'ஜோதிட கலாரத்னா' குமரன் தேவசேனா
குருவருள் இருந்தால் திருவருள் கூடிவரும் என்பது ஆன்மிக நியதி;
குரு பார்வை இருந்தால் சகல நன்மைகளும் ஏற்படும் என்பது ஜோதிட விதி.
குருவுக்கு உகந்த வியாழன்தோறும், நவகிரகங்களில் முழு சுப கிரகமான குருபகவானின் மகிமைகளையும், அவருடைய அருள்பார்வையால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் பார்க்கலாம்.
நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர். ஜாதகத்தில் குருபகவான் சுப பலம் பெற்று, நல்ல இடத்தில் இருக்கப்பெற்ற ஜாதகர் மற்றவர்கள் போற்றும்படியாக வாழ்வர்.
குருபகவான் தான் இருக்கும் இடத்தை விடவும், தான் பார்க்கும் இடத்துக்கே அதிகம் நன்மை புரிவார். குருபகவான் தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களைப் பார்வையிடுவார்.
ஒருவரின் சுய ஜாதகத்திலும் சரி, கோசாரப்படியும் சரி, குரு தன் பார்வையால் வழங்கக்கூடிய பலன்கள்:
1-ம் இடத்தை, அதாவது ஜன்ம ராசியைப் பார்த்தால், பேரும் புகழும் உண்டாகும். அந்தஸ்து, மதிப்பு உயரும்.
2-ம் இடத்தை, குடும்ப ஸ்தானத்தைப் பார்த்தால், பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.
3-ம் இடத்தை, தைரிய ஸ்தானத்தைப் பார்த்தால், எதிரிகளின் தொல்லை விலகும்.
4-ம் இடத்தை, சுக ஸ்தானத்தைப் பார்க்கும்போது வீடு- மனை வாங்கும் யோகமும், வாகன பிராப்தியும் ஏற்படும்.
5-ம் இடத்தை, பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்களுக்குக் குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும்.
6-ம் இடத்தில், ருண ரோக ஸ்தானத்தில் குருவின் பார்வை படும்போது, நீண்டகாலமாக உடல்நலம் இல்லாமல் இருந்தவர்கள் பூரண நலம் பெறுவர்.
7-ம் இடத்தை, களத்திர ஸ்தானத்தை குரு பார்க்க, பெற்றோர் ஆசிகளுடன் நல்ல மணவாழ்க்கை அமையும்.
8-ம் இடத்தை, ஆயுள் ஸ்தானத்தைப் பார்க்கும்போது, மரண பயம் நீங்கும்; விபத்துகள் ஏற்பட்டாலும் தப்பித்துக் கொள்ளலாம்.
9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.
10-ம் இடத்தை, ஜீவன ஸ்தானத்தைப் பார்க்கும்போது, பதவியில் உயர்வும் நல்ல மாற்றமும் ஏற்படும். பெற்றோரின் உடல்நிலை சீராகும்.
11-ம் இடத்தை, லாப ஸ்தானத்தைப் பார்க்கும்போது, எதிர்பாராத பொருள்வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.
12-ம் இடத்தில், சயன மோட்ச ஸ்தானத்தில் குருவின் பார்வை பதியும்போது, ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்; தெய்வ தரிசனமும் மகான்களின் அருளாசிகளும் பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
குருபார்வை தொடரும்...