Published:Updated:

இவரும் ஒரு நாயன்மாரே! -  கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இவரும் ஒரு நாயன்மாரே! -  கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு !
இவரும் ஒரு நாயன்மாரே! -  கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு !

இவரும் ஒரு நாயன்மாரே! -  கிருபானந்த வாரியார் நினைவு தினப் பகிர்வு !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

அழகு தமிழால் அழகன் முருகனின் புகழ் பாடியவர்; அமுதனைய தம்முடைய சொற்பொழிவுகளால் மக்களிடையே பக்திப் பயிர் வளர்த்தவர்; தந்தை பெரியாரால் பாராட்டப்பட்டவர்; மிகச் சிறந்த முருக பக்தர்; உலகத் தமிழர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

இளமைப் பருவம்

வேலூர் மாவட்டம், காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்த காங்கேயநல்லூர் கிராமத்தில் செங்குந்த வீர சைவ மரபில் வந்த மல்லையதாசர் - கனகவல்லி தம்பதியருக்கு 1906 - ம் ஆண்டு ஆகஸ்ட் 25 - ம் தேதி நான்காவது குழந்தையாக, இந்திய நேரப்படி சனிக்கிழமை அதிகாலை 4:37 மணி அளவில், சுக்லபட்சம், சஷ்டி திதி, சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி கடக லக்கினத்தில் பிறந்தவர் கிருபானந்த வாரியார். இவர் பெயருக்கு அழகான ஒரு காரணம் உண்டு.

‘கிருபை’ என்றால் கருணை; ‘ஆனந்தம்’ என்றால் இன்பம்; ‘வாரி’ என்றால் பெருங்கடல் என்று பொருள். இவர் பெயருக்கேற்ப கருணையே உருவாக, பிறரைத் தன் சொற்பொழிவால் மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பெருங்கடலாகத் திகழ்ந்தார். தமிழ் இலக்கியத்திலும் ஆன்மிகத்திலும் தனித் திறன் பெற்றிருந்தார். எட்டு வயதிலேயே கவிபாடும் ஆற்றல் பெற்றவர். தேவாரம், திருப்புகழ், திருவருட்பா, கந்தபுராணம், கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலான நூல்களில் பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் மனப்பாடம் செய்திருந்தார்.

சொற்பொழிவாளராக

தந்தை மல்லையதாசர் இசை மற்றும் புராணச் சொற்பொழிவாற்றி வந்தார். ஒருநாள் அவருக்கு சொற்பொழிவு நிகழ்ச்சிக்குப் போக முடியாத நிலை. தந்தைக்குப் பதிலாக வாரியார் சென்றார். சொற்பொழிவிற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள், ‘மல்லையதாசர் சொற்பொழிவுக்கு வருவதாக ஒப்புக்கொண்டு, தான் வராமல் இளம் வயது மகனை அனுப்பிவைத்திருக்கிறாரே’ என்று வருத்தப்பட்டனர். ஆனால், அன்று முதன்முதலாக வாரியார் செய்த சொற்பொழிவைக் கேட்ட பிறகு அசந்துபோய்விட்டார்கள். ‘இந்த இளம் வயதில் இவ்வளவு அனுபவமா?’ என நெகிழ்ந்து போனார்கள். பதினெட்டு வயதில் சொற்பொழிவைத் தொடங்கிய வாரியாரின் பேச்சு, எளிமையான உரைநடையில் இருந்ததால், அதைப் படிப்பறிவே இல்லாதவர்கள்கூட எளிமையாகப் புரிந்துகொண்டார்கள். சிறுபிள்ளைகள்கூட இவருடைய சொற்பொழிவைக் கேட்க விரும்புவார்கள். எளிமையாக, அதிகமான நகைச்சுவை கலந்திருக்கும் சொற்பொழிவு.

கலையும் கூட்டத்தையும் தடுத்து நிறுத்தும் திறமை

வாரியார் சொற்பொழிவில் கூட்டம் கலைவது என்பது வெகு குறைவே. அப்படியே கலையும் கூட்டத்தையும் தக்கவைக்கும் கலையையும் அவர் கற்றிருந்தார். ஒருமுறை, ஓர் ஊரில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே ஒவ்வொருவராக எழுந்து போய்க்கொண்டிருந்தனர்.

