Published:Updated:

தினம் ஒரு திருப்பாவை - 5 பாவங்கள் நீங்க ஆண்டாள் காட்டும் வழி #MargazhiSpecial

தினம் ஒரு திருப்பாவை - 5  பாவங்கள் நீங்க ஆண்டாள் காட்டும் வழி #MargazhiSpecial
தினம் ஒரு திருப்பாவை - 5 பாவங்கள் நீங்க ஆண்டாள் காட்டும் வழி #MargazhiSpecial

தினம் ஒரு திருப்பாவை - 5 பாவங்கள் நீங்க ஆண்டாள் காட்டும் வழி #MargazhiSpecial


மனிதர்களாகிய நாம் செய்யும் வினைப்பயன்களால்தான் நமக்குப் பிறவி ஏற்படுகிறது. அப்படி நாம் எடுத்த இந்தப் பிறவியிலும் நாம் தெரிந்தும் தெரியாமலும் பாவங்கள் பல செய்கிறோம். அப்படி நாம் செய்யும் பாவங்கள் மட்டுமல்லாமல், இனி நாம் அறியாமல் செய்யப்போகும் பாவங்களும் நீங்குவதற்கு ஆண்டாள் மிக அருமையான, கடைப்பிடிப்பதற்கு எளிதான ஒரு வழியை நமக்குக் காட்டி இருக்கிறாள். தூய மனதினை உடையவர்களாக நாம், பகவான் கிருஷ்ணனுடைய புகழை வாய் மணக்க மணக்கப் பாடி, அவனை மனதால் தியானித்தாலே போதும் நாம் செய்த பாவங்களும்,இனி அறியாமல் செய்யப்போகும் பாவங்களும் தீயில் பட்ட பொருட்களைப் போல் பஸ்பமாகிவிடுமாம். எத்தனை எளிமையான வழியை நமக்கு அழகாகக் காட்டிவிட்டாள் ஆண்டாள்?!


பகவான் கிருஷ்ணன் தான் வடமதுரையில் அவதரித்தபோது, அங்கே புனித நதியாக புண்ணியம் சேர்த்துக்கொண்டு இருந்த யமுனை நதிக்கு மேலும் புனிதம் சேர்த்துவிட்டாராம். திருப்பாவையின் 5-வது பாடலில் ஆண்டாள், மார்கழி நோன்பின்போது தாங்கள் வழிபடப்போகும் பகவான் கிருஷ்ணரின் மகிமைகளை தன்னுடைய தோழியர்களுக்குக் கூறி, அவர்களை எழுப்புவது போல் அமைந்திருக்கிறது.


        மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
        தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
        ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கை,
        தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
        தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது,
        வாயினாற் பாடி மனத்தினாற் சிந்திக்க,
        போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
        தீயினில் தூசாகும் செப்பேலோ ரெம்பாவாய்.


மாயங்கள் செய்வதில் வல்லவனும், அழியா புகழுடைய நகரமான வடமதுரையில் அவதரித்தவனும், தான் அங்கே அவதரித்தபோது ஏற்கெனவே அங்கே பாய்ந்துகொண்டிருந்த யமுனையுடன் வைகுந்தத்தில் இருக்கும் விரஜா நதியை  கலக்கச் செய்து, அந்த நதியை மேலும் புனிதப் படுத்தியவனும் பகவான் கிருஷ்ணனே.


தேவகியின் மணி வயிற்றில் அவதரித்து, அவளை பிரகாசிக்கச் செய்தவன் கண்ணன். அவனே ஆயர்குலத்துக்கு ஓர் ஒப்பற்ற அணியாகத் திகழ்பவன்.தேவகியின் வயிற்றில் அவதரித்து அவளுக்கு புகழ் சேர்த்த கண்ணன், தன்னை வளர்க்கும் பெரும் பேற்றினை அடைந்த யசோதையிடமும் கட்டுண்டு, அவளையும் புகழ் சேர்த்தான். அதற்காகவே அவன் புரிந்த லீலைகள் எண்ணற்றவை. எப்போது பார்த்தாலும் கோபிகை எவர் வீட்டுக்காவது சென்று வெண்ணெயைத் திருடித் தின்பதும், கோபிகைகள் தண்ணீர்ப் பானை சுமந்து செல்லும்போது கல்லெறிந்து உடைப்பதும் என்று அவன் புரிந்த குறும்புகள் கோபிகைகளை பாடாய்ப்படுத்தின. ஒரு கட்டத்தில் கண்ணனின் தொல்லைகள் தாங்கமாட்டாமல், கண்ணனின் தாய் யசோதையிடம் புகார்களை அடுக்கினர். கண்ணனின் குறும்புகளால் அடுக்கடுக்கான புகார்கள் வரவே, யசோதை அவனை வீட்டில் கட்டிப்போட்டு விடுவது என்று முடிவு செய்து, ஒரு கயிற்றை எடுத்து வந்தாள்.


அவள் கொண்டு வந்த கயிற்றில் கண்ணன் கட்டுப்படவில்லை; அவள் மேலும் மேலும் கயிறுகளைப் பிணைத்து கண்ணனைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தாள். ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய், 'ஹே, பகவானே! இந்த பிள்ளையால்தான் எனக்கு எத்தனை தொந்தரவு? இவனைக் கட்டப் பார்த்தாலும் முடியமாட்டேன் என்கிறதே' என்று சலித்துக்கொண்டாள். இனியும் அவளை சிரமப்படுத்த விரும்பாத கண்ணன் கடைசியில் ஒரு வழியாக யசோதையின் கயிற்றில் கட்டுண்டான். ஒரு வழியாக யசோதை அவனை ஓர் உரலில் கட்டியே விட்டாள். யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்டவனாக யசோதைக்கும் பெருமை சேர்த்துவிட்டான்.


பகவானே என்று யசோதை அலுத்துக்கொண்டதுமே, அவளுக்குக் கட்டுப்பட்டுவிட்ட கண்ணனை, அவனுடைய புகழை தூய மனம் கொண்டவர்களாக நாம் பாடித் தொழுதால், அவன் நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும், தீயிடைப் பட்ட பொருள் பஸ்பமாகி விடுவதுபோல் பஸ்பமாக்கி விடுவான். எனவே, தோழியர்களே! வாருங்கள். புனிதமான இந்த மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில் நீராடி அவனைப் போற்றி பணிந்து வணங்குவோம் என்று ஆண்டாள் அழைக்கிறாள்.


நாம் செய்த பாவங்கள் கண்ணனின் புகழ் பாடி அவனை நினைத்ததுமே அகன்றுவிடுகிறது. கண்ணனின் புகழ் பாடி நாம் அவன் நினைவில் லயித்திருக்கும்போது, நம்மால் எப்படி பாவங்கள் செய்யமுடியும்? ஆனாலும், நம்மை அறியாமல் செய்யும் பிழைகளையே 'புகுதருவான் நின்றனவும்' என்று ஆண்டாள் குறிப்பிடுகிறாள்.


இப்படி சொல்லியும் ஆண்டாளின் தோழியர் எழுந்திருக்கவில்லை. பொழுது புலர ஆரம்பித்துவிட்டது. விடியலின் நிகழ்வுகளைஅடுத்த பாடலில் விவரித்து தோழியரை துயில் எழுப்புகிறாள் ஆண்டாள். எப்படி..?


க.புவனேஸ்வரி
 

அடுத்த கட்டுரைக்கு