Published:Updated:

கோலங்கள் வாழ்வில் நிகழ்த்தும் ஜாலங்கள்! #MargazhiSpecial

கோலங்கள் வாழ்வில் நிகழ்த்தும் ஜாலங்கள்! #MargazhiSpecial
கோலங்கள் வாழ்வில் நிகழ்த்தும் ஜாலங்கள்! #MargazhiSpecialஆதிகாலை வேளையிலேயே பெண்கள் துயில் எழுந்து வீட்டின் வாசலில், தினமும் கோலம் போடுவதால், அந்த  வீட்டில் சுபநிகழ்ச்சிகள் தொடர்ந்து  நடப்பதற்குக் குறைவே இருக்காது.  நன்மைகள் யாவும் எளிதாக அவர்களின் இல்லம் தேடி வந்தடையும். அதுவும் குறிப்பாக மார்கழி மாதத்தில் வீட்டுவாசலில் அழகழகான கோலம் போடுவதை முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.


மருத்துவ குணமுள்ள காற்று!


மார்கழி மாதப் பனிக்காற்று உடம்பெல்லாம் குளிர்ந்தாலும், உடலுக்கு ஆரோக்கியமானது மட்டுமல்ல மருத்துவகுணம் மிக்கது என்கிறது மருத்துவ உலகம். மார்கழி அதிகாலையில் வானமண்டலத்தில்  பூமியை ஒட்டிய காற்றுமண்டலத்தில் O3  என்று விஞ்ஞானிகள் குறிப்பிடும் தூய ஆக்ஸிஜன் அடர்த்தியாக வியாபித்து இருக்கும். அந்த நேரத்தில் வீட்டு வாசலில் கோலம் போடுவதால், தூய ஆக்ஸிஜன் நிரம்பிய காற்றை சுவாசிக்க முடிகிறது. அதனால்தான் நம் முன்னோர்கள், மார்கழி அதிகாலையில் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். மார்கழி மாதத்தில் எல்லா கோயில்களும் அதிகாலைவேளையிலேயே திறக்கப்பட்டு, தெய்வ வழிபாடுகளும் நாம சங்கீர்த்தனங்களும் நடந்துகொண்டிருக்கும். இதேபோல்  வீடுகளையும் தூய்மைப்படுத்தி, வீட்டு வாசலில் கோலமிட்டால் லட்சுமி கடாட்சம் அந்த வீட்டுக்கு தானாக வந்து விடும்.


மார்கழியை  அடுத்து வருகிற தை மாதம், அந்தக் குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்போது தடைகள் ஏற்படாமல் இருக்க, ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பதும் ஐதீகம்.
மூம்மூர்த்திகளின் அருளாசி!


 மார்கழி மாதம் என்று மட்டுமில்லாமல் வருடத்தின் எல்லா நாட்களிலும் கோலம் போடும் போது, மும்மூர்த்திகளின் அருளாசி அந்த இல்லத்துக்கு நிச்சயம் கிடைக்கும். கோலமாவின் நிறம் வெண்மை. இது மும்மூர்த்திகளில் ஒருவரான  பிரம்மாவை அழைக்கிறது. கோலம் போட்டபிறகு அந்தக் கோலத்தைச் சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது. கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்துக்கு அழகு சேர்ப்பதற்காக பசுஞ்சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிப்பூவை வைப்பார்கள். பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியைக் குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்துக்கு வரவேண்டுமென  அழைக்கிறது. இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்குக் கிடைக்கிறது.


இரட்டைக்கோடுகள்


 கோலம் போடும் போது இரட்டைக்கோடுகளாக கோலம் போடவேண்டும். ஒரு கோடு மட்டும் வரைந்து கோலம் போடுவது அசுபகாரியங்களுக்குத்தான் என்கிறது சாஸ்திரம்.  தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது.  பொதுவாக, தெய்வங்களின் சின்னங்களை வீட்டின் வாசலில் கோலமாகப் போடக்கூடாது. காரணம், அந்தக் கோலங்களை யாராவது தெரியாமல் மிதித்துவிட்டாலும் பாவம் சேரும். அந்த இல்லத்தில் இருப்பவர்களுக்கும் தோஷம் ஏற்படும்.
இறைவனின் சக்கர சின்னங்களை பூஜைஅறையில் மட்டும்தான் கோலமாக போட வேண்டும். வாசலில் போடக்கூடாது. வெள்ளிகிழமையிலும் பௌர்ணமி தினங்களிலும், தாமரைப்பூ கோலம் போட்டால், ஸ்ரீலஷ்மி கடாட்சம் கிடைக்கும். 'குழந்தை பாக்கியம் இல்லாதவர்களின் வீட்டில் தினமும் அழகழகான கோலம் போடுங்கள், அந்தக் கோலத்தைக் கலைத்து விளையாட ஒரு மழலை பிறக்கும்' என்பது நம் முன்னோர் வாக்கு.


தமிழர்களது பண்பாட்டில் ஒன்றான கோலம் பல்வேறு வகையாக வரையப்படுகின்றன. மாக்கோலம் (அரிசி மாவு), புள்ளிக் கோலம், இழைக் கோலம், சிக்குக்கோலம், அங்கக்கோலம், மணற்கோலம், வெள்ளைக்கல் மாவுக்கோலம், பூக்கோலம், பயறுக்கோலம் மற்றும் ரங்கோலி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. கோலத்தை எடுப்பாக காட்டுவதற்கு காவி நிறத்தையும் பயன்படுத்துவார்கள்.


சுபா கண்ணன்