தொடர்கள்
Published:Updated:

தசாவதார திருத்தலங்கள்!

காளிங்க நர்த்தனம்!தி.தெய்வநாயகம், ஓவியம்: மணியம் செல்வன்

##~##

தைகள், வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல; மனத்தில் கருத்துக்களை விதைத்து, கொள்கை விருட்சம் வளர்ப்பதிலும் அவற்றுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு.

ஊத்துக்காடு எனும் அற்புதமான தலத்திலும் மிக உன்னதமான ஒரு கதை, தெய்விகப் பசுவாம் காமதேனுவுக்குக் கிடைத்தது.

அந்தப் புண்ணியக் கதை நாமும் அறிந்ததுதான்!

சௌபரி என்றொரு முனிவர், அகத்தையும் புறத்தையும் குளிர்விக்கும் அழகான மடுவில் தவம் இயற்றிக்கொண்டு இருந்தார். அதே நேரம், வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்தான் கருடன். மடுவில் துள்ளிக் குதித்து நீந்தும் கயல்களைப் பிடிக்கத் தருணம் எதிர்பார்த்துக் காத்திருந்தவன், சட்டென்று நீர்ப்பரப்பை நோக்கித் தாழப் பறந்துவந்தான். கயல் ஒன்றைத் தன் அலகால் பிடிக்கவும் செய்தான். தொடர்ந்து, படபடவென அவன் சிறகடித்து மேலெழும்ப முயற்சிக்க,

அந்தச் சலனத்தில் சௌபரி முனிவரின் தவம் கலைந்தது. அதனால் அவர், கடுங் கோபம் கொண்டார். 'இனி, இந்த மடு இருக்கும் பகுதிக்குக் கருடன் வரக்கூடாது; மீறி வந்தால், அழிவைச் சந்திப்பான்!’ என்று கருடனைச் சபித்தார்.

கருடனுக்குக் கிடைத்த சாபம் இன்னொரு வருக்கு வரமானது! ஆமாம்... கருடன் வராத அந்தப் பகுதி தனக்குப் பாதுகாப்பான இடமாக இருக்கும் என்று கருதிய காளிங்கன் எனும் நாகம், அந்த அழகிய மடுவுக்குள் குடிபுகுந்தது. அதனால், அந்த மடுவுக்கே 'காளிங்க மடு’ என்று பெயர் கிடைத்தது.

தசாவதார திருத்தலங்கள்!

நீங்கள் யூகிப்பது சரிதான். நம் கண்ணன் விளையாடி மகிழ்ந்த கோகுலத்தின் காளிங்க மடுதான் அது. நாகம் புகுந்தது என்றால், கேட்கவேண்டுமா?

கோகுலவாசிகளுக்கு அவனால் ரொம்பவே தொல்லைதான்; துயரம்தான்!

ஒருநாள், யதுகுலச் சிறுவர்களோடு அங்கு விளையாட வந்த கண்ணனையும், மடுவில் இருந்து வெளிப்பட்டு சீறிப் பயமுறுத்தினான் காளிங்கன். பாம்பணையில் துயில்பவனாயிற்றே அந்த பாலகன். அவனா பயப்படுவான்? சற்றும் தாமதிக்காமல், மடுவுக்குள் குதித்தான் கண்ணன்.

அப்புறம் நிகழ்ந்ததுதான் நமக்குத் தெரியுமே? அவன் காளிங்கனை அடக்கிய கதையைப் பெரிதும் சிலாகித்துச் சொல்லி வைத்திருக் கிறார்களே, நம் பெரியவர்கள்!

அதிலும், நாகப் படத்தின் மேல் நின்று அவன் நர்த்தனம் ஆடிய அழகை பெரியாழ்வார் எப்படிப் பாடுகிறார் பாருங்கள்...

தடம்படு தாமரைப் பொய்கை கலக்கி
விடம்படு நாகத்தை வால்பற்றி ஈர்த்து
படம்படு பைந்தலை மேலெழப் பாய்ந்திட்டு
உடம்பை அசைத்து...

அழகாக நடனம் ஆடினானாம்! அற்புதம் தான் இல்லையா!!

இந்த அற்புதமே காமதேனுவுக்கும் அதனு டன் இருந்த பசுக்கூட்டத்துக்கும் கதையாகச் சொல்லப்பட்டது; சொன்னவர் தேவரிஷி நாரதர்.

கும்பகோணத்தில் இருந்து தாராசுரம் ஸ்ரீஐராவதீஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரபத்திரர் கோயில், ஆவூர் ஸ்ரீபசுபதீஸ்வரர், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்கை ஆலயம் ஆகியவற்றைக் கடந்து சென்றால், சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ளது ஊத்துக்காடு ஸ்ரீகாளிங்கநர்த்தனர் திருக்கோயில்.

இந்தத் திருக்கோயில், புராதன- புராணப் பெருமைகள் கொண்டது. இதன் பெருமை களை, இங்கே கண்ணபிரானுக்குக் கோயில் உருவான காரணத்தை ஞானநூல்கள் பலவும் விரிவாக விவரிக்கின்றன.  

தேவலோகப் பசுவான காமதேனு, தன் கன்றுகளான நந்தினி, பட்டி மற்றும் இதர பசுக்களுடன் ஊத்துக்காட்டில் வசித்த காலம்.

சிவபெருமான் மீது கொண்ட பக்தியால், தினமும் பூக்களைப் பறித்து வந்து, இந்தப் பகுதியில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீகயிலாசநாதருக்குச் சமர்ப்பித்து பூஜித்து வந்ததாகச் சொல்கின்றன புராணங்கள்.

அந்த ஊரில் ஏராளமான பசுக்கள் இருந்த தால், அது ஆவூர் எனப்பட்டது. பசுக்கள் மேய்ச்சலுக்குச் செல்லும் இடம், கோ வந்த குடி என அழைக்கப்பட்டு, அதுவே பிறகு 'கோவிந்தக்குடி’ என்றானது. அதேபோல் பட்டி பசு, ஈசனுக்கு பூஜை செய்த ஊர் பட்டீஸ்வரம் எனப்பட்டது. இத்தனை ஊர்களிலும், ஊத்துக் காடுதான் காமதேனுவின் விருப்பமான தலம்! காமதேனுவின் சுவாசமாகவே திகழ்ந்தது அது. எனவே, தேனுசுவாசபுரம் என்றும், மூச்சுக்காடு என்றும் அழைக்கப்பட்ட அந்த ஊர், இன்று ஊத்துக்காடு என்று அழைக்கப் படுகிறது.

நாரதர் இந்தத் தலத்துக்கு வந்து, இங்கே இருந்த பசுக்களிடம் ஸ்ரீகிருஷ்ணரின் கதையைச் சொன்னார். அப்போது, காளிங்கன் எனும் பாம்பின் தலையில் நர்த்தனமாடி, அவனையும் அவனுடைய ஆணவத்தையும் அடக்கிய கதையை அவர் விவரிக்க... சிவ பக்தியோடு, மாயக்கண்ணன் மீதும் பக்தி கொண்டு வணங்கி வழிபடத் துவங்கியதாம் காமதேனு. மேலும், கண்ணனின் புல்லாங்குழல் இசையைக் கேட்கவேண்டும் என்றும், அவனைத் தரிசிக்க வேண்டும் என்றும் ஏங்கித் தவித்தது.

தசாவதார திருத்தலங்கள்!

பசுவின் கோரிக்கையைக் கேட்காமல் இருப்பானா ஆயர்குலத்தோன்?! வேணுகானம் இசைத்தபடி, அங்கேயுள்ள நீரோடையில் காட்சி தந்தான் ஸ்ரீகண்ணன். அத்துடன், காளிங்கன் தலையின் மீது நர்த்தனமாடுகிற திருக்கோலத்தையும் காட்டி அருளினான். பின்னாளில், இதனை அறிந்த சோழ மன்னன் ஒருவன், ஸ்ரீகாளிங்க நர்த்தனருக்கு இங்கு கோயில் அமைத்தான் என்கிறது ஸ்தல புராணம்.

ரோகிணி நட்சத்திரக்காரர்கள் வணங்கி வழிபடவேண்டிய திருத்தலம் இது என்பார்கள் பெரியோர்கள். ரோகிணி நட்சத்திர நாளில் இந்தத் தலத்துக்கு வந்து பிரார்த்தித்தால், சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம். அதுமட்டுமா?! தங்கள் குழந்தைகள் இசைத் துறையில் வல்லுநராக வேண்டும்; பாடுவதில், ஆடுவதில், வாத்தியக் கருவிகளை இசைப்பதில் பேரும் புகழும் பெறவேண்டும் என விரும்புபவர்கள், தங்கள் குழந்தைகளுடன் வந்து ஸ்ரீகாளிங்க நர்த்தனரை மனதாரப் பிரார்த்தித்து வழிபட்டுச் செல்ல... நினைத்த காரியம் இனிதே நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

இங்கே உத்ஸவரின் திருப்பாதத்துக்கு கொலுசு சார்த்தி வழிபடுவது சிறப்பு! சர்ப்பத்தின் மேல் நின்றபடி ஆடினாலும், சர்ப்பத்துக்கும் ஸ்ரீகண்ணனுக்கும் மெல்லிய நூலிழை அளவுக்கு இடைவெளியுடன் திகழ்கிற விக்கிரகத் திருமேனி, சிற்ப வியப்பு! ஆவணி மாதத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி திருநாளில் ஸ்ரீகிருஷ்ணருக்கு நடைபெறும் பாலபிஷேகத்தைக் காணக் கண் கோடி வேண்டும்.

ன் மீது தீராத பக்தி கொண்ட பக்தர்களின் மனத்தைத் தேடிவந்து குடியேறுவானாம் கண்ணன். அதுவும் எப்படி?

பனிக்கடலில் பள்ளிகோளைப்
பழகவிட்டு ஓடிவந்து என்
மனக்கடலில் வாழவல்ல
மாய மணாள நம்பீ
தனிக்கடலே தனிச் சுடரே
தனியுலகே என்றென்று
உனக்கிடமாயிருக்க என்னை
உனக்கு உரித்தாக்கினையே

- அவதாரம் தொடரும்...