Published:Updated:

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!
வரம் கொடுக்கும் வழிபாடுகள்!


சங்கடம் தீர்ப்பான் சந்திர பகவான்!

##~##
ந்திரன், சாதாரண கண்களுக்கும் புலப்படும் கிரகம். பகலில், சூரிய கிரணத்தில் மறைந்திருப்பதால், பார்க்க இயலாது; இரவில் நன்றாகப் பார்க்கலாம். தேய்ந்தும் வளர்ந்துமாக மாறுபவன், சந்திரன். பரம்பொருளின் மனதிலிருந்து வெளிவந்தவன் என்கிறது வேதம் (சந்திரமா மனஸோஜாத:). பரம்பொருளானது பிரபஞ்சாகாரமாகத் தோற்றம் அளிக்கிறது. உடல் எடுத்த உலகின் மனமான சந்திரன், பருவங்களை உருவாக்கி, உலகை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான் என்கிறது வேதம் (சந்திரமா: ஷட்ஹோதா. ஸரிதூன்கல்பயாதி) ஏதும் அறியாத குழந்தையும் சந்திரனைப் பார்த்து மகிழும்; தொண்டு கிழமும் மகிழும்.

இளைஞர்களின் மனத்தை, விரும்பியவளுடன் சேர்த்து மகிழ வைப்பவன் சந்திரன். அதுமட்டுமின்றி, உயிரினங்களை வெப்பத்திலிருந்து பாதுகாப்ப வனும் இவனே! மனித மனத்தை இயக்குபவன் என்று சந்திரனைக் குறிப்பிடுகிறது ஜோதிடம் (மனஸ்துஹினகு...). தேய்ந்தும் வளர்ந்தும் மாறி மாறித் தென்படும் இயல்பு, மனித மனத்திலும் வெளிப்படும். செடி- கொடிகளின் மருத்துவ குணத்தை, சந்திரனின் கிரணங்கள் உருவாக்குகின்றன (ஸோமோவா ஓஷதீனாம் ராஜா...) பௌர்ணமியில், கடல் அலையை அதிகம் எழச் செய்பவன். இரவில் மலரும் பூக்கள், சந்திரனைக் கண்டதும் குதூலத்துடன் காட்சி தரும். அதுபோல், பிரபஞ்சப் பொருட்களில், சந்திரனின் தாக்கம் தென்பட்டு மாறுபாட்டைச் சந்திக்கும். வெகு தொலைவில், விண்வெளியில் வலம் வந்தாலும், சந்திரனது தாக்கம் பிரபஞ்சத்தை மட்டுமின்றி, மனிதர்களையும் பாதிக்கும். ஆகாயம் என்ற பூதம் ஒன்றுதான்; அது உலக அளவுக்குப் பரவியிருக்கிறது. ஆகாயம் என்றால் இடைவெளி என்று அர்த்தம். இடைவெளியில் வாழ்கிற நமக்கு, இடைவெளியின் தாக்கம் இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

உலகின் ஒரு கோடியில் நிகழும் சம்பவத்தை, மறு கோடியில் இருந்தபடி சின்னத்திரை வழியே பார்க்கிறோம். அதற்கு ஆகாசத்தின் பங்கு தவிர்க்க முடியாதது. சூரியனிடம் இருந்து சூடான கிரணத்தைப் பெற்று, தன்னிடம் இருக்கிற தண்ணீருடன் இணைத்துக் குளிரச் செய்து, வெப்பத்தால் வாடும் உலகைக் குளிர்வித்து மகிழச் செய்கிறான் சந்திரன் (ஸலிலமயே சசினி...). தண்ணீருடன் தென்படுவதால், கடக ராசியான ஜல ராசி அவன் இருப்பிடம் என்கிறது ஜோதிடம். கடகம் என்றால் நண்டு. அது, ஈரப்பதமான இடத்தில் வாழும். ஆகவே, ஈரமான மனம், கருணையுள்ளம் கொண்டவன் என்பதற்குப் பொருத்தமானவன், சந்திரன்!  

அமாவாசையில், சூரியனில் மறைந்த சந்திரன், ஒவ்வொரு நாளும் சிறுகச் சிறுக கிரணத்தைப் பெற்று வளர்ந்து, 15-ஆம் நாளில் முழு நிலவெனக் காட்சி தருவான். அதனை பௌர்ணமி என்கிறது வேதம் (பஞ்சதச்யாமா பூர்யதெ...). பிரதமையில் இருந்து சூரியன், தனது கிரணத்தைத் திரும்பப் பெறும்போது, ஒவ்வொரு பகுதியாகத் தேய்ந்து தேய்ந்து, சூரியனில் ஒன்றிவிடுவதை அமாவாசை என்பார்கள் (பஞ்சதய்யாமபுஷீயதை). ஒவ்வொரு பிறையாக வளர்வதால்,  வளர்பிறை; ஒவ்வொரு பிறையாகத் தேய்வதால் தேய்பிறை என்றாகிவிட்டது. ஒவ்வொரு பிறையிலும் தடங்கலின்றி வளர்வதால், செயல்களும் வளர்ந்தோங்க வேண்டும் என்று, வளர்பிறையை ஏற்றனர். தேய்பிறையை தென்புலத்தார் பணிவிடைக்கு ஒதுக்கினர். சந்திர கிரகணத்தில் பிடிக்கும்

வேளை வளர்பிறையானதால், தான- தருமங்களைச் செய்யச் சொன்னார்கள். விடும் வேளையில் பிரதமை என்பதால், தேய்பிறையைக் கொண்டு தர்ப்பணம் செய்யப் பரிந்துரைத்தனர்.

ஈசனின் சிரசில் சந்திரன் வீற்றிருப்பதால், சந்திரசூடன் என சிவனாருக்குத் திருநாமம் உண்டு. அதேபோல், அம்பாளின் சிரசிலும் ஸ்ரீவிநாயகரின் சிரசிலும்கூட சந்திரன் வீற்றிருக்கிறான் என்கிறது புராணம். ஸ்ரீமந் நாராயணரின் கண்ணாகத் திகழ்கிறது எனச் சந்திரனைக் குறிப்பிடுவர். சந்திரனுடன் கூடிய சூரியனில், அதாவது அமாவாசை மற்றும் பௌர்ணமி, வேள்வி செய்ய வேண்டிய வேளை என்கிறது வேதம்! முழு நிலவில் இணைந்த நட்சத்திரங்களை, அதன் பெயரைக் கொண்டே மாதங்களின் பெயர்களாக ஏற்றனர். பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரம் இணைந்து வர... சித்திரை என அந்த மாதத்துக்குப் பெயர் வந்தது. மற்ற மாதங்களுக்கு, பௌர்ணமியைக் கொண்டே பெயர் வரும். அதாவது, காலத்தை அளக்கும் கருவியாகத் திகழ்பவன் சந்திரன்! அதனைச் சாந்திர மானம் என்பார் கள். விரதங்களையும் பூஜைகளையும் சாந்திர மானத்தைக் கொண்டே கணக்கிடுவார்கள்.  

அமாவாசையில் சூரியனில் ஒடுங்கிவிடுவதால், பலமிழந்து விடுவான் சந்திரன். ஆகவே அந்த வேளையில், மனநோய்கள் வலுப்பெறும் என்கிறது ஜோதிடம். மனதுக்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதை, நோயின் ஏற்றத்தாழ்வு சுட்டிக்காட்டும். சாதாரண நோய்கள்கூட, அமாவாசை நெருங்கும் நாட்களில் வலுப்பெறும். உடல், புலன்கள், மனம், ஆன்மா ஆகியவற்றின் இணைப்பும் அதன் தொடர்ச்சியுமே வாழ்க்கை என்கிறது ஆயுர்வேதம்.

இதில் முக்கியமானது மனம்! ஆகவே, வாழ்வில் சந்திரனுக்கு நிரந்தரப் பங்கு இருக்கிறது. நல்ல காரியங்களைச் செயலாற்ற, சந்திர பலம் வேண்டும் என்கிறது சாஸ்திரம் (சந்திர பலம் ததேவ). சந்திர பலம் இருந்துவிட்டால், மனமானது ஈடுபாட்டுடன் செயலாற்றும்!  

