மற்ற எபிசோடுகள்
Published:Updated:

விடை சொல்லும் வேதங்கள்:15

அருண் சரண்யா

##~##

'அம்மாவா? மனைவியா?’ என்ற சிக்கலில் ஆழ்ந்திருந்தான் ராஜன்.

அது ஒன்றும் தனிக் குடித்தனம் செல்ல வேண்டிய அளவுக்குப் பெரிய விஷயம் அல்ல. மாமியாருக்கும், மருமகளுக்கும் நடுவே எந்தக் கருத்து வேறுபாடும் தோன்றிவிடவில்லை.  இந்தப் பிரச்னையே வேறு.  இதை ராஜன் என்னிடம் பகிர்ந்துகொண்டபோது, எனக்குக் கொஞ்சம் சிரிப்பும்கூட வந்தது.

''எனக்கு விடாமுயற்சி உண்டா, இல்லையா?'' என்றுதான் பேச்சைத் தொடங்கினான் ராஜன்.  

உடனடியாக பதில் அளிக்காமல், ''இப்போது எதற்காக இந்தக் கேள்வி?'' என்று கேட்டேன்.  

''எனக்கு நிறைய விடாமுயற்சி உண்டுன்னு எங்க அம்மா சின்ன வயசுலேருந்தே சொல்வது உண்டு. இப்பவும் அதைத்தான் சொல்றாங்க.  ஆனால், நந்தினி  வேற மாதிரி சொல்றா.  எதிலும் எனக்கு விடாமுயற்சி கிடையாதாம். எதையும் பாதியிலேயே நிறுத்திடுவேனாம்'' என்றான்.  

கூடவே, ''என்னைப் பற்றிய தீர்மானம் எதுவாக இருந்தாலும், அம்மா ஒரு மாதிரி சொல்றாங்க, நந்தினி வேற மாதிரி சொல்றா'' என்றான்.  

''சரி! வேறு எந்த விஷயத்தில் எல்லாம் அவங்க நேரெதிரான முடிவுக்கு வராங்க?'' என்று கேட்டேன்.

விடை சொல்லும் வேதங்கள்:15

''நேத்திக்குக்கூட என் மனைவி என்னை ரொம்பப் பொறுப்பானவன்னு சொன்னா. ஒரேயடியா நான் நிறைய சுமைகளை சுமக்கறதா குற்றம் சாட்டினாள். ஆனால், என் அம்மாவோ நான் இன்னும் பொறுப்பானவனாக இருக்கணும்னு சொல்றாங்க. இரண்டு பேர்ல யார் சொல்றது சரி? இதைத்தான் நான் திரும்பத் திரும்ப யோசிச்சுக்கிட்டிருக்கேன்'' என்றான்.

எனக்கு உண்மை விளங்கியது. அதுபற்றி பேசுவதற்கு முன்னால், நான் படித்திருந்த ஒரு நிகழ்ச்சியை அவனிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றியது.  

ரு முறை ஸ்ரீராகவேந்திரரிடம் மூன்று ஜோதிடர்கள் வந்தார்கள். கேரளாவைச் சேர்ந்த அந்த மூன்று பேரும், தாங்கள் ஜோதிடத்தில் நிபுணர்கள் என்று கூறினார்கள். தெரியும் என்பதுபோல புன்னகைத்த ஸ்ரீராகவேந்திரர் அந்த மூவரிடமும் ஆளுக்கு ஒரு ஜாதகத்தைக் கொடுத்தார்.  ''ஜாதகத்தைக் கணித்து இவரது ஆயுள் எத்தனை வருடம் என்று கூற முடியுமா?'' என்று கேட்டார்.

''கூற முடியும்!'' என்ற ஜோதிடர்கள், ''இது யாருடையது?'' என்று கேட்டார்கள்.

''பிறகு சொல்கிறேன்'' என்றார் ராகவேந்திரர். மூவரும் ஜாதகங்களை தீவிரமாக ஆராய்ந்தனர். பிறகு முதல் ஜோதிடர், ''இந்த ஜாதகக்காரர் 70 வயது வரை உயிரோடு இருப்பார்'' என்றார்.  

இரண்டாவது ஜோதிடர் ''என்னிடம் உள்ள ஜாதகத்துக்குச் சொந்தக்காரரின் ஆயுள் 300 வருடங்கள்'' என்றார்.

​மூன்றாவது ஜோதிடரோ ''என்னிடம் கொடுத்த ஜாதகத்துக்கு உரியவர் 700 வருடங்கள் உயிர் வாழ்வார்'' என்றார்.

சுற்றியிருந்தவர்கள் எல்லாம், யார் அந்த ஜாதகக்காரர்கள் என்பதை அறிந்துகொள்வதில் மிகுந்த ஆர்வம் காட்டினார்கள்.  

ஸ்ரீராகவேந்திரர் தனது ஜாதகத்தையே மூவரிடமும் கொடுத்ததாகக் கூறினார். அப்படியானால் மூன்று ஜோதிடர்களில் இரண்டுபேர் தவறாக கணித்துவிட்டார்களே என்ற பேச்சு எழுந்தது. ராகவேந்திரர் அவர்களை அமைதிப்படுத்தினார்.  

''மூவருமே சரியாகத்தான் கணித்திருக் கிறார்கள். நான் இந்த பூத உடலோடு 70 வருடங்கள் வாழ்ந்த பிறகு, ஜீவ சமாதியை அடைவேன். பிருந்தாவனத்தில் 300 வருடங்கள் வாழ்வேன். என் உபதேசங்கள் 700 வருடங்கள் பெரிதும் பிரசாரம் செய்யப்படும்'' என்றார்.

''ஆக மூன்று ஜோதிடர்களுமே சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்கள். புரிகிறதா?'' என்றேன்.

''நன்றாகப் புரிந்தது. என் அம்மா, மனைவி ரெண்டு பேர் சொல்றதும் சரின்னு சொல்றே, இல்லையா?'' என்றான் ராஜன்.

''ஆமாம்! உனக்கு விடாமுயற்சி இருக்கோ, இல்லையோ அப்படி இருப்பதாகச் சொன்னால்தான் நீ தொடர்ந்து முயற்சி செய்வே என்ற எண்ணத்தில் உனக்கு நிறைய விடாமுயற்சி இருப்பதாக உங்க அம்மா சொல்லி ஊக்கம் கொடுத்திருக்காங்க.  உன் மனைவி ஒரு வேளை உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கலாம். அல்லது, உன் முயற்சி போதாதுன்னு சொன்னால்தான் நீ மேலும் முயற்சி எடுத்துக்குவேன்னு அவ நினைச்சிருக்கலாம்'' என்று நான் கூற, அதை ஆமோதித்து தலையாட்டினான் ராஜன்.

இப்போது அவன் முகத்தில் அப்படியொரு தெளிவு. அடிப்படை விளங்கிவிட்டது. மற்றபடி சூழல்களை அவனே எதிர்கொள்வான்.

- தீர்வுகள் தொடரும்...