Published:Updated:

நாரதர் கதைகள் - 15

இது நான்கு வேத சாரம்

##~##

ரத கண்டத்தின் தென் பகுதியில், திராவிட பூமியில், மிகச் சிறந்த நகரமாக விளங்கிற்று திருவண்ணாமலை. எல்லாக் காலமும் அது மக்களின் வருகையால், விழாக்களின் சிறப்பால் மிக உன்னதமான இடமாக விளங்கிற்று.

கோயிலில் மட்டுமல்லாது, அந்தக் கோயிலை ஒட்டி இருக்கின்ற மலையையும் மக்கள் தெய்வமென வணங்கினார்கள். சிவனின் ரூபம் எனக் கும்பிட்டார்கள். அதைச் சுற்றி வருவதே மிகப் பெரிய பூஜை என கிரிவலம் வந்தார்கள்.

அந்த மலையால் ஈர்க்கப்பட்டு யோகிகளும், தபஸ்விகளும், சாதுக்களும், சித்த புருஷர்களும் எல்லாக் காலத்திலும் இடையறாது வந்து சரணடைந்தார்கள். தான- தர்மங்களுக்குப் பெயர் பெற்ற ஊராக அது விளங்கிற்று. 'திருவண்ணாமலையில் பிறந்தாலே முக்தி’ என்று சொற்றொடர் ஏற்பட்டது. அந்த ஊரில் குடியிருக்க நல்லவர்கள் அதிகம் விரும்பினார்கள்.

நாரதர் கதைகள் - 15

அந்த ஊரின் அரசனுக்குப் பெயர் வல்லாள மகாராஜன். மிகச் சிறந்த அரசனாக, படைபலம் மிக்கவனாக, ஒழுக்கம் உள்ளவனாக, கூர்மையான அறிவு மிக்கவனாக, கருணை மிக்கவனாக, அழகனாக, திடகாத்திரனாக, பண்புள்ளவனாக, பணிவுள்ளவனாக விளங்கினான். அவனுக்கு மக்கட்பேறு இல்லை. தனக்குப் பிறகு தன் தேசத்தை ஆட்சி செய்ய வாரிசு இல்லையே என்று அவன் கவலைப்பட்டான். அதற்காக அவன் வெள்ளை நிறமுள்ள அன்னக்கொடியை ஏற்றி, யார் எது கேட்டாலும் கொடுப்பது என்ற கொள்கையோடு இடையறாது தான- தர்மங்கள் செய்து வந்தான். குறிப்பாக சாதுக்களை, சிவபக்தர்களை அதிகம் கொண்டாடினான்.

வடக்கேயிருந்து தெற்கு நோக்கிப் பயணப்பட்டு ராமேஸ்வரம் போவதற்கு முன்பு, திருவண்ணாமலையில் தங்கி, சிவ பூஜை செய்கின்ற பெரியோர்களை மிகக் கவனமாக பார்த்துக்கொண்டான். யாருடைய அருட்பார்வையிலாவது தனது வேதனை விலகி, தனக்கு நல்லதொரு ஆண் மகவு பிறக்காதா என்று ஏங்கினான்.

அவனுடைய ஆட்சியின் திறத்தால், ஜனங்கள் குதூகலமாக இருந்தார்கள். ஜனங்கள் குதூகலமாக இருந்ததால், சிவ பூஜைகள் அற்புதமாக நடந்தன. பூஜைகள் சரிவர நடந்ததால், அந்த இடம் பிரகாசமாக இருந்தது. அந்த இடம் பிரகாசமாக இருந்ததால், தேவர்கள் அடிக்கடி தரையிறங்கும் இடமாக இருந்தது. தேவர்கள் வருகையால், அந்த ஊரின் புனிதத்தன்மை மேலும் மேலும் பிரகாசித்தது. அந்த பிரகாசத்தால் நாரத முனி ஈர்க்கப்பட்டார்.

'ஆஹா! இவ்வளவு பிரகாசமாக இரவு- பகலெல்லாம் ஒளிர்கின்ற இடமாக, இதமான சூழ்நிலையோடு, நல்ல வாசனையோடு, நல்ல அதிர்வோடு பரத கண்டத்தில் ஒரு நகரம் இருக்கிறதே..! வேறு எந்த நகரமும் இவ்வளவு சிறப்பாக இல்லையே!’ என்ற வியப்போடு நாரத மகரிஷி அங்கு வந்து இறங்கினார். அந்தப் பிரகாசத்துக்கு யார் காரணம் என்பதையும், இந்த அத்தனைச் சிறப்புக்கும் உரியவன் திருவண்ணாமலையை ஆளும் வல்லாள மகாராஜன் என்பதையும் புரிந்துகொண்டார். ஒரு சாதாரண சாதுவைப் போல உருவெடுத்து, அவனிடம் வந்து பேச்சுக் கொடுத்தார்.

