மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சேதி சொல்லும் சிற்பங்கள்! 15

சேதி சொல்லும் சிற்பங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
சேதி சொல்லும் சிற்பங்கள் ( குடவாயில் பாலசுப்ரமணியன் )

ஆலயம் ஆயிரம்!முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்

##~##

கொங்கு நாட்டில், ஈரோட்டில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில், காவிரியாறும் பவானியாறும் சங்கமிக்கும் கூடுதுறையில் அமைந்துள்ளது ஸ்ரீசங்கமேஸ்வரர் திருக்கோயில். 'திருநணா’ என்பது இந்த ஊரின் தேவார காலப் பழம்பெயராகும். திருஞான சம்பந்தர் இந்தத் தலத்துக்கு வந்து, பதிகம் பாடியுள்ளார்.

தேவாரத் தலம்தான் என்றாலும், சிவா- விஷ்ணு மூர்த்திகளின் தனித்தனிக் கோயில்களை ஒரே வளாகத்தில் பெற்ற, சைவமும் வைஷ்ணவமும் இணைந்த தலம் இது!

ஸ்ரீசங்கமேஸ்வரர் சந்நிதியில் இருந்து கிழக்கு வாசல் வழியே பார்த்தால், எழில் கொஞ்சும் காவிரியின் பேரழகைக் காணலாம். கோட்டை விநாயகர், ஸ்ரீமுத்துக்குமாரசுவாமி, ஸ்ரீவேதாம்பிகை எனும் அம்பாள் கோயில் ஆகியவை மூலவர் திருக்கோயிலுக்குரிய பரிவார ஆலயங்களாகத் திகழ்கின்றன.

அம்பாள் திருக்கோயிலுக்கு வடக்காக ஸ்ரீஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீசௌந்தரநாயகித் தாயார், ஸ்ரீநரசிம்மர் ஆகிய தெய்வங்கள் உறையும் மூன்று தனித்தனி சந்நிதிகள். கூடுதுறை எனும் புண்ணிய தீர்த்தமே, ஸ்தல தீர்த்தம்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 15

பல்லவ, சோழ, பாண்டிய மரபு மன்னர்கள் விட்டுச் சென்றுள்ள சிற்பப் படைப்புகள் குறித்து தமிழகத் திருக்கோயில்களில் பார்த்துச் சிலாகிப்போம். விஜய நகர அரசர்களின் கலைப் படைப்புகளும் பலராலும் போற்றப்படுபவையே! ஆனால், சுமார் 450 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, சிற்றரசர்களாக விளங்கிய தமிழ் மரபு மன்னர்கள் எடுத்த கோயில்களும், அவர்தம் கலைப்படைப்புகளும் அவ்வளவாகத் தமிழ் மக்களால் அறியப்படாமலேயே இருக்கின்றன. அந்த வரிசையில், கொங்கு நாட்டில், குறிப்பாக பூவாணி நாட்டில் அரசர்களாகத் திகழ்ந்த கட்டிமுதலிகள் எடுத்த கோயில்களும், அங்கே காணப்படும் கலைப்படைப்புகளும், தமிழ்நாட்டுக் கலை இயல் வரலாற்றில் தனி இடம்பெற்றுத் திகழ்கின்றன.

சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் வேளிர் அரசர்களில் ஒரு பிரிவினரான 'கட்டி’ என்ற அரச மரபைச் சார்ந்தவர்களாக கட்டிமுதலிகள் இருத்தல் கூடும் என அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்கால கட்டிமுதலிகள் மரபில் இம்முடி கட்டிமுதலி, வணங்காமுடி கட்டிமுதலி என்ற இரண்டு பேர் குறிப்பிடத்தக்கவர்கள். ஆத்தூர், பவானி, ஈரோடு, திருச்செங்கோடு, மோகனூர் சேந்தமங்கலம், அமரகுந்தி, சங்ககிரி, ஓமலூர், தாரமங்கலம் ஆகிய இடங்களில் கட்டிமுதலிகளின் கலைப் படைப்புகளை ஆலயங்களில் காணலாம்.

தற்போது நாம் பார்க்கிற ஸ்ரீபவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிகள் அனைத்தும் இம்முடி கட்டிமுதலியின் பணிகளே என்பதை, திருக்கோயில் வளாகத்தில் புலி உருவத்துடன் திகழும் கற்பலகைக் கல்வெட்டுக்களாலும், அம்பாள் திருக்கோயில் வசந்த மண்டப விதானத்துக் கல்வெட்டுக்களாலும் அறியமுடிகிறது.

