Published:Updated:

ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய 'கிரியா யோகா' பற்றித் தெரியுமா?

ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய 'கிரியா யோகா' பற்றித் தெரியுமா?
ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய 'கிரியா யோகா' பற்றித் தெரியுமா?

ரஜினியின் வாழ்க்கையை மாற்றிய 'கிரியா யோகா' பற்றித் தெரியுமா?

'கிரியா யோகம்' இந்த வார்த்தை மட்டுமல்ல; இந்த யோகா கலையும் ஆன்மிக ரிஷிகள், மகான்கள் வரிசையில் தற்போது, முக்கிய பிரமுகர்கள் மூலம் மக்களிடையே, பிரபலமாகி வருகிறது.


குறிப்பாக கடந்த சனிக்கிழமையன்று, மகான் பரமஹம்சர் யோகானந்தர் அருளிய ‘தெய்வீக காதல்' என்ற நூல் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்,  ''நான் கற்ற ‘கிரியா யோகா’ என் வாழ்க்கையையே மாற்றியது'' என்று குறிப்பிட்டார். இதனால் இந்த யோகா குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வம் சாதாரண மக்களிடையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

இந்நிலையில் கிரியா யோகா என்பது என்ன... அதனால் கிடைக்ககூடிய விசேஷமான பலன்கள் என்னென்ன என்பது குறித்து விளக்குகிறார் 'யோகனந்த சத்சங்க சந்நியாசி' சுவாமி பவித்தரானந்தா கிரி.

மனத்தில் உருவாகும் எண்ணங்கள்தான் அனைத்திற்கும் அடிப்படை. மனதில் உருவாகும் வேண்டாத எண்ணங்கள்தான் உலகில்

அசம்பாவிதங்கள் உருவாக காரணமாகின்றன. மன அமைதி கிடைக்காவிடில், பணம், புகழ், சொத்துக்கள் சேர்த்தும் பலன் இல்லை.
மேலும் நவீன காலத்தில் தொட்டதற்கெல்லாம் இயந்திரம், நவீன தொழில் நுட்பம், ஆகாய வெளியில் ஆராய்ச்சி என மலைக்க வைக்கும்  பல சாதனைகளை படைத்து வருகிறோம். ஆனால், மனிதர்களின் மனதை கட்டுப்படுத்திடும் தொழில்நுட்பமோ நம்மிடம் இல்லை. அலைபாயும் எண்ணங்களை கட்டுப்படுத்தவோ, ஒருநிலைப்படுத்தும் கருவியைக் கண்டறியவோ முடியவில்லை. மருந்து மாத்திரைகளாலும் கூட மனதை தன் வசப்படுத்திட முடிவதில்லை. மனதின் சக்தியையும் ஆற்றலையும் அறிந்துதான் அந்த காலத்திலேயே ரிஷிகள், மகான்கள், நமக்காக வழிமுறைகளை கற்றுத்தந்துள்ளனர். அதில் ஏரளமான அரிய பொக்கிஷங்கள் பொதிந்து கிடக்கின்றன.

அதில் கிரியா யோகாவும் ஒன்று. இது ஒரு புராதன விஞ்ஞானமாக அறியப்படுகிறது. அதாவது கிரியா யோகா என்பது ஒரு குறிப்பிட்ட செயல் அல்லது சடங்கு (கிரியா) மூலம் பரப்பிரம்மத்துடன் இரண்டறக் கலத்தல் (யோகம்) என்பதாகும்.
மகாவதார் பாபாஜி, லாஹரி மகாசயருக்கு அருளிய புராதன யோகமானது, கிருஷ்ணபெருமான் பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு, அர்ஜூனனுக்கு போதித்த அதே விஞ்ஞான முறையாகும், அதன் பிறகு பதஞ்சலிக்கும், ஆதி சங்கரருக்கும், மகான் கபீருக்கும் அது வழங்கப்பட்டது.

அதற்கு பிந்தைய காலங்களில் தொய்வடைந்திருந்த இந்த யோகா முறையை,  மகான் பாபாஜி கண்டறிந்து, அதற்கு 'கிரியா யோகம்' என பெயரிட்டதாகவும் பரமஹம்சர் யோகானந்தர், தன் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மகான் பாபாஜி மேற்கத்திய நாடுகளில் கிரியா யோகத்தை பரப்புவதற்கு பரமஹம்ஸ யோகானந்தரை தேர்ந்தெடுத்தார். மகான் பரமஹம்சர் யோகானந்தரிடம்தான் காந்தியும் இந்த கிரியா யோகத்தைப் பயின்றிருக்கிறார். அதேபோல அவருடைய சீடர்களுக்கும் கிரியா யோக தீட்சை வழங்கினார். இதையடுத்து உலக முழுவதும் தற்போது லட்சக்கணக்கானவர்கள் கிரியா யோக தீட்சையை பெற்றுவருகிறார்கள்.

கிரியா யோகம் ரத்திலுள்ள கரியத்தை அகற்றி, பிராணவாயுவின் மூலம் புத்துணர்ச்சி பெறச் செய்யும் ஓர் எளிய முறை. இதன் மூலம் அசுத்த ரத்தம் பெருகுவது நிறுத்தப்பட்டு திசுக்களின் அழிவை குறைக்கவோ தடுக்கவோ முடியும்.

மனிதனின் சுவாச அளவிற்கு ஏற்ப அவனுடைய உணர்வு நிலை மற்றும் வாழ்நாளுக்கும் இடையே தொடர்பு உள்ளது. ஆன்மாவை உடலுடன் இணைக்கும் மூச்சு இழையை அவிழ்ப்பதன் மூலம் கிரியா யோகம் ஆயுளை நீட்டிக்கிறது.  


இந்த கிரியா யோக உத்தியை விசுவாசத்துடன் பயிற்சி செய்வதால், ஒரு யோகி கர்ம வினை அல்லது காரண காரிய சமநிலைகளாலான சங்கிலித் தொடரிலிருந்து விடுபடுகிறான்; இது மனிதனின் மூவகைத் துன்பங்களான உடல் நோய், மனக்கவலைகள், ஆன்மிக அறியாமை ஆகியவற்றிலிருந்து அவனை விடுவிக்கிறது;அனைத்து பிரச்னைகள், வலிகள் மற்றும் துயரத்திற்கான சர்வரோக நிவாரணி. கிரியா யோகம் நேரடியாக இறைவனை உணர்வதற்கான உத்தி, புலன்களை நோக்கிச் செல்லும் சக்திகளை இறைவனை நோக்கி செல்ல வைக்கின்றது; மனதின் ஒருமுகப்பாட்டையும், படைக்கும் திறனையும் அதிகரிக்கிறது. இந்த யோகா - கிரியா உத்தியை எல்லா உண்மையான சாதகர்களும் பயிற்சி செய்யலாம். இதற்கு ஒரு யோகியாகத்தான் இருக்க வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.
கிரியாக்கள் எனப்படும் யோக யுக்திகளை தினமும் பயிற்சி செய்வதன் மூலம், கிரியா யோகி தன் உயிர்ச் சக்தியை மனதினால் முதுகுத்தண்டிலுள்ள ஆறு சக்கரங்களையும் ( மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அனாஹதம், விசுத்தி,   ஆக்ஞா)  இயங்க வைக்கின்றன. இதனால் அளவில்லாத சக்தியை ஒருவர் அடையலாம். இது  இறைவனுடன் நேரடி தொடர்பினைப் பெறும் அனுபவத்திற்கு இட்டு செல்லும்.

மேலும் ஆன்மிக முன்னேற்றத்தைப் பெறுவதற்கும் உதவும் என்றும், உடல், மனம் மற்றும் ஆன்ம நிலையில் மாற்றம் பெற விரும்புவோருக்கு இப்பயிற்சி மிகவும் உதவும் என்றும் சொல்லலாம். மனிதர்களின் அனைத்துவிதமான முன்னேற்றங்களுக்கும் உதவும் ஒப்பற்ற சாதனம் கிரியா யோகம் என்று சொல்லலாம்.

கிரியா யோகாவினை இறையருள் பெற்ற யோகா குருக்களிடமிருந்தே கற்றுக்கொள்ள முடியும். நமது மனப் பக்குவ நிலையை அறிந்து கொண்டு, அதற்கேற்ற முறையில் இந்த யோகாவை அவர்களால் மட்டுமே கற்று தரமுடியும் என்கிறார் 'யோகனந்த சத்சங்க சந்நியாசி' சுவாமி பவித்தரானந்தா கிரி.


-ஜி.லட்சுமணன்

படங்கள்: ஜெரோம்


 

அடுத்த கட்டுரைக்கு