நாரதர் கதைகள் - 15

''இந்தக் காலத்தில் எந்த அரசன் அன்னக் கொடி ஏற்றி, விதம் விதமான தான- தர்மங்கள் செய்கிறான்! ஓர் அற்புதமான க்ஷேத்திரத்தை நீ இன்னும் பிரகாசமாக்கிக்கொண்டு இருக்கிறாய். உன்னுடைய ஆட்சியால் இந்த இடம் தேவர்கள் வந்து தங்குகின்ற இடமாக இருக்கிறது. இதனால், உன்னுடைய ஆட்சியில் எந்தத் துன்பமும் இல்லை; அகால மரணம் இல்லை; நோய் இல்லை; வறுமை இல்லை; கோபம் இல்லை; பொறாமை இல்லை. எல்லா மக்களும் எல்லாருக்கும் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறார்கள். நீ வாரி வழங்குவதைப் பார்த்து, மக்களும் தங்களிடம் இருக்கின்ற தொகையை மனமகிழ்ச்சியோடு தானம் செய்து, சிறப்பாக வாழ்கிறார்கள். அப்படி தானம் வழங்கியதால் இங்குள்ள சாதுக்களும், தவசீலர்களும் இந்த நகரத்தை ஆசிர்வதிக்கிறார்கள். இந்த நகரத்தில் எந்தக் குறையும் இல்லை. மகாலட்சுமி வாசம் செய்கிறாள். காமதேனுவின் புல்வெளியாக இந்த நகரம் இருக்கிறது!'' என்று பல்வேறு விதமாகப் போற்றிப் புகழ்ந்தார் நாரதர்.

ஒளிரும் கண்களும், கூரிய மூக்கும், நெடுநெடு உயரமும், மெல்லிய உடம்பும் கொண்ட அந்த சாதுவின் தோற்றம் கண்டு ஈர்க்கப்பட்ட வல்லாள மகாராஜன் கை கூப்பி வணங்கினான்; வலம் வந்து நமஸ்கரித்தான்.

''உங்கள் வாக்கு என் காதில் தேனாகப் பாய்கிறது. ஆனால், இவையெல்லாவற்றுக்கும் நான் காரணம் இல்லை. இது சிவஸ்தலம். இங்கு ஆட்சி செய்வது சிவனே அன்றி, வேறு எவரும் அல்ல! சிவன்தான் இங்கு சகலமும் நடத்துகிறார். நான் அவருக்குப் பணியாளாக இருந்து இந்த அரச பதவியை ஏற்றிருக்கிறேன். எனவே, நீங்கள் புகழ்வது என்றால், என்னைப் புகழாதீர்கள். சிவபெருமானை ஸ்தோத்திரம் செய்யுங்கள்'' என்று சொன்னான்.

அவனை நாரதர் கூர்ந்து கவனித்தார். 'இதற்குக் காரணம் நான் இல்லை. கடவுள்’ என்ற வாக்கியம் மனப்பூர்வமாகச் சொல்லப் பட்டால், அந்த த்வனி வேறு விதமாக வெளிப்படும். ஆனால், இவன் குரலில் கர்வம் ததும்பியிருக்கிறது. தன்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பெரிதாக இருக்கிறது. அப்படிச் சொல்வது நாகரிகமாக இருக்காது என்பதால், அவையடக்கமாகப் பேசுகிறான். பணிவுள்ளவன் போன்று நடிக்கிறான். இவன் நல்லவன்தான். ஆனாலும், இவன் தன்னாலேயே எல்லாம் மிகத் திறம்பட நடத்தப்படுகிறது என்று உள்ளூர ஒரு கர்வத்தோடு இருக்கிறான். இவனுக்கு மெல்லியதாய் ஒரு பாடம் சொல்லிக் கொடுப்பது, இவனை இன்னும் உச்சத்தில் கொண்டு வந்து வைக்கும். இவனை உலகம் அறியச் செய்யும். பூமி உள்ளவரை

இவன் பெயர் நிலைக்கச் செய்யும் சூரிய- சந்திரர் உள்ள வரையிலும் இவனைப் பற்றிச் சரித்திரம் பேசும்.இவனது கர்வத்தை அழிப்பதோடு, இவனது சிறப்பைக் கொண்டாடுகிற ஒரு விஷயத்தையும் செய்யவேண்டும் என்று நாரதர் தீர்மானித்தார். அரசனை ஆசீர்வதித்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.

நேராகக் கயிலையை அடைந்து, சிவனாரை வணங்கினார். நாராயணனைப் பற்றிப் புகழ்ந்து பாடினார். சிவன் அகம் மலர, அந்தப் பாடலைச் செவிமடுத்தார்.

''வாருங்கள். என்ன வேண்டும்?'' என்று விசாரித்தார்.

நாரதர் கதைகள் - 15

''அன்னக்கொடி ஏற்றி உங்கள் பெயரைச் சொல்லி, திருவண்ணாமலையில் வல்லாள மகாராஜா இடையறாது தான- தர்மங்கள் செய்து வருகிறான். பெரிய யாகங்கள் செய்வதைவிட, விக்கிரகங்கள் வைத்துப் பூஜை செய்வதைவிட, பெரிதாய்க் கோயில் கட்டுவதைவிட... வந்தவர் அனைவருக்கும் உணவு கொடுத்து உபசரித்து, உடை கொடுத்து, தங்க இடம் கொடுத்து, களைப்பாறுவதற்கு வசதி செய்து கொடுத்து, வழிப்போக்கரை தெய்வமாகக் கொண்டாடுகிற அவனது இந்தச் செயல் மிகச் சிறப் பாக இருக்கிறது. எல்லா யாகத்தையும்விட மிக உயர்வாக இருக்கிறது. சிவ பூஜையிலேயே மிகச் சிறந்த விஷயமாக இருக்கிறது. இந்த பூஜையால் அந்தப் பிரதேசம் முழுவதும் பிரகாசமாக இருக்கிறது. அந்த அரசனுக்கு ஒரே ஒரு குறை. குழந்தை இல்லை. வாரிசு இல்லை. தன்னுடைய தேசத்தைத் தொடர்ந்து சீரும் சிறப்புமாக ஆட்சி செய்ய ஒரு வாரிசு வேண்டுமென்று விரும்புகிறான். நீங்கள் அவனை ஆசீர்வதிக்கவேண்டும்'' என்று நாரதர் சொன்னதும், சிவ பெருமான் கண்களை மூடிக்கொண்டார். பிரகாசமான புன்னகை அவர் முகத்தில் மின்னியது.

எதற்கு வாரிசு? தனக்குக் குழந்தை வேண்டுமென்று ஒருவன் ஏன் நினைக்கிறான்? தன்னுடைய நல்ல செயலை, தனக்கு வயதான பிறகு அல்லது தன் இறப்புக்குப் பிறகு

தன் மகன் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றுதானே? வல்லாள மகாராஜாவுக்குக் குழந்தை இல்லாது போனால் என்ன? அவன் செய்த தான- தர்மத்தை அவன் மக்கள் பழக்கப்படுத்திக்கொண்டு விட்டார்கள். அரசன் செய்வது போல வாரி வழங்க வேண்டும் என்று திருவண்ணாமலை மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதி தர்மத்துக்கு என்று முடிவு செய்துவிட்டார்கள். எனவே, இவனுக்குப் பிள்ளை இல்லை என்ற குறை, இவன் ஆதரித்து வளர்த்த இவனது குடிமக்களாலேயே தீரும். பிறகு, மகன் எதற்கு? தன் உறவினர்களைப் பார்த்துக் கொள்ளவா? அதையும் இவன் ஊரே செய்யும். தான் இறந்த பிறகு, தனக்கு நீர் வார்க்கவேண்டும், தனக்கு ஆத்ம சுகம் அளிக்கின்ற தர்ப்பணம் தரவேண்டும் என்ற காரணமாக இருக்குமோ? அதற்குத்தான் ஓர் ஆண் மகன் வாரிசு தேடுகிறானோ என்று யோசிக்க, அவர் புன்னகை மேலும் கூடிற்று.

வல்லாள மகாராஜனுக்கு அருள் செய்வதென்று தீர்மானித்துவிட்டார். ஆனால், நாரதர் அவனிடத்தில் ஏதோ குறை கண்டுபிடித்திருக்கிறார் போலிருக்கிறதே என்பதையும் புரிந்துகொண்டார். 'சரி... அது, குறையல்ல; ஒரு சிறிய கறை. அதையும் துடைத்து எறிந்துவிடுவோம்’ என நினைத்தவராய், ''நாம் திருவண்ணாமலைக்குக் கிளம்பு கிறோம்'' என்று நாரதரிடம் சொன்னார். நாரதர் மிகுந்த மகிழ்ச்சியோடு கைகூப்பினார்.

தனது பூதகணங்களோடு திருவண்ணாமலையில் வந்திறங்கினார் சிவன்.

- தொடரும்...