Published:Updated:

கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்! #SupportJallikkattu

கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்! #SupportJallikkattu
கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் மற்றும் தமிழனும்! #SupportJallikkattu

கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக்காளைகளும் தமிழர்கள் வாழ்வில் பின்னிப்பிணைந்தே வந்துள்ளன. ஜல்லிக்கட்டு தடைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி, மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு அதற்கு ஒரு நல்லதொரு தீர்வு வரவிருக்கும் வேளையில், ஜல்லிக்கட்டுக் காளைகளின் கதையை இங்கே பார்ப்போம். 

'தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கொரு குணமுண்டு' என்றார் நாமக்கல் கவிஞர் இராமலிங்கனார். தமிழனிடம் மிகுதியாக இருக்கும் குணம் என்ன என்று பார்த்தோமென்றால், செய் நன்றி மறவாதத் தன்மைதான். அதனால்தான், தன் வாழ்வாதாரங்களாக இருக்கும் சூரியனுக்கும், பஞ்சபூதங்களுக்கும், ஆடு மாடுகளுக்கும் பொங்கல்  வைத்து வணங்குகிறான் தமிழன்.

தமிழர்கள் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் தங்கள் ஊரின் கோயில் காளையை அழைத்துச் சென்று திறந்தவெளியில் அவிழ்த்து விட்டு, அந்த மாட்டைப் பிடித்து விளையாடுவார்கள். அதன் திமிலைப் பிடித்து  மாட்டை அடக்குவார்கள். சிலவேளைகளில் வீரனுக்கு வெற்றி கிடைக்கும். பல வேளைகளில் மாட்டுக்கு வெற்றி கிடைக்கும்.

ஊரே கூடி இந்த மாட்டு வேடிக்கையைக் கண்டுகளிப்பார்கள். அன்று முழுவதும் வயல் வேலைகள், வீட்டு வேலைகள் இவற்றையெல்லாம் கூட ஒதுக்கி வைத்துவிட்டு இந்த வீர விளையாட்டில் கலந்து கொள்வார்கள். இப்படி சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு, 'ஏறுதழுவுதல்', 'மஞ்சு விரட்டு', 'ஜல்லிக்கட்டு', 'மாடு பிடித்திருவிழா'வென பல வடிவங்களில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது.

குறிப்பாக, கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய பெரும்பாலான  மாவட்டங்களில் கிராமங்கள் தோறும் பல வீடுகளில் இந்த ஜல்லிக்கட்டுக்காளைகள் வளர்க்கப் படுகின்றன. 

கோயில்களுக்கு நேர்த்திக்கடனாக விடுபவர்களும் உண்டு. வீட்டில் வைத்து பராமரிப்பவர்களும் உண்டு. எவர் பராமரிப்பும் பெரிதாக இல்லாமல், கோயிலில் வளர்ந்தால் கோயில் காளை. வீட்டில் வைத்து வளர்த்தால் ஜல்லிக்கட்டுக் காளை. வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது பற்றி ஏர்முனை இளைஞர் அணித் தலைவர் என்.எஸ்.வி. வெற்றியிடம் பேசினோம்.

''மற்ற பசுக்கள், காளைகளைவிட இவர் கொஞ்சம் ஸ்பெஷல்தான். தினமும் காலையில் சோளத்தட்டை 4 தட்டு,  சுண்டல்- 200 கிராம், நாட்டுக்கோழி முட்டை -2 (ஓட்டுடன் அப்படியே கொடுத்து விடலாம்) மதியம் தேவையான அளவு தண்ணீர் கொடுக்கிறோம். மாலையில், பருத்திக்கொட்டை - 4 கிலோ, கொள்ளு - அரை கிலோ, கோதுமைத் தவிடு- முக்கால் கிலோ, மக்காச்சோள மாவு- 1 கிலோ பேரீச்சைப்பழம் - 200 கிராம் கொடுக்கிறோம். கூடவே, தேவையான அளவு தண்ணீர் தருகிறோம்.

பொதுவாக ஜல்லிக்கட்டுக் காளைக்கு குறிப்பிட்ட அளவில்தான் தண்ணீர் தர வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை செலவாகும். மற்றபடி காலையிலும் மாலையிலும் காலாற ஒரு நடை அழைத்துப் போய் வந்து  கட்டுவோம்'' என்கிறார்.

