வாகனங்களே இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, சுந்தரர் தங்கிய அந்த மடம் இன்றைக்கும் உள்ளது. ஆனால், சுந்தரர் குருபூஜை, தேவாரப் பாடல்கள் எனப் பாடிய இடம், அமைதியே உருவெனக் கொண்டு காட்சி அளிக்கிறது.

திருக்கார்த்திகையில் ஊருக்கே வெளிச்சம் தரும் அளவுக்குக் கோயிலில் தீபங்கள் ஏற்றிய காலம் போய், இப்போது சம்பிரதாயத்துக்கு ஒரே ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்பட்டு, மிகச் சிக்கனமாய், எளிமையாய் ஒருகால பூஜையும் முடிந்துவிடுகிறது என்று ஏக்கத்தோடு சொல்கிறார்கள், ஊர்க்காரர்கள்.

''கோபுரம் சிறியதுதான்; ஆனால், கோயில் பெரிதாக இருக்கிறது. பிராகாரம் சிறியதுதான்; ஆனால், ஸ்ரீஆத்மநாதரின் பேரருள் கோயில் முழுவதும் வியாபித்திருக்கிறது. இங்கு வந்து ஒருமுறை ஸ்வாமி தரிசனம் செய்தால் போதும்... உள்ளத்தில் ஒளி உண்டாகி, சலனங்கள் அகன்று, தெளிவும் புத்துணர்வும் கிடைக்கப் பெறலாம். நமது சங்கடங்கள், குழப்பங்கள் யாவற்றையும் அகற்றி, அருளக்கூடியவர் ஸ்ரீஆத்மநாதர். இந்த ஆலயத்தின் திருப்பணிகள் செவ்வனே நடந்து, கும்பாபிஷேகமும் நடந்தால், எங்கள் கிராமம் பொலிவு பெறும்; முன்னேறும்!'' என்கின்றனர் பக்தர்கள்.

''ஆடி மாதத்தில் அம்பாளுக்கு வளைகாப்பு நடந்து, பல வருடங்களாகிவிட்டன. அன்றைக்கு அவளது முகத்தில், மற்ற நாட்களைவிட அதிக பூரிப்பும் பரவசமும் படர்ந்திருப்பதை நம்மால் நன்றாக உணர முடியும். ஆனால், பூரிப்பும் புன்னகையுமாக இருக்கும் ஸ்ரீஞானாம்பிகைக்குப் புடவை சார்த்தி, குங்குமார்ச்சனை செய்து, அபிஷேகம் செய்து ஆராதிக்கக்கூட ஆட்கள் வருவது குறைந்து விட்டது!'' எனக் கலங்குகின்றனர் பக்தர்கள்.

ஆலம்பொழில் கிராமத்தில் உள்ள கோயில், மீண்டும் எழிலுடன் திகழவேண்டும். அது நம்மைப் போன்ற சிவனடியார்களின் கையில்தான் உள்ளது. ஸ்ரீஆத்மநாதர் கோயிலில் திருப்பணிகள் நடப்பதற்கு, நம்மால் முடிந்த நன்கொடைகளை அள்ளித் தருவோம்.

ஸ்ரீஞானாம்பிகை குடிகொண்டிருக்கும் கோயிலில் சீரமைப்புப் பணிகள் நடக்க, கும்பாபிஷேகம் சிறப்புடன் நடைபெற... நாம் கை கொடுப்போம். நம் குலம் தழைக்க, இறைவனும் இறைவியும் நிச்சயம் நமக்குக் கை கொடுப்பார்கள்!

படங்கள்: ஆர்.அருண்பாண்டியன்

எங்கே இருக்கிறது?

ஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது கண்டியூர். இங்கிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது ஆலம்பொழில் கிராமம். இங்குதான் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீஆத்மநாதர் கோயில் அமைந்துள்ளது.

தஞ்சையில் இருந்து கண்டியூருக்கு அடிக்கடி பஸ் வசதி உண்டு. அங்கிருந்து ஆலம்பொழிலுக்கு ஆட்டோவில் செல்லலாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism