Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

Published:Updated:
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ப்படியெல்லாம்கூட நடக்குமா, இதென்ன புராண காலமா, மாயா ஜாலமா என காண்பவர்- கேட்பவர் வியந்து திணறும்படியான சாயி லீலைகள், பல வருடங்களாகவே சாயி பக்தர்களின் குடும்பங்களில், சாயி மையங்களில், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு சூழல்களில், உலகெங்கும் நடந்தவண்ணம் உள்ளன.

பக்தை கெஜலட்சுமியின் குடும்பத்தில் பாபா புரியும் லீலைகள் விசித்திரமானவை. கெஜலட்சுமிக்கு இரண்டு பெண்கள்; ஒரு பிள்ளை. அனைவரும் படித்து நல்ல வேலையில் இருந்தாலும், 'சாயி சர்வீஸ்’ நிறையச் செய்ய வேண்டும் என்று நினைத்ததால், பெண்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளவில்லை. பிள்ளை மட்டும் திருமணம் செய்து கொண்டு, கொஞ்ச நாட்களுக்கு அம்மாவுடன் இருந்தான். அந்த மருமகள், வீட்டில் நடக்கும் சாயி லீலைகளைக் கண்டு மிரண்டாள். இத்தனைக் கும் வீட்டில், பெரிய பூஜை, வழிபாடு என்பதெல்லாம் இல்லை. வீடு முழுவதும் பாபாவின் படங்கள், எளிய நைவேத்தியம்; சதா சாயி அஷ்டோத்திரத்தைச் சொல்லிக்கொண்டும் சுவாமியிடம் சகஜமாகப் பேசிக்கொண்டும் இருக்கிற மாமியார்; சுவாமி பாபாவின் உத்தரவோ ஆமோதிப்போ இல்லாமல், எதையும் ஏற்கவோ செய்யவோ விரும்பாத குடும்பம்; இவையெல்லாம் மருமகள் அமிர்தவல்லிக்கு புதிராக இருந்தன. எந்தப் பொருள் வாங்கினாலும், சுவாமி முன் வைத்துவிடுவார்கள். அவர் விபூதியோ குங்குமமோ அட்சதையோ பூவோ போட்டு ஆசீர்வதித்தால் மட்டுமே எடுப்பார்கள். இல்லையென்றால் பயன்படுத்த மாட்டார்கள். சுவாமியும் எப்படியாவது ஆசீர்வதித்துவிடுவார்.

அப்போது, அமிர்தவல்லிக்குக் குழந்தை பிறந்து 46 நாட்களாகியிருந்தது. குழந்தையைக் குளிப்பாட்டுவதற்கு முன், சுவாமி வெண்ணெய் உருண்டை வைப்பார். அதைக் குழந்தையின் உடம்பில் பூசித்தான் குழந்தையைக் குளிப்பாட்டுவார், மாமியார். சுவாமி வெண்ணெய் வைக்கவில்லை என்றால், குழந்தைக்குக் குளியல் இல்லை. அதேபோல், சுவாமி வைக்கும் பழச்சாறு கொடுத்தபின்தான் குழந்தைக்குப் பால் தர வேண்டும்.

ஒரு முறை, குழந்தைக்குக் கடும் காய்ச்சல். குழந்தை அழுது கொண்டே யிருந்தாள். மாமியார், பாபாவிடம் கேட்டார். அங்கே உரிமையோடு கேட்பதுதான்; பிரார்த்தனை என்பதெல்லாம் இல்லை. ''குழந்தைக்கு உடம்பு சரியில்லை. என்ன, பேசாம இருக்கே! சரியாக்கு'' என மாமியார் உரத்த குரலில் சொன்னதும், சுவாமி படத்திலிருந்து ஒரு கறுப்பு உருண்டை விழுந்தது. அடுத்து ஒரு சீட்டு விழுந்தது. 'இதைத் தேனில் குழைத்துக் குழந்தைக்குக் கொடுக்கவும்’ என்று அதில் எழுதி இருந்தது. 'தெய்வமே...’ என்று புலம்பியபடி, அப்படியே செய்தாள். கணகணவென்று கொதித்த உடம்பு சீக்கிரமே இயல்பானது. குழந்தை அழுகையை நிறுத்திவிட்டு, மடியிலேயே தூங்கிப்போனது. கைகளைக் கூப்பி பாபாவுக்கு நன்றி சொன்னார் மாமியார். பின்பு, 'பயப்படாதே! அவன் தெய்வம்; அவன் பாத்துப்பான்; அவனை நம்பு!’ என்று மருமகளிடம் சொல்லிவிட்டு, ''இதோ வருகிறேன்'' என்று பின்போர்ஷனுக்குச் சென்றார். நடப்பதையெல்லாம் பார்த்து ஒருவித குழப்பத்திலும் மிரட்சியிலும் இருந்த மருமகள், மெள்ள அதிலிருந்து மீண்டு ஆசுவாசம் அடைந்தாள்.

அப்போது, திடீரென்று சமையலறையில் ஏதோ சத்தம்... யாரோ அடுப்பிலிருந்த பாத்திரத்தில் ஏதோ கிண்டிக்கொண்டிருப்பது போன்ற சத்தம்! 'இதென்ன சத்தம்... சமையலறையில் யார் இருப்பது?’ என்று மெள்ள எட்டிப் பார்த்தாள் மருமகள். தூக்கிவாரிப் போட்டது! அங்கே, அதே பச்சைப் புடவையில், அடுப்பில் ஏதோ கிளறிக் கொண்டிருந்தாள் மாமியார். 'இப்போதுதானே நம் கண் எதிரே, பின்போர்ஷனுக்கு நடந்து போனார் மாமியார்! பின்பு, எப்படி இங்கே நடமாட முடியும்?!’ என்று குழம்பினாள். பத்து நிமிடங்கள் கழிந்தன. பின்கட்டிலிருந்து, ஒரு பக்கெட்டை எடுத்துக்கொண்டு, அதே பச்சைப் புடவையில் மாமியார் வந்து கொண்டிருந்தார். சமையலறையில் அந்த மாமியார் சமைத்துக்

கொண்டிருக்க, பின்கட்டிலிருந்து இந்த மாமியார் வந்து கொண்டிருப்பதை ஒரே நேரத்தில் பார்த்ததும், பயத்தில் 'ஓ’வென்று அலறிவிட்டாள் மருமகள். 'என்ன, என்ன..! என்ன ஆச்சு? ஏன் இப்படிக் கத்தறே?’ என்று கேட்டார் மாமியார்.

''இங்கேயும் நீங்க; அங்கே சமையலறையில் பாருங்க, அங்கேயும் நீங்க...'' என்று பயத்தில் வாய் குளற, பீதியுடன் சொல்லியபடி மருமகள் சமையலறையைச் சுட்டிக்காட்ட, மாமியார் சிரித்தார். 'அடி அசடே! வேற யாரு... சுவாமிதான் என்னை மாதிரி வந்திருப்பார். ஏதாவது சமைச்சு வெச்சுட்டுப் போயிருப்பார். இதுக்கா இப்படிச் சத்தம் போடறே!’ என்று சகஜமாகச் சொல்லிவிட்டுப் போனார். கொஞ்ச நேரத்துக்கு அந்த திகிலிலிருந்து மருமகள் மீளவே இல்லை. பிறகு, நாட்கள் செல்லச் செல்ல, சுவாமியின் அதீதமான கருணையும் தாயன்பும் புரியத் தொடங்கியதும், அவளும் சுவாமியிடம் பேசத் தொடங்கினாள்; கேட்கத் தொடங்கினாள்; சாயி, தங்கள் குடும்பத்தை வழிநடத்தும் பரமாத்மா என்பதை உணர்ந்தாள். பயம் போனது;  பக்தி பிறந்தது. பின்னர், வேலை காரணமாகக் கணவருடனும் குழந்தையுடனும் சில மாதங்கள் வெளிநாடு போயிருந்த அமிர்தவல்லி, குழந்தைக்கு ஒரு வயதாகும்போது இந்தியா திரும்ப ஆசைப்பட்டாள். சொந்த ஊரில் ஆயுஷ்ஹோமம் செய்து, பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாட விரும்பினாள். முன்னதாக, அன்னப்பிராசனம் செய்வ தற்கு புட்டபர்த்திக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு தீவிரமாக வந்தது. மாமியாரிடம் இதைச் சொன்னபோது, ''அதுக்கு எதுக்கு அவ்ளோ தூரம் அங்கே போகணும்? இங்கேயே கேட்போம்'' என்றவர், ''ஏன் சுவாமி, குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்யணும்னு உனக்குத் தெரியாதா?'' என்று உரிமையோடு கேட்க, உடனே அழகிய வெள்ளிக் கிண்ணத்தில், அமர்க்களமாகக் கற்கண்டு சாதம் வைத்தார் சுவாமி.

##~##
குழந்தைக்கு ஒரு வருடமானது. ஆயுஷ்ஹோமம் செய்து நூறு பேருக்கு மேல் சாப்பாடு போட முடிவு செய்து, நாள் குறித்து எல்லாரையும் அழைத்தாகிவிட்டது. ஆனால், திடீரென 'கேஸ்’ தீர்ந்துபோயிருந்தது. தவிர, கேஸ் தட்டுப்பாடாக இருந்த நேரம் அது. யாருக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. மாமியார், கேஸ் சிலிண்டர் மேல் விபூதி தூவி, 'ம்... பத்த வை!’ என்று சொல்ல, மருமகள் தயங்கினாள். ''இன்னுமா உனக்கு சுவாமிகிட்ட நம்பிக்கை இல்லே? ஏத்து!'' என்றார் கெஜலட்சுமி. பற்றவைத்தால், என்ன ஆச்சரியம்! ஸ்டவ் எரிந்தது. விருந்துக்கு வந்திருந்த 120 பேருக்குச் சமைத்து, தங்கியிருந்த விருந்தினர்களுக்கு அடுத்த நாளும் சமைத்து, அதற்கு அடுத்த நாள், விருந்தினர்கள் அனைவரும் கிளம்பிப் போன பிறகுதான் கேஸ் தீர்ந்தது. 'அப்பாடா! காப்பாத்திட்டே சுவாமி!’ என்று மூச்சுவிட்டாள் அமிர்தவல்லி.

இதேபோல் இன்னொரு சம்பவத்திலும் கைகொடுத்தார் சுவாமி. கணவர் மற்றும் குழந்தையோடு வெளிநாட்டில் வசித்தபோது, குழந்தைக்கு 2-வது பிறந்த நாள் வந்தது. அங்கிருந்த நண்பர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நூறுபேருக்கு மேல் வீட்டுக்கு வந்து விட்டனர். சுவாமியிடம் உரிமையோடு கேட்க, மாமியாரும் அங்கு இல்லை. யோசித்தாள் அமிர்தவல்லி. தன் அறைக்குள் வந்து சுவாமி படத்தின் முன் கண்மூடி நின்று, நிலைமையைச் சமாளிக்க உதவும்படி மனமுருகிக் கேட்டுக்கொண்டாள். திடீரென அடுப்பங்கரை மேடையில் பெரிய டிரேயில் வெள்ளிக் கிண்ணங்களில் பாதாம் கேக்குகள் வைக்கப்பட்டிருந்தன. 'சுவாமி, இது சாயி பிரசாதம்! எனக்கும் ஒரு கேக் வேண்டும்’ என்று மனசுக்குள் நினைத்தபடியே, வந்த விருந்தினர்கள் அனைவருக்கும் பரிமாறினாள். எடுக்க எடுக்க, கேக்குகள் வந்துகொண்டேயிருந்தன. அனைவருக் கும் வழங்கியது போக, கடைசியில் அவளுக்கும் ஒரு 'கேக்’ எஞ்சியது!

கேட்டதைக் கொடுக்கும் கிருஷ்ண பகவானல்லவா சுவாமி?!

'தரிசனம் தருவேன்!’

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

'என்னுடைய அம்மாதான், ஸ்ரீசத்ய சாயிபாபாவின் அற்புதங்களை எனக்கு உணர்த்தினார். அன்று முதல் (87-ஆம் வருடம்) இன்று வரை, என்னையும் என் குடும்பத்தாரையும் வழிநடத்திச் செல்வது சுவாமிதான்!  நாங்கள் நைஜீரியாவில் இருந்தபோது, என் மூத்த மகனுக்கு, புட்டபர்த்தி ஆஸ்ரமத்தில் உள்ள பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கிற பாக்கியம் கிடைத்தது. ஆனால், பல வருடங்களாக சுவாமியின் தரிசனம் கிடைக்காமலே இருந்தது, எங்களுக்கு!