அப்போது வாரியார் சொன்னார்... ''ராமாயணத்தில் அனுமனை ‘சொல்லின் செல்வர்’ என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.'' போய்க் கொண்டிருந்தவர்கள் யாரைச் சொல்லப் போகிறார் என்று தெரிந்துகொள்ளும் ஆவலுடன் தயங்கி நின்றனர். வாரியார், ''நான் பல நல்ல விஷயங்களைச் சொல்லினும், அதைக் கேட்காமல் செல்பவரைத்தான் சொல்கிறேன்'' என்றார். எழுந்து சென்றவர்கள் மீண்டும் அவர்கள் இடத்தில் வந்து அமர்ந்தனர்.

பெண்களை மதித்தவர்

வாரியார் சொற்பொழிவில் கூட்டத்தில் பெண்கள் எண்ணிக்கைக்கும் குறைவு இருக்காது. பெண்களைக் குறைவாகப் பேசுவதை வாரியார் விரும்ப மாட்டார். பெண்களை அடிமையாக நினைக்கும் ஆண்களை எச்சரிக்கும்விதமாக “மனைவியைக் கோபிக்கும் ஆண்கள் இருக்கக் கூடாது. மனைவி கண்ணீர் சிந்தினால் அந்தக் குடும்பம் தழைக்காது” என்று அவர் சொல்வதுண்டு. ‘குழந்தைகளுக்குப் தாயின் பெயரை முதலெழுத்தாக (இன்ஷியலாக) போட வேண்டும்’ என்று பெண்களை முன்னிறுத்தும் கருத்தை முதன்முதலாகச் சொன்னவரும் கிருபானந்த வாரியார்தான். பல சொற்பொழிவுகளில் மனைவியை கணவன் மதிப்புடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்துவார். ‘மனைவியிடம் மென்மையாகப் பேச வேண்டும். நான்கு பேர் இருக்கும்போது மனைவியைச் சத்தம் போட்டுக் கூப்பிடக் கூடாது. அப்படிக் கூப்பிட்டால் மனைவிக்குக் கூச்சமாக இருக்கும்’ என்பதையெல்லாம் விளக்குவார்.

சைவ சித்தாந்தம்

சுவாமிகள் சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். அபரிதமான நினைவாற்றலும், நாவன்மையும் பெற்றவர். அவர் கூறும் நுட்பங்களைக் கேட்டு, கல்வியில் சிறந்த புலவர்களும் தங்களுக்கு இது தெரியாதே என்று வியந்து பாராட்டியிருக்கிறார்கள். “வாரியார் வாக்கு, கங்கை நதியின் பிரவாகம்போலப் பெருக்கெடுத்தோடுகிறது; மிக உயர்ந்த முத்துக்கள் அவர் வாக்கிலிருந்து உதிர்கின்றன’’ என்று அறிஞர்கள் புகழ்ந்தார்கள். இவருடைய இசை ஞானத்தைப் பாராட்டி, சென்னைத் தமிழிசை மன்றத்தினர் வெள்ளி விழாவின்போது அவருக்கு, ‘இசைப் பேரறிஞர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தனர்.


சமய சர்ச்சையைத் தடுத்தவர்

ஒருமுறை திருப்பரங்குன்றத்தில் வாரியார் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார். கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து நின்று, ‘‘சுவாமி! இந்தத் திருப்பரங்குன்றத்தை ‘சிக்கந்தர் மலை’ என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்துத் தங்களின் கருத்து என்ன?’’ என்று கேட்டார். 

அதற்கு வாரியார், “இதில் என்ன தவறு இருக்கிறது. அவர்கள் சிக்கந்தர் மலை என்று பெயர் வைத்தால் வைத்துக்கொள்ளட்டுமே” என்றார். அனைவரும் “அது எவ்வாறு பொருந்தும்? என்ன சுவாமி தாங்களே இவ்வாறு கூறினால் சமுதாயத்தில் குழப்பம் ஏற்பட்டு சமயச் சண்டையாக இது மாறிவிடாதா?” என்று கேட்டனர்.

அதற்கு வாரியார், “முருகனின் தந்தையார் பெயர் என்ன? சிவபெருமான். முருகனுக்கு வழங்கும் வேறு பெயர் என்ன? கந்தன். இதனைத்தான் சி.கந்தன், ‘சிக்கந்தர்’ என்று குறிப்பிட்டு ‘சிக்கந்தர் மலை’ என்று கூற முற்படுகின்றனர். இதில் தவறில்லை” என்று கூற, கூட்டத்தினர் ஆராவாரித்து மகிழ்ந்தனர். யாரும் எதிர்பார்க்காத இந்த விடை, மக்களைச் சிந்திக்கச் செய்தது. இறைவன் ஒருவரே என்ற எண்ணத்தையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இவருடைய நகைச்சுவையான பேச்சுக்கு மாற்று மதத்தவர்களும் ரசிகர்கள்தான். அதேபோல் மாற்று மதத்தவர் கருத்தாக இருந்தாலும், சிறப்பானதை அவர் ஏற்றுக்கொண்டிருந்தார் என்பதும் உண்மை.


வேலூரில் உரை நிகழ்த்த வாரியார் வந்து இருந்தார். அப்போது திராவிடர் கழகத்தினர் ‘கிருபானந்த `லாரி’ வருகிறது’ என்று கிண்டல் அடித்துத் தட்டிவைத்திருந்தார்கள். தற்செயலாக வேறு ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தந்தை பெரியார், அவர் தங்கியிருந்த வீட்டுச் ஜன்னல் வழியே வாரியாரின் விரிவுரையைக் கேட்க நேர்ந்தது. “வாரியாரும் நம்மைப்போல தமிழ் வளர்க்கும் முயற்சியிலும், சமுதாயத்தை மேம்படுத்தவுமே பாடுபடுகிறார். அவரைக் கேலி செய்வதா? உடனே, தட்டியையெல்லாம் அகற்றுங்கள்!” என்று தன் தொண்டர்களிடம் கடுமையாக உத்தரவு போட்டார் பெரியார்.

எழுத்தாளராக

வாரியார் இலக்கியம் மற்றும் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்துவதில் மட்டுமல்லாமல் எழுதுவதிலும் சிறப்பு பெற்று விளங்கினார். சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்துகொள்ளும்படியாக 500 - க்கும் அதிகமான ஆன்மிகக் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை; தெளிவான நடையில் அமைந்தவை. 

எம்.ஜி.ஆருக்கு வாரியார் கொடுத்த பட்டம்!

திரைப்பட நடிகராகவும், தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்த எம்.ஜி.ஆருக்குப் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை அளித்தார் வாரியார். எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனைவராலும் அதிகமாக பயன்படுத்தப்பட்ட பட்டப் பெயர் இதுதான். வாரியார் எழுத்துத் துறையில் மட்டும் அல்லாமல், தமிழ்த் திரைப்படத் துறையிலும் தன்னைச் சேர்த்துக்கொண்டார். தியாகராஜ பாகவதர் நடித்த ‘சிவகவி’ படத்துக்கு வசனங்கள் எழுதினார். தயாரிப்பாளர் சாண்டோ சின்னப்பா தேவர் வேண்டுகோளுக்கேற்ப ‘துணைவன்’, ‘திருவருள்’, ‘தெய்வம்’, போன்ற சில தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தார்.

இறைவழிபாடும் சேவையும்

வாரியார், வாழ்நாள் முழுவதும் கோயில், பூஜை, சொற்பொழிவு என ஆன்மிக வழியில் சரியாகச் சென்றுகொண்டிருந்தார். ஒருநாள்கூட முருகனுக்குப் பூஜை செய்யாமல் இருந்ததில்லை. இவரின் மூச்சுக் காற்றுகூட‘முருகா! முருகா!!’ என்றுதான் இருந்தது. வயலூர் முருகன் மீது அவருக்குத் தனி ஈடுபாடு. “வயலூர் எம்பெருமான்” என்று கூறித்தான் அவர் தன் சொற்பொழிவைத் துவங்குவது வழக்கம். ஏராளமான கோயில்களுக்குத் திருப்பணி செய்து கொடுத்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் திருப்பணி செய்ய உதவி புரிந்த கோயில்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதவை.

முருகன் திருவடியில்

உள்நாட்டில் மட்டுமின்றி, நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, லண்டன், சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளில் சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார். இதற்காகப் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவற்றில் கலைமாமணி, திருப்புகழ்ஜோதி, பிரவசன சாம்ராட், இசைப்பேரரசர், அருள்மொழி அரசு போன்றவற்றைக் குறிப்பிடலாம். வாரியார், 1993-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் லண்டன் நகருக்குச் சொற்பொழிவாற்றச் சென்றார். அங்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்றுக்கொண்டு, நவம்பர் மாதம் 6-ம் தேதி லண்டனிலிருந்து திரும்பினார். 7-ம் தேதி அதிகாலை மும்பை வந்து சேர்ந்தார். அங்கிருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு விமானத்தில் கிளம்பினார். சென்னை வருவதற்கு முன்பாகவே அவர் உயிர் இறைவனிடம் சென்று சேர்ந்துவிட்டிருந்தது. நவம்பர் 8-ம் தேதி அவர் சமாதி நிலையடைந்தார்.

“ஆன்மீக தமிழ்ப்பழம், அனைத்து நாட்டுத் தமிழர்களையும் கவலைக்குள்ளாக்கி இதோ தருவில் இருந்து உதிர்ந்துவிட்டது. அந்த சிவந்த மேனியில் சினம் அரும்பிப் பார்த்ததில்லை. எதனையும் சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் இனிய இயல்புக்குச் சொந்தக்காரரான வாரியார், ஆன்மிகத் தமிழ்ப் பழமாக விளங்கி, என்றும் அழியாத புகழை நிலைநாட்டிவிட்டு, இயற்கைத் தாயின் மடியில் விழுந்துவிட்டார்” என்றார் கருணாநிதி. வாரியார் இறந்தபோது, ‘தமிழ்ப் பெருங்கடல்’ என்று நாத்திகரான கலைஞர் கருணாநிதியே போற்றினார்.


ஜெயலலிதா வெளியிட்ட அனுதாபச் செய்தியில், “முருகப்பெருமானின் பெருமைகளைப் பரப்புவதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு நம்மிடையே வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் அவர்களின் மறைவு ஆன்மிகத் துறைக்கு மட்டுமின்றி தமிழ் மொழிக்கும் தமிழ் இசைக்கும் ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு” என்று குறிப்பிட்டார். இவர்களைப்போல் அரசியல் தலைவர்கள், அனைத்து சமயப் பெரியோர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் இவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று குறிப்பிட்டார்கள்.

காங்கேயநல்லூரில் அவர் வாழ்ந்த வீடு இன்று நினைவு இல்லமாக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அரசு இவருடைய உருவம் பொறித்த தபால் தலையை 2006 - ம் ஆண்டில் வெளியிட்டு சிறப்பு செய்திருக்கிறது.


64-வது நாயன்மார்

நாயன்மார்கள், தினம் மூன்று வேளை கோயிலுக்குப் போவார்கள். ஆனால், சிவபெருமானைப் பார்த்து, ‘பொன்னைக் கொடு; பொருளைக் கொடு, எனக்கு செல்வத்தைக் கொடு, மக்களைக் கொடு, வழக்கில் வெற்றியடைய வேண்டும், பதவி உயர்வு வேண்டும்’ என்று ஒருநாளும் கேட்க மாட்டார்கள். நாயன்மார்கள் ஆண்டவனிடத்திலே இதுவரை ஒன்றையும் கேட்டதில்லை. வாரியாரும் நாயன்மார்களைப்போல் இறைவனிடம் எதையும் வேண்டாத பெரியாராகவேதான் வாழ்ந்தார். அந்த வகையில் வாரியார் சுவாமிகளை `64 - வது நாயன்மார்’ என்று சொல்வது மிகவும் பொருத்தம் தானே!

மனித வாழ்க்கையில் பிற்காலத்திலும் நினைத்துப் போற்றக்கூடியவர்களாக வாழ்பவர்கள் சிலரே. அந்த மிகச் சிலருள் திருமுருக கிருபானந்த வாரியாரும் ஒருவர் என்பதை நாமும் நினைவில்கொள்வோம்.

- க.புவனேஸ்வரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு