Published:Updated:

கிருஷ்ண பக்தியில் அர்ஜுனனை மிஞ்சியவர் யார்? ஒரு கதை ஒரு நீதி-4 #MoralStories

கிருஷ்ண பக்தியில் அர்ஜுனனை மிஞ்சியவர் யார்? ஒரு கதை ஒரு நீதி-4 #MoralStories
கிருஷ்ண பக்தியில் அர்ஜுனனை மிஞ்சியவர் யார்? ஒரு கதை ஒரு நீதி-4 #MoralStories

கர்வம்... இதைப்போல் ஒரு மனிதனின் மாண்பைக் குலைத்துப்போடும் விஷயம் வேறொன்று இல்லை. கால் காணி நிலத்தில் சின்னதாக ஒரு வீட்டைச் சொந்தமாகக் கட்டிக்கொண்டால்கூட ஏதோ பெரும் சாதனை செய்துவிட்டதாக நினைத்துவிடுகிறார்கள் இந்த மனிதர்கள்... விருதோ, பரிசோ கிடைத்துவிட்டால் சிலருக்கு தலைக்கு மேல் ஒளிவட்டம் வீசுவதாக நினைப்பு வந்துவிடுகிறது... பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்துவிட்டால், தன்னை யாரும் தட்டிக் கேட்கக்கூட முடியாது எனும் மனோபாவத்துக்கு ஆளாகிவிடுகிறார்கள் சிலர். இவை அத்தனைக்கும் மூலாதாரம், கர்வம். இது எத்தனை மோசமானது என்பதை உலகுக்குச் சொல்வதற்காகவே மகாபலிச் சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்க ஓர் அவதாரமே எடுத்தார் ஸ்ரீமகாவிஷ்ணு... வாமன அவதாரம்!

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு நெருக்கமானவன் அர்ஜூனன். கண்ணனே தனக்கு சாரதியாக அமையும் பாக்கியம் பெற்றவன். எத்தனையோ ஆபத்துக்களில் இருந்து அவரால் தப்பித்தவன். மகாபாரதத்தில், கண்ணனுக்கு அர்ஜூனனைவிட  நெருக்கமானவர்கள் வேறு யாரும் இல்லை என்றுகூடச் சொல்பவர்கள் உண்டு. அதற்குக் காரணம், அர்ஜூனனுக்கு பகவன் ஸ்ரீகிருஷ்ணரின் மேல் வைத்திருந்த அளவில்லாத நம்பிக்கை; குருட்டுத்தனமான பக்தி. அவ்வளவு பக்திகொண்டவனா அர்ஜூனன்? நிச்சயமாக. இதை ஒரு சம்பவத்தின் மூலம் நாம் அறியலாம்.

அது, குருஷேத்திரப் போர் தீவிரமடைந்திருந்த நேரம். `நாளை அர்ஜூனனைக் கொல்வேன்!’ எனச் சபதம் செய்கிறார் பீஷ்மர். பிதாமகரின் சபதம் என்றால் சும்மாவா? பாண்டவர் பக்கம் இருந்தவர்கள் எல்லாம் அஞ்சி நடுங்கினார்கள். அர்ஜூனன் இறந்தால், கிட்டத்தட்ட போர் முடிவுக்கு வந்தது போலத்தான். அதன் பிறகு கௌரவர்களை யாரும் அசைக்கக்கூட முடியாது. அன்று இரவு பகவான் கிருஷ்ணனுக்கே சரியான உறக்கம் இல்லை. அடுத்த நாள், அர்ஜூனனைத் தேடிப் போனார்.

அவன் அப்போதுதான் நன்கு தூங்கி எழுந்திருந்திருக்கிறான் என்பது தெரிந்தது. கண்ணனுக்கு ஆச்சர்யம்! ``அர்ஜூனா... இன்றைய போரில் உனக்கு என்னவாகும் என நானே மனம் குழம்பிக் கிடக்கிறேன்... உனக்கு எப்படி உறக்கம் வந்தது?’’

``இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது? நான் உன்னிடம் சரணாகதி அடைந்துவிட்டேன். அதாவது, என்னை நான் உனக்கு ஒப்புக் கொடுத்துவிட்டேன். இனி எதைப் பற்றியும் எனக்கெதற்குக் கவலை? என் கவலை... உன் கவலை.’’ அந்த அளவுக்கு கிருஷ்ணரின் மேல் அர்ஜூனனுக்குப் பற்று. பக்தி இருக்கிறவனுக்கு பயம் இல்லை... எது குறித்தும்!    

