Published:Updated:

தினம் ஒரு திருப்பாவை - 3 ஓங்கி உலகளந்த உத்தமன் யாரோ?#MargazhiSpecial

தினம் ஒரு திருப்பாவை - 3 ஓங்கி உலகளந்த உத்தமன் யாரோ?#MargazhiSpecial
தினம் ஒரு திருப்பாவை - 3 ஓங்கி உலகளந்த உத்தமன் யாரோ?#MargazhiSpecialஆண்டாள் தான் பாடிய திருப்பாவைப் பாசுரங்களில், பகவானின் பல அவதாரங்களையும் குறிப்பிட்டுப் பாடி இருக்கிறாள். திருப்பாவையின் மூன்றாவது பாசுரத்தின் முதல் அடியில், 'ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி' என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருப்பது பகவானின் வாமன அவதாரத்தைத்தான் என்று பலரும் நினைக்கலாம். அதுவும் சரிதான். ஆனால், இங்கே ஒரு விஷயத்தைப் பார்க்கவேண்டும். ஆண்டாள், தன்னையும் தன்னுடைய தோழிகளையும் கோபிகைகளாக பாவித்து பகவான் கிருஷ்ணனின் அருளைப் பெற பாடிய பாசுரங்கள்தான் திருப்பாவை பாசுரங்கள். எனவே, ஓங்கி உலகளந்த உத்தமன் என்று ஆண்டாள் பாடியிருப்பது பகவான் கிருஷ்ணரைத்தான் என்றும் சொல்லலாம். மேலும் அந்த உத்தம கிருஷ்ணனின் புகழைப் பாடி நோன்பு இருப்பதால் ஏற்படக்கூடிய பலன்களையும் அழகுபட விவரிக்கிறாள்.

        ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
        நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
        தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
        ஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள
        பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
        தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
        வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
        நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!


ஓங்கி உலகளந்த உத்தமன் புகழைப் பாடி நீராடி, பாவை நோன்பு இருந்து வழிபட்டால், தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பொழியும். அதாவது எந்த ஒரு சேதத்தையும் பயிர்களுக்கோ, மனிதர்களுக்கோ, இதர ஜீவராசிகளுக்கோ ஏற்படுத்தாதபடி அளவோடு மழை பெய்யுமாம். அப்படி மழை வளத்தால் வயல்களில் செழித்து வளர்ந்திருக்கும் நெற்பயிர்களின் ஊடாக தேங்கி இருக்கும் நீரில் மீன்கள் துள்ளி நீந்தியபடி இருக்குமாம். தேன் நிறைந்த பூக்களில் எல்லாம் தேனைப் பருகுவதற்காக திரிந்துகொண்டிருக்குமாம். வீடுகளில் கட்டப்பட்டு இருக்கும் பசுக்கள்கூட, தங்கள் கன்றுக்கு ஊட்டியது போக, கறப்பவர்களுக்கு அவர்களுடைய குடம் நிறையும்படி பாலமுதைப் பொழியுமாம். கிருஷ்ண பக்தியானது இப்படியான வளங்களையும், நீங்காத செல்வங்களையும் நமக்குத் தருமாம். நீங்காத செல்வம் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, வாழ்க்கையின் சுகபோகங்களை மட்டுமல்ல, நிறைவானதும் அதற்கு மேல் எதுவும் இல்லாததுமான பகவான் கிருஷ்ணரின் திருவடிகள் என்னும் செல்வத்தையே ஆண்டாள் நீங்காத செல்வம் என்று சிறப்பித்துக் கூறுகிறாள்.