ஆயிரம் பிறை கண்டவனை, சதாபிஷேகம் செய்வித்து மகிழ்விப்பவன், சந்திரன். மாசி பௌர்ணமியின் இரவில் சந்திர பூஜை நிகழும். அப்போது, பால் பாயசம் நைவேத்தியம் செய்து, குழந்தைகளுக்கும் அனைவருக்கும் அளிக்கிற வழக்கம், கிராமங்களில் இன்றைக்கும் உண்டு! தென்புலத்தார், தேவர்கள், ரிஷிகள் ஆகியோரது பணிவிடைகளில் சந்திரனின் பங்கு இருப்பதால், வாழ்வு சிறக்க அவனருள் வேண்டும்.

விண்வெளியில் முதல் ஓடுபாதை, சந்திரனுடையது. ஆகவே, பூமிக்கு அருகில் இருப்பவன் அவன்! அவனுக்கு மேல், நான்காவது ஓடுபாதையில் இருக்கும் சூரியனிடம் இருந்து கிரணத்தைப் பெற்றுச் செயல்படுவான் சந்திரன். ராசிச் சக்கரத்தில், சந்திரனுக்கு அடுத்த ராசியில், அதாவது சிம்மத்தில் சூரிய னுக்கு இடமளித்திருக்கிறது ஜோதிடம். ஆன்மாவுடன் இணைந்து மனம் செயல்படுவது போல், சூரிய கிரணத் துடன் இணைந்து செயல்படுவான், சந்திரன்! ஆகவே, அடுத்தடுத்த வீடு பொருத்தமாக அமைந்துள்ளது.

ஆன்மா ஒன்று; அதேபோல் மனமும் ஒன்று! ஆதலால், 12 வீடுகள் இருந்தும், இரண்டுபேருக்கும் ஒவ்வொரு வீடுதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சுகத்தை அதாவது மகிழ்ச்சியை மனம் அறியும். ஆகையால், ராசி புருஷனில் 4-ஆம் வீட்டில் சந்திர னுக்கு இடமளித்தனர். வளர்பிறையில் சந்திரன் நல்லவன்; சுப பலனையே அளிப்பான். தேய்பிறையில் பலம் குன்றியவன்; அசுபன் - விருப்பமில்லாத பலனையே திணிப்பான்!

குருவுடன் இணைந்து பொரு ளாதாரத்தைச் செழிப்பாக்குபவன் சந்திரன். தன்னுடைய கேந்திரங்களில் குரு இருந்தாலும் அதாவது 4, 7, 10-ல் இருந்தாலும் பணத் தட்டுப்பாடின்றி காரியத்தை நிறைவேற்றி வைப்பான் சந்திரன். 5, 9-ல் குரு இருந்தால், ஆன்மிக வாழ்வில் ஆர்வத்தைத் தூண்டுவான்!

பூமியும் விண்வெளியும் சேர்ந்தே இருந்தது. பிறகு, அது அகண்ட இடைவெளியுடன் தனித்தனியே காட்சி அளித்தது. பூமியின் மண், சந்திரனில் ஒட்டியுள்ளது. அதில் தென்படும் கறுப்புப் புள்ளி, மண் எனத் தெரிவிக்கிறது வேதம் (யதத: சந்திரமஸி கிருஷ்ணம் ஊஷான்னிவபன்...). இப்படியான விலகல், நமக்கு வாழ இடத்தை அளித்தது. முக அழகை, சந்திரனுடன் ஒப்பிடுவார்கள் புலவர் பெருமக்கள். பகலில், வெப்பத்தில் சூடேறிய நதிகள், தடாகங்கள் ஆகியவற்றின் நீரைக் குளிரச் செய்து, வெதுவெதுப்பாக மாற்றி, அதில் நீராடுவதற்கு நமக்கு உதவுபவன், சந்திரன். சந்திர கிரணத்தின் சேர்க்கையால், குளிர்ந்த காற்று கிடைக்கிறது. அதேபோல், சந்திரன் இணைந்தால்தான், வேள்வியானது நிறைவுபெறும் (ஸோமாயஸ்வாஹா...). அதேபோல், நாம் அணியும் ஆடையில், அவனுடைய சாந்நித்தியம் உண்டு. ஸோமஸ் என்றால் சந்திரன்; ஸோமஸ் என்றால் ஆடை என்றும் பொருள் உண்டு (ஸோமஸ்யதனூரஸி...). சதுர்த்தியில் சந்திரனைப் பார்க்க நேர்ந்தால், வீண் பழியேதும் வராமல் தடுக்க, ஆடையில் இருந்து ஒரு நூலை எடுத்து, சந்திரனுக்கு அளிக்கும் சம்பிரதாயம் கிராமங்களில் உண்டு.

வெப்பமும் குளிர்ச்சியும்தான் பருவ மாற்றத்தின் மூலப் பொருள். அதில் குளிர்ச்சியான பங்கு, சந்திரனுடையது.

சந்திரகாந்தக் கல், சந்திர கிரணம் பட்டு, உருகி ஓடும்; குளிர்ச்சியான சூழலை உருவாக்கும். ராவணன், குளியல் அறையில் சந்திரகாந்தக் கல் உமிழும் நீரில் நீராடுவான் என்கிறது சம்பூர்ண ராமாயணம் (ஏஷமிருங்கோபி...). கல்லைக் கரைக்கும் சந்திரன், கல் மனத்தையும் கரைப்பான்.

கோழிக்குக் கிடைத்த வைரக்கல், குரங்குக்கு கிடைத்த பூமாலை வீணாகிவிடுகிறது. அதுபோல், ஒப்பில்லாப் பொருள் (ஜோதிடம்) குப்பையில் சேருவது வேதனை அளிக்கிறது. அனுபவத்தில் உணரும் அறிவை, அடை யாளம் காணாமல் இருப்பது நமது துரதிர்ஷ்டம்.

வரம் கொடுக்கும் வழிபாடுகள்!

சசிமங்கள யோகத்தில், சந்திரனுக்குப் பெரும்பங்கு உண்டு. சனியோடு இணைந்தால் ஒருவனுக்குச் சிந்தனை வளம் குன்றிவிடும். மானம், வெட்கம், சூடு, சொரணை ஆகிய அனைத்தும் அவனை விட்டு விலகிவிடும். விரும்பியதை அடைவதற்காக, தரம் தாழ்ந்த வழியைக் கூடப் பின்பற்றச் செய்வான் சந்திரன். சனியின் தாமஸ குண சேர்க்கையில்சோம்பல், அறியாமை, மோகம் ஆகியன மேலோங்கி, மனித இயல்பே அகன்றுவிடும். 'எனக்குக் கிடைக்காதது எவருக்குமே கிடைக்கக்கூடாது’ எனும் எண்ணத்தில், பொருளையே அழிக்கும் குணத்தைத் தருவான், சந்திரன். அதேநேரம், புதனுடன் இணைந்தால், சங்கடத்தில் சிக்கியபோதும் அறநெறியில் செயல்பட வைப்பான், சந்திரன். எந்தச் சூழலிலும் ஒழுக்கம் தவறாமல் இருக்கும் குணத்தைத் தருவான்!

சூரியனுடன் சந்திரன் இணைந் தால், சிந்தனை வளம் பெருகும். சூரியன்- ஆன்மா; சந்திரன்- மனம். ஆன்மாவின் இணைப்பில் உலக சுகத்தை மறந்து, தனிமையில் மகிழ்ச்சியை உணரச் செய்வான் சந்திரன். ஏனெனில், சூரியன் எனும் ஆன்மாவில் இருந்து, உருப்பெற்றவன் அவன். ஆனால், ஆன்மாவுடன் இணைந்த மனமானது, அதனை மறந்து, புலன் வழியே அலைந்து, சலிப்புற்று, செய்வதறியாது தவிக்கிறது. நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும், அது... வாலைக் குழைத் துக் கொண்டு, வெளியே சென்றுவிடும் என்பார்களே... அப்படித்தான் இருக்கிறது நம்முடைய மனம்!

சந்திர வம்சத்தில் இருந்து வந்தவர்கள் மகாபாரத நாயகர்கள்.

மனதின் மாறுபட்ட சிந்தனைகளை அவர்களிடம் காணலாம். சூதும் வாதும், அறமும் ஆற்றலும், நெறியும் ஒழுக்கமும், பொறுமையும் போற்று தலும், உலகவியலும் ஆன்மிகமும் என சகலமும் அவர்களிடம் உண்டு! மனம் என்பது அணு அளவுதான்; ஆனால், அதன் கொள்ளளவு கடல் போல் விரிந்திருக்கும். தேய்ந்தும் வளர்ந்தும் நிலையின்றிச் செயல்படும் சந்திரனின் மறுபக்கம், ஒருவனைச் சீரழியச் செய்கிறது.

ஸ்ரீராமன் என்று சொல்வதைவிட, ஸ்ரீராமச்சந்திரன் எனும்போது, நம்மையும் அறியாமல் ஒரு ஈர்ப்பு அவனுடன் இணையச் செய்யும். சூரிய வம்சத்தில் உதித்தவன் ஸ்ரீராமச் சந்திரன். ஆன்மாவுடன் அதாவது சூரியனுடன் சந்திரனாகிய மனமும் இணைந்திருக்க... சந்திரனுடைய மறு பக்கத்தின் இயல்பான ஆன்ம சுகத்தை ஈட்டித் தருகிறது. ஈடு இணையற்ற ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவதில், சந்திரனுக்கு பெரும் பங்கு உண்டு!  

ராகுவுடன் இணையும்போது, மனதுள் அசுர குணம் தலைதூக்கும். ராகு- அசுரன். அவனுடைய இயல்பு, மனதுள் ஆட்கொள்ளும். மிருகத்தனமே முன்னிற்கும். அப்போது, பாபமும் தெரியாது; புண்ணியமும் தெரியாது. ஆறாம் அறிவே முடங்கிவிடும்; மனிதத் தன்மை அகன்று, வாக்குச் சுத்தம் போயே போய்விடும். கேதுவுடன் இணைந்தால், சிந்தனை வளம் குன்றும்; மனம் போன போக்கில் செயல்படச் செய்வான் சந்திரன்!  

பணம் இருந்தும், உரிய தருணம் கிடைத்தும் பயன்படுத்தாதவர்கள் உண்டு. திறமை இருந்தும் வெளிக்காட்டாதவர்கள் இருக்கின்றனர். செயல் பாட்டில் விபரீதம் நிகழ்ந்ததும், பணமும் திறமையும் வெளியே வரும். புத்தகத்து அறிவும் பிறரிடம் உள்ள பணமும் சந்தர்ப்பத்துக்கு உதவாது. உச்சம், ஸ்வஷேத்ரம், வளர்பிறை, சுபயோகம், சுபதிருஷ்டி போன்ற அந்தஸ்தில் சந்திரன் வலுப்பெற்றிருந்தால், செவ்வாய், சனி, ராகு- கேது ஆகியோரின் தாக்கம் இருப் பினும், கடும் புயலிலும் அசையாத மரம் போல் சிறப்புறத் திகழக் காரணமாவான், சந்திரன். நீசம், தேய்பிறை, அசுப சேர்க்கை, அதன் யோகம் ஆகியவற்றைப் பெற்றிருந்தால், சிந்தனை தடுமாறும்; சங்கடங்களையே சந்திக்க நேரிடும்.

மனம் மகிழ்ச்சியை உணரும். ஆகவே அனைத்துக்கும் ஆதாரம், மனம்! உண்மையில், உடலில் மனம் என்கிற ஒன்றே இல்லை. உறங்கிக் கிடக்கிற எண்ணக் குவியலையே மனம் என்கிறோம். எண்ணங்களை, நினைவுகளை மனனம் செய்வதால், அது மனம் என்றாயிற்று. எண்ணங்கள் அழிந்தால், மனனம் செய்யவோ நினைவுபடுத்திப் பார்க்கவோ ஏதும் இல்லாமலிருந்தால், மனமானது மறைந்துவிடும். அமாவாசையில் சந்திரன் மறைந்து, ஆன்மா மட்டுமே தெரிகிறது. ஆகவே, ஆன்மாவில் லயிப்பது மோட்சம்! துயரத்திலிருந்து விடுபடு வதும் மோட்சம்தான்!

கட்டுப்பட்டிருப்பதற்கும் விடுபடுவதற்கும் மனமே காரணம் (மன ஏவ மனுஷ்யாணாம் காரணம் பிந்தமோஷயோ:). உடலில் உறைந் திருக்கிற மனமே அத்தனை ஆர்ப்பாட்டங்களுக்கும் அமைதிக்கும் காரணம்! சுகாதாரம், ஆன்மிகம், ஆடம்பர வாழ்க்கை ஆகியவற்றுக்கும் மனதுக்கும் தொடர்பு உண்டு. மனத்தைத் தெளிவுபடுத்த, மகான்கள் பலரும் பல வழிகளைப் பரிந்துரைத்துள்ளனர் காலத்துடன் இணைந்த சந்திரனின் பங்கினை அறியாதவனுக்கு வெற்றி கேள்விக்குறியாகிவிடும்.

குரங்கு, சும்மாவேனும் இருக்குமா, என்ன? சேட்டை பண்ணிக்கொண்டே இருக்கும். அதைத் தேள் கொட்டினால், சேட்டை திசை மாறும். மதுவை அருந்தி, பிசாசும் பிடித்துக்கொண்ட நிலையில், அதன் சேட்டை எப்படியிருக்கும்? மனம் என்பதும் இப்படித்தான்... சும்மா இருக்காது. காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகியவற்றின் தாக்கத்தால் திக்குமுக்காடிப் போகும். நிலைத்து நின்று, சிந்தித்துச் செயல்பட சந்திரனின் வலுவான இணைப்பு துணை நிற்கும்! ஆகவே உடல் சுத்தத்தை கவனிக்கிறோமோ இல்லையோ... மனத் தூய்மையில் அக்கறை செலுத்துவது அவசியம். அதற்கு, சந்திர வழிபாடு மிக மிக அவசியம்.

மனத்துடன் தொடர்பு இல்லாதவர்களைத் தேடி அலையாமல், மனதுக்குத் தொடர்பு உடைய சந்திரனை அணுகுவதே சாலச் சிறந்தது. திங்கட்கிழமை, சந்திரனுக்கு உரிய நாள். அன்றைய தினத்தில், 'ஸம் ஸோமாயநம:’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களை நடைமுறைப்படுத்துங்கள். கைகள் புஷ்பத்தை அள்ள, மனம் அவன் பெயரை அசைபோட, அவனுடைய திருமேனியில், புஷ்பத்தைச் சமர்ப்பியுங்கள். சந்திரனை மனதார நினைக்க, சந்திரனின் சாந்நித்யம், மனதுள் வந்துவிடும். அவனுக்கே உண்டான மென்மை, மலர்களில் உண்டு. அதனை, அவனிடமே சமர்ப்பிப்பது, மனதுள் அவனது இயல்பை வரவழைக்கிற காரியம்! சந்திரனை வேதங்கள் முழங்கி வழிபடுங்கள்; இல்லையெனில், அவனுடைய திருநாமத்தைச் சொல்லியே வழிபடலாம்!

தசாச்வம் ச்வேதபத்மஸ்தம்
விசின்த்யோமாதி தைவதம்
ஜலப்ரத்ய திதைவம்ச
ஸ¨ர்யாஸ்ய மாஹ்வயேத் ததா

- எனும் ஸ்லோகத்தைச் சொல்லி, சந்திரனை வணங்குங்கள். வருங்காலத்துக்காக மனக்கோட்டை கட்டாமல், மனத்தை திடமாக்கிக் கொண்டால், சந்தர்ப்பம் வரும்போது, சரியான சிந்தனையைத் தந்து, வெற்றிக்கு வழி வகுப்பான், சந்திரன்!

சந்திரன், வெளியே இல்லை; உள்ளுக்குள்ளேயே இருக்கிறான்.

- வழிபடுவோம்

அடுத்த கட்டுரைக்கு