ஒருநாள், பாபா என் மகனிடம் வந்து, ''இந்த முறை உன் அம்மா வரும்போது, ஸ்பெஷல் தரிசனம் தருவேன்'' என்று சொன்னாராம். உடனே என் மகன், இந்த விவரத்தைக் கடிதமாக எழுதி, 'வருகிற வாரம்’ என்பதை அடிக்கோடிட்டிருந்தான். அன்றைய தினம், மாலையில் சுவாமி அவனைச் சந்தித்தபோது, ''என்ன... 'வருகிற வாரம்’ என்று அடிக்கோடிட்டு, அம்மாவுக்குக் கடிதம் எழுதியிருக்கிறாயா?'' என்று கேட்டாராம். சந்தோஷத்தில் திக்குமுக்காடிப்போன நாங்கள், புட்டபர்த்திக்கு வந்தோம். ஆஸ்ரமத்துக்குள் நுழைந்தபோது, எங்கள் டாக்ஸி டிரைவர், ''சுவாமி வந்துக்கிட்டிருக்கார்'' என்றார். உடனே நாங்கள் இறங்கி நின்றோம். பகவானின் கார் மருத்துவ மனை அருகில் வந்து நின்றது. எங்களுக்கு எதிரில் நின்றவரிடம், ''எப்புடு வச்சாவு? (எப்போது வந்தாய்?)'' என்று சுவாமி கேட்டார். இது, எங்களுக்கான கேள்வியாகவே தோன்றியது.

மறுநாள் மாலை, தரிசன நேரம். 2-வது வரிசையில் அமர்ந்திருந்த என்னிடம், ''எப்ப வந்தாய்?'' என்று பகவான் கேட்க, ''நேற்று வந்தோம்'' என்றேன். உடனே அவர், ''நேத்திக்கா?'' என்று ஆச்சரியத்துடன், ஆனால் சிரித்துக்கொண்டே கேட்டார். இவ்வளவு நேரம்... இத்தனைக் கேள்விகள்... அதுவும் எனக்கு அருகில் பாபா... நினைக்க நினைக்க ஆனந்தம்

தாளாமல் அழுகையே வந்துவிட்டது! குழந்தை போல் விக்கிவிக்கி அழுத என்னிடம்,''அஸ்வின் யாரு?'' என்று கேட்டார். ''என் மகன்'' என்றேன். அதற்கும் அழுகை இன்னும் அதிகமானது. பிறகு, என் பையனிடம் சென்று, ''உன் அம்மாவிடம் பேசினேன். அழுதுகொண்டே இருந்தார்'' என்று சொல்லிவிட்டு, என்னைப் போல் அழுது காட்டினாராம், பாபா! என் பையனுக்கு ஆச்சரியம்... 'இத்தனைப் பெரிய கூட்டத்தில், நம் அம்மாவை எப்படிக் கண்டுபிடித்தார், பாபா!’ எப்படி யோசித்தும் இதற்கான பதில் அவனுக்குக் கிடைக்கவில்லை.

இதையடுத்த தரிசனம்... அப்போதும் என் அழுகை ஓயவே இல்லை. ''நீ இப்படி அழுதபடியே இருந்தால், உன்னிடம் நான் பேச மாட்டேன்'' என்றார் பாபா. பின்பு, அருகில் இருந்தவர்களிடம், ''அவள் இப்போது மட்டும் அழவில்லை. நேற்றைக்கு மருத்துவமனைக்கு அருகில் பார்த்ததில் இருந்தே இப்படித்தான் அழு கிறாள்'' என்றார் பாபா. தொடர்ந்து, ''நாம தேடிப் போகும்போது, அவரே வந்து தரிசனம் கொடுக்கிறாரேன்னு நினைச்ச தால வந்த அழுகை இது. சரிதானே..?'' என்று, சிரித்துக்கொண்டே கேட்டார். சிலிர்த்துவிட்டோம், நாங்கள்!

அன்று தொடங்கி, இதோ... புட்டபர்த்தி ஆஸ்ரமத்திலேயே தங்கி, இன்றைக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறோம். எங்களுக்கு எல்லாமே சாயிபாபாதான்!

பானு வெங்கடேஷ், புட்டபர்த்தி

- அற்புதங்கள் தொடரும்

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!