Election bannerElection banner
Published:Updated:

தினம் ஒரு மந்திரம் - 3 எதிரிகளை வெல்ல என்ன வழி..? #Mantra

தினம் ஒரு மந்திரம் - 3 எதிரிகளை வெல்ல என்ன வழி..? #Mantra
தினம் ஒரு மந்திரம் - 3 எதிரிகளை வெல்ல என்ன வழி..? #Mantra

தினம் ஒரு மந்திரம் - 3 எதிரிகளை வெல்ல என்ன வழி..? #Mantra

வாழ்க்கையில் முன்னேறவேண்டும்; சாதனைகளைப் புரியவேண்டும் என்ற லட்சியம் பொதுவாக எல்லோருக்கும் இருக்கவே செய்யும். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபடவே செய்வார்கள். ஆனால், வாழ்க்கையில் முன்னேறவேண்டும்; சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் ஒருவருக்கு இருந்தாலும், அவர் முன்னேற முடியாதபடி பல எதிரிகள் ஏற்படுவதும் இயல்புதான். இங்கே எதிரிகள் என்பது வெளியில் இருக்கும் எதிரிகளை மட்டுமல்ல, நம் மனதுக்குள் மறைந்திருக்கும் எதிரிகளையும் சேர்த்துத்தான் குறிப்பிடுகிறோம்.

ஓர் உயர்ந்த லட்சியத்துடன் சாதிக்கத் துடிக்கும் நமக்கு, பிரதான எதிரி நம்முடைய மனம்தான். நம் மனதுக்குள் இருக்கும் பொறாமை, பேராசை, சுயநலம் போன்றவை நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடைக்கற்களாக மாறி, நம்மை முன்னேறவிடாமல் தடுத்துவிடுகின்றன. எனவே, முதலில் நம்முடைய மனதில் இருக்கும் மறைமுக எதிரிகளை நாம் இல்லாமல் செய்யவேண்டும்; அதன்பிறகு வெளியில் இருக்கும் எதிரிகளையும் நாம் இல்லாமல் செய்துவிடலாம்.

நம்முடைய முன்னேற்றத்துக்குத் தடையாக உள்ளும் புறமும் இருக்கும் எதிரிகளை வெற்றி கொண்டால்தான், நம்மால் வாழ்க்கையில் சாதனை படைத்து முன்னேற முடியும்.

நமக்குள் இருக்கும் எதிரிகளையும் சரி, நமக்கு வெளியில் இருக்கும் எதிரிகளையும் சரி வெற்றி கொள்ளவேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி அம்பிகையின் திருவடிகளைச் சரண் அடைவதுதான்.


பிரளயத்துக்குச் சாட்சியாக இருப்பவளும், பிரளயத்துக்குப் பிறகு பிரபஞ்சத்தை மீண்டும் படைப்பவளுமாகிய ஆதிசக்தி அவள். ஆயிரமாயிரம் திருநாமங்கள் கொண்ட அம்பிகையின் அளப்பரிய சக்தியானது நம்முடைய உள்ளும் புறமும் உள்ள எதிரிகளை இல்லாமல் செய்துவிடுகிறது. எனவே, அம்பிகையின் திருவடிகளைச் சரண் அடைந்து, இங்கே கொடுக்கப்பட்டு இருக்கும் சௌந்தர்யலஹரி ஸ்லோகத்தை தினமும் 27 முறை பூரண நம்பிக்கையுடன் பாராயணம் செய்யலாம். அல்லது அபிராமி அந்தாதியில் உள்ள பாடலையும் பாராயணம் செய்யலாம்.

இப்படி பாராயணம் செய்வது, முன்னேற்றப் பாதையில் எதிர்ப்படும் எதிரிகளை அகற்றி, நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும்.

விரிஞ்சி பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்னோதி விரதம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருசா
மஹா - ஸம்ஹாரே அஸ்மின் விஹரதி ஸதி த்வத்பதிரஸௌ.


'பிரம்மா, விஷ்ணு, யமன், குபேரன், ஒருவர் பின் ஒருவராக வரும் இந்திரன் அனைவருமே மகா பிரளய காலத்தில் இல்லாமல் போகிறார்கள். ஆனால், அந்த மகா பிரளய காலத்தில் சிவன் சம்ஹார தாண்டவம் புரிவதை, சர்வ வல்லமை கொண்ட தேவி! நீ மட்டும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருக்கிறாய்.'


இந்த ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய இயலாதவர்கள், அபிராமி அந்தாதியில் இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலைப் பாராயணம் செய்யலாம்.


தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்- வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்- பார் எங்குமே.


'அபிராமி அம்பிகையே! உன்னுடைய புகழைப் பாடி, உன்னை வணங்காவிட்டாலும்கூட பரவாயில்லை. ஆனால், மின்னலைப் பழிக்கும் ஒளியுடன் பிரகாசிக்கும் உன்னுடைய அருள் வடிவத்தை ஒரு நொடிப் பொழுதாவது நினைக்காதவர்கள், தாங்கள் பெற்றிருக்கும் செல்வம், வள்ளல்தன்மை, குலச் சிறப்பு, உயர் கல்வி ஆகிய அனைத்தையும் இழந்து, வாழ்க்கையில் மிகுந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள்'

அம்பிகையை நினைக்காத மனதில்தான் பொறாமை, பேராசை, சுயநலம் போன்ற உள் பகைகள் தோன்றும். அந்த உள் பகைகளே, நமக்கான எதிரிகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடும். அப்போது நம்மால் எப்படி முன்னேற முடியும்? எனவே, மிகவும் எளிமையான இந்த வழியைப் பின்பற்றி, நம்முடைய வாழ்க்கையில் உள்ளும் புறமும் எதிரிகளே இல்லாமல் செய்து, வாழ்க்கையில் முன்னேறி சாதனைகளைப் புரிவோம்.


-எஸ்.கண்ணன்கோபாலன்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு