Published:Updated:

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

சிவலிங்க தத்துவத்தை அறிந்து வழிபட ஆசை. சிவலிங்க சொரூபம் குறித்துப் புராணங்கள் சொல்லும் விளக்கங்கள் என்ன?

- ஆர்.கமலநாதன், சிவகங்கை

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

'சிவம்’ என்றால் மங்கலம். 'லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையை சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. 'நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும்’ என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தெஸ்மைகாமா:)

சிவத்தின் இணைப்பால் அம்பாளுக்கு 'ஸர்வமங்கலா’ என்ற பெயர் கிடைத்தது. இயற்கை தெய்வம் அவன். பனி படர்ந்த மலையில் அமர்ந்து பனி வடிவாகவும் காட்சியளிப்பான். பாண லிங்கம் இயற்கையில் விளைந்தது. தாருகா வனத்தில்... ஈச்வரரின் அம்சம் பூமியில் விழுந்து லிங்க வடிவமாகக் காட்சியளித்ததாகப் புராணம் கூறும். மார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும், கண்ணப்பனை மெய்யப்பனாக்கியதும் சிவலிங்கம்தான்.

கிடைத்த பொருளை, பிறருக்கு ஆதரவுடன் வாரி வாரி வழங்க, பொருளில் இருக்கும் பற்று படிப்படியாகக் குறைந்து, பற்றற்ற நிலை தோன்றிவிடும். அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவதில்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப்படுகிறோம்!

##~##
'பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப் பார்... என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை’ என்று சொல்லாமல் சொல்கிறது சிவலிங்கம். 'வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும்’ என்கிறது

உபநிடதம் (த்யாகே நைகெ அமிருதத் தவமானசு:). லிங்கத்தில் எதை அர்ப்பணித்தாலும் ஒட்டிக்கொள்ளாது.அபிஷேகத் தண்ணீர் தங்காது, அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால் அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும்.

சிலைக்கு அதாவது கல்லுக்கு, தட்பவெட்பத்தின் தாக்கம் தெரியாது; அதாவது, அது உணராது. சுக- துக்கங்கள் தெரியாது. சொல்லப்போனால் சுகமும் துக்கமும் அதற்கு ஒன்றுதான். பனிப்பொழிவு என்றாலும் சரி, வெயில் கொளுத்தினாலும் சரி... அது அசையாது. சுக-துக்கங்களை சமமாகப் பார்க்கச் சொல்கிறது சிவலிங்கம். கண்ணனும் சுக- துக்கங்களைச் சமமாகப் பார் என்றே சொல்கிறான்.

சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசைய வைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும். உடல், உடலுறுப்புகள், மனம், வாக்கு, செயல்பாடு- அத்தனையும் இன்றி, எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான்தான் என்று அடையாளம் காட்டுகிறது சிவலிங்கம். உடல் உறுப்புகள் இருந்தால்... அவற்றின் மூலம் ஆசாபாசங்களில் சிக்கித் தவித்து, வெளிவர முடியாமல் திண்டாடி, கிடைத்த பிறவியை பயனற்றதாக்கும் நிலை ஏற்படும். ஆசைகளை அறுத்தெறிந்தால், நம் உடலுறுப்புகள் சிவத்தோடு இணைந்துவிடும்; பிறவிப் பயன் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்துகிறது சிவலிங்கம். வாயால் உபதேசிக்காமல், செயல்முறையில் விளக்கம் தருகிறது சிவலிங்கம்.

நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனைபேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்... வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, 'சுபம்’ என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு.

எங்கும் எதிலிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கி வந்து சிவலிங்க உருவத்தோடு விளங்குகிறது; அந்தக் கல்லிலும் கருணை தேங்கி இருக்கிறது!

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

திருமணத்தில் ஊஞ்சலில் மணமக்களை அமர வைக்கும்போது, மணமகளை மணமகனுக்கு வலப்புறம் அமர்த்த வேண்டுமா? இடப்புறம் அமர்த்த வேண்டுமா?

