Published:Updated:

கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில்....சோழர்களின் மணிமகுடம்!

கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில்....சோழர்களின் மணிமகுடம்!
கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில்....சோழர்களின் மணிமகுடம்!

கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில்....சோழர்களின் மணிமகுடம்!

கி.பி.1016. வான் தொட்டு நிற்கும் பெரியகோயிலில் இருந்து கூப்பிடு தொலைவில், கலையழகு ததும்பத் ததும்ப வார்க்கப்பட்டிருந்த அரண்மனையின் மைய மண்டபத்தில் ஆழ்ந்த யோசனையோடு அமர்ந்திருந்தான் ராஜேந்திரன்.காற்றில் காவிரியின் ஈரம் படர்ந்திருந்தது. பெருவுடையாருக்கு சாயரட்சை வழிபாட்டின் தொடக்கமாக, சிறுமுரசு ஒலிக்கத் தொடங்கியது. கூடவே, பூர்வி கல்யாணியும் பந்துவராளியும் கலந்த நாகஸ்வர இசையால் இன்னும் தெய்விகம் ததும்பியது. ராஜேந்திரன் எழுந்து பெருவுடையாரின் திசையில் நின்று ஆழ்ந்து தொழுதான். பிறகு நிதானமாக தன் இருக்கையில் அமர்ந்து நிமிர்ந்தான்.


எதிரில், அரசியல் ஆலோசகன் மாராயன் அருண்மொழி, காலாட்படை தலைவன் உத்தமச்சோழன் கோன், பிரதம அமைச்சர் உத்தமச்சோழ பல்லவராயன், கப்பல்படைத் தலைவன் ஜயமூரி நாடாள்வான், தலைமைத் தளபதி அரையன் ராஜராஜன். எல்லோரும் ராஜேந்திரனின் முகம் பார்த்து அமர்ந்திருந்தார்கள்.

ராஜேந்திரன் இப்படி எல்லோரையும் ஓரிடத்தில் குவிக்கிறான் என்றால், ஏதோவொரு முக்கியச் செய்தி இருக்கிறது. "ஏதோவொன்றை முடிவு செய்துவிட்டுதான் தங்களை எல்லாம் அழைத்திருக்கிறார் தங்கள் மன்னர்" என்று எல்லோரும் உணர்ந்திருந்தார்கள்.
ராஜேந்திரன், சிறிய புன்னகையோடு பேசத் தொடங்கினான்.

“நண்பர்களே... நான் நன்கு யோசித்து விட்டேன். இப்படியொரு முடிவு தவிர்க்க முடியாதது. நம் தேசத்துக்கு புதியதொரு தலைநகரை உருவாக்க வேண்டிய காலக்கட்டம் வந்து விட்டது. நாம் அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்..."  

“அரசே... அதற்கு இப்போது அப்படியென்ன அவசியம் வந்தது..?"- உத்தமச்சோழன் பல்லவராயன் கேட்டான்.

“பிரதம அமைச்சரே... நான் நன்றாக யோசித்துதான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறேன். இந்த தஞ்சை என் மூதாதையரின் விருப்பத்துக்குரிய பூமி. நம் தாய் காவிரி தவழ்ந்தோடும் இந்த நிலத்தோடு நமக்கு தலைமுறைத் தொடர்பு உண்டு. இதோ இந்தப் பெருவுடையாரின் நிழலில் நாம் வாழப் பெரும் கொடுப்பினை வேண்டும். ஆனால், நாம் இப்போது இன்னொரு தலைநகரை நிர்மாணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் எல்லைகள் விரிந்து கொண்டே இருக்கின்றன. எதிரிகள் நம் பலவீனங்களைத் தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிக்கு நாம் இடம் கொடுக்கக்கூடாது..."

சிங்க முக இடுப்பணியையும் கனத்த தோளணிகளையும் தளர்த்தி சரிசெய்து கொண்டு தொடர்ந்து பேசினான் ராஜேந்திரன்.
"நாம் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. மேலைச் சாளுக்கியர்களும், நம்மால் வீழ்த்தப்பட்ட எதிரிகளும் நமக்கு தொல்லையாக தொடர்கிறார்கள். இந்துமாக்கடலில் நம் வணிகர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறார்கள். எதிரிகளை அழிக்கவும், நம் வணிகர்களைக் காக்கவும் நம் கப்பற்படை அடிக்கடி களமிறங்க வேண்டியிருக்கிறது. நாம் தஞ்சையில் இருக்கிறோம். நம் கலன்கள் நாகையில் இருக்கின்றன. நம் பெரும்படை இங்கிருந்து நாகை சென்று கடலிறங்குவதற்கு நேரச்செலவும், நிர்வாகச் செலவும் அதிகமாகிறது.

  அதனால், நம் கலன்களை அருகில் வைத்துக்கொண்டு நினைத்தவுடன் படை நடத்தும் வகையில் ஓரிடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்.

நான் தலைநகரை மாற்ற யோசித்ததற்கு இன்னொரு முக்கியக் காரணமும் இருக்கிறது. வேளாண்மைதான் நம் பலம். என் பாட்டன் கரிகாலன் தொட்டு அத்தனை மூதாதைகளும் போற்றி வளர்த்த தொழில் அது. வேளாண்மைதான் சோழதேசத்தின் அடித்தளக் கட்டுமானம். ஆனால், நாம் ஒவ்வொரு முறை படை நடத்திச் செல்லும்போதும் ஏராளமான வயற்பரப்புகள் அழிகின்றன. விளைச்சல் பாதிக்கிறது. பெரும்பகுதி நிலப்பரப்பில் நம் படைகளையும் தளவாடங்களையும் நிரப்பி வைத்திருக்கிறோம். வேளாண்மை பாதிக்காத வகையில் நாம் நம் தலைநகரை நிர்மாணிக்க வேண்டும்...“

ராஜேந்திரன் திட்டத்தை அத்தனை பேரும் ஆமோதித்தார்கள்.

காலாட்படைத் தலைவன் உத்தமச்சோழன் கோன் கேட்டான். “ நீங்கள் சொல்வது சரிதான் அரசே. ஆனால், அதற்கு ஏன் புதிதாக இடம் தேட வேண்டும்? ஏற்கனவே நம் மூதாதையர் தலைநகராக்கி வைத்திருந்த உறையூர், காவிரிப்பூம்பட்டினம், பழையாறை... இவற்றில் ஏதேனுமொன்றை தேர்வு செய்யலாமே..?"

“இல்லை... காவிரிப்பூம்பட்டினம் வணிகத் துறைமுகமாக  வளர்ந்து விட்டது. நீங்கள் கூறும் பிற பகுதிகள் வேளாண் பகுதிகள். கொள்ளிடக்கரையில், ஜெயங்கொண்ட சோழபுரத்தை ஒட்டி பெருநிலப்பரப்பு வெற்றுத்தரையாக கிடக்கிறது. இப்போது கொள்ளிடத்தில் கலப் போக்குவரத்து நடக்கிறது. நாம் கப்பற்படையை கொள்ளிடம் மூலம் வெகு வேகமாக கடல் இறக்கலாம். மேலும் கொள்ளிடம், நமக்கு நீர் அரணாக இருக்கும். அதைத்தாண்டி எதிரிகள் நம்மை நெருங்க முடியாது..."

ராஜேந்திரன் சொல்லச் சொல்ல அத்தனை பேரின் விழிகளும் விரிந்தன.

"மன்னர் இடத்தை மட்டுமின்றி தலைநகருக்கான வரைபடத்தையும் தயாரித்து விட்டார் போலிருக்கிறது..." - சிரித்தான் அருண்மொழி.
“இதுபற்றி நம் குரு சர்வசிவ பண்டிதரிடமும், ஆசான் ஈசான பண்டிதரிடமும் பேசிவிட்டேன். அவர்கள் என் திட்டத்தை ஏற்றுக்கொண்டார்கள். எனக்கு இன்னுமொரு ஆவலும் உண்டு..." - பீடிகையிட்ட ராஜேந்திரனை அனைவரும் எதிர்பார்ப்போடு பார்த்தார்கள்.

“என் தந்தையின் கனவான ராஜராஜேச்சுவரத்தின் பிரதிஷ்டை மீது நம் சமயப் பெரியவர்களுக்கு சிறு மனக்குறை இருந்ததை அறிவீர்கள். அது என் தந்தையின் இறுதிக்காலம் வரை அவரின் இதயத்தை அழுத்திக்கொண்டே இருந்தது. முறைப்படியான ஆகமத்தோடு நிறைவான கற்றளி ஒன்றை புதிதாக எழுப்பி உங்கள் மனக்குறை தீர்ப்பேன் என்று நான் என் தந்தைக்கு வாக்குறுதி அளித்திருக்கிறேன். அதன்படி நாம் உருவாக்கப்போகும் புதிய தலைநகரில் ராஜராஜேச்சுவரத்திற்கு இணையான கற்றளி ஒன்றை எழுப்ப வேண்டும்..."

ராஜேந்திரன் வார்த்தைகளில் கனவுகள் விரிந்தன.

“அதுமட்டுமல்ல நண்பர்களே... இன்னுமொரு எண்ணமும் எனக்கு உண்டு. நாம் கட்டியெழுப்பப் போகிற பெருங்கோயிலுக்கு கங்கை நீரைக் கொண்டு குடமுழுக்கு செய்ய வேண்டும்..."

ராஜேந்திரன் சொல்லி முடித்ததும் அரையன் ராஜராஜன் உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னான்.

"அரசே... அந்தப் பொறுப்பை நான் ஏற்கிறேன். கங்கை நீரை யாசகமாக இல்லாமல், உரிமையாக அள்ளி வருகிறேன். வங்கம் வரையிலான அத்தனை நாடுகளையும் வென்று, அந்த மன்னர்களின் தலையில் பொற்குடமேற்றி கங்கையை நம் தலைநகருக்கு ஊர்வலமாக அழைத்து வருகிறேன்..."

அரையனின் வார்த்தைகளின் ராஜேந்திரன் அகம் மகிழ்ந்து போனான்.


கி.பி. 1036. கோதாவரி நதிக்கரையில் தன் குடும்பத்தோடும் சகல பரிவாரங்களோடும் தங்கியிருக்கும் ராஜேந்திரனின் முகம் மலர்ந்திருக்கிறது. தொலைவில், பெரும்படையொன்று வெற்றி முழக்கமிட்டு வரும் அதிர்வு கேட்கிறது. ராஜேந்திரன் பரபரப்பாகிறான். தம் உறவுகளை எல்லாம் அழைத்துக்கொண்டு முன்சென்று நிற்கிறான். சோழ தேசத்திற்கே உரித்தான கலைகள் அறங்கேறுகின்றன. வங்கம் வரை வென்று, கங்கை நீரைக் கொணரும் தம் வீரர்களை இருகரம் விரித்து வரவேற்கிறான் ராஜேந்திரன். தளபதி அரையன், வெற்றி மாலையை ராஜேந்திரனுக்கு சூட, "மாமன்னர் ராஜேந்திரன் வாழ்க" கோஷத்தால் கோதாவரி சுருண்டு நீள்கிறது. படை பரிவாரங்களுக்கு பின்னால் தோல்விகண்ட மன்னர்கள் கங்கை நீரை பொற்குடங்களில் வைத்து தங்கள் தலையில் சுமந்து கொண்டு வருகிறார்கள். அவர்களை இன்முகத்தோடு வரவேற்ற ராஜேந்திரன், "இவர்கள் எல்லாம் நம் விருந்தாளிகள்... மரியாதையோடு நடத்துங்கள்" என்று கட்டளையிடுகிறான்.

தம் படையினர், உறவுகள் சூழ, தாம் புதிதாக நிர்மாணித்த புதிய தலைநகரான கங்கை கொண்ட சோழபுரம் நோக்கி செல்கிறான்.


சோழனின் அழகு பொக்கிஷம்...

கங்கை கொண்ட சோழபுரம், ராஜேந்திரனின் கனவுகளுக்கு ஏற்ப கலைநகரமாக வார்க்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு மேற்கில், 16 மைல் நீளத்துக்கு பிரமாண்டமான ஒரு ஏரி... தம் வீரர்களையும், கைதிகளாக்கி கொண்டு வரப்பட்ட பிறநாட்டு வீரர்களையும் வைத்து அகலப்பட்ட ஏரி.  கிழக்கில், அழகு பொக்கிஷமாக பார்த்துப் பார்த்து வார்க்கப்பட்ட கங்கை கொண்ட சோழீச்சுவரம்.

தலைநகரம் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. கங்கையில் இருந்து சுமந்து வரப்பட்ட புனித நீரை, ராஜேந்திரன் பெற்று அந்தணர்கள் கையில் தர, பக்திப்பெருக்கோடு குடமுழுக்கு நடந்தேறியது. கங்கை கொண்ட சோழபுரம் உயிர்ப்பித்தது. அதற்குப் பிறகு, பெரிதினும் பெரிதான கங்கை கொண்ட சோழீச்சுவரின் நிழலில் இருந்தே தெற்காசியாவின் அடுத்த 400 ஆண்டுகால வரலாறு எழுதப்பட்டது!

வெ.நீலகண்டன்
- படம்:திலீபன்

அடுத்த கட்டுரைக்கு