Published:Updated:

எளியவர்க்கும் அருளும் எம்பெருமான் பெருமாள்!

எளியவர்க்கும் அருளும் எம்பெருமான் பெருமாள்!
எளியவர்க்கும் அருளும் எம்பெருமான் பெருமாள்!

ஶ்ரீமந்நாராயணன், பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்ற ஐந்து நிலைகளில் இருந்து அருள்பாலிக்கிறார். பரம் என்பது பரமபதத்திலிருக்கும் நிலையாகும். வியூகம் என்பது பாற்கடலில் பள்ளி கொண்ட நிலையாகும். விபவம் என்பது அவதார நிலையாகும். அந்தர்யாமி என்பது நம் இதயத்தின் உள்ளே இருக்கும் நிலையாகும். அர்ச்சை என்பது திருக்கோயில்களில் அழகான ரூபத்துடன் சேவை சாதித்தருளும் எம்பெமானின் நிலையாகும்.

அர்ச்சாவதாரத் தலங்களுள் சிறப்பாக நூற்றியெட்டு தலங்கள் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்றுள்ளன. இந்த 108 தலங்களை திவ்வியதேசங்களாக ஶ்ரீவைஷ்ணவர்கள் போற்றுகிறார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் ஆறு கால பூஜை தவறாமல் நடந்து வருகிறது. இதனை ஷட்கால ஆராதனம் என்பார்கள். ஷோடசோபசாரம் எனப்படும் பதினாறு வகை உபசாரங்களால் பெருமாள் ஆராதிக்கப்படுகிறார். தியானம், ஆவாகனம், பாத்யம், அர்க்யம், ஆசமன்யம், மதுபக்தம், ஸ்நபனம், வஸ்திரம், கந்தம், அக்ஷதம், புஷ்பம், புஷ்பந்யாஸ பீடார்ச்சனம், தூபம், தீபம், நீராஞ்சனம், நைவேத்தியம், முகவாஸம் என்பவை அவை.

இத்தகைய உபசாரங்களால் பகவான் ப்ரீதி அடைந்து,  சாந்தகுணமுடையவராகவும், வேண்டிய வரத்தை அருள்பவராகவும் விளங்குகிறார். தெய்வங்களுக்குச் செய்யப்படும் தீபாராதனையில் விசேஷ தத்துவங்கள் அடங்கி உள்ளன. உலக நலனை முன்னிட்டு, முதல்முறை தீபத்தை ஏற்றி லட்சுமி ஆவார்த்தனம் செய்து பாத கமலத்திலிருந்து எம்பெருமானின் திருமுடிவரை கொண்டு சென்று, பின்பு மீண்டும் பாதத்தில் கொண்டு வந்து முடிக்கப்படுவது. எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் சுற்றுப்புற இடத்தின் நலனுக்காக இரண்டாவது முறை பாதகமலத்திலிருந்து நெற்றி வரை கொண்டு சென்று மீண்டும் பாதத்தில் கொண்டு முடிக்கப்படுவது. பக்த கோடிகள் நன்மையை அடைவதற்காக மூன்றாவது முறையாக பாதகமலத்தில் இருந்து கண்கள் வரை சென்று  காண்பித்து மீண்டும் பாதத்தில் முடிக்கப்படுவது. ஆக இவ்வாறு மும்முறை வலம் செய்து தீபம் காண்பிக்கப்படுவதால் எல்லோரும் எல்லா நன்மைகளையும் அடைவார்கள் என்பது ஐதீகம். தீபாராதனை பூர்த்தி அடைந்ததும் உத்தரினியில் தீர்த்தம் எடுத்து எம்பெருமானின் திருக்கண்களை தண்ணீர் கொண்டு துடைத்துவிடுவது, பெருமாளுக்கு கண்படுதல் எனப்படும் திருஷ்டி தோஷம் ஏற்படாமல் காக்கும் தத்துவமாகும். 

எம்பெருமானின் ஶ்ரீசடாரி, ஆதிசேஷன் அம்சமாக விளங்குகிறது. அதனால், ஆகம முறைப்படி சடாரி மீது ஆதிசேஷன் ஆவாகனம் செய்யப்படுகிறது. எம்பெருமான் திருவடிக்கு சமமான ஶ்ரீசடாரியை சாதித்துக் கொள்வது, அவனின் திருவடிகளைப் பற்றினால் நிச்சயம் பலனுண்டு என்பதை விளக்குவதாகும். ஆழ்வார் திருநகரியில் ஶ்ரீநம்மாழ்வாரே சடாரியாக எழுந்தருளியிருக்கிறார் - என்ற ஐதீகம் உண்டு.

"ஆண்டவனே! நான் இன்று உன் திருவடிக்கமலங்கள் பெற்று பேறு பெறுகிறேன். என்னுள்ளே இருந்து என்னை ஆட்டிப்படைத்து அலைக்கழிக்கும் காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம் என்ற ஆறு மாசுகளையும் களைந்து நினது தாசன் ஆனேன். நினது திருக் கடாட்ச அனுகிரகம் பெற்றேன்" என்று கூறி சடாரி சாதித்துக் கொள்பவருக்கு நலமும் பல வளமும் கிடைக்கும் என்பது உறுதி.
பெருமாள் பக்தர்களால் எளிதில் அடையக்கூடியவர். பக்தர்களின் எளிமையும் தூய பக்தியும் பெருமாளின் அருளைப் பெற்றுத் தந்துவிடுகிறது. இதன் காரணமாகவே சௌஷீல்யம் - வாத்சல்யம்; சௌலப்யம் - எளிமை ஆகிய பண்புகளைக் கொண்டவராக பெருமாள் போற்றப்படுகிறார்.

'ஆதிமூலமே' என்றழைத்த கஜேந்திரனுக்கு அருள்பாலித்ததும், ராமாவதாரத்தின்போது சுக்ரீவன், விபீஷணன் ஆகியோரின் சரணாகதியை ஏற்றுக்கொண்ட கருணையும், ஜடாயுவிற்கு கர்மா செய்து மோட்சம் அளித்த தயாளமும் - கிருஷ்ணாவதாரத்தின்போது திரௌபதியின் மானம் காத்ததும், பாண்டவர்களுக்காக தூது சென்றதும், அர்ஜுனனைக் காரணமாகக் கொண்டு குருக்ஷேத்திரக் களத்தில் உலக நன்மைக்காக கீதோபதேசம் செய்ததும் எம்பெருமான் எளியவர்களிடத்தில் கொண்டுள்ள வாத்சல்யத்துக்கு சான்றுகளாகத் திகழ்கின்றன.

எளிமையான சரணாகதியே நமக்கு பெருமாளின் பேரருளைப் பெற்றுத்தரும் சாதனமாகும்.

-கொட்டையூர். தம்பு.ப.கிருஷ்ணசாமி