Published:Updated:

தினம் ஒரு திருப்பாவை - 8 தேவாதி தேவனைப் போற்றுவோம்! #MargazhiSpecial

தினம் ஒரு திருப்பாவை - 8 தேவாதி தேவனைப் போற்றுவோம்! #MargazhiSpecial
தினம் ஒரு திருப்பாவை - 8 தேவாதி தேவனைப் போற்றுவோம்! #MargazhiSpecial

மார்கழி நீராடி, பாவை நோன்பு கடைப்பிடித்து கோகுலத்து கிருஷ்ணரின் அருளைப் பெற விரும்பிய ஆண்டாள், மார்கழி அதிகாலைப் பொழுதில் எழுந்திருந்து தன்னுடைய தோழியர் வீடுகளுக்குச் சென்று ஒவ்வொருத்தியாக அழைக்கிறாள். வெறுமனே பெயர் சொல்லி அழைக்காமல், பாட்டு பாடி அழைக்கிறாள். ஒவ்வொரு பாடலிலும் கிருஷ்ணரின் லீலைகளை விவரித்து, அப்படிப்பட்ட கிருஷ்ணரின் அருளை நாம் பெறவேண்டாமா என்று கேட்டு தோழியை எழுப்புகிறாள். சென்ற பாடலில் தாங்கள் தலைவியாக ஏற்றுக்கொண்டவளை 'நாயக பெண்பிள்ளாய்' என்று அழைத்து எழுப்பியவள், இன்று தன்னுடைய ஒப்பற்ற அழகினால் எப்போதும் மகிழ்ச்சியுடன் காணப்படும் ஒரு பெண்ணை ஆண்டாள் எழுப்பும் பாடல் இது.

    கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,
    மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
    கூவுவான் வந்துநின்றோம், கோது கலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு,
    மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,
    ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்


''ஒப்பற்ற அழகைக் கொண்டதால் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் பெண்ணே! கீழ்வானம் வெளுத்துவிட்டது. எழுந்து வா, மார்கழி நீராடி பகவான் கிருஷ்ணரின் அருளை நாம் பெறலாம்'' என்று அழைக்கிறாள். ஆனால், அந்தத் தோழி எழுந்திருக்கவில்லை.
''பெண்ணே, பொழுது விடிந்துவிட்டது உனக்குத் தெரியவில்லையா என்ன? வீடுகளில் இருந்து மேய்ச்சலுக்கு அவிழ்த்துவிடப்பட்ட பசுக்களும், எருமைகளும் மேய்வதற்காக பரவலாகப் போவதைப் பார். இப்போதாவது பொழுது விடிந்துவிட்டது என்பதை தெரிந்துகொள். சீக்கிரம் எழுந்து வா. மார்கழி நீராடி பகவான் கிருஷ்ணரை வழிபடுவோம்'' என்று எழுப்புகிறாள்.


ஹும், அவள் எழுந்திருக்கவே இல்லை. ஆண்டாளுக்கு சலிப்பு ஏற்பட்டுவிடுகிறது. சற்று கோபத்துடனே, ''தோழி, மார்கழி நீராடி பகவானின் அருளைப் பெற புறப்பட்டுவிட்ட தோழியர்களைக்கூட போகவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டேன். அவர்களும் போனால் போகட்டும் என்று உனக்காக இங்கே வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சீக்கிரம் எழுந்து வா'' என்று அழைக்கிறாள். மற்ற தோழிகள் தனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும், அவள் எழுந்திருக்கவில்லை. இனி அவளை ஆசை காட்டித்தான் எழுப்பவேண்டும் என்று ஆண்டாள் முடிவு செய்துவிட்டாள்.

அதை இப்படிச் சொல்கிறாள்:

''பெண்ணே, நாம் மார்கழி நீராடி நாங்கள் பாடிப் பணியும் பகவான் கிருஷ்ணர் எப்படிப்பட்டவர் தெரியுமா? அவர் மாவாயைப் பிளந்தவர்; மல்லரை வாட்டியவர்'' என்கிறாள்.

மாவாயைப் பிளந்தவன் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, நாம் முன் பாடலில் பார்த்த கேசி அரக்கனை வதம் செய்த லீலையைத்தான்.
'மல்லரை வாட்டியவன் என்று ஆண்டாள் குறிப்பிடுவது, கிருஷ்ணர் கம்சன் அழைப்பின்பேரில் மதுராவுக்குச் சென்றபோது நடைபெற்ற ஒரு சம்பவத்தை தான் கிருஷ்ணனை அழிப்பதற்காக அனுப்பிய பூதனை, சகடாசுரன், கேசி என்று அத்தனை அரக்கர்களையும் கிருஷ்ணர் வதம் செய்துவிடவே, மிகுந்த அச்சம் கொண்ட கம்சன், கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவுக்கு வரச் செய்து எந்த வகையிலாவது அவர்கள் இருவரையும் அழித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டான்.

அக்ரூரரை அழைத்து, தான் தனுர் யாகம் நடத்த இருப்பதாகவும், அதற்கு கிருஷ்ண பலராமர்களை அழைக்க விரும்புவதாகவும் கூறி, அவர்களை அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்தான். கம்சனின் எண்ணம் அக்ரூரருக்குத் தெரியாது. அவரும் கோகுலத்துக்குச் சென்று கம்சனின் அழைப்பை கிருஷ்ண பலராமர்களிடம் தெரிவிக்கிறார்.


கிருஷ்ண பலராமர்களும் மதுராவுக்கு வருகின்றனர். தான் அன்புடன் வரவேற்கவேண்டிய கிருஷ்ண பலராமர்களைக் கொல்வதற்காக முஷ்டிகன், சாணூரன் என்னும் இரண்டு மல்யுத்த வீரர்களை அனுப்புகிறான். மல்யுத்தத்தில் மிகவும் வல்லமை கொண்ட அவர்கள் கிருஷ்ண பலராமர்களைக் கொன்றுவிடுவார்கள் என்பதில் கம்சனுக்கு அவ்வளவு நம்பிக்கை. ஆனால், நடந்ததென்னவோ, கிருஷ்ணர் அந்த மல்யுத்த வீரர்களை வதம் செய்துவிட்டார். இதைத்தான் ஆண்டாள் மல்லரை மாட்டிய தேவாதி தேவன் என்று குறிப்பிடுகிறாள்.
அப்படி கிருஷ்ணரின் லீலைகளைக் கூறி, நாம் மார்கழி நீராடி சென்று அந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனான தேவாதிதேவனை வழிபட்டால், அவன் நம்முடைய தேவைகள் எதுவென்று ஆராய்ந்து அறிந்து நமக்கு அருள்புரிவான் என்கிறாள். இப்படி ஆண்டாள் ஆசை வார்த்தைகள் கூறியதுமே அந்தத் தோழி எழுந்து வருகிறாள்.

அவளையும் தங்களுடன் சேர்த்துக்கொண்டு அடுத்த தோழியை எழுப்பச் செல்கிறாள் ஆண்டாள்.


க.புவனேஸ்வரி