Published:Updated:

பல்லாண்டு... பல்லாண்டு...

பல்லாண்டு... பல்லாண்டு...

பல்லாண்டு... பல்லாண்டு...

பல்லாண்டு... பல்லாண்டு...

Published:Updated:
பல்லாண்டு... பல்லாண்டு...

'இரவுக்கு வேண்டிய உணவைப் பகல் வேளையிலும், மழைக் காலத்துக்குத் தேவையான பொருட்களை மற்ற காலங்களிலும், முதுமைக்குத் தேவையானதை இளமையிலும் சேமித்து வைக்க வேண்டும். அது போன்றுதான்... மறுமைக்கு வேண்டிய புண்ணியத்தை இம்மையிலேயே சேர்த்துக்கொள்ள வேண்டும்!’

முதல் நாள் இரவு நகர்வலத்தின்போது, தான் சந்தித்த அந்தணர் ஒருவர் சொன்ன இந்த நல்லுரைகளை, வேதசாஸ்திரங்களில் சிறந்தவரான செல்வநம்பியிடம் கூறினான் பாண்டியன் சீமாறன் சீவல்லபன். அத்துடன் ''மறுமைக்குத் தேவையான புண்ணியத்தை இந்த ஜன்மத்திலேயே சேர்ப்பது எப்படி?'' எனக் கேட்டான்.

பல்லாண்டு... பல்லாண்டு...

''வேதமுடிவாகிய பரம்பொருள் இன்னது’ என்று அறிஞர்கள் மூலம் நிச்சயித்து, அவ்வழியில் புண்ணியம் சேர்க்கலாம்'' என்றார் செல்வநம்பி.  மன்னனும் அரசவையில் பொற்கிழி ஒன்றைக் கட்டி வைத்தான். உண்மைப் பொருளை உரைப்பவர் இந்தப் பொற்கிழியை அறுத்துச் செல்லலாம் என தேசமெங்கும் முரசறைவித்

தான். இறை சங்கல்பத்தால் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து ஒருவர் வந்து சேர்ந்தார். அவர் பெயர் விஷ்ணுசித்தர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவடபத்ரசாயியின் பேரருள் கைகூடிய அருளாளர்.

சகல வேதசாரத்தையும் இதிகாசத்தையும் மேற்கோள்கள் காட்டி, 'இதிகாசங்கள் சத்யமாக கூறிய ஆதிமூலம்- கேசவனே’ எனும் பேருண்மையை உரைத்தார். அதை ஆமோதிக்கும் வகையில் அவையின் தோரணத்தில் கட்டப்பட்ட பொற்கிழி தாழ்ந்தது!

அனைவரும் அவரைப் போற்றி வணங்கினர். மன்னவனும் மகிழ்ந்தான். அவரை, பட்டத்து யானையில் ஏற்றி நகர்வலம் வரச் செய்தான். இக்காட்சியைக் காணும்பொருட்டு, ஸ்ரீபூமி- நீளாதேவியருடன் கருடவாகனத்தில் எழுந்தருளினாராம் ஸ்ரீமகா விஷ்ணு. பெருமாளின் தரிசன எழில்கண்டு மகிழ்ந்த விஷ்ணு சித்தரும் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடியருளினார். அவரே, பெரியாழ்வாராகவும் புகழ் பெற்றார். கோதை ஆண்டாளின் வளர்ப்புத் தந்தையும் இவரே. கோதையை ஸ்ரீரங்கனுக்கு மணம் செய்துவைத்து, பெருமாளுக்கே மாமனார் ஆகும் பெருமையும் இவருக்குக் கிடைத்தது.

பெருமாளின் மீது திருப்பல்லாண்டு மட்டுமா?

மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி
ஆணிப் பொன்னால் செய்த வண்ணச் சிறு தொட்டில்
பேணி உனக்குப் பிரமன்விடு தந்தான்
மாணிக் குறளனே தாலேலோ-
வையம் அளந்தானே தாலேலோ...

- என்று வாமனன் உலகளந்த பெருமையைச் சொல்லி... மாணிக்கங்களும் வயிரமும் இடையிடையே பதிக்கப்பட்ட, அழகிய பொன்னாலான தொட்டிலை பிரம்மன் உனக்காகத் தந்திருக்கிறான்; வா, வந்து கண்ணுறங்கு... என்று கண்ணனுக்குத் தாலாட்டும் அல்லவா பாடியிருக்கிறார் பெரியாழ்வார்!

##~##
பெரியாழ்வாரின் ஐந்தாம் திருமொழி, கண்ணன் கோவர்த்தன கிரியைத் தூக்கிய மகிமையை பறைசாற்றுகிறது.

அட்டுக்குவி சோற்றுப் பருப்பதமும்
தயிர்வாவியும் நெய்யளறும் அடங்கப்
பொட்டத்துற்றி மாரிப் பகை புணர்த்த
பொருமா கடல் வண்ணன் பொறுத்த மலை
வட்டத் தடங்கண் மடமான் கன்றினை
வலைவாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்
கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்
கோவர்த்தனம் எனும் கொற்றக் குடையே

- வட்டமான அகன்ற கண்களை உடைய மான் குட்டி களை, குறமகளிர் தங்கள் வலையில் பிடித்து அவற்றின்மேல் அன்பு காட்டி, பஞ்சினைச் சுருள் போல் சுருட்டி (தாய் மானின் மடிக் காம்பு போல), அதைப் பாலில்

தோய்த்து மானின் வாயில் வைத்துப் பாலூட்டி வளர்ப் பார்கள். இப்படிப்பட்ட சூழலை உடையது கோவர்த்தன மலை. அது, வெற்றிக்கு அறிகுறியான குடையாகும் என்கிறார் ஆழ்வார். இப்படி 10 பாடல்கள் பாடுகிறார் கோவர்த்தனம் குறித்து. இந்தப் பாடல்களைப் பாடி வணங்கும் பக்தர் களுக்கு வைகுந்தம் வசப்படுமாம்!

ஜூலை மாதம் 10-ஆம் நாள் (ஆனி- 25) பெரியாழ்வாரின் திருநட்சத்திர திருநாள். அன்று  ஆலயம் செல் லுங்கள். படிக்கப் படிக்க... நிழலைப் போன்று எப்போதும் பெருமாளின் அருகில் இருக்கும் வரத்தைப் பெற்றுத் தரும், பெரியாழ்வாரின் பாசுரங்களைப் படித்து வழிபடுங்கள்; ஆழ்வாரின் ஆசியுடன் அரங்கனின் அருளும் குறைவின்றி கிடைக்கும்!

- திருமலை ராஜா