Published:Updated:

தினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை! #MargazhiSpecial

தினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை! #MargazhiSpecial
தினம் ஒரு திருப்பாவை - 25 கிருஷ்ணனுக்கு ஏற்பட்ட ஆசை! #MargazhiSpecial


ஆண்டாளும் அவளுடைய தோழிகளும் வேண்டி விரும்பிக் கேட்டுக்கொண்டபடி, ஒருவழியாக சமாதானம் ஆகி, ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து சிங்காசனத்தில் அமர்ந்துகொண்டான் கிருஷ்ணன். தாங்கள் கேட்டுக்கொண்டபடியே சிங்காசனத்தில் அமர்ந்துகொண்ட கிருஷ்ணனிடம். ஆண்டாள் நல்லவர்களை ரட்சிப்பதற்காகவும், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காகவும் எடுத்த இந்த அவதாரத்தில், துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதற்காக கிருஷ்ணன் புரிந்த லீலைகளைக் குறிப்பிட்டுப் போற்றுகிறாள். கிருஷ்ணனுக்கு சேவை செய்வதையே பெரிதாக நினைத்து வந்திருப்பதாகவும், அவர்கள் விரும்புவது எது என்பது கிருஷ்ணனுக்குத் தெரியும் என்பதால், அதைத் தட்டாமல் தரும்படிக் கேட்டாள். ஆனால், கேட்டதும் கொடுப்பவன் என்று போற்றப்படும் கண்ணன், ஆண்டாள் கேட்டதை உடனே கொடுத்துவிடவில்லை. எனவே ஆண்டாள் தொடர்ந்து, கிருஷ்ணன் யார், அவன் எப்படிப்பட்டவன் என்பதெல்லாம் தங்களுக்குத் தெரியும் என்று பாடுகிறாள். அப்படிப்பட்ட கிருஷ்ணன் தாங்கள் வந்திருக்கும் நோக்கம் நிறைவேறவேண்டும் என்று பிரார்த்திக்கிறாள். 


    ஒருத்தி மகனாய்ப் பிறந்து, ஓர் இரவில்
    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,
    தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த,
    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,
    நெருப்பென்ன நின்ற நெடுமாலே, உன்னை
    அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில், 
    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி,
    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.


சிங்காசனத்தில் கன கம்பீரமாக அமர்ந்திருக்கும் கிருஷ்ணனின் அவதார ரகசியத்தை இப்படிப் புகழ்கிறார்கள்.


கிருஷ்ணனுக்கு முந்தைய அவதாரமான ராமாவதாரத்தில் ராமபிரான் கோசலைக்கு மகனாகப் பிறந்தாலும், அவன் வளர்ந்தது என்னவோ கைகேயியின் பிள்ளையாகத்தான்.பார்ப்பவர்கள் எல்லோருமே ராமன் கோசலைக்குப் பிள்ளையா இல்லை கைகேயிக்குப் பிள்ளையா என்று குழம்பும்படி ராமன் முழுக்க முழுக்க கைகேயியின் மகளாகவே வளர்ந்து வந்தான்.


அதேபோல், கிருஷ்ணனுக்கும் ஒருத்தி மகனாய் பிறந்து மற்றொருத்திக்குப் பிள்ளையாக வளரும் ஆசை ஏற்பட்டுவிட்டது போலும். அதைத்தான் ஆண்டாள் மறைமுகமாகக் குறிப்பிடுகிறாள். 


ஆனால், ராமன் தான் பிறந்த அரண்மனையிலேயே கைகேயியின் அரவணைப்பில் வளர்ந்தான். கிருஷ்ணனோ கம்சனின் அரண்மனைச் சிறையில் பிறந்தான். பிறந்த உடனே தந்தை வசுதேவரால் கோகுலத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு, நந்தகோபரின் மாளிகையில் விடப்பட்டான்.


தேவகிக்கு மகனாக இரவுப் பொழுதில் சிறைக் கொட்டடியில் பிறந்த கிருஷ்ணன், அதே இரவில் கோகுலத்துக்குச் சென்றது ஏன்?
தேவகிக்கு எட்டாவது பிள்ளை பிறக்கும் நேரத்தை தேவகியைவிடவும் கம்சன் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருந்தான். பிறந்த உடனே அவனைக் கொன்றுவிடவேண்டுமே என்ற எண்ணம்தான் காரணம். தேவகிக்கோ, கிருஷ்ணன் பிறக்காமல் இருந்தாலே நன்றாக இருக்குமே என்ற தவிப்பு. பிறந்து அவன் கம்சன் கையால் மாள்வதை விடவும், பிறக்காமல் இருப்பது நல்லது அல்லவா?
தேவகியின் அச்சத்தைப் போக்குவதைப் போல், கிருஷ்ணன் தான் பிறக்கும்போதே, சங்கு சக்ரதாரியாக தெய்விகத் தன்மையுடன் காட்சி தந்தான். தான் செய்த தவப்பயனாக தெய்வமே தனக்குப் பிள்ளையாகப் பிறந்தது கண்டு தேவகி அளவற்ற ஆனந்தம் கொண்டாள். அதன்  பிறகு தேவகி கேட்டுக்கொள்ளவே, தெய்விகம் மறைத்து, தேவகியின் குழந்தையாகக் காட்சி தந்தான்.


பின்னர், அசரீரி வாக்குப்படி வசுதேவர் குழந்தையை எடுத்துக்கொண்டு கோகுலத்துக்குச் சென்றார். நந்தகோபரின் மாளிகையில் அப்போதுதான் பிரசவித்திருந்த யசோதையின் பெண்குழந்தையை தான் எடுத்துக்கொண்டு, கொண்டு சென்ற கிருஷ்ணனை யசோதையின் அருகில் படுக்க வைத்துவிட்டுத் திரும்பினார்.


இப்படியாக, பிறந்த உடனே தன்னைக் கொல்லவேண்டும் என்று நினைத்த கம்சனின் ஆசையை நிராசையாக்கிவிட்டான். பிறகு தன்னை அழிக்கப் பிறந்த தேவகியின் எட்டாவது மகன், கோகுலத்தில் வளர்கின்றான் என்று கேள்விப்பட்டு, அவனால் பிற்காலத்தில் தனக்கு ஏற்படப்போகும் அழிவை சகித்துக்கொள்ள முடியாமல், கிருஷ்ணனைக் கொல்வதற்காக கம்சன் அனுப்பிய அத்தனை அசுரர்களையும் கிருஷ்ணன் அழித்துவிட்டதைத் தெரிந்துகொண்டான். இதனால், கிருஷ்ணன் கம்சனின் வயிற்றில் தீயாகச் சுட்டான். ஆனால், தன்னை சரண் அடைந்தவர்களிடமோ அவன் மிகுந்த அன்பு செலுத்துபவன். இப்படியெல்லாம் கிருஷ்ணனைப் போற்றும் ஆண்டாள், தேவகி புரிந்துகொண்டதைப் போலவே தானும் தன் தோழியர்களும் கிருஷ்ணனை தெய்வ அவதாரம் என்று புரிந்துகொண்டதாகவும் ஆண்டாள் கூறுகிறாள். எனவே தாங்கள் விரும்பும் மேலான செல்வம் அனைத்தையும் அருளுமாறும் வேண்டிக் கொள்கிறாள்.  அந்த மேலான செல்வம் எது?
 

-க.புவனேஸ்வரி