Published:Updated:

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி

Published:Updated:
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
கலகலப் பக்கம்! - பாக்கியம் ராமசாமி
##~##
மாவாசை தினம் வந்துவிட்டால் போதும், நண்பன் நாராயணனுக்கு வாயில் நுரை தள்ளிவிடும். இறந்துபோன அப்பாமீது மனசுக்குள் எரிச்சல் மூளும்; மனைவிமீது வள்வள்ளென்று விழுவான்; ''காபியும் வேணாம், ஒரு மண்ணாங்கட்டியும் வேணாம்'' என்று ஆர்ப்பாட்டம் செய்வான்.

அன்றைக்கு அப்படித்தான், ஒரு அமாவாசை தினத்தில் அவன் அமர்க்களம் செய்துகொண்டி ருந்தபோது போய் நின்றேன். ''எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கா பாரு!'' என்று மனைவியைத் திட்டிக்கொண்டு இருந்தான்.

அப்போது அவன் மனைவி அவசரம் அவசரமாக ஒரு துண்டுக் காகிதத்தில் எதையோ எழுதி அவன் முன் வைத்தாள். அப்புறம்தான் சாந்தமானான்.

அந்த சீட்டில் அப்படி என்னதான் எழுதியிருந் தது? வேறொன்றுமில்லை; அன்றைய கிழமை, நட்சத்திரம், மாசப் பெயர், ருது, அயனம் இவை தான் குறிப்பிட்டிருந்தன.

''சின்ன விஷயம், பெரிய எரிச்சல்டா..!'' என்று எனக்குச் சமாதானம் கூறுவதுபோல் சொல்லிவிட்டு, பூஜை அறைக்குச் சென்று நீர்க்கடன், தர்ப்பணம் தருவதில் ஈடுபட்டான்.

அவன் மனைவி எனக்கு வழக்கம்போல் காபி உபசரித்துவிட்டு, ''அமாவாசைன்னாலே உங்க நண்பருக்கு ஒரு படபடப்பு வந்துவிடும். என்ன நட்சத்திரம், நாள், மாசம், வருஷம் எல்லாம் ஒரு சீட்டில் தயாராக எழுதிக் கொடுத்துடணும். அவருக்குப் பஞ்சாங்கம் பார்க்கத் தெரியாது. இப்போ நடக்கும் தமிழ் வருஷத்துப் பெயர்கூடத் தெரியாது. அதிலெல்லாம் அக்கறை இல்லை.காலண்டரைப் பார்த்து நாள் நட்சத்திரம் கண்டுபிடிக்கச் சோம்பல். அது ஒரு பெரிய டாஸ்க்னு அவருக்குள் நினைப்பு'' என்றாள்.

தர்ப்பணம் செய்து முடித்துவிட்டு வந்த நாராயணன், சாந்தமாக இருந்தான்.

''வள்ளுவர்கூட நீத்தார் வழிபாடு செய் யணும்னு சொல்லியிருக்காரேன்னுதான் நான் செய்துகொண்டு வரேன். ஆனால், எதுக்குச் செய்யறோம், ஏன் செய்யறோம்னு தெரியாமலேயே ஏனோ தானோன்னு எள்ளையும் தண்ணியையும் கொட்டிட்டு வரோமேன்னு உறுத்தலாகவும் இருக்கு'' என்றான்.

''பரவாயில்லை'' என்றேன். ''குருத் குஹன்னு நினைத்துக் கொள்!'' என்று புதிர் போட்டேன்.

''அது யார் குருத்குஹன்?'' என்றான்.

''ஸ்ரீராமசரித்திரத்திலே 'குகன்’ என்கிற வேடன் வருகிறானில் லையா? நின்னோடு ஐவரானோம் என்று ராமர் கட்டிக்கொண்டாரே, அவனது முன் ஜென்மப் பெயர்தான் குருத் குஹன்.

முந்தைய ஜென்மத்தில், ஒரு சிவராத்திரி தினம் காட்டுக்கு வேட்டையாடப் போனான். இருட்டிவிட்டதால் ஒரு மரத்தில் ஏறி, இரவைக் கழித்தான். மிருகங்களின் சலசலப்பு கேட்கும் போதெல்லாம், வில்லில் அம்பைப் பூட்டி எய்வான். அப்போது அவன் கையில் உள்ள குடுவையிலிருந்து சிறிது நீர் கீழே விழும்.

மரத்திலிருந்து வில்வ இலையும் இரண்டொன்று கீழே உதிரும். இப்படியாக, நாலு தடவை அந்த இரவில் அவன் முயன்றான்.

மரத்தின் கீழிருந்த ஒரு சிவலிங்கத்தின்மீது, அந்தப் புண்ணிய தினத்தில் நாலு சாமத்தில் வில்வமும் நீரும் அவனது செய்கையில் விழுந்தமையால், கடவுள் அதை அவன் செய்த அர்ச்சனையாக ஏற்றுக்கொண்டு, 'அடுத்த ஜென்மத்தில் நீ ஸ்ரீராமருக்கு உதவும் பாக்கியம் பெற்று, அவரால் சகோதரனாகப் பாவிக்கப்படுவாய்!’ என்று ஆசீர்வதித்தாராம். ஆகவே, ஒரு நல்ல செயலை உணர்ந்து செய்கிறோமோ, உணராமல் செய்கிறோமோ... அதற்குப் பலன் நிச்சயம் கிடைத்துவிடும்'' என்றேன்.

மகாகவி பாரதியார் தன் சக்தி திருப்புகழில் பாடுகிறார்.

சக்தி சக்தி என்றால் சக்தி தானே சேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றால் வெற்றி தானே நேரும் கண்டீரே
சக்தி சக்தி என்றே செய்தால் தானே செய்கை நேராகும்
சக்தி சக்தி என்றால் அஃது தானே முக்தி வேராகும்.