Published:Updated:

குகை தரிசனம் கோடி புண்ணியம்!

கர்நாடக தரிசனம்!

குகை தரிசனம் கோடி புண்ணியம்!

கர்நாடக தரிசனம்!

Published:Updated:
குகை தரிசனம் கோடி புண்ணியம்!
குகை தரிசனம் கோடி புண்ணியம்!

ர்நாடக மாநிலத்தில், மங்களூரில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது, நெல்லி தீர்த்தம் குகைக் கோயில். சுமார் 1600 வருடங்கள் பழைமை வாய்ந்த அற்புதமான ஆலயம் இது!

கலியுகத்தின் துவக்கத்தில், அதர்மம் மேலோங்கியிருந்தது. கொலையும் கொள்ளையும் அதிகரித்திருந்தன. நல்லவர்களும் குழந்தைகளும் அவதிக்குள்ளானார்கள். தர்மத்தை நிலைநிறுத்துவதற்கான தருணம் வந்துவிட்டதை உணர்ந்த நாரத மாமுனி, மகா விஷ்ணுவிடம் முறையிட்டார். உடனே அவர் சிவபெருமானிடம் இதுகுறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு, வாசுகியின் (பாம்பு) தலைமையில் சிவபூத கணங்கள், க்ஷேத்திரபாலகர், நந்திகோணர், வராகி, பார்பரகா, பாஷாணமூர்த்தி ஆகியோரை பூமிக்கு அனுப்பினார். அவர்கள், பல்குணி ஆற்றுக்கு வடக்கேயும் நந்தினி ஆற்றுக்குக் கிழக்கேயும் உள்ள பரசுராம க்ஷேத்திரத்துக்குச் சென்று, அங்கே நந்தவனம் ஒன்றில் தங்கி, இறை நம்பிக்கையை மக்களுக்குள் விதைத்தனர்.

அப்போது, சிவபூத கணங்கள் மெள்ள மெள்ள தீய குணத்துக்கு மாறினார்கள்; சிவபெருமானைவிட தாங்கள் பலம் வாய்ந்தவர்கள் எனக் கருதி, அட்டூழியம் செய்தனர். அப்போது, ஜாபாலி எனும் முனிவர், உலக நன்மைக்காக பாகீரதி நதிக்கரையில், தாடகா எனும் இடத்தில் தவம் செய்துகொண்டு இருந்தார். நாரதர் அவரிடம் சென்று, ''மகரிஷியே, உலகை உய்விக்கத் தவம் செய்யும் தாங்கள், ஸ்ரீகாயத்ரி போன்ற உயரிய வேத மந்திரத்தை, அருணாசுரன் எனும் கொடியவனுக்கு உபதேசித்தீர்கள். அதைக் கற்று, தீய நடவடிக்கைகளில் இறங்கி உலகையே ஆட்டுவிக்கிறான். சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய திரிமூர்த்திகளும் அருணாசுரனை அழிக்கமுடியாமல் தவிப்பதற்குக் காரணம், நீங்கள் அவனுக்கு உபதேசித்த ஸ்ரீகாயத்ரி மந்திரம்தான்! இதென்ன கொடுமை!'' என்று கேட்டார். தனது தவற்றை உணர்ந்தார் ஜாபாலி முனிவர். அவரிடம், ''உடனே பரசுராம க்ஷேத்திரம் சென்று, நந்தினி ஆற்றங்கரையில் நாகவனம் எனும் இடத்தில், சக்திதேவியை நோக்கி கடும் தவம் செய்யுங்கள். அருணாசுரனை அழிக்க சக்தியால் மட்டுமே முடியும்'' என்றார் நாரதர்.

குகை தரிசனம் கோடி புண்ணியம்!
##~##
இதைக் கேட்டதும், கங்கை நதியையும் துணைக்கு அழைத்துக்கொண்டு, நாக வனத்துக்குச் சென்றார் ஜாபாலி முனிவர். சிவனாரைத் தொழுதார். ''இந்த வனத்தில் உள்ள குகைக்குள் சென்று, தவத்தில் ஈடுபடு! சக்திதேவி காட்சி தருவாள். உனது தவத்துக்கு எந்த இடையூறும் வராமலிருக்க வியாக்ர சாமுண்டி, தூமவதி என்கிற பூதகணங்கள் காவல் காப்பார்கள்!'' என அருளினார் சிவனார். அப்படியே செய்தார் ஜாபாலி முனிவர்.

அந்த இடத்தில்தான், வாசுகியின் தலைமையில் பூதகணங்களும் க்ஷேத்திர பாலனும் இருந்தனர். முனிவரின் தவத்துக்குத் தடங்கல் வராமலிருக்க, காவல் காத்துக்கொண்டிருந்த பூதகணங்களைப் பார்த்துவிட்ட க்ஷேத்திரபாலகர், வாசுகியிடம் அதனைத் தெரிவிக்க...  தன்னுடன் இருந்த வராகியையும் ரக்தேஸ்வரி யையும் அனுப்பி, விசாரிக்கப் பணித்தது வாசுகி.  

