சிறப்பு கட்டுரை
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!

திருவோணம்- 'ஓணத்தில் பிறந்தவன் கோணத்தை ஆள்வான்’ எனும் சிறப்புக்குரிய தாரகை! பூமியிலிருந்து சுமார் 16 ஒளியாண்டுகள் தூரத்தில் விண்வெளியில் ஒளிரும்... அம்பு வடிவில் அமைந்திருக்கும் மூன்று நட்சத்திரங் களின் கூட்டமைப்பே திருவோணம் என்பது நம் வானவியல் சாஸ்திர அறிஞர்கள் தரும் விளக்கம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், நீதிநெறி தவறாதவர்களாகவும், சீரிய வழியில் பொருள் தேடுபவராகவும், பற்பல சாஸ்திரங்களில் தேர்ந்தவராகவும் திகழ்வார்களாம். இருக்காதா பின்னே... எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணரின் திருநட்சத்திரம் அல்லவா திருவோணம்!

விபீஷணன், பொய்கையாழ்வார் ஆகியோர் ஜென்மம் எடுத்ததும் இந்த நட்சத்திரத்தில்தான்.

திருக்குடமுழுக்கு, பெண் பார்க்கும் படலம், விவாஹம், சீமந்தம், கதிரறுத்தல், தொட்டிலில் குழந்தை இடுதல், வங்கியில் சேமிப்புத் துவக்கம், விதை விதைத்தல், வியாபாரம் துவங்குதல், புதுமனை புகுதல், உபநயனம்... முதலான சுப காரியங்களுக்கு,

திருவோண நட்சத்திர திருநாள் மிக உசத்தியானது என்பார்கள் பெரியோர்கள்.

இவ்வளவு சிறப்பு மிக்க திருவோண நட்சத்திரத்துக்கு, மேலும் ஒரு மங்கலம் சேர்ந்தது. ஆமாம்... ஸ்ரீவாமன அவதாரம் நிகழ்ந்ததும் திருவோணத்தில்தான்!

##~##
ஸ்ரீ
வைகுண்டம்! சர்வ வியாபியான ஸ்ரீமந்நாராயணனின் திருமுன், பதைபதைப் புடன் நின்றிருந்தார் பிரகஸ்பதி. ஆமாம்... முடிவில்லாத அந்தப் பரம்பொருளிடம், ஒரு பிரச்னைக்கு முடிவு வேண்டி வந்திருந்தார், தேவகுரு.

'அசுர வேந்தன் விரோசனனின் மறை வுக்குப் பிறகு, சோணபுரத்தின் ஆட்சி பீடம் ஏறியிருக்கிறான் மகாபலி. இவன் எப்படிப்பட்டவனோ?

விரோசனன், கடும் தவத்தால் அரிய வரங்கள் பெற்றவன். சூரியன் தந்த சொர்ண கிரீடம் இல்லாதபோது, எவரேனும் ஒருவர் அவன் தலையில் கை வைத்தால், தலை வெடித்துச் சுக்குநூறாகிவிடும்; அக்கணமே அவனுக்கு மரணம் சம்பவிக்கும். மற்றபடி, வேறு எந்த வகையிலும் அழிவில்லாத வரத்தைப் பெற்றவன் விரோசனன். அசுரனின் தலையில் கைவைக்கும் துணிச்சல் யாருக்கு வரும்? எனவே, மரண பயம் இல்லாமல் கொடும் பாதகங்களைச் செய்து வந்தான்! பிறகு, பரம்பொருளே மோகினிப் பெண்ணாக வந்து, அவனை மோகம் கொள்ள வைத்து, அசுரன் மதிமயங்கிய வேளையில், அவன் சிரத்தில் கை வைத்துக் கதையை முடித்தது.

தற்போதைய அசுரேந்திரன் மகாபலியும், விரோசனனைப் போலவே பாதகனாக இருந்து தொலைத்தால்... என்ன செய்வது? இல்லையில்லை...  பலி, மிக நல்லவன்; ஹரிபக்தி மிகுந்தவன் என்கிறார்கள். எம்பெருமானை மட்டுமல்ல; அவன் அடியவர் களையும், அந்தணர்களையும் போற்றிக் கொண்டாடு கிறானாம். அவன் மேல் உள்ள பிரியத்தில் அந்தணர் கள் 'விஸ்வஜித்’ எனும் மகாயக்ஞம் ஒன்றை நடத்தி வைத்திருக்கிறார்கள். அதன் பலனாக, தங்க மயமான ரதமும், வெண்ணிறக் குதிரையும், சிம்மக் கொடியும், வில் போன்றனவும், அழகான கவசம் ஒன்றும் அவனுக்குக் கிடைத்திருப்பதாகத் தகவல்!

அசுரகுரு சுக்கிராச்சாரியார் சும்மா இருப்பாரா?

தேவலோகச் சிறப்புகளைச் சொல்லி, இந்திர பதவிக்கு நீயே தகுதியானவன் என்று பலிக்குத் தூபமிட்டு, அவன் உள்ளத்தில் ஆசையைத் தூண்டி விட்டுவிட்டார். விளைவு... எப்போது வேண்டுமானாலும் மேலுலகம் அசுரர் வசமாகலாம்! இப்போது என்ன செய்வது..? எதிர்த்து மோதுவதா? மோதினால் தேவர்களால் தாக்குப்பிடிக்க முடியுமா..?’ - ஒன்றும் புரியாத சூழலில், தேவதேவனை நாடி வந்திருந்தார் பிரகஸ்பதி.

வைகறைக் கமலமாய் அகமலரச் சிரித்தது பரம்பொருள். ''தேவ குருவே!

மகாபலி பக்திமான். தன் குலம் பொருட்டுச் சில கடமைகள் அவனுக்கு உண்டு. அதில் குற்றம் காண முடியாது. தவிர, பிரகலாதனின் வம்சத்தில் வந்தவன். இப்போது, அவன் புண்ணிய பலனை அனுபவிக்க வேண்டிய தருணம். ஆகவே... காலம் கனியும் வரை காத்திருங்கள்!''

- பரம்பொருளின் ஆணையைச் சிரமேற்கொண்டு, அவரைப் பணிந்து வணங்கி பிரகஸ்பதி விடைபெற, அரிதுயிலில் ஆழ்ந்தார் ஸ்ரீஹரி; எம்பெருமானின் இதழோரத்தில் ஒரு புன்னகை. வெகு விரைவில், ஓங்கி உலகளக்க நிகழப் போகிறது ஓர் அவதாரம் என்பதைச் சொல்லாமல் சொன்னது அந்தப் புன்முறுவல்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

காஸ்யபரின் ஆஸ்ரமம். தேவ குருவின் அறிவுரைப்படி, இந்திரன் தேவலோகத்தை விட்டு அகன்று வெகு நாட்கள் ஆகிவிட்டன. சுவர்க்க லோகத்தை இழந்து, காட்டிலும் மேட்டிலுமாக தேவர்களும் பிள்ளை களும் துன்புறுவது கண்டு வருத்தத்தில் ஆழ்ந்திருந்தாள் அதிதிதேவி.

அதுமட்டுமா? தன் ஆசார்யர் சுக்கிரரின் ஆசியுடன், நர்மதை நதிக் கரையில், பிரமாண்டமான அச்வமேத யாகத்துக்கும் பலி தயாராகிறானாம். அந்த யாகம் பூர்த்தியானால், அவனுக்கு இப்போது கிடைத்திருக்கும் வரமும் வல்லமையும், தேவலோக வாசமும் நிரந்தரமாகிவிடுமே! பிறகு, தேவர்களின் கதி?! - இந்திரனின் நிலைமையை நினைக்க நினைக்க, துக்கம் பெரிதானது அதிதிக்கு.

குடிலின் மேல் படர்ந்தது போதாதென்று அவள் மேலும் படரத் துடிப்பதுபோல், முகம் வருடும் முல்லைக்கொடி; சூழல் புரியாது துள்ளி ஓடி வந்து, ஒரு குழந்தை போன்று அவள் மடியில் முகம் புதைக்கும் மான்குட்டி... எதையும் ரசிக்கத் தோன்றாமல் சலனமின்றி அமர்ந்திருந்தாள் அதிதி. மெள்ள அவளின் தோள் தொட்டது ஒரு கரம். நிமிர்ந்து பார்த்தாள். கணவர் காஸ்யபர்தான் நின்றிருந்தார்.

எழுந்து வணங்கினாள். கண்களாலேயே தனது துயரத்தைப் பரிமாறினாள். அவளுக்கு ஆறுதல் சொன்னார் காஸ்யபர்: ''தேவி, கவலையை விடு! தர்மத்துக்கு இறைபலம் துணை நிற்கும். பயோ விரதத்தைக் கடைப்பிடி. தேவர்களுக்கும் விடியல் பிறக்கும்''

''பயோ விரதமா?!''- முகத்தில் ஆச்சரியம் காட்டினாள் அதிதி. முனிவர், அற்புதமான அந்த விரதம் குறித்து, மனைவிக்கு விளக்க ஆரம்பித்தார்...

''பிரம்மதேவனால் எனக்கு உபதேசிக்கப்பட்ட அற்புதமான வழிபாடு இது. பங்குனி மாதம், வளர்பிறை பிரதமை நாளில் ஆரம்பித்து திரயோதசி வரை, பன்னிரண்டு நாட்கள் இதைக் கடைப்பிடிக்க வேண்டும்.

விரத காலத்தில், தினமும் அதி காலையில் நீராடி, நித்ய கர்மாக்களை முடித்து, சூரியன், அக்னி, பூமி, பரிசுத்தமான தீர்த்தம் இவற்றில் ஏதாவது ஒன்றில் பகவானை ஆவாஹனம் செய்து, பக்தியுடன் துதிக்கவேண்டும். பிறகு, துதிப்பாடல்களால் பகவானை வழிபட்டு, அர்க்யம், பாத்யம் ஆகியவற்றால் பூஜித்து, பால் அபிஷேகம் செய்து, வஸ்திரம், சந்தனம், புஷ்பம், அட்சதை, தூப- தீபங்களால் உபசாரங்கள் செய்து (துவாதசாக்ஷர மந்திரத்தை ஜபித்து, அர்ச்சித்து) வழிபட வேண்டும். பால் அன்னம் சமர்ப்பிப்பது விசேஷம்.

விரத காலத்தில்... எம்பெருமானை 108 முறை மூலமந்திரம் ஜபித்து வழிபடுவதும், ஏழை அந்தணர் களுக்கு உணவளிப்பதும் சிறப்பு. மேலும், மூன்று வேளை நீராடி, சுகபோகங் களைத் துறந்து, பாலை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு, வாசுதேவனையே தியானித்துவர வேண்டும். இப்படி தினமும் வழிபட்டு, கடைசி நாளில் பகவானுக்குப் பஞ்சாமிருதத்தால் அபிஷேகம் செய்து, பாலில் கலந்த அன்னம் சமர்ப்பித்து பூஜையை முடிக்கவேண்டும்.  தேவி... சகல யாகங்களும் செய்த பலனைத் தரும் விரதம் இது. நீயும் முறையாகக் கடைப் பிடித்து கேசவனை வழிபடு. இறையருள் கைகூடும்!'' எனக் கூறி முடித்தார் காஸ்யபர்.

கணவரின் அறிவுரைப்படி, மிகுந்த சிரத்தையுடன் பயோ விரதத்தைக் கடைப் பிடித்தாள் அதிதிதேவி. அதற்கான பலன் வரமாகக் கிடைத்தது; அதிதியின் கிரஹத்தில்  அவதாரம் நிகழ்ந்தது!

- அவதாரம் தொடரும்...