Published:Updated:

காலக் கணிதத்தின் சூத்திரம்!

காலக் கணிதத்தின் சூத்திரம்!
காலக் கணிதத்தின் சூத்திரம்!

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

##~##

பிறந்த வேளையில் இருந்து அதாவது லக்னத்தில் இருந்து 5-வது வீட்டில், சந்திரன் இருக்கும் ராசியில் இருந்து 5-வது வீட்டில், அந்த வீட்டுக்கு உடையவனின் சேர்க்கை அல்லது பார்வை, தட்ப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் மழலைச் செல்வம் உண்டு என்கிறது ஜோதிடம். சந்திரன், ராசியில் குறிப்பிட்ட நட்சத்திர பாதத்துடன் இணைந்திருப்பான். சந்திரனை வைத்து ராசியை எண்ணும்போதும், அந்த எண்ணிக்கை சந்திரன் ஒளிந்திருக்கும் நட்சத்திர பாதத்துக்கு 5-வது வீடாகி விடும். ஆக, சந்திரனை வைத்து, நட்சத்திரமும் ராசி எண்ணிக்கையில் அடங்கிவிடும்.

லக்னம்- பிறந்தவனின் காலத்தோடு இணைந்த பகுதி. லக்னத்தின் காரகன் சூரியன்; ஆன்மகாரகன். உலகத்தின் ஆன்மா சூரியன் (சூர்ய ஆத்மா ஜகத:...). மனிதனிலும் ஆன்மாவாக ஊடுருவியிருப் பவன். சந்திரன் மனத்துக்குக் காரகன் (சந்திரமாமனஸோ ஜாதர்...). ஆன்மாவும் மனதும் இணைந்தால் மட்டுமே செயல்படும் உணர்வு முளைக்கும். உடலை விட்டு ஆன்மா வெளியேறினால் மனம் வேலை செய்யாது. இணைப்பில்தான் செயல்பாடு என்கிறது  ஜோதிடம் (ஆன்மா மனஸா ஸம்யுஜ்யதே..). லக்னத்திலிருந்து 5-ஆம் வீடு, சந்திரனிலிருந்து 5-ஆம் வீடு என்று சொல்லும்போது, ஆன்மாவின் தொடர்பும் மனத்தின் தொடர்பும் சேர்ந்து செயல் பட வேண்டும் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. சந்திரனின் நட்சத்திர பாதம் அடங்கியிருப்பதால், அதுவும் நாம் சொல்லாமலே அடங்கிவிடும். ஆக, ஒளி வடிவான சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் ராசி எண்ணிக்கையில் அடங்கிவிடும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சூரியன்- வெப்பம்; சந்திரன்- தட்பம். இரண்டின் சேர்க்கை மாறுபட்ட சிந்தனையின் விரிவாக்கத்துக்குக் காரணமாகிறது. வெப்பதட்பங்களை உடைய மற்ற கிரகங்களின் தாக்கத்தில், சிந்தனையானது திசை திருப்பத்தைச் சந்திக்கிறது. துயரம் அல்லது மகிழ்ச்சியில் முற்றுப்பெறுகிறது சிந்தனை. நீருடன் சர்க்கரை இணையும்போது, மொத்த நீரும் (பானகம்) இனிப்பைப் பெற்று விரிவடைகிறது. வெப்பத்தின் இணைப்பிலும் சிந்தனை விரிவு அடையும். அடுத்த வீட்டில் கொதிக்கும் வெங்காய சாம்பாரின் மணத்தை நாம் உணர்வோம். ஊதுவத்தியில் பற்றிக்கொண்ட நெருப்பு, அதன் வாசனையை விரிவாக்கி அறை முழுதும் பரவச்செய்யும். வேள்வியில் அளிக்கப்படும் பொருள்கள், வெப்பத் தின் சேர்க்கையில் (அக்னி) அந்தச் சூழலையே மாற்றிவிடும். மருந்தின் குணத்தை விரிவாக்க, அதை நீருடன் இணைத்து பருகச் சொல்வார் மருத்துவர். உள்ளத்தில் உதித்த உணர்வை விரிவாக்கி வெளியிட வெப்பமும் தட்பமும் தேவை. சூரியனும் (வெப்பம்) சந்திரனும் (தட்பம்) சேர்ந்து இருக்க வேண்டும். சூரியனும் சந்திரனும் மாறி மாறி தோன்றிக் கொண்டிருப்பதால்தான் உலகம் இயங்குகிறது; மனித சிந்தனை நடைபோடுகிறது.

கும்ப நீரில் கடவுளை இருத்தி வழிபடுவதும், கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் கடவுளை இருத்தி வழிபடுவதும் இந்த தத்துவத்தின் வெளிப்பாடே. வெப்பத்தை உமிழும் எரிமலையும், தட்பத்தைத் தாங்கும் பனிமலையும் இருப்பதால் உலகம் பாங்காக இயங்குகிறது. கிரகங்களை 'உபாதி’யாக (அடையாளமாக) வைத்து, வெப்பதட்பத்தின் தரத்தின் வாயிலாக சிந்தனையின் உருவத்தை உணர்த்துகிறது ஜோதிடம். கர்மவினையின் வடிகால், 5-வது வீடு. அந்த வீட்டில் இருக்கும் கிரகம் வெப்பக் கிரகமாகவும் இருக்கலாம். அந்த கிரகம் அங்கு இருந்தாலும், பார்த்தாலும் அவன் வாரிசுக்குக் காரணமாகிவிடுகிறான். தட்பக்கிரகம் சேர்ந்தாலும் பார்த்தாலும் மழலைச் செல்வத்தை உருவாக்கும்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

வீட்டுக்கு உடையவனின் சேர்க்கை அல்லது பார்வை, தட்ப கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை பலனை முழுமையாக்கும். அதுபோல், 7-க்கு உடையவன் 7-ல் இருப்பதோ பார்ப்பதோ, தட்ப கிரகங்கள் 7-ல் இருப்பதோ பார்ப்பதோ; சந்திரனில் இருந்தும் 7-க்கு உடையவன் இருப்பதோ பார்ப்பதோ, தட்பக் கிரகங்கள் இருப்பதோ பார்ப்பதோ நல்ல மனைவியைப் பெற்றுத்தரும் என்கிறது ஜோதிடம்.

பாவாதிபதி யோகமோ பார்வையோ, தட்பக் கிரக யோகமோ பார்வையோ  இல்லாமல் இருந்தால் மனைவியும் குழந்தையும் இருக்காது என்று சொல்லும் ஜோதிடம். கன்னி லக்னம்; லக்னத்தில் சூரியன்; மீனத்தில் செவ்வாய். இங்கு மனைவியை இழக்க வைப்பான்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

இங்கு 8-க்கு உடைய செவ்வாய், 7-லும்; 12-க்கு உடைய சூரியன் லக்னத்திலுமாகத் திகழ, ஒன்றுக்கொன்று பார்வையும் இருப்பதால் மனைவி தங்கவில்லை. லக்னத்தின் 7 மனைவியின் லக்னம். அதன் இரண்டு மாரக ஸ்தானம். அவன் லக்னத்தில் இணைந்து தனது பதி ஸ்தானமாகிய 7-ஐ கன்னியைப் பார்க்கிறான். அங்கு வீற்றிருக்கும் கிரகம் 6-க்கு உடையவன்; அதோடு வெப்ப கிரகம். செவ்வாயும் வெப்பம், சூரியனும் வெப்பம். ராசியானது நீர் ராசியானாலும் வெப்ப மிகுதியில் பலன் திசை திரும்பியது. மீன ராசி- நீர் ராசியில் வெப்ப கிரகம் செவ்வாய். அதை, லக்னத்திலிருக்கும் வெப்ப கிரகம் சூரியனின் பார்வை திசை திருப்பி மனைவியை எட்ட முடியாமல் செய்தது. இங்கு, வீட்டுக்கு உடையவனின் சேர்க்கையோ பார்வையோ, தட்ப கிரகத்தின் சேர்க்கையோ பார்வையோ இல்லாததால் மனைவி இழப்பை உறுதி செய்கிறது.

