Published:Updated:

இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?

கேள்வி - பதில்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
##~##

விஞ்ஞானத்தின் பயன்பாடுகளும் புதிய சிந்தனைகளும் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில், ஒழுக்கமும் உழைப்பும் ஒரு பொருட்டே அல்ல எனும் நிலையே நிலவுகிறது. இது, மனித இனத்தின் எதிர்காலத்துக்கு வரமா? சாபமா?

- கே.ஹரிஹரன், களியக்காவிளை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டலுழைப்பு ஆரோக்கியத்துக்கு உகந்தது. உள்ளத் தெளிவு அமைதியைத் தரும். இரண்டையும் ஈட்டும் வகையில், பண்டைய நடைமுறைகள் அமைந்திருக்கும். உழைப்பால் பணத்தையும், ஒழுக்கத்தால் மன வளர்ச்சியையும் பெறுவார்கள். இவை இரண்டும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். அதன் வழி வெற்றியை எட்டுவோம்.

இன்றைய தோல்விகளுக்கு, உழைப்பும் ஒழுக்கமும் மறைந்ததே காரணம். ஒழுக்கம் மறைந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. அது போல், உழைப்பும் மறைந்து வருகிறது. அது முற்றிலுமாக மறையும் காலம் வெகு தொலைவில் இல்லை. அன்றைக்கு, சிந்தனையில் ஆழ்ந்து ஆன்ம விளக்கத்தை எட்டினார்கள். இன்று, சிந்தனை வளம் பெற்றவர்கள் குறைந்து வருகின்றனர். மனமானது எல்லா அலுவல்களில் இருந்தும் விடுபட்டு, ஒரு விஷயத்தில் ஒன்றிப்போக மறுக்கிறது. முதுமை, ஊன்றுகோலை நம்பி நடக்க முயற்சிக்கும். நடக்க நடக்க, அது ஊன்றுகோலை மறந்து, தானாக நடக்க ஆரம்பித்துவிடும். கடவுளை ஊன்றுகோலாக பாவித்துக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டால், சிந்தனை முடமாகாமல் தொடர்ந்து வளர்ந்து நிம்மதிக்கு வழிகாட்டும்.

விருப்பம் நிறைவேற, நாம் முயற்சி செய்வதில்லை. கோயிலில் கடவுளை வழிபட்டு, நமது விருப்பத்தை நிறைவேற்ற அவரைப் பணிக்கிறோம். நடப்பதை நிறுத்திவிட்டு, வாகனத்தைப் பயன்படுத்துகிறோம். சமையலை நிறுத்திவிட்டு, ஓட்டலில் உணவருந்துகிறோம். வீட்டைச் சுத்தம் செய்ய வேலையாட்களை நம்புகிறோம். வீட்டின் அருகில் ஆறு ஓடினாலும், குளியலறையில் குளிக்கிறோம். ஆளை வைத்து வேலை வாங்கி உழைப்பிலிருந்து விடுபடுகிறோம்.

இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?

காரில் அலுவலகம் செல்வோம். நாற்காலியில் அமர்ந்து வேலை செய்வோம். அருகில் இருக்கும் பொருளை எடுத்துக் கொடுக்க, மணியடித்து வேலையாளை அழைப்போம். சிற்றுண்டியை வரவழைப்போம். இருக்கையில் அமர்ந்துகொண்டே உணவருந்துவோம். கையைக் கழுவாமல் பேப்பரில் துடைத்துவிடுவோம். பின்னர், வீட்டுக்கும் காரிலேயே செல்வோம். அங்கு போய் நாற்காலியில் அமர்வோம்; படுக்கையில் படுப்போம். குளிர்சாதன வசதி வேண்டும். டாய்லெட், பாத்ரூம் இணைப்பும் வேண்டும். உணவுக் கட்டுப்பாடு கிடையாது. புலனடக்கமும் கிடையாது. எவருக்கும் கிடைக்காத சுதந்திரத்தைச் சுவைத்து மகிழ்வோம்.

எந்தவொரு வேலையையும் கட்டுப்பாட்டுடன் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால், செய்யவேண்டிய வேலைகளைத் தள்ளிப்போடு வோம். முடிக்கவேண்டிய நேரம் நெருங்கும்போது, உதவியாளரைச் சரணடைவோம். மனமும் உடல் உறுப்புகளும் உருப்படியான வேலையில் இல்லாதபோது, வேண்டாத வேலையில் அக்கறை காட்டிச் செயல்பட்டு, சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்போம். தேவை இல்லாவிட்டாலும் குளிர்பானங்களை ஏற்போம். பசி இல்லாவிட்டாலும், ஆசையின் காரணமாக உணவை ஏற்போம். பார்ட்டிக்குப் போவதைப் பெருமையாக எண்ணி, அங்கு பரிமாறப்படும் பானங்களை ஏற்போம். சத்தான உணவை எதிர்பார்க்க மாட்டோம். மருத்துவரின் பரிந்துரையில் ஊட்டச்சத்து மாத்திரைகளை உட்கொள்வோம்.

தொலைக்காட்சிப் பெட்டிக்கு அடிமையாகி, நேரம் காலம் பார்க்காமல் பொழுதை வீணடிப்போம். அதில் வரும் சமையல் குறிப்புகளை ஏற்று, சமையலில் மாறுதலை ஏற்படுத்தி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்காமல், சுவைக்கு அடிமையாவோம். டி.வி. விளம்பரங்களின் தகவலை ஏற்று, அதற்கேற்ப ஆடை- அணிகலன்களை வாங்கி, பொருளாதாரச் சுமையை ஏற்றுத் தத்தளிப்போம்.

தனது பருவம், பொருளாதாரம், தேவை, காலம், நேரம் எதையும் எண்ணிப் பார்க்காமல் ஆசையைத் தணிக்க, எதையும் ஆராயாமல், வீட்டையும் வாகனத்தையும் கடன்பட்டு வாங்கி, குடும்பத்தில் பொருளாதாரப் பற்றாக்குறையை செயற்கையாக ஏற்படுத்தி, குடும்பத்தின் அமைதியைச் சீர்குலைத்துச் சிக்கலில் தவிப்போம். விளம்பரத்தை நம்பிப் பணத்தை முதலீடு செய்து, ஏமாந்து கலக்கமுறுவோம். ஒரு தொல்லையில் இருந்து விடுபடுவதற்காகப் பலபேரின் சிபாரிசில் பழக்கமில்லாத வழியைத் தேர்ந்தெடுத்து, படாதபாடு படுவோம்.

இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?

குழந்தைகள் வளர்ப்பிலும், தாய்- தந்தையர் பராமரிப்பிலும் ஏற்படும் சுணக்கத்தால், கணவன்- மனைவி இருவரும் சொல்பேச்சைக் கேட்காத வர்களாக மாறிவிடுவதும் உண்டு. குடும்பத்துக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிடையான தாக்கம் மேலோங்கும் தறுவாயில், மனம் தளர்ந்து செய்வதறியாது தவிப்போம். நடுத்தர மக்களில் இத்தனை இன்னல்களையும் சந்தித்தவர்கள் உண்டு. பண்பும், பாசமும், ஒழுக்கமும், அடக்கமும், சகிப்புத் தன்மையும் பறிபோனதால் ஏற்பட்ட விளைவுகள் இவை என்பதைச் சிந்திக்கும் அளவுக்கு மனம் தெளிவாக இருக்காது.

உழைப்பின்மை, ஒழுக்கமின்மையால் குடும்ப வாழ்வை நரகமாக்கி... யானை தன் தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொள்வது போல், கிடைத்த இன்பமான வாழ்க்கையையும் துன்ப மயமாக்கிக் கொள்கிறோம். நம்மை வழி நடத்துபவர் இல்லை. விழிப்பு உணர்வு வரவேண்டும்.

ந்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை. நிறையை ஒதுக்கி, குறையைப் பெரிதாகப் பார்க்கும் கண்ணோட்டம், அறியாமையின் அடையாளம். உயிரினங்களின் உரிமையை உரிய காலத்தில் பெற்று, மகிழ்ச்சியான வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கிறது இன்றைய சமுதாயம். உழைத்து உழைத்து ஓடாக மாறக் கூடாது. இயற்கையின் அன்பளிப்பைப் பெற்று மகிழ வேண்டும்.

நுகர்பொருளை நுகரும் வாய்ப்பு அளிக்காமல், யந்திரம் போன்று உழைப்பில் வாழ்க்கையை இழக்கக் கூடாது. சீர்திருத்தவாதிகளும் சமூக சேவகர்களும் புதிய வாழ்க்கை முறையை அறிமுகம் செய்து, அடித்தட்டில் இருப்பவர்களையும் அனாயாசமாக உயர்த்தியிருக்கிறார்கள். புதுப் புது விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் உழைப்பைக் குறைத்து, இன்பத்தைச் சுவைக்கும் இடைவெளியை விரிவாக்கித் தந்திருக்கின்றன. தொலைபேசியும் கைபேசியும் இருப்பதால், இருந்த இடத்திலேயே எந்தவொரு உழைப்பும் இல்லாமல் உழைப்பின் பலனை நுகரலாம். கணிப்பொறி, இன்டர்நெட் வாயிலாக... அலைந்துதிரிந்து அல்லல்படாமல், வீட்டில் இருந்தபடியே உடல் அசையாமல் அலுவல்களை முடித்துக் கொள்ளலாம்.

மருத்துவ விஞ்ஞானமானது, மனிதனின் ஆயுளை 100-ஆக நீட்டித் தந்திருக்கிறது. கலப்புத் திருமணம், மனிதனில் உயர்வு- தாழ்வை அறவே அகற்றியிருக்கிறது. குடும்பத் தொழிலை அழித்து, விருப்பப்படி எல்லோரும் எல்லாத் தொழிலையும் ஏற்கும் தகுதியை உயர்த்தி இருக்கிறது. வீட்டிலும், வேலையிலும், சமுதாயத்திலும் ஆண் - பெண் சமம் என்பதை நிலைநாட்டியிருக்கிறது. இறுக்கம் இல்லாத திருமணக் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்து, விருப்பப்படி துணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை விவாகரத்து வாயிலாக சமுதாயம் வழங்கியிருக்கிறது. உடல் உறுப்புகளின் கொடைகளால் மாற்றுத் திறனாளிகளே இல்லாத சமுதாயத்தை உருவாக்கியிருக் கிறது. செயற்கை முறையில் குழந்தைகளை உருவாக்கிக் கொடுத்துத் தம்பதிகளை மகிழ்வித்து, குழந்தையின்மை என்ற குறையைப் பெரிதும் அகற்றிவிட்டது.

பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும் சம்பிரதாயத் திருமணங்களைச் செல்லாக் காசாக்கி, எளிதான பதிவுத் திருமணத்தைக் கட்டாயமாக்கி, சம்பிரதாயத் திருமணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. நிரம்பி வழியும் ஆலய வருவாயை முடக்கிப் போடாமல், ஏழை- எளிய மக்களின் மேம்பாட்டுக்குத் திருப்பிவிட்டு, சமுதாயத்தின் செழிப்புக்கு ஊக்கம் அளிக்கிறது. பட்டினியால் உயிர் பிரியக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் ஏழைகளுக்கு அன்னதானமும், ஓய்வூதியமும் வழங்கி, அவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்திருக்கிறது, இன்றைய சிந்தனை.

மதச்சார்பற்ற ஆட்சி முறையை அறிமுகப்படுத்தி, மதச் சிந்தனையில் இருந்து மனத்தை விடுவித்து, சுய சிந்தனையில், சுய முன்னேற்றத்தில் அக்கறை செலுத்த வைத்துள்ளது. சம்பிரதாயம், நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் இயங்கும் கோயில், ஆன்மிகம், அறக்கட்டளை, சத்திரம், சாவடி, சமுதாய சேவை நிறுவனங்கள் ஆகியன உயிரோட்டத்துடன் வளர, அவற்றை வியாபார நோக்கில் திருப்பிவிட்டு, பல ஏழை- எளியவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து உதவுகிறது.

அசைவ உணவு விரும்பிகள் ஏமாறக்கூடாது என்பதால், அவர்களுக்கு உணவளிக்கும் வகையில் பல பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி, பல குடும்பங்களை முன்னுக்குக் கொண்டு வந்திருக்கிறது. நடப்பவன் இடறி விழுவான். அறியாமையில் தவறு செய்வான். அது இயல்பு. தவற்றை மன்னிப்பவன் மனிதன் என்பதால், தவறு செய்தவர்களையும் மன்னித்து, சமுதாயத்தில் இணைத்துக் கொண்டிருக்கிறது.

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா? உழைப்பும், ஒழுக்கமும் எந்த விதத்திலும் நமது முன்னேற்றத்துக்கு உதவவில்லை. அவலை நினைத்து உரலை இடிப்பது வீண். ஆகவே, வாழ்க்கைக்கு உதவும் விதத்தில், காலத்துக்கு உகந்த வகையில் எதையும் பரிந்துரை செய்வது சிறந்தது. உளுத்துப்போன பழைய நியதிகள் இன்றைய மனத்தில் பதியாது.

ங்களது விளக்கம் தவறானது. குற்றம் புரிந்தவனுடைய வக்கீலின் வாதம் போன்று, ஒருதலைப்பட்சமானது. தங்களின் வாதத்தில் முதிர்ச்சி பெறாத மனம் நிழலாடுகிறது. ஆறறிவு பெற்ற மனம், ஆராய்ந்து செயல்பட வேண்டும்.

இன்றைய வாழ்க்கை நிலை... வரமா? சாபமா?

விலங்கினங்கள் தங்களின் உணவுக்கும், பாதுகாப்புக்கும் தன்னையே நம்பியிருக்கும். ஆறாவது அறிவு பெற்றவன், பிறர் சிந்தனையை ஏற்று, வாழ்க்கையை அமைக்கும் அவலத்தை வேறெங்கும் பார்க்கமுடியாது. முழுச் சுதந்திரம் இருந்தும், சிந்தனை சுதந்திரத்தை அடகு வைத்துவிட்டோம். விலங்கினங்களுக்குச் சமமாக நாம் சுதந்திரத்தை இழந்துவிட்டோம். உடலுறுப்புகளில் இணைந்த ஆன்மாவையும் மனத்தையும் மறந்துவிட்டோம். கண்ணுக்குப் புலப்படும் புலன்கள், உடலுறுப்புகள், உடல் மற்றும் மனம் விரும்பும் ஆசை ஆகியவற்றைத் திருப்திப்படுத்துவதை மட்டுமே இலக்காகக் கொண்டு வாழத் துவங்குகிறோம்.

தாங்கள் சுட்டிக்காட்டிய அத்தனை வளர்ச்சியும் உடல் உறுப்புகளோடு நின்றுவிடும். உள்ளத் தெளிவையோ அமைதியையோ ஈட்டித் தராது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, பொய், பித்தலாட்டம், ஏமாற்றம், சாலை விபத்து, சிசுக்கொலை, குடும்பச் சண்டை, சமுதாய சச்சரவு, திருட்டு, அகங்காரம், வீம்பு, அடாவடி, ஏளனம், ஏய்த்துப் பிழைத்தல், மிகைப்படுத்திய விளம்பரங்கள், யந்திரம், மந்திரம், தந்திரம், சான்றில்லாத பரிகாரங்கள், பொய்யான பரிந்துரைகள், சுயநலத்துக்காகப் பொது நலனை அழித்தல், பிறர் சொத்தில் கைவைப்பது, பிறர் மனைவி, சிறுமிகள் கற்பைச் சூறையாடுவது, வகுப்புவாதத்தை முன்வைத்து ஒருவரோடு ஒருவர் மோதி உயிரிழத்தல் ஆகிய அனைத்தும் இன்றைய வளர்ச்சியடைந்த சமுதாயத்தில், அதன் வளர்ச்சிக்கு இணையாக வளர்ந்து வருகின்றன.

நாணயத்தின் ஒரு பக்கத்தைச் சீர்திருத்தவாதிகள் மிளிர வைத்தார்கள். ஆனால், மறுபக்கம் இருளில் மூழ்கியிருக்கிறது. அது, அவர்களின் கண்களுக்குப் புலப்படாது. மனப் பரிவர்த்தனமே மகிழ்ச்சிக்கு மருந்து. மனத் தூய்மை இல்லாத நிலையில், எந்த முன்னேற்றமும் நிலைத்து நிற்காது. 'நாய்க்கு சிங்க வேஷம் போட்டு, சிங்காசனத்தில் அமர்த்தினாலும், அது சிம்மக் குரலை எழுப்பாது’ என்பார் பர்த்ருஹரி.

உதடு படாமல் உபதேசத்திலேயே சீர்திருத்த வாதிகளாக மாறியவர்கள் உண்டு. உள்ளத்தைத் தட்டி எழுப்பி, தூசை அகற்றி, சிந்தனை ஓட்டத்தை முடுக்கிவிட்டு, சுதந்திரமாகவே தன்னை வளர்த்துக்கொண்டு முன்னேறும் சமுதாயத்தை உருவாக்க எந்தச் சீர்திருத்தவாதியும் முன்வர வில்லை. சீர்திருத்தச் சட்டங்கள் மக்களின் மனத்தைத் தொடவில்லை. அலட்சியப்படுத்தும் எண்ணமே மேலோங்கியிருக்கிறது. கலங்கிய நீரில் மீன் பிடிக்கும் எண்ணம்தான் முன் நிற்கிறது.

மருத்துவ விஞ்ஞானத்தின் ஆயுள் நீட்டிப்பால், மருந்தின் மூலம் வாழ வேண்டுமே தவிர, உணவினால் வாழ இயலாது. விவாகரத்து, சீரழிவை ஏற்படுத்தும் அளவுக்குச் சீர்திருத்தம் செய்யவில்லை. செயற்கைக் குழந்தையிடம் பாசமும் நேசமும் இல்லை. சுமைதான் மிஞ்சுகிறது. முதியோர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும் எண்ணம், இந்தச் சீர்திருத்தத்தின் பக்க விளைவு. விவாகரத்துக்கு இடமில்லாத தம்பதிகளும், சட்டத்தை வைத்துச் செயற்கையான விவாகரத்துக்குத் துணிந்துவிட்டார்கள். உடலுறுப்புகளைக் கொடை வழங்க ஊக்குவிக்கும் விளம்பரங்கள் மூலமாக, சிறுநீரகத் திருட்டில் ஈடுபட்டு, அதன்வழி வியாபாரத்தில் இறங்கியவர்களும் உண்டு. ஆக, பின்விளைவுகளைத் தோற்றுவிக்காத சீர்திருத்தமோ, காலத்துக்கு உகந்த சட்டமோ இல்லை. தொலை நோக்கு இல்லாத- உடலியக்கத்தை அறிந்திராத சிந்தனைகள் செய்யும் விளையாட்டு, வினையாக மாறி சமுதாயத்தை ரணப்படுத்துகிறது. உழைப்பும் ஒழுக்கமும்தான் முதலுதவி.

ங்களது சிந்தனைக்கு ஒரு வார்த்தை...

மனிதன் அறிவுஜீவி. லோகாயதத்துடன் ஆன்மிகமும் இணைந்தால் மட்டுமே ஆனந்தம் இருக்கும். மன வளர்ச்சியைக் கவனிக்காத லோகாயத வளர்ச்சி என்பது கானல் நீர்; ஒட்டுமொத்த மனித இனத்தின் இயல்பைத் தரம் தாழ்த்தும் செயல். அது, முன்னேற்றத்துக்கு அடையாளம் ஆகாது. ஊட்டச்சத்து காரணமாக பருமனாக வேண்டும்; வீக்கத்தின் காரணமாக பருமனாகக்கூடாது!

- பதில்கள் தொடரும்...

வாசகர்களே... ஆன்மிகம் சம்பந்தமான எல்லா சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார் சேஷாத்ரிநாத சாஸ்திரிகள். கேள்விகள் அனுப்பவேண்டிய முகவரி: 'கேள்வி பதில்', சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002.