Published:Updated:

சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள்

சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள்
சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள்

 சிவபெருமானின் வாகனமான காளையின் சிறப்பம்சங்கள் ஏராளமாக உள்ளன. அவற்றை இங்கு பார்ப்போம்
* 'ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வேறு என்ப...'
என்னும் பாடல் புறநானூற்றின் கடவுள் வாழ்த்தாக அமைந்திருக்கிறது. 'சிவபெருமானின் வாகனமான காளை தூய்மையான வெள்ளை நிறமும் சீரார்ந்த பெருமையும்கொண்டது என்பதே இதன் பொருள்.

*   மாடு என்றால் செல்வம் என்று பொருள். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். நான்கு மறைகளையும் ஈசன் நந்தி தேவருக்குத்தான் முதன்முதலில் கூறியதாக புராணங்கள் கூறுகின்றன.

* தென்னக சிவாலயங்களில் இருப்பவை, ஓங்கோல் ரக மாடுகளின் தோற்றமுடைய சிற்பங்களே. கவர்ச்சியும் மிடுக்கும் மிக்க இந்த ஓங்கோல் ரக மாடுகள் ஆந்திர மாநிலத்தின் பெருமைக்குரிய சொத்தாகப் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

*சிவன் கோயில்களில் கருவறைக்கு எதிரில் இருக்கும் நந்தி தேவரை 'தர்ம விடை' என்று அழைப்பார்கள். அழிவே இல்லாமல் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பது தர்மம். அந்த தர்மம்தான் ஈசனைத் தாங்கி நிற்கின்றது.


* நந்தி தேவனின் மூச்சுக்காற்றைத்தான் ஈசன் சுவாசிக்கிறார். தர்மம்தான் இறையனாரின் சுவாசம். கருவறைக்கு அருகே இருக்கும் நந்தியின் குறுக்கே போவதும் வீழ்ந்து வணங்குவதும் கூடாது.

* சிலாதர் முனிவருக்கு இறைவனே மகனாகப் பிறந்ததாகவும், அவரே பின்னாளில் நந்தி எம்பெருமானாக மாறியதாகவும் புராண வரலாறு கூறுகிறது. 

* நந்தி தேவர், ருத்ரன், தூயவன், சைலாதி, மிருதங்க வாத்யப்ரியன், சிவப்ரியன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி தனப்ரியன், கனகப்ரியன் எனப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.  

* மராட்டிய மாநிலம், நாசிக் அருகே உள்ள பஞ்சவடியில் இருக்கும் கபாலீஸ்ரவரர் மகாதேவ் கோயிலில்தான் சிவபெருமானுக்கு எதிரே நந்திக்கு சிலை இல்லாமல் இருக்கின்றது. நாட்டிலேயே இங்குள்ள சிவனுக்குத்தான் நந்தி தேவர் இல்லை.


* தமிழ்நாட்டிலேயே, கோயம்புத்தூர் மாவட்டம் நவகரை மலையாள துர்கா பகவதி கோயிலில் மிகப் பெரிய நந்தி உள்ளது. 31 அடி உயரமும் 41 அடி நீளமும் 21 அடி அகலும் கொண்டதாகும். இதற்கடுத்த பெரிய அளவிலான நந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ளதாகும். 12 அடி உயரமும் 20 அடி நீளமும் 8 அடி அகலமும் கொண்டதாகும்.

* சிவலாயங்களில் நம்மை முதன்முதலாக வரவேற்பவர் நந்தியம்பெருமாந்தான். சிவனின் அருள் கிடைக்க வேண்டுமானால், நந்தியைத்தான் வணங்க வேண்டும்.

* பிரதோஷ காலங்களில் நந்திக்கு ராஜமரியாதை. நந்தியின் காதுகளில் நமது பிரச்னைகளைச் சொன்னால், அவர் ஈசனிடம் சொல்லி, நம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார் எனபது நம்பிக்கை.

* பாற்கடலைக் கடைந்த போது வாசுகி பாம்பினால் வெளியிடப்பட்ட விஷத்தை அருந்திய சிவபெருமான் நந்தியின் இரு கொம்புகளுக்கிடையே நடனமாடி விஷத்தின் வெம்மையைத் தணித்துக்கொண்டார். அதைத்தான் பிரதோஷ நாளாக வணங்கி வருகிறோம்.

* பிரதோஷ பூஜையில் நந்திக்குத்தான் முதல் அபிஷேகம் நடைபெறுகிறது. பிரதோஷ காலத்தில் மஹாவிஷ்ணு, பிரம்மா உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், சிவாலயத்துக்கு வந்து விடுவதால், நந்தியை வழிபட்டால், சகல தெய்வங்களையும் வழிப்பாடு செய்தமைக்கு ஒப்பாகும்.

* சிவபெருமானின் வாகனமாக காளை திகழ்வதால்தான், பிரதோஷ காலத்தில் அருகம்புல்லை மாலையாகக் கட்டி அணிவித்து வணங்குகிறோம்.


- எஸ்.கதிரேசன்