- சிவராமகிருஷ்ணன், மதுரை-16

ஊஞ்சல் சம்பிரதாயம் சாஸ்திரமல்ல; விருப்பப்படி அமர்த்தலாம். அறத்தை நிறைவேற்ற... தம்பதியரில் மனைவி வலப்புறமாகவும்; கணவன் இடப்புறமாகவும் அமருவார்கள். ஊஞ்சலில் சாஸ்திர முறைப்படி அமர வேண்டிய கட்டாயம் இல்லாததால், மணமகன் வலப்புறமும், மணமகள் இடப்புறமுமாக மாறலாம்.

ஊஞ்சல் வைபவம் நடக்கும் தருணத்தில்... அப்போதே தம்பதியாகிவிட்டனர் என்று எண்ணி, மெத்தப் படித்தவர்களும்கூட, மணமகளை வலப்புறத்திலும் மணமகனை இடப்புறத்திலும் அமர வைக்கிறார்கள். பாமரர்களும் ஆராயாமல் இந்த நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள். ஊஞ்சலில் அவர்களது இருக்கை எப்படி வேண்டுமானாலும் அமையலாம். சம்பிரதாயத்தில் சாஸ்திரத்தை நுழைத்து, கவலையை வரவழைத்துக் கொள்ள வேண்டாம்!

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டுமா? தொடர்ந்து எரியும் வகையில், பூஜையறையில் நந்தா தீபம் ஏற்றி வழிபடலாமா? தொடர்ந்து தீபங்கள் சுடர்விடுவது வீட்டுக்கு நல்லதுதானே?

- கார்த்திக்குமார், இடையபாளையம்

பூஜையறையை மூடும்போது தீபங்களை அணைத்துவிட வேண்டும். அணைத்தால்தான் மறு நாள் காலையில் தீபம் ஏற்ற இயலும். இல்லையெனில், தினம் தினம் காலையில் தீபம் ஏற்றும் சம்பிரதாயம் அற்றுப்போகும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

அனுதினமும் காலையிலும் மாலையிலும் தீபம் ஏற்றவேண்டும் என்று இருக்கும்போது, நிரந்தர தீபவொளிக்கு இடமில்லாமல் போவதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பக்தி மேலீட்டால்... நந்தா தீபம்- அணையா விளக்கு ஏற்றுகிறேன் என்ற தனிப்பட்டவரின் சிந்தனையை விதியாக மாற்றக்கூடாது.

விளக்கைச் சுத்தம் செய்து புதுத் திரி போட்டு விளக்கேற்றவது சிறப்பு. அணையா விளக்கு வீட்டுக்கு நல்லது என்பது தங்கள் கணிப்பு. எல்லோரது சிந்தனையும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்றில்லை. சாஸ்திரத்தை மீறி நமது சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுப்பது சரியில்லை.

கோயில்களில்கூட கர்ப்பகிருஹத்தின் கதவைத் திறக்க ஒரு மந்திரம், தீபம் ஏற்ற ஒரு மந்திரம், நிர்மால்யத்தை விலக்க ஒரு மந்திரம், அபிஷேகத்துக்கு ஒரு மந்திரம் என்ற நடைமுறை உண்டு. கர்ப்பகிருஹத்திலும் அணையா விளக்கு இருந்தால் கோயிலுக்கு நல்லதுதானே... என்று சொல்லலாமா?!

ஸ்வயம்ப்ரகாசனுக்கு விளக்கு எதற்கு? நாம் அவனை தரிசிக்க விளக்கு வேண்டும். மேலும் அணையாவிளக்கு எதிர்பாராமல் அணைந்துவிட்டால், வீணாக மனநெருடலைச் சந்திக்கவேண்டி வரும். எதிர்பாராமல் விளக்கு தீபம் பற்றிக்கொண்டு பூஜையறையும் பாதிப்புக் குள்ளானால், அதுவும் அபசகுனம். ஆகையால், நமது ஆசையை நிறைவேற்ற எண்ணும்போது, ஆராய்ந்து செயல்பட வேண்டும். சாஸ்திரத்தைக் கடைப் பிடித்தால் அபசாரம் இருக்காது.

நான்முகன் - நாமகள் திருக்கல்யாணத்தை விவரிக்கும் புராண இலக்கியங்கள் உண்டா? இதுபற்றி விளக்குங்களேன்.

- பி.சுப்ரமணியம், சேலம்

பிரம்ம சூக்தம், சரஸ்வதி சூக்தம் என்று நான்முகன்- நாமகள் பெருமைகளை ஓதுகிறது வேதம்.

ஒருவரே இருவராக மாறி, படைப்பைச் செயல்படுத்தினார் இறைவன். படைக்கும் பரம்பொருளுக்கு பிரம்மன் என்று பெயர். பிரம்ம புராணம், பிரம்மாண்ட புராணம் ஆகியவற்றில் மட்டுமில்லாமல், எல்லா புராணங்களிலுமே பிரம்மன் குறித்த தகவல் பரவலாகத் தென்படும். வேதம் ஓத வாக்கு வேண்டும். அவள்தான் வாணி; அதாவது, சரஸ்வதி. ஆகவேதான், பிரம்மனின் நாவில் அவள் குடியிருக்கிறாள் என்று புராணம் கூறும்.

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

உடலை அளித்தவன் பிரம்மா; வாக்கைத் தருபவள் சரஸ்வதி என்கிறது வேதம் (வாக்வை ஸரஸ்வதி). என்றென்றும் இணைந்திருப்பவர்களுக்குத் திருமணம் எனும் இணைப்பு எதற்கு? இருவரை இணைப்பது திருமணத்தில் நிகழும். தெய்வங்களுக்கு அது தேவையற்றது. நமது சிந்தனைக்கு இணங்க, திருமண இணைப்பில் நாம் மகிழ்ச்சி பெற்றதால்... இறைவனையும் இணைப்பில் மகிழ்ச்சியுறச் செய்து, அதைப் பார்த்து நாமும் மகிழ்கிறோம். ஆம், தெய்வத் திருமணங்கள் நமது மகிழ்ச்சிக்காகவே நடைபெறுகின்றன.

நமக்கு மகிழ்ச்சியளிப்பவன் அவன்; ஆனந்த வடிவினன்! என்றென்றும் ஆனந்தமயமாக இருப்பவனுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துவது என்பது பொருந்தாத ஒன்று.

18 புராணங்களில் ஏறக்குறைய 33 திருமணங்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. 27 திருமணங்கள் தொகுக்கப்பட்ட 'புராண மஞ்சரி’ என்ற புத்தகம் இருக்கிறது. இதுபோன்ற புராணங்களைப் படித்தால், பிரம்மன்- சரஸ்வதி பற்றிய தகவல்கள் தெரிந்து விடும்.

திருக்கல்யாணம் இருந்தால்தான் இறைவனின் பெருமை விளங்கும் என்று நினைப்பது அறியாமை. பணிவிடைகளில் ஒன்றாக... நமக்காக ஏற்பட்டதே திருக்கல்யாணம். பிறப்பிலேயே கல்யாண புருஷனானவனுக்கு கல்யாண உற்ஸவம் ஒரு பொருட்டல்ல. கல்யாண புருஷனைக் கல்யாண கோலத்தில் கண்டுகளிப்பது, நமது கல்யாணத்தை நிலை நிறுத்தவே! கல்யாணம் என்றால் மங்கலம், சுபம் என்று பொருள். நமது முன்னேற்றத்துக்காக, கடவுளைக் கல்யாண கோலத்தில் தரிசித்து வணங்குகிறோம்.

எந்தத் தெய்வ உருவங்களையும் கல்யாணக் கோலத்தில் இருத்தி மகிழலாம். ராதா கல்யாணம், சீதா கல்யாணம், ருக்மிணி கல்யாணம், வள்ளித் திருமணம் ஆகியவற்றை நம் முன்னோர் நடைமுறைப்படுத்தி மகிழ்ந்தனர். வித்தியாசமாக, புதுமையாக... தாங்களும் வாணி- பிரம்மன் கல்யாணத்தைக் கொண்டாடி மகிழலாம். விதிவிலக்கு இல்லை.

- பதில்கள் தொடரும்...

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்