Published:Updated:

ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களைத் திறக்கலாமா?

ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களைத் திறக்கலாமா?
ஆங்கிலப் புத்தாண்டு அன்று நள்ளிரவில் கோயில்களைத் திறக்கலாமா?

ங்கிலப் புத்தாண்டு பிறப்பதையொட்டி, தமிழகத்தில் பல கோயில்கள் நடு இரவில் திறக்கப்பட்டு, விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு இறைவனின் அருள் வேண்டி பிரார்த்தனை செய்கின்றனர். தமிழகம் முழுவதும், லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்துகொண்டாலும், ‘நடுராத்திரியில் கோயில்களைத் திறப்பது தவறு’ என்று ஆன்மிகப்பெரியவர்கள் பலரும் கூறி வருகின்றனர். இது பற்றி சில ஆன்மிகப் பெரியவர்களிடமும் ஜோதிட பிரபலங்களிடமும் கேட்டோம்.


சொல்லின் செல்வன் பி.என் பரசுராமன் 


கோயிலில் நடை சாத்தப்பட்ட பிறகு, நட்ட நடுராத்திரியில் கோயிலைத் திறப்பது தவறு. எந்த ஆகம விதியிலும் இப்படிச் சொல்லப்படவில்லை. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் அங்குள்ள மக்கள் நள்ளிரவில் பிரார்த்தனை செய்வது வழக்கம். 'அவரவர் மார்க்கம் அவரவருக்கு' என்பதுதான் பொது விதி. அதனால் அதை நாம் கடைப்பிடிக்க வேண்டிய அவசியமில்லை.  


ஜோதிடர் சந்திரசேகரபாரதி                                       

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோயில்களுக்கு நள்ளிரவில் சென்று ஆண்டவனை பிரார்த்தனை செய்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று. சமீபகாலமாகத்தான் இந்தப் பழக்கம் மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

சிவ ஆகம விதிப்படி அர்த்தஜாம பூஜை முடித்து கோயிலைப் பூட்டி விட்டால், அதன் பிறகு கோயிலைத் திறக்கக் கூடாது. ஜோதிட சாஸ்திரப்படியும் மறுநாள் சூரிய உதயம்தான் ஒரு நாளின் தொடக்கமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. நள்ளிரவு பன்னிரண்டு மணி என்பது ஒருநாளின் முடிவு அல்ல. எனவே, நள்ளிரவு நேரத்தில் ஆலயங்களைத் திறப்பதும் தேவையில்லாமல் மக்கள் அங்கு காத்துக்கிடப்பதும் தேவையற்ற ஒன்று. சாஸ்திரசம்பிரதாயங்களுக்கு முரணான ஒன்றாகும்.கே. குமார சிவாச்சாரியார்
சிவ ஆகம விதிப்படி கோயில்களில் ஆறு கால பூஜைகள் நடைபெறும். அதாவது உஷத் காலம் என்று சொல்லக்கூடிய சூரிய உதயத்துக்கு முன்பாக விடியற்காலை 5.30 மணிக்கு முதற் கால பூஜையும், காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிக் கால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 7.30 மணிக்கு ஒரு கால பூஜையும், இரவு 9 மணிக்கு அர்த்தஜாம பூஜையும் நடைபெறுவது வழக்கம். ஆறுகால பூஜைகளும் முடிந்தபிறகு, கோயில் சாவிகளை காவல் மூர்த்தியான பைரவர் சந்நிதியில் வைப்பது வாடிக்கை. 


 அதன் பிறகு பட்டர்கள், ஆச்சார்யர்கள், ஆலய ஊழியர்கள் என அனைவரும் வெளியே வந்து விடவேண்டும். மறுநாள் அதிகாலையில்தான் கோயிலைத் திறக்கவேண்டும். இந்த நடைமுறைகள்தான் மன்னர் காலத்திலிருந்து இப்போதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், இவற்றையெல்லாம் மீறிவிட்டு, ஆங்கிலப் புத்தாண்டையொட்டி நள்ளிரவில் ஆலயங்களைத் திறப்பது முற்றிலும் தவறானது. 
இரவு 9 மணிக்கு, சுவாமிக்கு ‘பால் நிவேதனம்’ செய்யப்பட்டுவிட்டால் சுவாமியும் அம்பாளும் சயனத்தில் இருப்பதாக ஐதீகம். கருவறையும் ஓய்வில் இருக்க வேண்டும். இந்துசமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பெரும்பாலான கோயில்களில் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படுகிறது. ஒரு சில தனியார் கோயில்களில்தான், இந்த நள்ளிரவு பிரார்த்தனை நடைபெறுகின்றது.  கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாகத்தான் தமிழ்நாட்டில் இந்தப் பழக்கம் ஏற்ப்பட்டிருக்கிறது. இது தவறான முன்னுதாரணமாகும்.

வைணவப்பெருந்தகை அனந்த பத்மநாபன்:

ஆகம விதிப்படி நடைசாத்திய பிறகு நள்ளிரவில் கோயிலைத் திறப்பது தவறுதான். ஆனால், தன்னை நாடி, இதய சுத்தியுடன் வரும் பக்தர்களுக்காக எந்த நேரமாக இருந்தாலும், பகவான் அருள்பாலிக்கத் தயாராகத்தான் இருக்கிறார். திருமலையில் பெருமாள் ஒரு நாளில் அரை மணிநேரம்தான் ஓய்வெடுக்கிறார். எல்லா சட்டவிதிகளுக்கும் விதி விலக்குகள் உண்டு. 
கீதையில் கண்ணன், அர்ஜுனனிடம், 'பகவானுக்குத் தடையற்று பூஜைகளைச் செய்ய முடிகிறதா? எனக் கேட்டார். 'இல்லை எனக்கு நிறைய மனத்தடைகள் இருக்கு. பல சமயங்களில் நான் என்னுடைய வேலைகள், அபிலாஷைகள் இவற்றைப் பற்றியெல்லாம் நினைக்க ஆரம்பிச்சிடறேன்னு சொன்னார். நீ எந்த வேலை, என்ன கடமையை வேண்டுமானாலும் செய். ஆனால், எதைச் செய்தாலும், என்னை மனப்பூர்வமா நினைத்து செய்யும்போது, நான் அங்கே பிரசன்னமாகிவிடுவேன். என்னுடைய பக்தன் எங்கிருந்து கேட்டாலும், எப்படி கேட்டாலும், என்னை நினைத்துக் கேட்டால் நிச்சயம் நான் வருவேன்; அருள் தருவேன்' என்கிறார்.


தியாகய்யர் திருமலைக்கு தரிசனம் செய்ய வந்தபோது, சுவாமிக்கு திரையிடப்பட்டு இருக்கிறது. ஏமாற்றமடைந்த தியாகய்யர், 'திரை தீய ராதா...'என்று பாடினார். உடனே திரை அறுந்து விழ, சுவாமி தரிசனம் தருகிறார்.  இளைய தலைமுறையினரில் ஒரு பகுதியினர், பாதை மாறி, 'பப்பு'க்கும் 'பாரு'க்கும் போய்க்கொண்டிருக்கும் வேளை இது. அதைவிட, பெற்றோர்களுடன் சேர்ந்து கோயிலுக்குப் போவது அவர்களின் மனநிலையை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள நிச்சயம் உதவும். இது தவிர, நாம் அரசாங்க ரீதியாகவும் அலுவல் ரீதியாகவும் ஆங்கில காலண்டரைத்தான் கடைப்பிடிக்கிறோம். இன்றைக்கு தேதி என்ன என்று  கேட்கும்போது, ஜனவரி 1  என்றுதான் சொல்றோம். மார்கழி 17 என்று யாரும் சொல்வதில்லை. கால மாற்றங்களை எற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இதேமாதிரி தமிழ்ப் புத்தாண்டையும், தெலுங்கு வருடப்பிறப்பையும் கொண்டாட வேண்டும். ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடிவிட்டு நம்ம புத்தாண்டைக் கொண்டாடாமல் இருக்கக்கூடாது. எப்போதும் இறைசிந்தனையில் நிறைந்திருங்கள்.  பிறக்கும் புத்தாண்டு நாளில் மட்டுமல்ல, அது எந்த நாளும்  நம்மைக் காக்கும். 

 - எஸ்.கதிரேசன்