மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஞானப் பொக்கிஷம்: 41

ஞானப் பொக்கிஷம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஞானப் பொக்கிஷம் ( பி.என்.பரசுராமன் )

ஆதிகடவூர் வாழ்வே! பி.என்.பரசுராமன்

அபிராமியம்மை பதிகங்கள்! (தொடர்ச்சி)

பிராமியம்மை பதிகம் தந்த பட்டியலில், மனிதனைத் துரத்தும் விஷயங்களாக அகம்பாவம், வெம்பிணிகள், கோபம், வெகுளி, வறுமை, நரை- திரை, பகை, பசி முதலானவற்றைச் சென்ற இதழில் பார்த்தோம்.

அடுத்து, நம்மைத் துரத்தும் பசியைத் துரத்துவதற்காக நாம் என்ன செய்கிறோம் என்பதைப் பார்க்கலாம்.

பசியின் கொடுமையால்தான் பலவிதமான பாவங்களும் செய்யப்படுகின்றன. திரைப்படம் ஒன்றில், ஒரு நகைச்சுவைக் காட்சியில், ''சோத்துக்கு வழியில்லேன்னு பிச்சையெடுத்தேன். ஒரு பய கூடப் போடலே. கத்தியை எடுத்துக் காட்டினேன்; அத்தனை பேரும் கையில, கழுத்துல இருக்கறதையெல்லாம் கழட்டிக் கொடுத்துட்டுல்ல போறான்!'' என்பான் ஒரு ரௌடி. இது சரியா, தவறா எனும் விவாதம் இங்கே வேண்டாம். பசியின் கொடுமை, பாவங்கள் பலவற்றைச் செய்யத் தூண்டும் என்பதை மட்டும் உணர்ந்துகொண்டால் போதும்.

எனில், 'பாவம் செய்பவர்கள் எல்லாம், பசியின் கொடுமை தாங்காமல்தான் செய்கிறார்களா?’ என்றொரு கேள்வி பிறக்கலாம். இதற்கு அபிராமிபட்டர் அழகாக விளக்கம் சொல்கிறார். ஆயர்குல அதிபனான கண்ணனும் விளக்கம் சொல்கிறான்.

ஞானப் பொக்கிஷம்: 41

''கண்ணா! பாவம் செய்யக்கூடாது என்று மனிதன் நினைத்தாலும், யாரோ அவன் கழுத்தில் கையைப் போட்டுத் தள்ளுவதைப்போல, அவன் பாவம் செய்கிறானே! யார் அல்லது எது அவனை அப்படித் தூண்டுவது?'' எனக் கேட்கிறான் அர்ஜுனன்.

''காமமும் கோபமும்தான் அவனை அவ்வாறு செய்யத் தூண்டுகின்றன'' என்று பதில் சொல்கிறான் கண்ணன்.

பசியில்லா நிலையில்கூட, ஆசையின் காரணமாகவும் கோபத்தின் காரணமாகவும் பாவங்களைச் செய்கிறான் மனிதன். குடும்பத்தைக் கட்டிக் காப்பாற்றவேண்டும், குடும்பத்தில் உள்ளவர்களின் நிலையை உயர்த்தவேண்டும், நாம் உயரவேண்டும் என்ற ஆசையால் பலப் பல பாவங்களையும் செய்கிறான். பின்னர், புலி வாலைப் பிடித்த கதையாக, அதிலிருந்து அவனால் மீளவே முடியாமல் போய்விடுகிறது.

பதி மோகம் துரத்த...

'பதி’ என்பதற்கு 'நிலையான’ என்ற பொருளும் உண்டு. 'பதி மோகம்’ என்பதற்கு நிலையான ஆசை எனப் பொருள். நாம் ஆசைப்படும் பொருட்கள் மாறினாலும், நாம் ஆசைப்படும் மனிதர்கள் மாறினாலும்கூட, நம் மனது வேறொன்றின் மீது ஆசைப்பட்டு, அதைப் பிடித்துக்கொள்கிறது. அதன் காரணமாக, நாம் ஓடிக்கொண்டே இருக்கிறோம்.

ஆசைப்பட்டுவிட்டால், தப்பிக்க முடியுமா என்ன? தப்பிக்க முடியாமல், பலப்பல காரியங்களைச் செய்கிறோம். உண்மையில், நம்மால் எதையும் செய்யவும் முடியவில்லை; செய்யாமல் இருக்கவும் முடியவில்லை. இதையே, 'பல காரியமும் துரத்த’ எனக் குறிப்பிடுகிறார் அபிராமிபட்டர். விளைவு..?

'என்ன செய்கிறோம்? எதற்காகச் செய்கிறோம்? யாருக்காகச் செய்கிறோம்?’ என்ற எண்ணமே இல்லாமல், நாம் செய்யும் காரியங்கள் நகைப்புக்கு இடமாகிவிடுகின்றன. அடுத்தவர்கள் நம்மைப் பார்த்துக் கேலி செய்து சிரிக்கிறார்கள். அதில் இருந்து தப்பிப்பதற்காக மேலும் ஓடுகிறோம். இதையே 'நகையும் துரத்த’ என்கிறார்.

இவ்வளவும் செய்துவிட்டு, யாராவது கேட்டால், ''எல்லாம் விதி! அதுதான் இப்படியெல்லாம் துரத்தித் துரத்தி என்னைத் தப்புச் செய்யத் தூண்டுகிறது'' எனத் தயாராக வைத்திருக்கும் ஒரு பதிலைச் சொல்வோம்.

ஆம்! விதியும் (ஊழ்வினை) நம்மைத் துரத்திக்கொண்டு இருக்கிறது - 'ஊழ்வினையும் துரத்த’!

ஞானப் பொக்கிஷம்: 41

இவ்வளவு நேரம் பார்த்த துரத்தல்களும்... ஒரு நாள், இரண்டு நாட்கள் அல்ல; வாழ்நாள் முழுவதுமே தொடர்கின்றன; தினந்தோறும் தொடர்கின்றன. எனவேதான், 'நாளும் துரத்த’ எனப் பாடுகிறார் அபிராமிபட்டர்.

இவ்வாறு நம்மைத் துரத்தும் அனைத்துத் துரத்தல்களில் இருந்தும் தப்பிப் பிழைப்பதற்காக, நாம் நழுவி ஓடுகிறோம். நாக்கு வறண்டு போகிறது. கால்களும் தளர்ந்துபோகின்றன. எல்லோரையும் எங்கிருந்தாலும் துரத்திப் பிடிக்கும் எமனுக்குக்கூட, நம் நிலையைப் பார்த்தால் பரிதாபம் பொங்கி வரும். அவன்போய், நம்மைத் துரத்துவானா என்ன?

'வெகுவாய் நா வறண்டு ஓடி
கால் தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்துவானோ?’
'நமனும் துரத்துவானோ?’
என்கிற அபிராமிபட்டரின் புலம்பலில், நமது வாழ்நாள் முழுவதும் துயரமயமாகவே உள்ளது என்கிற கருத்து பொதிந்திருக்கிறது.

இதிலிருந்து விலகித் தப்பிக்க வழி என்ன? அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் பெற என்னதான் வழி?

விதம்விதமான துரத்தல்களைச் சொல்லி, தான் படும் துயரத்தையும் சொல்லி, ''இவ்வளவு துரத்தல்களில் சிக்கித் தவிக்கும் என்னை எமன் துரத்துவானா என்ன?'' என்று அபிராமிபட்டர் அபிராமி அன்னையிடம் அங்கலாய்க்கிறார். எமனைப் பற்றிச் சொல்லி, ஏன் அபிராமியிடம் புலம்பவேண்டும்?

''திருக்கடவூரில் வாழ்பவளே! எம சங்காரம் நடந்தது இங்குதானே! துயரங்கள் என்னைத் துரத்தும்போது நான் படும் பாட்டைப் பார்த்து, என் பரிதாப நிலையைப் பார்த்து எமனே பரிதாபப்படுகிறான். அப்படியிருக்க, அன்னையே..! உனக்கு என் மீது பரிதாபம் வரவேண்டாமா? அருள் செய், தாயே!'' என வேண்டுகிறார் அபிராமிபட்டர், நமக்காக.

அபிராமி அம்மைப் பதிகத்தைப் பாராயணம் செய்வோம்! அன்னையின் அருளால் அனைத்து நலங்களையும் பெறுவோம்!

- இன்னும் அள்ளுவோம்...