கன்னி லக்னம். லக்னத்தில் சூரியன், 5-வது வீட்டில் செவ்வாய் இப்படி இருந்தால் மழலையின் இழப்பு. இங்கு 5-வது வீட்டுக்கு அதன் அதிபதியின் சேர்க்கை அல்லது பார்வை, தட்பக் கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை இல்லாததால் மழலை தங்காமல் போய்விட்டது என்று விளக்கமளிக்கும் ஜோதிடம்.

ஆன்மா - மனம் என்கிற இரண்டின் அடிப்படையில் பலனை இறுதி செய்யப் பரிந்துரைக்கிறது ஜோதிடம். லக்னம், சந்திர லக்னம் இரண்டும் ஆன்மாவாகவும் மனமாகவும் செயல்படுகின்றன. மற்ற கிரகங்களைவிட, இவை இரண்டும்தான் நேரடிப் பார்வையில் நேரடித் தாக்கத்தை உணர வைக்கின்றன. இவர்களிடமிருந்து பலம் பெற்று மற்ற கிரகங்கள் இயங்குகின்றன. சூரியனும் சந்திரனும் கிரக அரசர்கள் என்கிறது ஜோதிடம் (ராஜானௌ ரவிச்சிதகூ). சூரிய- சந்திரர்கள் பலம் பொருந்தியிருந்தால் மட்டுமே மற்ற கிரகங்களின் பலன்கள் சிறப்பு பெறும். எல்லா மாறுதல்களுக்கும் சூரிய- சந்திரர்கள் (வெப்ப - தட்பங்கள்) மூல காரணம் என்கிறது அது.

பிறக்கும் வேளையை வெப்பத்தோடு இணைந்ததாக்கி (லக்ன காரகன் சூரியன்), தன்னுடைய கிரணம் பெற்று, நீரின் சேர்க்கையில் தட்பமான சந்திரனுள் இணைந்து, மாறுதலுக்கு வித்திடுகிறான் சூரியன். அவனை கிரகநாயகன் என்பது பொருள் படைத்தது. அவனது வெப்பம் தட்பத்தோடு இணைந்து 6 பருவ காலங்களை உருவாக்குகிறது. கிரகங்களின் தாக்கத்தால் சிந்தனை மாறுபட, செயலில் இன்ப-துன்பத்தைச் சந்திக்கவைக்கிறது ஜோதிடம்.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

புராணத் தகவல்களை சான்றாக வைத்து விருப்பப்படி பலன் சொல்வதும், சொல் வளத்தால் திகைக்க வைத்து தவறான வழிகாட்டியாக மாறுவதும் அதர்மமாகும். அனுபவம், தெரிந்த எடுத்துக்காட்டு ஆகியவற்றை வைத்து ஜோதிடத்துக்கு விளக்கம் அளிக்கும் அவலத்தை இங்குதான் பார்க்க முடியும். தாழ்வு மனப்பான்மை, அளவு கடந்த ஆசை, இனம் தெரியாத பயம், பாதுகாப்பின்மை ஆகியவையே சிந்தனைத் திருப்பத்துக்கான துணிவை அளிக்கின்றன. 'ஆசாபாசங்களில் இருந்து விடுபட்ட மனம் ஜோதிடத்தை உணரும்’ என்பார் ப்ருது யசஸ் (சித்தமந்த்ரோ ஜானதிஜாதகம்). இப்படியிருக்க... லக்னம், சந்திரன், சுக்கிரன் ஆகியவற்றில் இருந்து தனித்தனியாகக் கட்டத்தில் இருக்கும் வெப்ப கிரகங்களுக்கு  (சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது)... செவ்வாய்க்குச் சொல்லும் முறைப்படி பாபத்தைக் கணக்கிட்டு கூட்டிப்பார்த்து, ஜாதகப் பொருத்தத்தை இறுதி செய்யும் புரட்சிகர மான விஞ்ஞான விளக்கத்தை ஜோதிடத்தில் கலப்படம் செய்து, மக்களை திக்குமுக்காடச் செய்வது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. இதுபோன்ற விஷயங்கள் கணினியில் ஏற்றப்பட்டு விளம்பரம் செய்யப்படும்போது மக்கள் நம்பிக்கையைப் பெற்றுவிடுகிறது.

சுக்கிரனுக்கு 4-லும், 8-லும் பாபக்கிரகம் (வெப்பக்ரஹம்) இருந்தால் மனைவி இழப்பு உண்டு. அதேவேளையில் சுக்கிரனை தட்ப கிரகம் (சுபக்கிரகம்) பார்த்தால் இழப்பு வராது. சுக்கிரனுக்கு இரு பக்கங்களிலும் கிடுக்கிப்பிடி போல் வெப்ப கிரகங்கள் இருந்தால் மனைவி இழப்பு என்று சொல்லும். ஆனால் அந்த சுக்கிரனை தட்பக் கிரகம் (சுபக் கிரகம்) பார்த்தால் இழப்பு இராது என்று சொல்லும். ராகு, கேதுவைத் தவிர வெப்பக் கிரகங்கள் இருக்க வேண்டும் என்றும் சொல்லும். வெப்பக் கிரகத்தின் சம்பந்தம் இல்லாமலே மனைவியிழப்பைச் சொல்லும். செவ்வாய் தோஷம் மட்டுமே மனைவி இழப்புக்குக் காரணம் என்று இல்லை. மற்ற வழிகளிலும் உண்டு.

காலக் கணிதத்தின் சூத்திரம்!

சுக்கிரனுக்கு... அதாவது, மனைவி இழப்பை தனியாக வரையறுத்துக் கூறும்போது... லக்னம், சந்திரன், சுக்கிரன் என்று தோஷத்தைக் கணக்கிட சுக்கிரனை சேர்ப்பதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை. சதுரச்ர தோஷம், பாபமத்யஸ்திதி - என்று தனியாக விளக்கம் இருப்பதால் அதை ஏற்பதுதான் பொருந்தும். தட்பக் கிரகம் வெப்ப கிரகத்தின் தாக்கத்தில்- வெப்பமிகுதியால் மனைவி இழப்புக்குத் துணியும் தறுவாயில், அந்த சுக்கிரனுக்கு தட்பக் கிரகத்தின் தொடர்பானது சூழலை மாற்றி இழப்பிலிருந்து விடுபட வைக்கிறது. இப்படி, காரிய காரணத்தோடு இறுதியான உறுதியான விளக்கம் தருகிறது ஜோதிடம்.

எதிர்ப்பு ஒன்று இருந்தால் மட்டுமே அது செழிப்பாக மலரும். ஆனால் தற்போது தென்படும் எதிர்ப்பு ஆத்திரத்திலும் விரக்தியிலும் உருப்பெற்றவை. அது ஜோதிடத்தை வளர்க்க உதவாது. கணிதம் போன்ற கலைகள்... அதில் தேர்ச்சி பெற்றவர்களின் மோதலில் வலுப்பெற்று விளங்குகிறது. வியாபார நோக்கு புகுந்ததால் அதன் தரம் மங்கிவிட்டது. வாழ்க்கையில் மனம் தளர்வு அடையும்போது, சுறுசுறுப்பாக இயங்க மற்றொன்றை எதிர்பார்க்கும். அப்போது அவனுக்கு இதமான சிந்தனையை அளிக்கும் ஜோதிடம்.

ஆகாசம் என்கிற பூதத்தில் பரவியிருக்கும் ஒரு தத்துவம், என்றும் நம்மோடுதான் இணைந்திருக்கும். அது கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும், விருப்பம் இல்லாவிட்டாலும் அதன் தாக்கம் நம் சிந்தனையை தூண்டிவிடத்தான் செய்யும். விருப்பம் இல்லாமல் மருந்தை உட்கொண்டாலும் பிணி அகலும். சின்ன வட்டத்துக்குள் வளையவரும் மனித சிந்தனைக்கு, விமர்சனத்துக்கு இலக்காக ஜோதிடம் என்றும் இருக்காது. தெரிந்துகொண்டு உயர்வை அடைந்து மகிழ்வைப் பெற்றுக்கொள்ள உதவும் அது.

- சிந்திப்போம்...

அடுத்த கட்டுரைக்கு