Published:Updated:

காஞ்சி மகா பெரியவா ஆராதனை தினம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
காஞ்சி மகா பெரியவா ஆராதனை தினம்
காஞ்சி மகா பெரியவா ஆராதனை தினம்

காஞ்சி மகா பெரியவா ஆராதனை தினம்


உலக மக்களுக்கு தர்ம நெறிகளை உணர்த்தவும், அவர்களுக்கு ஆன்மிக ஞானத்தை உபதேசிக்கவும் காலம்தோறும் எண்ணற்ற மகான்கள் நம்முடைய புண்ணிய பூமியில் அவதரித்து இருக்கின்றனர். மனிதர்கள் அனைவரிடமும் சமத்துவம் ஏற்படவேண்டும் என்பதற்காக, அத்வைதம் என்னும் ஒப்பற்ற தத்துவத்தை நமக்கு உபதேசித்தவர் ஜகத்குரு ஆதிசங்கரர். தன்னுள் இருக்கும் ஆத்மாதான் மற்றவர்களிடத்திலும் உள்ளது என்னும் உணர்வை மக்களிடம் ஏற்படுத்தத்தான் ஆதிசங்கரர் அத்வைத தத்துவத்தை உபதேசித்தார்.
அவருடைய அம்சமாக அவதரித்து, பக்தர்களால் 'நடமாடும் தெய்வம்' என்று போற்றி வணங்கப்பெற்றவர் காஞ்சி மஹா பெரியவா. அத்வைத தத்துவத்தின் மரபில் வந்த மஹா பெரியவா, தம்முடைய வாழ்க்கையிலும் அதைக் கடைப்பிடித்ததுடன், மற்றவர்களுக்கும் உபதேசித்தார்.
அவருடைய ஆராதனை தினம் இன்று (25.12.16) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அத்வைதம் தழுவிய அவருடைய சில அருளாடல்களைப் பார்ப்போம்.


எல்லோரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்...


ஒருமுறை மஹா பெரியவா 1924ம் ஆண்டின் இறுதியில் தஞ்சைக்கு அருகில் வல்லம் என்ற ஊருக்கு விஜயம் செய்தார்கள். அது இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகிய பலரும் வாழும் ஊர். இந்துக்களிடையே ஹரிஜனங்களும் பெரும் அளவில் இருந்தனர். இருப்பினும் அனைவரும் ஒன்று கூடி சுவாமிகளுக்குக் கோலாகலமான வரவேற்பை அளித்தார்கள். சுவாமிகள் தங்கள் ஊருக்கு விஜயம் செய்வதால் பசுமை நிறைந்து செழுமை ஏற்படும் என்று மக்கள் நம்பினார்கள். பலமணி நேரம் ஊர்வலம் நடைபெற்றது. அதன் முடிவில் சுவாமிகள் எல்லா மதத்தினரும் ஏற்கும்படியான உபதேச மொழிகளைக் கூறி அருளினார். எந்த மதத்தினராயினும் அவரவர் மதத்துக்கேற்ற கோட்பாடுகளுடன் கடவுளைத் தொழ வேண்டும் என்றும், தங்களுக்குள்ளே ஏற்படும் மன வேறுபாடுகளைத் தங்களுக்குள்ளேயே சுமுகமாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்கள். சுவாமிகளை வரவேற்பதிலும் வணங்குவதிலும் மற்ற மதத்தினர் காட்டிய ஈடுபாட்டைப் பெரிதும் பாராட்டினார். ஹரிஜன மக்கள் திருநீறு பூசி முகமலர்ந்து வரவேற்று வழிபட்டது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இன்றைய சூழ்நிலையில் நினைத்துப் பார்த்தால் இது எவ்வளவு ஒற்றுமை உணர்வு என்பது தெரிகிறதல்லவா? அதை அன்றே மக்களிடம் ஏற்படுத்திக் காண்பித்தார்கள் சுவாமிகள்.


அப்போது தஞ்சையில் எச்.எம்.ஹூட் என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்தார். அவர் வல்லத்துக்கு வந்து இத்தகைய வரவேற்பைப் பெற்று, எல்லா மதத்தினரும் மரியாதையுடன் நடந்து கொள்ளும் பெரியவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்பினார். தம்மிடம் பணிபுரியும் இந்து அலுவலர் ஒருவரின் மூலம் சுவாமிகளைப் பற்றித் தெரிந்து கொண்டார். மேலும், திருவையாற்றில் மக்கள் வெள்ளத்தால் அவதியுற்ற போது அவர்களுக்கு உடனிருந்து உதவியது அவர்தாம் என்பதையும் தெரிந்து கொண்டார். ஆகையால் சுவாமிகளைத் தரிசிக்க ஆசைப்பட்டார். சுவாமிகளும் அந்த வேண்டுகோளை ஏற்று, அன்று மாலை கலெக்டர் வந்து தம்மைச் சந்திக்கலாம் என்று அனுமதி கொடுத்தார்கள்.


