Election bannerElection banner
Published:Updated:

இறைவியின் ஊடலும்; இறைவனின் சமாளிப்பும்! #GodsMustBeRomantic

இறைவியின் ஊடலும்; இறைவனின் சமாளிப்பும்! #GodsMustBeRomantic
இறைவியின் ஊடலும்; இறைவனின் சமாளிப்பும்! #GodsMustBeRomantic

இறைவியின் ஊடலும்; இறைவனின் சமாளிப்பும்! #GodsMustBeRomantic

திருவண்ணாமலை இறைவனின் ஓர் அற்புதமான திருத்தலம்...

மலையே மகாலிங்கமாகத் திகழும் திருவண்ணாமலையில் கோயில் கொண்டிருக்கும் இறைவன் தம் பக்தர்களுக்காக எண்ணற்ற அருளாடல்களைப் புரிந்திருக்கிறார்.

அதன் காரணமாக அவர்தான் எத்தகைய சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கிறது?

இங்கே இறைவனுக்கு ஏற்பட்ட ஒரு சங்கடத்தைப் பார்க்கலாமே...

பிருங்கி முனிவருக்காக இறைவன் எதிர்கொண்ட அந்த சங்கடம்...

இந்தப் பிருங்கி முனிவர் ஓர் தீவிரமான சிவ பக்தர். இவர் சுவாமியைத்தான் வணங்குவார். அம்பாளை வணங்க மாட்டார். அந்த அளவு சிவபெருமானிடம் பக்தி கொண்டவர்.

சுவாமியும் அம்பாளும் இணைந்து சங்கமித்திருந்தாலும் 'போனால் போகிறது, இரண்டு பேரையும் சேர்த்து வணங்கி விடுவோமே!' என்று நினைக்க மாட்டார். வண்டு உருவெடுத்து சுவாமிக்கும், அம்பாளுக்கும் இடையே புகுந்து, சுவாமியை மட்டுமே வலம் வந்து வணங்கிவிட்டுப் போய்விடுவார். இப்படி ஒரு வைராக்கியம் அவருக்கு.

தன்னை ஒதுக்கிவிட்டு அப்படி சுவாமியை மட்டும் வணங்கும் அந்த பக்தர் மீது அம்பாளுக்குக் கோபம். இருந்தாலும் ஈசன் சாதகமாக இருக்கிறாரே..அதனால் அம்பாள் 'கண்டும் காணாதது' போலிருந்து விடுவார்.

பிருங்கி முனிவரின் செயலால் சினம் கொண்ட பார்வதிதேவி, இறைவனின் இடப் பாகம் பெற விரும்பி தவம் மேற்கொண்ட திருத்தலம் திருவண்ணாமலை.

இங்குதான், பிருங்கிமுனிவரின் காரணமாக இறைவன் ஒரு தர்மசங்கடமான நிலையைச் சந்திக்க நேரிட்டது.

தை மாதம் இரண்டாம் நாள் சுவாமியும் அம்பாளும் வீதியுலா வருகிறார்கள். பக்தர்களுக்கு அருள்பாலித்துவிட்டு திரும்புகையில் இறைவன் தேவியிடம், ''தேவி, நம்முடைய பக்தர் ஒருவருக்கும் அருள்புரிந்துவிட்டு வரலாமே'' என்கிறார்.

"யார் அந்த பக்தர்...?" - அம்பாள் கேட்கிறாள்!

"பிருங்கி முனிவர்!"                              

"ஓ... அவனா? அவன் நம் பக்தன் இல்லையே! உங்கள் பக்தன் தானே! என்னைக் கண்டாலே அவனுக்கு ஆகாதே! நீங்களே உங்கள் அருமை பக்தனுக்குப் போய் அருள்புரிந்து விட்டு வாருங்கள்!" என்று ஊடலுடன் கோபித்துக்கொண்டு ஆலயத்துக்குள் பிரவேசித்து தாழிட்டுக் கொண்டாள் அம்பாள்.

சுவாமி அலங்கார பூஷிதராக தன் அருமை பக்தன் பிருங்கி முனிவர் இருக்குமிடம் சென்று அருள்புரிந்துவிட்டு வந்தார்.

அம்பாளின் கோபத்துக்கு ஆளான நிலையில், பக்தருக்கு அருள்புரியச் சென்ற சிவபெருமானுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுவிட்டது. ஒரு வேடன் ஆபரணங்களுடன் வந்த சிவபெருமானை வழிமறித்து ஆபரணங்களை எல்லாம் பறித்துக்கொண்டான். ஆக, தன் ஆபரணங்களைப் பறிகொடுத்துவிட்டு ஆலயத்துக்கு வந்தார். போதாதா வினைக்கு? ஏற்கெனவே அம்பாளுக்குக் கோபம். ஆபரணத்தையும் தொலைத்துவிட்டு 'சிவனே' என்று அந்தச் சிவனார் வந்து நின்றதும் -" எல்லாம் உங்கள் அருமை பக்தனைத் தேடிப் போனதால் வந்த கஷ்டம்தானே... அதற்கு நீங்கள்தான் பொறுப்பு. எப்படியாவது தொலைந்த ஆபரணத்துக்கு ஈடுகட்டிக் கொண்டு வாருங்கள்! அப்போதுதான் உங்களுக்குக் கதவைத் திறப்பேன்!" என்று கூறிவிட்டாள்.

வேறு வழியில்லாமல் சுவாமி கோயிலை விட்டுப் புறப்பட்டு கலசப்பாக்கம் என்ற கிராமத்துப் பக்கம் யோசனையோடு வந்தாராம். சுவாமியின் நிலையறிந்து அந்த பக்தர்கள் ஆயிரம் பொன் (இப்போது ரூபாய்) எடுத்துக் கொண்டு வந்து அம்பாள் முன் ஈடுகட்டி சுவாமியை அம்பாளோடு சேர்த்து வைத்தார்களாம். என்ன ஒரு சுவையான சம்பவம் பாருங்கள்!

அம்பாள் ஒருவழியாகச் சமாதானம் ஆவதற்கு சுந்தரமூர்த்தி நாயனார் வேறு ரொம்பச் சிரமப்பட்டு சிபாரிசு செய்ய வேண்டியதாகிவிட்டதாம்...! 

தனக்காக திருவாரூரில் சிவபெருமான் பரவை நாச்சியாரின் ஊடலைத் தணிக்கச் சென்றார் என்பதால், அந்த நன்றிக்கடனுக்காக இங்கே திருவண்ணாமலையில் சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானுக்காக பார்வதி தேவியிடம் தூது சென்றார் போலும்!

- க.புவனேஸ்வரி

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு