சிறப்பு கட்டுரை
ஸ்தல வழிபாடு
தொடர்கள்
Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!

தசாவதாரம் திருத்தலங்கள்!
தசாவதாரம் திருத்தலங்கள்!
##~##
வணி மாதம், சுக்லபட்ச துவாதசி- எடுத்த காரியங்கள் இனிதே நிறைவேற, மேற்கொள்ளும் முயற்சிகள் எந்தத் தடங்கலும் இல்லாமல் வெற்றி பெறத் துணை செய்யும் இந்தத் திருநாளை, விஜய துவாதசி எனச் சிறப்பிக்கின்றன புராணங்கள்.

ஓங்கி உலகளக்க ஸ்ரீவாமனன் அவதரித்த தினம் என்பதாலோ என்னவோ, இந்த தினத்தை ஜெயம் தரும் திருநாளாக உயர்த்தி வைத்திருக்கிறார்கள் பெரியோர்கள்.

ஆமாம்... ஆவணி மாதம், வளர்பிறை துவாதசியும் திருவோண நட்சத்திரமும் கூடிய சுப தினத்தில், அபிஜித் முகூர்த்தத்தில், அதிதி- காஸ்யபர் இல்லத்தில் மிக அற்புதமாக நிகழ்ந்தது, வாமன அவதாரம்!

திரேதா யுகத்தில் கோசலையும், துவாபர யுகத்தில் தேவகியும் யசோதை யும் பெற்ற பெரும் பாக்கியம்... அவர்களுக்கெல்லாம் முன்னதாக, அதிதிக்கு கிடைத்துவிட்டது. இறை, குழந்தையாய்த் தவழ்ந்தது அவள் மடியில்!

பூமியில் கோடானுகோடி அன்னையர் இருக்க, காஸ்யபரைப் போலவே அரும்பெரும் தவசீலர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்க, இவர்களுக்கு மட்டும் இப்படியரு பெரும் பாக்கியம் கிடைக்கக் காரணம்... அதிதியின் வழிபாடும், தூயபக்தியும், தவசீலரான காஸ்யபர் செய்த புண்ணியமுமே ஆகும்.

மிகவும் விசேஷமான தருணம் அது!

தேவதுந்துபிகள் முழங்கின. அமர லோகத்தினர் ஒட்டுமொத்தமாகத் திரண்டு வந்து, பூமழை பொழிந்தனர். வருணனும் வாயுவும் ஒன்றிணைந்து குளிர் சாரலாய் குடிலுக்குள் புகுந்து... விண்ணளக்கப் போகும் பிஞ்சுப் பாதங்களைத் தொட்டு வணங்கிச் சென்றனர்.

காஸ்யபரின் இல்லம் தேடி வந்த ரிஷிகளும், முனிவர்களும் ஜெயகோஷம் எழுப்பினர். இவை அனைத்தையும் ரசித்து, அழகாய்ச் சிரித்தது அதிதியின் குழந்தை!

சங்கு- சக்கரம், சதுர்புஜம், பட்டுப் பீதாம்பரம், மார்பில் கௌஸ்துபம், மகர குண்டலங்கள், மணிக்கிரீடம் துலங்க... பால் நிலவும், பகல் சூரியனுமே தோற்றுப்போகும் ஜொலிஜொலிப்புடன், பொக்கை வாய் காட்டி குழந்தை சிரிக்க, சொக்கிப்போனார்கள் காஸ்யபரும் அதிதியும்.

உணர்வும் உணர்வற்றதுமான அவர்களின் அந்தப் பரவச நிலை, அடுத்த சில கணங்களிலேயே பிரமிப்பாக மாறியது.

ஆமாம்... அம்மாவும் அப்பாவும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அந்தக் குழந்தை, வாமன பிரம்ம சாரியாய் உருமாறி நின்றது!

அடுத்தடுத்து சுப வைபவங்கள் நிகழ்ந்தேறின. அதிதி மைந்தனான வாமனருக்கு ஜாதகர்மா, நாமகரணம் முதலான மங்கல காரியங்களைச் செய்துவைத்தார்கள். காலக்கிரமத்தில் உபநயனமும் நிகழ்ந்தது.

அப்போது, பகவானுக்கு சூரிய தேவனே காயத்ரீ மந்திரத்தை உபதேசித்தார். தேவகுருவாம் பிரகஸ்பதி யக்ஞோபவீதம் தர, நான்முகன் கமண்டலம் தர, சந்திரன் தண்டத்தையும், பூமாதேவி மான் தோலையும், கலைவாணி ஜப மாலையையும், சப்த ரிஷிகள் தர்ப்பங்களையும் தர... தாய் அதிதிதேவி கௌபீனமும் சிறு வஸ்திரமும் தந்தாள்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

தந்தை காஸ்யபரோ மேகலை எனும் ஆபரணம் தந்தார். அதேபோல் ஆகாய தேவதை குடையையும், குபேர தேவன் பிக்ஷ£ பாத்திரத்தையும் வெகுமதி அளித்தார்கள். ஜெகன்மாதாவாகிய அம்பிகை உமாதேவி, அவரது பி¬க்ஷ பாத்திரத்தில் பி¬க்ஷயிட்டாள்!

- இப்படி வாமனருக்கு உபயநயன வைபவம் கோலா கலமாக நிகழ்ந்தேற, அங்கே நர்மதை நதி தீரத்தில், அச்வ மேத யாகத்தைத் தொடங்கிவிட்டிருந்தான் மகாபலி!

விண் மறைக்கும் வேள்விப் புகையும், மங்கலம் நிறைந்த மந்திர ஓசையுமாக... மகாபலி அச்வமேத யாகம் நிகழ்த்தும், அந்தத் தலத்தில், தெய்வக்களை கூடியிருந்தது! இதோ... பிரம்ம ஸ்வரூபியாய் வந்து நிற்கும் ஸ்ரீவாமனரின் விஜயமும்கூட அதற்கொரு காரணமாக இருக்கலாம்!

பிருகு குல ஆசார்யர்கள் சூழ, யாகத்தில் ஈடுபட்டிருந்த மகாபலி, வாமனரைக் கண்டதும் அகமகிழ்ந்தான். அவன் எழ, அவனுடன் அனைவரும் எழுந்து ஓடோடி வந்து, ஸ்ரீவாமனரை வரவேற்றார்கள்.

சிரம் தாழ்த்தி வணங்கிய மகாபலி, வாமனரை அழைத்து வந்து, அவருக்கு உயர்ந்த ஆசனம் அளித்து அமர வைத்தான். முறைப்படி பாத பூஜை செய்தான்.

திருப்பாதம் கழுவிய நீரைத் தலையில் தெளித்துக் கொண்டான்; தீர்த்தமாய்ப் பருகவும் செய்தான்.

பிறகு, மீண்டும் ஒருமுறை வாமனரை வணங்கியவன், ''ஸ்வாமி! தங்களின் வருகையால் இந்த யாகசாலை புனிதம் பெற்றது. எங்கள் குலத்துக்கே புண்ணியம் கிடைத்ததாக உணர்கிறேன். கேளுங்கள்... தங்களுக்கு என்ன வேண்டும்... அழகிய கிராமமா? சொர்ணமா? சிறந்ததாக ஓர் இல்லம் அமைத்துத் தரவா? யானை, குதிரைகள், ஆநிரைகள்... எது வேண்டுமானாலும் கேளுங்கள்; தருவதற்குத் தயாராக இருக்கிறேன்'' என்றான்.

யாருக்கு யார் தருவது?!

எல்லாமே இறைவனுக்குச் சொந்தம். எது கிடைத்ததோ, அது அங்கிருந்தே கிடைத்தது; எதைக் கொடுக்கிறோமோ, அதுவும் அங்கிருந்தே கொடுக்கப்பட்டது. கொடுப்பதும் பெறுவதும் அவனேயன்றி வேறில்லை. இதையெல்லாம் மகாபலி எப்படி மறந்துபோனான்!

கர்வம்... அசுர குலத்துக்கே உரிய ஆணவம்... எல்லாமே தன்னால் வந்தது என்கிற இறுமாப்பு... பிரகலாதனின் வம்சத்தவன் என்றாலும், மகாபலியிடமும் அசுரகுணம் கொஞ்சம் இருக்கவே செய்தது!

இந்தக் குணம் இருந்தால், மீண்டும் மீண்டும் பிறவி வாய்க்கும். 'எதுவும் நம் வசம் இராது; எல்லாம் அவனுடையது’ என்கிற பக்குவம் வரும் வரை பிறவிகள் தொடரும்.

இது கூடாது. பலி, பெருநிலை அடைய வேண்டும். உண்மையை உணர்த்தி, அவனைத் தடுத்தாட்கொள்ள வேண்டும் என்பதே இறைச் சித்தம் போலும்!

மெள்ளப் புன்னகைத்த வாமனன், ''அசுர வேந்தே! எனக்கு எதற்கு அத்தனை ஐஸ்வரியங்கள்? என் பாத அளவில் மூன்றடி மண் தாருங்கள், அது போதும்!'' என்றார்.

தசாவதாரம் திருத்தலங்கள்!

வியந்து சிரித்த மகாபலி, ''அந்தணரே! என்னிடம் ஒருமுறை யாசிப்பவர், மறுபடியும் மற்றொருவரை அணுகி யாசகம் பெறுவதை விரும்பாதவன் நான். ஆகவே, உமது ஜீவனத்துக்குத் தேவையான பூமியைத் தருகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள்'' என்றான்.

''இல்லை, வேந்தே! மூன்றடி மண்ணை அடைந்து சந்தோஷத்தை சந்திக்காதவன், இந்த உலகம் முழுவதையும் அடைந்தபோதிலும் திருப்தி கொள்ளமாட்டான். அதிக ஆசை துன்பத்தையே தரும். ஆகவே, எனக்கு மூன்றடி மண் மட்டும் போதும்!'' - பதில்மொழி பகர்ந்தது பரம்பொருள்.

அதைக் கேட்டுப் பெரிதாய்ச் சிரித்த மகாபலி, 'சரி, உமது இஷ்டப்படியே ஆகட்டும்’ என்றபடி, தீர்த்தப் பாத்திரத்தைக் கையில் எடுத்தான்; தானம் அளிக்கத் தயாரானான்.

அப்போது... ''மகாபலி, நில்!''- ஓங்கி ஒலித்த குரு சுக்கிராச்சாரியரின் குரல் அவனைத் தடுத்து நிறுத்தியது!

''வந்திருப்பது மகா மாயன். தானம் அளித்து ஏமாந்து போகாதே!''- எச்சரித்தார் அசுரகுரு.

''குருவே, மன்னியுங்கள்! இதன் விளைவாக நரகமே ஏற்றாலும் மகிழ்வேன். ஆனால், தானம் தருவதாகக்கூறி, அந்தணரை ஏமாற்றுவதால் வரும் பழிச் சொல்லுக்கு ஆளாக நான் விரும்பவில்லை. மேலும், பிரகலாத வம்சத்தில் வந்த நான் சத்தியம் தவறலாமா?'' என்ற மகாபலி,  குருவின் எச்சரிக்கையை மீறத் துணிந்தான். (இந்த தருணத்தில், மகாபலியின் தானத்தை எப்படியேனும் தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று எண்ணினார் சுக்கிராச்சாரியார். எனவே அவர் வண்டாக மாறி, மகாபலி தானம் தரவிருந்த பாத்திரத்தின் நீர் விழும் வழியை அடைத்துக் கொள்ள... பகவான், அடைப்பை நீக்குவதற்காக தர்ப்பையால் குத்தினார். இதனால் சுக்கிரரின் ஒரு கண் பாதிப்புக்குள்ளானது தனிக் கதை).

சுக்கிராச்சாரியர் வெகுண்டார். ''குருவின் சொல்லைக் கேளாமல், அலட்சியம் செய்யும் நீ, சகல செல்வங் களையும் இழப்பாய்’ என்று சபித்தார்.

அதையும் பொருட்படுத்தாமல்... மனைவி விந்தியாவளி தங்கக் கலசத்தைக் கையிலேந்தி அருகிலேயே நின்று தீர்த்தம் அளிக்க, வாமனருக்குத் தானம் அளித்து ஆனந்தித்தான் மகாபலி.

அப்போது அங்கே ஓர் ஆச்சரியம் நிகழ்ந்தது. ஸ்ரீவாமனரின் சரீரம் மெள்ள மெள்ள வளர்ந்து விண்தொட்டது. அண்டசராசரங்களையும் தன்னில் கொண்டு விஸ்வரூபம் எடுத்தது.

திவ்ய தேஜோமயமாகப் பிரகாசிக்கிற பகவான் வாமனரின் விஸ்வரூபத்தில் சகல பிரபஞ்சங்களையும், சகல உயிர் களையும் கண்டு பிரமித்தான் மகாபலி.

எம்பெருமானின் திவ்ய திருமேனியில் அண்டபகிரண்டத்தையும் தரிசனம் செய்த அசுரர்கள் யாவரும் திகைத்து நின்றார்கள்.

சர்வ வியாபியாய் நின்ற எம்பெரு மானின் திருப்பாதம், ஓரடியால் மண்ணை அளந்தது; மற்றோர் அடியால் விண்ணையும் அளந்தது.

அடடா... அற்புதத்திலும் அற்புதம்..!

விண்ணில் சத்தியலோகத்துக்கு உயர்ந்த எம்பெருமானின் திருவடியைக் கண்டு சனகாதி முனிவர்களும், மரீசி முதலான பிரஜாபதிகளும் பேரானந்தத்துடன் வணங்கி நின்றார்கள்.

நான்முகனாம் பிரம்மன், திரி விக்கிரமரின் பொற்பாதக் கமலங்களை, தனது கமண்டல நீரால் அபிஷேகித்து வழிபட்டார்.

அந்த அபிஷேக தீர்த்தம்... இந்த உலகமும் உயிர்களும் பாவங்கள் தீர்ந்து உய்வடைய, புண்ணிய நதியாய், அருள் வெள்ளமாய்- ஆகாய கங்கையாய் பொங்கிப் பெருகியது!

- அவதாரம் தொடரும்...