விரல்களைத் தாண்டி வளர்ந்தால் நகங்களை வெட்டுகிறோம். அதுபோல் எந்த ஓர் உணர்வும் அதிகமானால், அதை அடக்கிவைத்தலே சரி. அதை மட்டும் அர்ஜூனன் புரிந்துகொள்ளவில்லை. உலகையே ஒரு குடையாகப் பிடிக்கும் வல்லமை பெற்ற ஸ்ரீகிருஷ்ணன் தன் பக்கம் என்கிற நினைப்பு. எதன் பொருட்டும், யார் பொருட்டும் தான் அஞ்சத் தேவையில்லை... கண்ணன் துணையிருப்பான் என்கிற எண்ணம் அவனுக்குள் நிறைந்திருந்தது. அதற்குக் காரணம், தான் கிருஷ்ணன் மேல்கொண்டிருக்கும் பக்திதான் என்பது அவனுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. இந்த நம்பிக்கை விரல் நகம்போல் அவன் மூளைக்குள் வளர்ந்து, வளர்ந்து கிருஷ்ண பக்தியில் தன்னை மிஞ்ச ஆள் இல்லை என கர்வம் கொள்ளும் அளவுக்குப் பெரிதாக நீண்டது.

ஒரு கட்டத்துக்கு மேல் பகவானாலேயே அவன் கர்வத்தைத் தாங்க முடியவில்லை. கோகுலத்தில் கோபியர்களின் மாசற்ற பக்தியையும், ராதையின் உள்ளம் உருகவைக்கும் பிரேமையையும் கண்டிருந்தவன் அல்லவா கண்ணன்! அர்ஜூனனுக்குப் பாடம் புகட்ட முடிவு செய்துகொண்டார்.

அது ஓர் அந்தி நேரம். துவாரகைக்கு வந்து தங்கியிருந்தான் அர்ஜூனன். கிருஷ்ணனின் விருந்தினர் மாளிகை உப்பரிகை. சூரியன் மறைந்திருந்தான். ஆனால், இருள் இன்னும் கவிய ஆரம்பித்திருக்கவில்லை. சூரியனின் செங்கதிர்களின் மிச்சம் மட்டும் கீழ்வானத்தை ஆரஞ்சு நிறத்தில் அடித்திருந்தது. அந்தப் பேரழகில் தன்னை மறந்து லயித்திருந்தான் அர்ஜூனன்.

``அர்ஜூனா...’’ என்றபடி அவன் அருகே வந்து நின்றார் கிருஷ்ணர்.

சுயநினைவுக்கு வந்தவனாக, கண்ணனைத் தொழுது வணங்கினான்.

``என்ன அந்தி வானத்தின் அழகில் சொக்கிக்கிடக்கிறாயா?’’

``ஆம் கண்ணா! அதில்கூட உன்னையே தரிசித்துக்கொண்டிருந்தேன்...’’ அர்ஜூனனின் குரலில் லேசாகப் பெருமிதம்..!

``என்னையா?’’

``உன்னையேதான். ஆதவன் மறைந்தாலும் அதன் சுடரொளி சிறிது நேரத்துக்காவது ஒளிர்கிறது அல்லவா? அதுபோல் உலகில் எத்தனைத் தீயவனாக ஒருவன் இருந்தாலும், அவன் இறுதிக் கணத்தில், இப்பொழுதாவது இவன் திருந்த வேண்டும் என்கிற எண்ணம் உனக்கு இருக்கும். மறைந்த சூரியனின் கதிரைப்போல் அவனுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்ப்பாய். ஏனென்றால், அது உலகில் உள்ள உயிர்களிடத்தில் உனக்கு இருக்கும் பெருங்கருணை.’’  

இதைக் கேட்டு வாய்விட்டுச் சிரித்தார் கிருஷ்ணர். அர்ஜூனன் முகத்தில் கேள்விக்குறி.

``அதாவது, சதா சர்வகாலமும் எனக்கு என் நினைப்புத்தான் என்பதை நிரூபிக்க விரும்புகிறாய்...’’

``அப்படியானால், என் மேல் செலுத்தும் பக்தியில் உன்னை மிஞ்ச ஆள் இல்லை என்கிறாய்?’’