மாலையில் கலெக்டர் வந்தபோது சுவாமிகள் திண்ணை மீது அமர்ந்து கொண்டார்கள். கலெக்டர் கீழே ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள். கலெக்டர் ஆங்கிலத்தில் பேச, அதை ஒருவர் மொழி பெயர்க்க சுவாமிகள் தமிழில் உரையாடினார்கள். சுமார் ஒரு மணி நேரம் கலெக்டர் சுவாமிகளிடம் அரசாங்க விஷயமாகவும், பொதுப் பிரச்னைகள் குறித்தும், மடத்தின் அலுவல்களைப் பற்றியும் பேசினார்கள். பல விஷயங்களையும் தெரிந்து உணர்ந்து கொண்ட கலெக்டர், புறப்பட்டுப் போகும்போது, "இது ஓர் அபூர்வ சந்திப்பு. என் வாழ்நாளில் இந்த அனுபவத்தை ஒரு நாளும் மறக்க மாட்டேன்" என்று கூறிவிட்டுச் சென்றார்.


தேசபக்தர்களிடம் சுவாமிகளின் பரிவு...


அன்றைய கல்கத்தாவில், மிட்னாபூர் மாவட்டத்தில் சுவாமிகள் முகாமிட்டு இருந்தார். மிட்னாபூர் சிறையில் தேச பக்தர்கள் சிலர், பெரியவர்களும், இளைஞர்களுமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் சுவாமிகள் அந்த ஊருக்கு விஜயம் செய்திருப்பதைக் கேள்விப்பட்டு அவரைத் தரிசித்து ஆசிபெற எண்ணினார்கள். அதற்காகச் சிறிது நேரம் வெளியே சென்றுவர அனுமதியும் கேட்டுச் சிறைச்சாலையின் பொறுப்பு அதிகாரிக்கு விண்ணப்பம் கொடுத்தார்கள். அவர் ஒரு ஆங்கிலேயர். ஆனாலும் மாற்று மதத்தவரின் ஆன்மிக உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பவர். எனவே, அவரைப் பார்த்து ஆசி பெற விரும்பும் அவர்களது உணர்வையும் மதித்தார். ஆகையால் அவர்களைக் குறித்த நேர அளவுக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்க ஒப்புக் கொண்டார். அதில் சில முக்கியமான நிபந்தனைகளையும் போட்டார். ''காவல் கைதிகளுடன் போலீசார் துப்பாக்கியும் கையுமாக வருவார்கள். தப்பி ஓட முயன்றால் சுட்டுக் கொல்லப்படுவார்கள். மாலை ஆறு மணிக்குள் அவர்கள் திரும்பி வந்து விட வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் அவர்கள் அதற்கு மேல் வெளியே இருக்கக் கூடாது'' என்று நிபந்தனை விதித்தார். இவற்றை ஏற்றுக்கொண்டு அந்தக் கைதிகள் காவலர் துணையுடன் சுவாமிகள் தங்கி இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.


அப்போது மாலை ஐந்தரை மணி இருக்கும். அப்போது பார்த்து சுவாமிகள் நித்யபூஜையை முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுக்க, ஒரு தனிமையான இடத்துக்குச் சென்றிருந்தார்கள். அதனால் அவர்களுக்குத் தரிசனம் கிடைக்கவில்லை. மாலை ஆறு மணி வரையில் பொறுமையாகக் காத்துக் கொண்டிருந்தார்கள். அப்போதும் சுவாமிகள் வராததால், அதற்கு மேல் தங்கினால் காவலர்கள் தங்களைத் தப்பி ஓட முயலுவதாக எண்ணிச் சுட முயலக்கூடும் என்று எண்ணினார்கள். மிகுந்த மன ஏமாற்றத்துடன் சிறைச்சாலைக்குத் திரும்பத் தொடங்கினார்கள். சில நிமிடங்களில் சுவாமிகள் திரும்பி வந்துவிட்டார். நடந்ததை அறிந்ததும் அவருடைய மனம் அவர்களுடைய ஏமாற்றத்தை எண்ணி வேதனைப்பட்டது. உடனே ஒரு பணியாளரை அனுப்பி அவர்களைத் திரும்ப அழைத்து வரும்படி சொல்லி அனுப்பினார். அதன்படி அவர்கள் யாவரும் மிகுந்த ஆவலோடு திரும்பி வந்தார்கள். வந்து சுவாமிகளை வணங்கியவர்கள் தங்களுக்கென்று எதையும் கேட்கவில்லை. "இந்திய நாடு சுதந்திரம் அடைய வேண்டும். இந்திய மக்கள் துன்பம் நீக்கி நன்றாக வாழ வேண்டும். அதற்குச் சுவாமிகள் ஆசி கூறி அருள வேண்டும்!" என்றுதான் கேட்டுக் கொண்டார்கள். சுவாமிகள் அவர்களது தேசப் பக்தியைக் கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படியே ஆசி கூறி அருளினார். சுவாமிகளின் கருணையைக் கண்டும், தேச விடுதலைக்காகப் போராடும் அந்த விடுதலை வீரர்களின் தியாக மனப்பான்மையைக் கண்டும் அங்கே இருந்த மக்கள் அனைவரும் பரவசத்துடன் நெகிழ்ச்சியும் அடைந்தார்கள்.

