Published:Updated:

மனநிம்மதி அருளும் மாதவத்தூர் முருகன்!

மனநிம்மதி அருளும் மாதவத்தூர் முருகன்!
மனநிம்மதி அருளும் மாதவத்தூர் முருகன்!

மனநிம்மதி அருளும் மாதவத்தூர் முருகன்!

புதுக்கோட்டை மாவட்டத்தில், சுற்றிலும் பசுமை நிறைந்து காணப்படும் மாதவத்தூர் என்னும் கிராமத்தில், 'மலேசிய கட்டட பாணியில்' கட்டப்பட்ட கோயிலில் அழகுற காட்சியளிக்கிறார், 'மாதவத்தூர் முருகன்'. இதனால் இத்தலமுருகனை 'மலேசிய முருகன்' என்றே அழைக்கின்றனர், சுற்றுப்புற கிராமத்து மக்கள்.

கோயிலின் வரலாறு :
சில நூறு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கடும்பஞ்சம் ஏற்பட்டது. அது திண்டுக்கல் மாவட்டம்,சேலைப்பட்டி என்ற கிராமத்தையும் விட்டுவைக்கவில்லை. அங்கு இருந்த  கிராமத்து மக்கள் சிலர் பஞ்சம் பிழைக்க மலேசியா நோக்கி புறப்பட்டனர். அங்கு சென்ற  சேலைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மலேசியத் தோட்டங்களில் வேலை கிடைத்தது. அப்படி பிழைக்க சென்ற மக்களில் ஒருவர்தான், சுப்பிரமணியன். தன் சிறு வயதில் கல்வி கற்காத நிலையில் மலேசியா சென்றாலும், தன் அறிவு, ஆற்றல் ஆகியவற்றின் மூலம் கடுமையாக உழைத்து தொழிலதிபர் ஆனார். ஒருநாள் அவரது வீட்டில் தியானம் செய்து கொண்டு இருக்கும்போது, திடீரென ஓர் அசரீரி ஒலித்து, எம்பெருமான் முருகனுக்கு கோயில் எழுப்பச் சொல்லி இருக்கிறது. அதன்பின், அவரால் புதுக்கோட்டை மாவட்டம், மாதவத்தூரில் எழுப்பப்பட்ட கோயில் தான் இது என்கிறார்கள்,ஊர்ப்பெரியவர்கள்.

 மனநிம்மதி அடைய ஜோதி வழிபாடு:

2.5 ஏக்கர் நிலப்பரப்பளவில் மிக பிரமாண்டமாய், அமைந்துள்ளது மாதவத்தூர் முருகன் கோயில். இத்தகைய தலத்தில் மனநிம்மதி அடைய ஜோதி வழிபாடு உண்டு என்பதைப்பற்றி தெரியுமா உங்களுக்கு?. ஆம்.  இத்தலத்தில் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வைக்கின்றனர். அதன்பின், தங்களின் மனதை ஒருநிலைப்படுத்த, அந்த ஜோதியை நோக்கிப் பார்த்தவாறு தியானத்தில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு, தொடர்ந்து 48 நாட்கள், இவ்விடம் வந்து ஜோதிப்பிழம்பாகக் காட்சிதரும் இறைவனை எண்ணி , உணர்ந்து பிரார்த்தனை செய்தால் மனநிம்மதி அடையலாம் என்கின்றனர் ஊர்மக்கள்.

கோயிலின் சிறப்பு: 

ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி மலை முருகன் போன்று, இவ்விடமும் மேற்குத்திசை நோக்கி அருள்பாலிக்கிறார், மாதவத்தூர் முருகன். இப்படி மேற்குத் திசை பார்த்து எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானுக்கு வேறு எங்கும் இல்லாத வகையில், விசேஷ நாள்களில் பக்தர்களே அபிஷேகம் செய்கிறார்கள். இதனால், முருகனின் முழு அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மேலும், இத்தலத்தில் சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறுகிறது. தவிர செவ்வாய்,வெள்ளி,ஞாயிறு ஆகிய கிழமைகளில் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறுகின்றன. இத்தலத்தில் காவிரி தாய்க்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது. இத்தலத்தில் தை பூசத்தன்று, புதுக்கோட்டையை சுற்றியுள்ள 400 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து விழா எடுத்து கொண்டாடுகின்றனர். இங்கு தென்மாவட்ட மக்களைத்தவிர, வெளிநாட்டு யாத்ரீகர்களும் அதிகம் வருகை தருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய மன நிம்மதி தரும் தலத்துக்கு, நாமும் ஒருமுறையேனும் சென்று சாந்தம் பெற்று திரும்புவோம்.

தகவல் பலகை:
மூலவர் - முருகன்
இருப்பிடம் - மாதவத்தூர், புதுக்கோட்டை மாவட்டம்.
பிரார்த்தனைச் சிறப்பு: மனநிம்மதி தரும் தலம்
எப்படிச்செல்வது?
புதுக்கோட்டையில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள கரம்பக்குடி என்னும் ஊருக்குச் செல்லும் சாலையில் A-மாத்தூர் B-மாத்தூர் ஆகிய இரண்டு கிராமங்களுக்கும் நடுவில் உள்ளது மாதவத்தூர் 'முருகன் கோயில்'. புதுக்கோட்டையில் இருந்து  வடவாளம் செல்லும் பேருந்துகளான 12A,12,15 போன்ற பேருந்துகளும் மாதவத்தூர் செல்கின்றன.  

கட்டுரை மற்றும் படங்கள் - த. யோகேஸ்வரன் (மாணவப் பத்திரிகையாளர்)

அடுத்த கட்டுரைக்கு