Published:Updated:

உயர்வான வாழ்க்கைக்கு உன்னத மந்திரம்! தினம் ஒரு மந்திரம்-2 #Manthra

உயர்வான வாழ்க்கைக்கு உன்னத மந்திரம்! தினம் ஒரு மந்திரம்-2 #Manthra
உயர்வான வாழ்க்கைக்கு உன்னத மந்திரம்! தினம் ஒரு மந்திரம்-2 #Manthra

ஒவ்வொரு மனிதருமே வாழ்க்கையில் உன்னத நிலையை அடைய விரும்புவது இயல்புதான். ஆனால், பூர்வபுண்ணியம் இருந்தால்தான் விரும்புவதை அடைய முடியும். அதைத்தான் `பிராப்தம்' என்று சொல்வார்கள். ஒருவருக்கு, தான் விரும்பியதை அடையக்கூடிய பூர்வபுண்ணியம் இல்லையென்றாலும்கூட, அவர் அம்பிகையைப் போற்றி மந்திரம் ஒன்றைச் சொல்வதன் மூலம் வாழ்க்கையில் தான் விரும்பிய உன்னத நிலையை அடைய முடியும்.

அம்பிகையை தியானித்து வழிபடுவதற்கு எத்தனையோ மந்திரங்கள், ஸ்லோகங்களின் வடிவில் அமைந்திருக்கின்றன. அந்த மந்திரங்களில் பிரதானமாக அமைந்திருப்பது `சௌந்தர்யலஹரி'. ஜகத்குரு ஆதிசங்கரரால் அருளப்பட்ட சௌந்தர்யலஹரி, நூறு ஸ்லோகங்களைக்கொண்டது. ஒவ்வொரு ஸ்லோகமும் ஒரு குறிப்பிட்ட பலனைத் தருவதாக அமைந்திருக்கிறது. அந்த ஸ்லோகங்களுள் ஒரு ஸ்லோகம்தான், பிராப்தம் இல்லாமலேயே வாழ்க்கையில் உன்னத நிலைக்கு ஒருவரை உயர்த்தும் மந்திரம்.

அந்த ஸ்லோகம்:

த்ரயாணாம் தேவானாம் த்ரிகுண - ஜநிதானாம்தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர்-யா விரசிதா
ததா ஹி த்வத் பாதோத்வஹன-மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வன் - முகுலித - கரோத்தம்ஸ-மகுடம்

சிவ பத்தினியே! உன்னுடைய திருவடிகளில் செய்யப்படுகின்ற பூஜையானது மும்மூர்த்திகளுக்கும் பொருந்தக்கூடியதாகவே ஆகிறது. காரணம், மும்மூர்த்திகளுமே உன்னுடைய மூன்று குணங்களில் இருந்து தோன்றியவர்கள்தாம். மேலும், அவர்கள் எப்போதும் உன்னுடைய ரத்னமயமான சிம்மாசனத்துக்கு அருகில், தங்களுடைய கைகளைக் குவித்து தலைக்கு மேல் வைத்தபடி நின்றுகொண்டு இருக்கிறார்கள். எனவே, உனக்குc செய்கின்ற பூஜை மும்மூர்த்திகளுக்கும் சேர்த்தே பூஜை செய்ததாக அமைகின்றது. 

இந்த அற்புதமான மந்திரம் ஒன்றைப் பாராயணம் செய்ய இயலாதவர்கள், அபிராமி அந்தாதியில் உள்ள இந்தப் பாடலை பாராயணம் செய்யலாம்.

அபிராமி அந்தாதிப் பாடல், திருக்கடவூரில் அருளாட்சிபுரியும் அம்பிகை அபிராமியைப் போற்றி அபிராமிபட்டர் பாடியதாகும். நூறு பாடல்களைக்கொண்ட அபிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலும், சௌந்தர்யலஹரி ஸ்லோகங்களைப்போலவே ஒவ்வொரு பலனை அருளக்கூடியது.

சரபோஜி மன்னர், 'இன்றைக்கு என்ன திதி?' என்று கேட்டதற்கு, அபிராமியின் பக்தரான அபிராமிபட்டர், 'இன்றைக்கு பௌர்ணமி திதி என்று சொல்லிவிட்டார். ஆனால், உண்மையில் அன்றைக்கு அமாவாசை திதி. பட்டர் சொன்னதுபோல் அன்றைக்கு பௌர்ணமி நிலவு தோன்றாவிட்டால், அவரை சிரச்சேதம் செய்துவிடுவதாகக் கூறிவிட்டு மன்னர் சென்றுவிட்டார். அம்பிகையின் தியானத்தில் லயித்திருந்த அபிராமி பட்டர், தியானம் கலைந்து எழுந்ததும் நடந்ததை அறிந்துகொண்டார். 

ஆனாலும் அவர் கலங்கவில்லை. தன்னை அப்படி சொல்லச் செய்தவள் அபிராமி அம்பிகையே என்று உறுதியாக நம்பிய அவர், அம்பிகையின் அருள் வேண்டி பாடிய பாடலே அபிராமி அந்தாதி. அபிராமி அந்தாதியின் 79-வது பாடலான 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன' என்ற பாடலைப் பாடியதுமே அம்பிகை தன் தாடங்கத்தைக் கழற்றி விண்ணில் வீச, அந்தத் தாடங்கம் முழுநிலவாகப் பிரகாசித்தது. அனைவரும் அபிராமி அம்பிகையின் அருளையும், அபிராமிபட்டரின் பக்தித் திறனையும் கண்டு பரவசம் அடைந்தனர்.

அந்தப் பாடல்:

வையம் துரகம் மதகரி மாமகுடம் சிவிகை
பெய்யும் கனகம் பெருவிலை ஆரம் - பிறைமுடித்த
ஐயன் திருமனையாள் அடித் தாமரைக்கே அன்பு - முன்பு
செய்யும் தவமுடையாருக்கு உளவாகிய சின்னங்களே.

அபிராமி அம்பிகையை தியானிப்பவர்களுக்கு அரசருக்கு நிகரான வாழ்க்கை அமையும் என்பதே இந்தப் பாடலின் சாரம். இந்தப் பாடலை தினசரி தொடர்ந்து பாராயணம் செய்து வந்தால், வாழ்க்கையில் உன்னத நிலையை அடையலாம். தினசரி பாராயணம் செய்து அம்பிகையின் அருளைப் பெறுவோம்.

- எஸ்.கண்ணன்கோபாலன்