ஓங்கி உலகளந்த உத்தமன் என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருப்பது பகவான் கிருஷ்ணரைத்தான் என்பது எப்படி என்று பார்ப்போம்.
பகவான் வாமனனாக வந்தபோது, சூழ்ச்சியினால்தான் மகாபலியிடம் மூன்றடி யாசகமாகக் கேட்டார். தான் சொல்லியும் கேட்காமல் தானம் கொடுக்க மகாபலி முற்பட்டபோது, வண்டின் உருவம் கொண்டு கமண்டலத்துக்குள் புகுந்துகொண்டு தடுக்க முயற்சி செய்த சுக்ராச்சாரியாரின் ஒரு கண்ணை தன் தர்ப்பை நுனியால் சேதப்படுத்தவும் செய்தார். அப்படி சூழ்ச்சியினால் யாசகம் பெற்ற வாமன அவதாரத்தை எப்படி உத்தமன் என்று ஆண்டாள் குறிப்பிட்டு இருப்பாள்? மேலும் அவள் பகவான் கிருஷ்ணரைப் பற்றித்தான் பாடுகிறாள் என்பதையும் நாம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
சரி, பகவான் கிருஷ்ணரை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று அழைப்பது எப்படி பொருந்தும் என்று பார்ப்போம்.
ஓங்கி உலகளந்த என்றால், ஓங்கி உயர்ந்து தன் திருவடிகளால் உலகத்தையே அளப்பது என்பது மட்டுமே பொருள் இல்லை. பிரபஞ்சம் எங்கும் வியாபித்து இருப்பதும்கூட - அதாவது விசுவரூபம் என்பார்களே அதுவும்கூட உலகத்தை அளந்தது போலத்தான். அப்படி பகவான் கிருஷ்ணர் பிரபஞ்சத்தையே தம்முள் அடக்கியவராக பலமுறை காட்சி தந்திருக்கிறார்.

சிறு குழந்தையாக இருந்து மண்ணை உண்டபோது, யசோதை வாயைத் திறந்து காட்டுமாறு மிரட்டியபோது, தன்னுடைய சிறு வாயினுள் பிரபஞ்சம் முழுவதையும் காட்டிய லீலை நமக்குத் தெரிந்ததுதானே; அதேபோல், பாண்டவர்களுக்காக தூது சென்றபோது, கௌரவ சபையில் திருதராஷ்டிரனுக்கு தன்னுடைய விசுவரூப தரிசனம் தந்ததும் நமக்குத் தெரிந்ததுதான். நிறைவில் குருக்ஷேத்திர போர்க்களத்தில் அர்ஜுனன் போர் செய்யத் தயங்கி நின்ற வேளையில், அவனுக்கு தன்னுடைய விசுவரூப தரிசனம் காட்டி கீதோபதேசம் செய்ததும் நமக்குத் தெரிந்ததுதான். அந்த வகையில் ஆண்டாள், 'ஓங்கி உலகளந்த உத்தமன்' என்று குறிப்பிட்டு இருப்பது பகவான் கிருஷ்ணரைத்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
இதுபற்றி அஹோபில மடம் 44-வது பட்டம் ஜீயர் சுவாமிகள் தம்முடைய திருப்பாவை உரையில் ஒரு சம்பவத்தைக் கூறி இருக்கிறார். (இவர்தான் திருவரங்கம் பெரிய கோபுரத்தை தம்முடைய முதிர்ந்த வயதிலும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் கட்டியவர்)
அர்ஜுனனுக்கு தினமும் சிவபூஜை செய்யும் வழக்கம் இருந்தது. பாரதப் போர் நடக்கும் போது அர்ஜுனனுக்கு சிவ பூஜை செய்யும் நேரம் நெருங்கிவிட்டது. அவன் உடனே கிருஷ்ணரிடம்," கிருஷ்ணா! நான் தற்போது சிவபூஜை செய்யவேண்டும்'' என்று கூறினான். அதற்கு கிருஷ்ணன்,"பாதி யுத்தத்தில் செல்வது உசிதமில்லை. எனவே மிகவும் அவசியமானால் இங்கேயே செய்" என்று கிருஷ்ணன் தன் திருவடியைக் காட்டினார். அவரின் திருவடிக்கு பூமாலையை சாற்றி அன்றைய தின பூஜையை முடித்தான். அடுத்த நாள் பூஜை நேரத்தில் தன்னுடைய பெட்டியில் இருந்த சிவபெருமானின் விக்கிரஹத்தை எடுத்தபோது, சிவபெருமானுடைய திருவுருவத்தில் முன் தினம் அர்ஜுனன் பகவான் கிருஷ்ணருக்கு அர்ப்பணித்த மலர்மாலை இருந்தது. 'தீர்த்தன் உலகளந்த திருவடிமேல் பூந்தாமம் சேர்த்தியவையே' என்று ஆழ்வார் பாடிய வழியிலேயே ஆண்டாள் பகவான் கிருஷ்ணரை ஓங்கி உலகளந்த உத்தமன் என்று பாடி இருக்கிறாள்.
நான்காவது பாசுரத்தில் ஆண்டாள் பகவான் கிருஷ்ணரை, 'ஆழிமழைக் கண்ணா' என்று அழைக்கிறாள். அதன் பொருளை நாளை பார்ப்போம்.


க.புவனேஸ்வரி