காரமடை ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர் கோயில் அன்னாபிஷேகம்!
##~## |
கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் உள்ள காரமடையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கநாதர் கோயிலை நாம் அறிவோம். ஆனால், அதன் துணைக் கோயிலாக, சிவனார் குடிகொண்டிருக்கும் கோயில் அமைந்திருப்பது தெரியுமா? அல்லலை அகற்றி, தொல்லைகளை விலக்கி, நல்லன எல்லாம் தரும் வள்ளலென இங்கே காட்சி தருகிறார் ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரர்.
விஜய நகரப் பேரரசில், கிருஷ்ண தேவராயருக்கு முன்பு, ஸ்ரீவீர நஞ்சாயர் என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவரின் காலத்தில், வைணவத்துக்கு மட்டுமின்றி, சைவக் கோயில்களுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. அதன்படி, அவருடைய ஆட்சிக் காலத்தில், சிவபெருமானுக்குக் கோயில் எழுப்பும் பணி நடைபெற்று, அந்நியர்கள் படையெடுப்பால் அது அப்படியே பாதியில் நின்றுபோனது. செய்து வைத்த சிற்பங்கள் அனைத்தும், கால ஓட்டத்தில் மண்ணில் புதைந்து போயின.

அதையடுத்த காலகட்டத்தில், பூமியில் இருந்து அழகிய சிற்பங்கள் கிடைக்க, திகைத்துப் போன மன்னர் பெருமான் ஒருவர், ஸ்ரீவீர நஞ்சாயர் ஆசை ஆசையாகக் கட்ட நினைத்த கோயிலை தான் கட்டுவது என உறுதி கொண்டார்; அதன்படி, அந்தச் சிற்பங்களையும் பயன்படுத்தி, அழகிய கோயிலை உருவாக்கினார் என்கிறது ஸ்தல வரலாறு.
மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தலத்தை மாதிரியாகக் கொண்டு, இந்தக் கோயிலை அமைத்ததாகச் சொல்வர். மதுரை ஸ்ரீசோமசுந்தரேஸ்வரர் கோயில் விமானம் போலவே, காவல் காக்கும் எட்டு யானைகள், இங்கே விமானத்தில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன.
மேலும், பாண்டிய மன்னர்களும் இங்கு திருப்பணி செய்துள்ளனர் என்பதற்குச் சாட்சியாக, பாண்டியர்களின் மீன் சின்னமும் இங்கு பொறிக்கப்பட்டுள்ளது.
அம்பாளின் திருநாமம்- ஸ்ரீலோகநாயகி அம்பாள். ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆறுமுகவேலவர், ஸ்ரீசண்டிகேஸ்வரர், ஸ்ரீகால பைரவர் ஆகியோருக்கும் இங்கே சந்நிதிகள் உண்டு.
சித்திரையில் ஸ்ரீநஞ்சுண்டேஸ்வரருக்கு தேனபிஷேகம் செய்வது சிறப்பு. வைகாசி யில் கரும்புச் சாறு அபிஷேகமும், ஆனியில் தீர்த்தவாரியும், ஆவணியில் நெய்யபிஷேகமும், புரட்டாசியில் பால்- தயிர் அபிஷேகமும் செய்து வேண்டிக் கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!

வருடத்தில் பல விழாக்கள் நடைபெற்றாலும், ஐப்பசி பௌர்ணமியில் அன்னாபி ஷேகம் இங்கு வெகு விமரிசை யாகக் கொண்டாடப்படுகிறது. கோவைப் பகுதியில், அன்னாபி ஷேகம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில், காரமடை சிவன் கோயிலும் ஒன்று எனப் பூரிப்புடன் சொல்கின்றனர், பக்தர்கள்.
அந்த நாளில், சிவலிங்கத் திருமேனி முழுவதும் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டிருக்கும். அதைப் பார்க்கும்போதே உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போகும். பிறகு, அந்தச் சாதத்தை எடுத்து, பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர்.
ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது சிவனாரைத் தரிசித்து, மனதாரப் பிரார்த்தனை செய்தால், திருமணத் தடை நீங்கும்; விவசாயம் தழைக்கும்; குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும்!
- ஞா.சுதாகர்
படங்கள்: ர.சதானந்த்