பவானி ஆலயத்தில் உள்ள கட்டிமுதலி கலைப்படைப்புக்கள் வரிசையில் தலையாய இடம் பெறுவது, விஷ்ணு ஆலயத்தில் உள்ள ஸ்ரீநரசிம்மர் சந்நிதியின் முகப்பு மண்டபத்துத் தூண்களும், அதில் உள்ள சிற்பங்களும்! ஒரு தூணில் ஸ்ரீராமன் வில்லும் அம்பும் தரித்தவராக நிற்கும் திருக்கோலம்; அடுத்த தூணில், ஸ்ரீராமனின் பட்டாபிஷேகக் கோலம். ஒரு காலை மடித்தும், ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் மகுடம் சூடிய ஸ்ரீராமர் அமர்ந்துள்ளார். சீதா பிராட்டியோ ஒரு காலை மடித்தும், ஒரு காலை குத்திட்டவாறும் அமர்ந்துள்ளார். ராமபிரான் தன் வலக்கரத்தால் அபயம் காட்டி, இடக்கரத்தால் ஜானகித் தாயை அணைத்தவாறு காட்சி தருகிறார். தேவியின் வலக் கரம் மலர் பிடிக்க, இடக்கரம் தரை யில் ஊன்றியபடியான காட்சியை அப்படியே சிற்பமாக நம் கண் முன்னே நிறுத்தி உள்ளனர் சிற்பிகள்.

சேதி சொல்லும் சிற்பங்கள்! 15

இருவரின் திருப்பாதங்களையும் இரண்டு தாமரை மலர்கள் தாங்கி நிற்கின்றன. அமர்ந்திருக்கும் இருவருக்குக் கீழாக மலர்ந்த தாமரை மீது ஸ்ரீஅனுமன், பத்மாசனக் கோலத்தில் அமர்ந்துள்ளார். மேல் நோக்கும் அவர் திருமுகம் ஸ்ரீராமபிரானின் பாத கமலங்களைத் தரிசித்த சிலிர்ப்பில் அமைந்துள்ளது.  ஸ்ரீஅனுமன், தன் வலக்கரத்தில் வீணையையும், இடக்கரத்தில் ராமாயணச் சுவடியையும் ஏந்தியுள்ளார். இத்தகைய காட்சியை, வேறு எங்கும் காண்பது அரிது!

அம்பாள் கோயிலின் வசந்த மண்டபம் அற்புதக் கலைக் கூடம்! குதிரை வீரர்களின் சிற்பங்களோடு திகழும் இந்த மண்டபத்துத் தூண் ஒன்றில், இம்முடி கட்டிமுதலி, அடியார் ஒருவருக்குப் பொருள் வழங்கும் காட்சியும், அவர் மனைவி எதிர் தூணில் இருந்து வணங்கும் காட்சியும் இடம் பெற்றுள்ளன. இந்த மண்டபத்து மேல் விதானத்தில் (உட்கூரைப் பகுதியில்) உள்ள சிற்பப் படைப்புகள் பேரழகு வாய்ந்தவை! மூன்று அடுக்குகளுடன் உள்ள தாமரை மலர்; நடுவிருந்து அதன் இதழ்களைச் சுற்றியுள்ள கிளிகள் கொத்துகின்றன. மலரைச் சுற்றி உள்ள சட்டப் பகுதியில் 18 நடனக் கலைஞர்கள் ஆடியும் பாடியும் நிற்கின்றனர். இந்தக் காட்சிக்கு வெளியே 16 தெய்வத் திருவுருவங்கள் உள்ளன. ஸ்ரீஊர்த்துவ தாண்டவர், ஸ்ரீகாளி, ஸ்ரீஉமை, ஸ்ரீபிரம்மன், மத்தளம் இசைக்கும் இடபதேவர், அதிகார நந்தி, கொடிப்பெண்கள் இருவர், அறுமுகன், இந்திரன், கிங்கரர், நாரதர், தும்புரு, திருமால் என தெய்வ உருவங்கள் திகழ... வெளிப்புறம் வில், அம்பு, வண்ணத் தடுக்கு, வாடாத மாலை, புலி, மகரம் ஆகிய கட்டிமுதலிகளின் அரச சின்னங்களும் உள்ளன. அருகே இந்த மண்டபத் திருப்பணி பற்றிய கட்டிமுதலியின் கல்வெட்டும் உள்ளது. இவை தவிர, லிங்கத்துக்குப் பால் சொரியும் பசு உள்ளிட்ட பல சிற்பங்கள் திருக்கோயில் முழுவதும் உள்ளன.

கட்டிமுதலியின் தாரமங்கலம் கல்வெட்டு, இலக்கியச் சுவை மிக்கது. 12 சூரியர்கள், 11 உருத்திரர், 10 திக்குகள், 9 கங்கைகள் (ஆறுகள்) 8 மலைகள், 7 கடல்கள், 6 கார்த்திகைப் பெண்கள், 5 மலர் அம்புகள் (மன்மதன்), 4 வேதங்கள், 3 தீச்சுடர்கள், 2 சாதிகள் என்பன போன்று, கட்டிமுதலியின் வாக்கு ஒன்றே என்கிறது அக்கவிதை.

'செங்கதிர் பன்னிரண்டீசன்
     பதினொன்று திக்குபத்து
கங்கையும் ஒன்பது வெற்பு எட்டு, ஏழு
    கடல் கார்த்திகை ஆறு
ஐயங்களை நான் மறை மூச்சுடர் சாதி
   இவை இரண்டு
மங்கை வரோதையன் கட்டிமுதலி  
      வார்த்தை ஒன்றே!’

பவானி கூடுதுறையில் நீராடி, ஸ்ரீசங்கமேஸ்வரர் பாதம் பணிந்து, அனைத்து கலைச் செல்வங்களையும் கண்டு மகிழ்ந்து ஈசனின் பேரருளைப் பெறுவோம்!

- புரட்டுவோம்