குகை தரிசனம் கோடி புண்ணியம்!

பிறகு, இருதரப்பு பூதகணங்களும் சந்தித் தனர். ''நாம் அனைவருமே உலக மக்களின் நலனுக்காகத்தான் பாடுபடுகிறோம்; நமக்குள் சண்டை எதற்கு?'' என்று முனிவரின் பூதகணங்கள் சொல்லியும், வாசுகி தலைமை யில் வந்தவர்கள் சமாதானம் ஆகவில்லை. சண்டை மூண்டது. இதில் வாசுகியும் கலந்துகொண்டது. இதனால் கோபமுற்ற ஜாபாலி முனிவர், ''உலகில் நீ நிம்மதியாக வாழவே முடியாது!'' எனச் சாபமிட்டார்.

குகை தரிசனம் கோடி புண்ணியம்!

இதில் கலங்கிய வாசுகி, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பாப விமோசனம் கேட்டது. ''இங்கே லிங்க ரூபமாக எழுந்தருளப் போகிறார் சிவனார். அவரை பூஜித்தும், யாகங்கள் செய்தும் வழிபடுங்கள்; விமோசனம் பெறுவீர்கள்'' என்றார் ஜாபாலி முனிவர்.

அதையடுத்து, குகைக்குள் லிங்க ரூபமாகச் சிவனார் காட்சி தர, சிவனாரின்மீது கங்காதேவி நீரைப் பொழிந்து, மகிழ்ந்தாள். ஆதிசக்தியானவள், முனிவருக்குத் திருக்காட்சி தந்தாள். வண்டு உருவெடுத்து, அருணாசுரனை வதம் செய்தாள்.

அசுரனைக் கொன்ற இடம் 'கட்டீல்’ எனும் தலமாக இன்றைக்கும் போற்றப்படுகிறது. அங்கே, ஸ்ரீதுர்காபரமேஸ்வரியாகக் கோயில் கொண்டிருக் கிறாள், தேவி. அந்தக் குகை, நெல்லி தீர்த்தக் குகை எனப்படுகிறது. வருடந்தோறும், அக்டோபர் 17-ஆம் தேதி முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரையிலான ஆறு மாதங்களும் குகைக்குள் சென்று வழிபட, பக்தர்களுக்கு அனுமதி உண்டு (மீதமுள்ள ஆறுமாத காலங்களில் விஷ ஜந்துகள் குகைக்குள் அடைக்கலமாகிவிடும் என்பதால், பக்தர்களை அனுமதிப்பது இல்லையாம்).

விஜய நகரப் பேரரசுக்கு உட்பட்ட சௌதா மன்னர்கள், குகைக் கோயிலைப் பராமரித் தனர்; அருகில், ஸ்ரீசோமநாதீஸ்வரருக்கும் ஆலயம் எழுப்பினர். ஆலயத்தின் கிழக்கில் 'அம்பலாட்டுப் படவுக் குன்று’ என்று சுமார் 500 அடி உயரக் குன்று உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பலருக்கு, அந்த இடம் சொர்க்க பூமியாகத் திகழ்கிறது.

மூலவரின் திருநாமம்- ஸ்ரீசோமநாதீஸ்வரர். ஸ்ரீமகாகணபதி, ஜாபாலி மகரிஷி, பிலி சாமுண்டி, தூமவதி, க்ஷேத்திர பாலகர், ரக்தேஸ்வரி ஆகியோரும் காட்சி தருகின்றனர்.  கோயிலுக்கு அருகில் நாகப்பக்கரை (பாம்புக் குளம்) எனும் தீர்த்தக் குளம் உள்ளது. இங்கு நீராடிய பிறகே, குகைக்குள் செல்ல அனுமதிக்கின்றனர். உள்ளே குனிந்தும், வளைந்தும், தவழ்ந்துமாகச் செல்ல வேண்டும். சிவனாரின் லிங்கத் திருமேனி மீது, கங்காதேவி இடைவிடாது நீரைப் பொழிந்தபடியே இருப்பதைக் காணக் கண்கோடி வேண்டும். குகையில் உள்ள சிவனாரையும் ஸ்ரீசோமநாதீஸ்வரரையும் வழிபட்டால், நாக தோஷம் விலகும் என்பர். இங்கே பிரசாதமாகத் தரப்படும் சிவப்பு நிற குகை மண்ணைப் பூசி வந்தால், வெண் குஷ்டம் நீங்கும் என்பது ஐதீகம்!

மூன்றடி உயர சிவலிங்கம் மற்றும் ஜாபாலி மகரிஷி சந்நிதியில் சில்லறைக் காசுகளைப் போட்டு, மனதுள் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும் என்கின்றனர் பக்தர்கள்.

குகை தரிசனம் கோடி புண்ணியம்!

படங்கள்: கே.கார்த்திகேயன்