கோயில் காளையும் ஜல்லிக்கட்டுக் காளையும் ஒன்றுதான்.  இதை சாமி காளை யென்றும் பாய்ச்சல் காளை என்றும் அழைப்பார்கள். சரி, மற்ற காளைகளில் இருந்து கோயில் காளை எப்படி வேறுபடுகின்றது? இதற்கு பட்டிமன்ற பேச்சாளரும் ஆன்மிக அண்ணலுமான பேராசிரியர் அறிவொளி தரும் பதில் சிறப்பான விளக்கமாக இருக்கிறது. 

''ரிஷபம்தான் கோயில் காளை. ரிஷபம் காளையா என்றால், காளைதான். ஆனால், காளைகளெல்லாம் ரிஷபமல்ல'' என்கிறார். ''மனிதர்களில் சர்வாங்க அழகுடன் அதாவது ஆடவர்களுக்குரிய அத்தனை லட்சணங்களுடன் பிறப்பது எப்படி அபூர்வமோ, அப்படியே முறையான அங்க லட்சண சுத்தமுள்ள காளை பிறப்பதும் அபூர்வம். அப்படி பிறக்கும் காளைகள் கன்றாக இருக்கும்போதே தனித்து காணப்படும். அதையே கோயில்களுக்கு நேர்ந்து விட்டு விடுவார்கள். 

பொதுவாக, முதல் கன்றாகத்தான் இந்தக் காளைகள் பிறக்கும். வழக்கமாக மூன்று நாட்களுக்கு சீம்பால் கூட கறக்காமல் கன்றையே பாலைக் குடிக்க விடுவார்கள். பசுவின் மடியில் இரண்டு காம்பு கன்றுக்கும் இரண்டு காம்பு வீட்டுக்குமாக பால் எடுத்துக் கொள்வார்கள். கன்று ஓரளவு பால் குடி மறந்து சுதந்திரமாக சுற்றித்திரிய ஆரம்பித்ததும் நல்ல நாளாகப் பார்த்து கோயிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சைவர்கள் திரிசூலத்தையும், வைணவர்கள் நாமத்தையும்  அடையாளமாகப் போட்டு விடுவார்கள். அந்த அடையாளம் எப்போதும் அழியாமல் இருப்பதால், மாட்டைப் பார்த்ததும் ஊர்மக்கள் ஒதுங்கி வணங்கிச் செல்வார்கள். இதன் பிறகு இதற்கு தலைக்கயிறு, தாம்புக்கயிறு, மூக்கணாங்கயிறு இவற்றையெல்லாம் போட்டு கட்ட மாட்டார்கள்.  

கோயில் காளைக்கு ஊரில் எப்போதும் சுதந்திரமும் மரியாதையும் உண்டு. எவருடைய சோளக்காட்டு வயலிலும், கம்பங்கொல்லையிலும் சென்று வயிறார சாப்பிடும். எவரும் எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். அடித்தும் துன்புறுத்த மாட்டார்கள். கோயில்காளை எவ்வளவு மூர்க்கத்துடன் வந்தாலும், கையெடுத்துக் கும்பிட்டால், தான் வேகமாக எடுத்து வைத்த காலை பின்னே எடுத்து நகர்ந்து சென்று விடும் என்பது மக்களின் நம்பிக்கை.

பெரும்பாலும் தன்னைச் சீண்டுபவர்களைத்தான் அது முட்டித்தள்ள வரும்.  பெரும்பாலும் கோயில் காளைகள்  ஊர்க்காரர்களிடம் நான்கைந்து ஆண்டுகள் வரை பழகி வரும். காளைப் பருவம் அடைந்து நாளாக நாளாகத்தான் தின்று கொழுத்து தினவு எடுத்த கொம்புகளுடன் சுற்றித்திரியும். நன்கு விளைந்த வயல்களில் புகுந்து விட்டால், செல்வதற்கு ரொம்பவே அடம் பிடிக்கும். விரட்டுவது மிகவும் சிரமம். ஆனால், மாட்டின் சொந்தக்காரர் வந்து அதட்டினால் மட்டும் கட்டுப்பட்டு அவர் பின்னே செல்லும்’’.

இப்படிப்பட்ட கோயில் காளையின் கதைகள் தமிழகத்தின் எல்லா கிராமங்களிலும் நிச்சயம் ஒன்று இருக்கும்.

- எஸ்.கதிரேசன்