``நிச்சயமாக.’’

``தவறு அர்ஜூனா. உன்னையும்விட என் மேல் ப்ரியமுடன் கூடிய பக்தி செலுத்துகிறவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.’’

``ஏன் பரமாத்மா இந்த விளையாட்டு... அதை நிரூபிக்க முடியுமா?’’ என்றான்.

``புறப்படு என்னோடு. அது எந்த தேசம், யார் எவர் என்றெல்லாம் கேட்கக் கூடாது. சம்மதமா?’’

அர்ஜூனன் உடன்பட்டான். இருவரும் கிளம்பினார்கள்.

***


பகவான் தன் அரண்மனைக்கு வருவார் என்று அந்த அரசர் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. அவரும் அவர் துணைவியும் சிறுவயது மகனும் அவனை நெஞ்சார வணங்கி வரவேற்றார்கள். பக்தியோடு உபசரித்தார்கள். பகவான், நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

``உங்களுக்கு என் மீது மாறாத பக்தி உண்டு அல்லவா?’’

``ஆம் பெருமானே!’’

``நான் ஒன்று கேட்டால் தருவீர்களா?’’

``உயிரையும் தருவோம்.’’

``சரி. ஆனால், ஒரு நிபந்தனை.’’

``என்ன?’’

``எனக்கு நீங்கள் தானம் கொடுக்கும்போது, உங்கள் இல்லத்தில் ஒருவர் கண்ணிலும் துளிக் கண்ணீர்கூட வரக் கூடாது.’’

``சம்மதம்.’’

உடன் வந்திருந்த அர்ஜூனன், அங்கே நிகழ்வதை ஆச்சர்யத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

``என்ன வேண்டும் பகவானே!’’ ஆர்வமும் பரவசமும் குரலில் தொனிக்கக் கேட்டார் அரசர்.

``உங்கள் பாலகனை இரண்டாகப் பிளந்து, அவனுடைய உடலின் வலதுபாகத்தை மட்டும் எனக்குத் தரவேண்டும்.’’

`என்ன கொடுமை இது... கண்ணனின் திருவாயில் இருந்தா இந்த வார்த்தைகள்!’’ அர்ஜூனன் விதிர்விதிர்த்துப் போனான். ஆனால், அங்கிருந்தவர்கள் முகங்களில் எந்தச் சஞ்சலமும் இல்லை. அர்ஜூனன் ஆச்சர்யத்தோடு பார்த்தான்.

அதே நேரத்தில், பகவான் அங்கிருந்தவர்களின் முகங்களைக் கூர்ந்து பார்த்து ஆராய்ந்துகொண்டிருந்தார். அரசர் முகம் நிச்சலனமாக இருந்தது. அரசியின் முகத்தில் அதே சாந்தம், பரவசம், பக்தி. அந்த இளவரசனான பாலகன்... அவன் முகம்... அவன் கண்ணில்...

``அட... இது என்ன... இளவரசனின் இடது கண்ணில் இருந்து தாரை தாரையாக கண்ணீர்?’’ கேட்டார் கிருஷ்ணர்.

அதற்கு அந்தச் சின்னஞ்சிறு பாலகன் பதில் சொன்னான்... ``மன்னிக்க வேண்டும் பரந்தாமா! நீங்கள் என் உடலின் வலது பக்கத்தைக் கேட்டீர்கள். அது உங்களுக்குப் பயன்படுகிறதே என்கிற திருப்தி ஒருபுறம். ஆனால், உங்களுக்குப் பயன்படாமல் வீணாகப் போகிறோமே என என் உடலின் இடது பாகம் வேதனைப்படுகிறது. அதனால் எழுந்தது இந்தக் கண்ணீர்...’’

கிருஷ்ணர் அர்ஜூனனைத் திரும்பிப் பார்த்தார்.

அவன் பகவானின் பாதங்களில் வீழ்ந்து கெட்டியாகப் பற்றிக்கொண்டான். ``மன்னித்துவிடு கிருஷ்ணா... கிருஷ்ண பக்தியில் நான் சிறுபிள்ளை. என்னைவிட உயர்ந்தோர் உள்ளார்கள் என்பதை உணர்த்திவிட்டாய். மன்னித்துவிடு... மன்னித்துவிடு...’’

கிருஷ்ணரின் வதனத்தில் அதே மென் சிரிப்பு!

- பாலு சத்யா

***