 
மக்கள் சேவையே மகேஸ்வர பூஜை...


சுமார் முப்பதாண்டுகளுக்கு முன் ஆசாரிய சுவாமிகள் தஞ்சை மாவட்டத்தில் யாத்திரை செய்து வரும்போது குடவாசலிலிருந்து கொரடாச்சேரிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் திருக்களம்பூர் என்ற பாடல் பெற்ற சிவ ஸ்தலத்துக்கு கிழக்கே சாலை ஓரத்தில், அந்த சுற்றுப்புறத்தைச் சேர்ந்த ஹரிஜன மக்கள் எல்லோரும் மஹா பெரியவாளை தரிசிப்பதற்காகக் குழுமியிருந்தனர். தீனரிலும் தீனரான அம்மக்கள் தங்கள் சேரியிலேயே வசூல் செய்த சிறு தொகையுடன், பழம் புஷ்பம் முதலியவற்றையும் ஆசாரிய சுவாமிகளுக்குச் சமர்ப்பிப்பதற்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.


 மஹா பெரியவா அவர்களுக்கெல்லாம் திவ்விய தரிசனம் தந்தார். அந்த எளிய மக்கள் சமர்ப்பித்தக் காணிக்கையை மனமுவந்து ஏற்றுக் கொண்டார். அவர்கள் அளித்த திரவியத்தை எண்ணிப் பார்க்கச் செய்தார். உடனே அவ்விடத்திலேயே அதனைப் போல் பல மடங்கு தொகையை மடத்திலிருந்து எடுத்துச் சேர்த்து, அந்த ஹரிஜனங்கள் யாவருக்கும் வேஷ்டி, புடவைகள் வாங்கிவர உத்தரவிட்டார். உள்ளூரில் கடைகள் கிடையாது. மடத்துச் சிப்பந்திகள் குடவாசலுக்கே சென்றனர். 'அவர்கள் திரும்பிவர மிகவும் பொழுதாகுமே! அதன் பின் விநியோகம் செய்துவிட்டு, ஆசாரியர்கள் அடுத்த முகாமுக்குச் சென்று பூஜை முடிப்பதென்றால் சாயங்காலமாகிவிடுமே! பெரியவர்கள் அதன்பின்தானே ஆகாரம் கொள்வார்கள்?' என அடியார்கள் கலங்கினர். ஆனாலும், ஆசாரியர் இதை சற்றும் பொருட்படுத்தாமல் ஹரிஜனங்களின் க்ஷேமங்களைப்பற்றி அன்போடு விசாரித்துக் கொண்டேயிருந்தார்.


 மாலை நேரமான போதுதான் புடவை, வேஷ்டிகள் வந்து சேர்ந்தன. அவை ஹரிஜனங்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அந்த ஏழை மக்கள் அடைந்த ஆனந்தத்திற்கும், அதைக்கண்டு மஹா பெரியவா அடைந்த ஆனந்தத்துக்கும் எல்லையே இல்லை.


 "பூஜைக்குத்தான் மிகவும் நேரமாகிவிட்டது" என்று அருகிலிருந்த காரியஸ்தர் ஒருவர் கூறினார்.


மஹா பெரியவா சுற்றியிருந்த ஏழை மக்களையெல்லாம் அன்பொழுகப் பார்த்தார். பிறகு அந்த சிப்பந்தியைத் தமது கனிவு ததும்பும் கண்களால் நோக்கினார்.

 அன்பு வழியும் மதுரக்குரலில், "பூஜைக்கா, நேரமா? இதுதான் பூஜை" என்றார்.


இந்த நிகழ்ச்சியைப் பற்றிக் குறிப்பிட்ட சேங்காலிபுரம் ஶ்ரீஅனந்தராமதீட்சிதர், இதுபோன்ற உயர்ந்த பூஜையை தாம் எந்த சாஸ்திரத்திலும் படித்ததில்லை என்று கூறி இருக்கிறார்.


தொகுப்பு: க.புவனேஸ்வரி
 
  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு