Published:Updated:

தேகம் கெடாத அதிசயம்... சித்தர் கோயில் அற்புதம்..! சுப்பையா சுவாமிகள் குருபூஜை திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
தேகம் கெடாத அதிசயம்... சித்தர் கோயில் அற்புதம்..! சுப்பையா சுவாமிகள் குருபூஜை திருவிழா!
தேகம் கெடாத அதிசயம்... சித்தர் கோயில் அற்புதம்..! சுப்பையா சுவாமிகள் குருபூஜை திருவிழா!

தேகம் கெடாத அதிசயம்... சித்தர் கோயில் அற்புதம்..! சுப்பையா சுவாமிகள் குருபூஜை திருவிழா!

சைவம் வலியுறுத்தும் ஜீவன் முக்தி, காய ஸித்தி இரண்டையும் பின்பற்றி காய ஸித்தி அடைந்திருக்கும் மகான்கள் பலர் தோன்றி இருக்கின்றனர். அப்படி தீயும் மண்ணும் சிதைக்காத உடலைப் பெற்றவர்களில் திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமிகள் பிரசித்தி பெற்றவர். காய ஸித்தி அடைந்த அவருடைய திருமேனிக்கு அவருடைய பக்தர்கள் ஆலயம் எழுப்பி வழிபட்டு வருகிறார்கள்.

சென்னையை சேர்ந்த உமாபதி என்பவர் சுப்பையா சுவாமிகளின் ஆன்மீக வரலாற்றினை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். அவரிடம் பேசினோம். “தாமிரபரணி ஆற்றின் கரையில் தென்பகுதியில் அமைந்திருக்கிறது கடையனோடை கிராமம். அந்த கிராமத்தில் வசித்து வந்த வள்ளிமுத்து-நாராயண வடிவு தம்பதியினர் தவம் பெற்று பெற்ற பிள்ளை சுப்பையா. 1908-ம் ஆண்டில் பிறந்த சுப்பையா இளமையில் ஸ்ரீவைகுண்டம் பள்ளியில் படித்து வந்தார். படிக்கும் காலத்திலேயே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒன்பது வைணவத் தலங்களுக்குச் செல்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தொலைவில்லி மங்களம் என்ற ஊரில் வாஸ்து யோகத்திற்கு புகழ்பெற்ற ராகு-கேது தலம் உள்ளது. அங்கு அடிக்கடி சென்று வருவதை வழக்கமாகிக்கொண்ட சுப்பையா, சில நேரங்களில் நள்ளிரவு வரை வணங்கிவிட்டு இரவு அங்கேயே தங்கிவிடுவார். பள்ளிப்படிப்பை முடித்தவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ.(வேதியியல்) படிக்க தொடங்கினார்.

ஆன்மிகத்தில் சித்தர் கலைகளில் முக்கியமான ஒன்று ரசவாதம். இந்த ரசவாதத்தால் இரும்பைப் பொன்னாக்க முடியும். அதுபோல் மூலிகைகளை வைத்து நமது உடலை காயம் செய்து கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். இவர் வேதியியல் படித்து ஹானர்ஸ் பட்டம் வாங்கினார். வெளிநாட்டில் மேல்படிப்பை தொடரவேண்டும் என்ற கனவை தந்தைக்காக விட்டுக் கொடுத்தார். பிறகு அருகில் உள்ள ஆன்மிக தலங்களுக்கும், சித்தர்களின் சமாதிகளுக்கும் சென்று தரிசிக்க ஆரம்பித்தார். அதைத் தொடர்ந்து 4 ஆண்டுகள் கல்கத்தாவில் தங்கி சமஸ்கிருதத்தை கற்றுக் கொண்டார். தமிழ் ஸ்லோகத்தையும், சமஸ்கிருத ஸ்லோகங்களையும் சேர்த்து பிரசங்கங்கள் செய்ய ஆரம்பித்தார். கல்கத்தா சூழல் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சொந்த ஊருக்கே புறப்பட்டார். ஊருக்கு வந்தவர், சொத்துக்களை உறவினர்களுக்கு பிரித்துக் கொடுத்தார். தனது சொத்துக்களை விற்றுவிட்டு திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களில் அன்னதானம் செய்தார். திருப்பதிக்கு சென்று சிலகாலம் தங்கியவர், சொந்த ஊருக்கு திரும்பினார். வழியில் வடலூர் வள்ளலார் மடத்துக்குச் சென்று அங்கேயே 3 வருடம் தங்கினார். வள்ளலாரின் கருத்துக்கள் அவரை ஈர்த்தன.

வள்ளலாரின் புகழைப் பாடியபடியே, நடந்தே திருக்கழுக்குன்றம் வந்தவர், அங்கிருந்த வேதகிரீஸ்வரர் மலையில் உள்ள குகையின் உள்ளே அமர்ந்தார். ஒன்பது வருடங்களுக்கு அந்த இடத்தை விட்டு அவர் எழவே இல்லை. யாருடனும் பேசமாட்டார். அவர் முன்பு வைக்கப்பட்ட விபூதியை தன்னை காண வரும் பக்தர்களுக்குக் கொடுத்து ஆசீர்வதிக்கத் தொடங்கினார். நாத்திக வாதம் பரவத் தொடங்கிய காலத்தில் 30 இளைஞர்கள் அவரைத் தொந்தரவு செய்யும் நோக்கத்துடன் இளநீர் வெட்டிவெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். சுவாமியும் அதை வாங்கிக் குடித்தார். சித்தர் எப்படியும் சிறுநீர் கழிப்பதற்குக் குகையை விட்டு வெளியே வரவேண்டும் என்று இளநீர் கொடுத்தவர்கள் நினைத்தார்கள்? ஆனால் பாவம், சுவாமிக்கு இளநீர் கொடுத்தவர்களே, அதை சிறுநீராக வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் சுவாமியின் சக்தி மற்றவர்களுக்குப் புலப்பட ஆரம்பித்தது. இவர் கடைசிகாலத்தில் 6-ம் திருமுறை நூலை எப்போதும் கையில் வைத்திருந்தார்.

'எனது ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தால் எனது உடலை குழியில் இட்டு ஒரு கல்லை போட்டு மூடி வையுங்கள். 40 நாள் கழித்து அந்த உடலைத் திறந்து பாருங்கள். எனது உடல் சாய்ந்தாலோ, சரிந்தாலோ, பிணவாடை அடித்தாலோ மண்ணையிட்டு நிரப்புங்கள். வைத்த நிலையிலேயே எனது உடல் இருந்தால் 10 மாதம் கழித்து ஒரு முறை திறந்து பாருங்கள். அப்படியே இருந்தால் மேலே ஒரு கல்லை எடுத்து மூடிவிடுங்கள்' என்று சமாதி ஆவதற்குச் சில தினங்களுக்கு முன்பே சொல்லி வைத்தார்.

1960 ஜனவரி முதல் தேதி இரவு ஸித்தியடைந்தார். அவர் சொன்னது போலவே உடல் அடக்கம் செய்யப்பட்டது. 40 நாள் கழித்து சப் கலெக்டர், நாடாளுமன்ற உறுப்பினர் ராஜேஸ்வரி வேதாசலம் முன்னிலையில் அவரின் உடல் திறந்து பார்க்கப்பட்டது. என்ன ஆச்சர்யம்!? அவரின் உடல் வைத்த நிலையில் அப்படியே இருந்தது. தலைமுடி மேல் நோக்கி நின்றது. யோகிகளுக்கு உச்சி வழியாக உயிர் போகும். இதனை காயஸித்தி என்கிறார்கள். இந்த நிகழ்வினை உச்சி பார்த்தல் என்பார்கள். The body was impact என்று சப்கலெக்டர் தனது கெசட்டிலேயே பதிவு செய்டிருக்கிறார்.

சுப்பையா சுவாமிகள் நினைவாக திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகிலேயே சிறிய அளவில் ஒரு கோயில் கட்டினார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவரின் திருஉருவச் சிலையை வணங்கிச் செல்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக தினமும் காலையில் 100 பேருக்கு உணவு, மதியம் 150 பேருக்கு உணவு வழங்கப்படுகிறது. மார்கழி சதய நட்சத்திரத்தில் வருடந்தோறும் குருபூஜை நடந்து வருகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை (3.1.17) அன்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஆலயத்தில் சுப்பையா சுவாமிகளுக்கு குருபூஜை நடக்க இருக்கிறது.” என்றார்.

சித்தர் அருள் வேண்டி பக்தர்களும் குவிந்திருக்கிறார்கள்!

- பா.ஜெயவேல்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு